ஐரோப்பிய நாடுகள் தங்களது தங்கத்தை வட அமெரிக்காவில் இருந்து மாற்றுவது ஏன்?

இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிரான்ஸ் தனது தங்கக் கையிருப்பை அமெரிக்காவிலிருந்து நாட்டுக்கே திரும்பக் கொண்டு வந்துள்ளதாக அறிவித்தது.

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மைக்கேல் ரேஸ்
    • பதவி, வணிகச் செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

நெதர்லாந்தின் மத்திய வங்கி இந்த வாரம், நாட்டின் கையிருப்பு தங்கத்தில் பல டன் அளவை வட அமெரிக்காவிலிருந்து வெளியே மாற்றியுள்ளதாக உறுதி செய்தபோது, இந்த இடமாற்றம் தங்களை "கடுமையான நெருக்கடிகளைச் சமாளிக்க சிறப்பாகத் தயார்படுத்தும்" என்று தெரிவித்தது.

அமெரிக்கா மற்றும் கனடாவில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மொத்தம் சுமார் 313 டன் தங்கத்தில் இருந்து 86 டன் தங்கம், "அதிகரித்து வரும் உலக அரசியல் பதற்றத்தைக் கருத்தில் கொண்டு" லண்டனுக்கு மாற்றப்பட்டதாக அது தெரிவித்தது.

இதன் மூலம், "நெருக்கடியான சூழ்நிலையில் பயன்படுத்துவதற்காக" தங்கத்தை உடனடியாகப் பெற முடியும் என்றும் கூறியது.

இதையடுத்து நெதர்லாந்து இவ்வாறு செய்வது ஏன்? எதிர்காலத்தில் ஏதேனும் பெரிய பொருளாதார அதிர்ச்சியை அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? போன்ற கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாததாக இருந்தது.

அவ்வாறு எதிர்பார்ப்பதாகத் தெரியவில்லை.

ஆனால், வர்த்தகம் மற்றும் ராணுவ ரீதியிலான மோதல்கள் நாடுகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தங்களது தங்கத்தை தங்கள் நாட்டுக்கு அருகிலேயே வைத்திருக்கவும் தூண்டுகிறது. உலகம் தற்போது எதிர்கொண்டுள்ள நிலையற்ற மற்றும் நிச்சயமற்ற சூழலுக்கு இந்த நடவடிக்கை தெளிவாகப் பதிலளிப்பதாக உள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிரான்ஸ் தனது தங்கக் கையிருப்பை அமெரிக்காவிலிருந்து தனது நாட்டுக்கே திரும்பக் கொண்டு வந்துள்ளதாக அறிவித்தது.

இதற்கிடையில், ஜெர்மனியின் புண்டஸ்பேங்க் வெளிநாடுகளில் 216 டன்களுக்கும் அதிகமான தங்கத்தை சேமித்து வைத்திருந்த நிலையில், நியூயார்க்கிலிருந்து 111 டன்னும், பாரிஸிலிருந்து 105 டன்னும் 2016ஆம் ஆண்டு முடிவடைந்த சில ஆண்டுகளில் மாற்றியது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

உலகளாவிய நிலையற்ற சூழல்களில் இதுபோன்ற உத்தி ஏற்கனவே பின்பற்றப்பட்டிருக்கிறது.

"பனிப்போரின்போது, சில ஐரோப்பிய மத்திய வங்கிகள் தங்களது தங்கக் கையிருப்பில் ஒரு பகுதியை நியூயார்க்குக்கு மாற்றின" என்று கோல்ட்மேன் சாக்ஸின் ஆய்வு ஆய்வாளர்களான லினா தாமஸ் மற்றும் டான் ஸ்ட்ரூய்வென் தெரிவித்தனர்.

போர்கள் மற்றும் வர்த்தகப் பதற்றங்கள் "இந்த முடிவுகளில் சிலவற்றை பாதித்தாலும்", அவை முடிவெடுப்பதற்கான காரணிகளில் "முதலிடத்தில் இல்லை" என்று உலக தங்க கவுன்சிலின் மூத்த சந்தை உத்தியாளர் ஜோசப் கவடோனி பிபிசியிடம் தெரிவித்தார்.

பணவீக்கம், வட்டி விகிதங்கள் மற்றும் தங்கத்தை விரைவாக வர்த்தகம் செய்யக்கூடிய இடத்தில் வைத்திருப்பது ஆகியவையும் இதில் பங்கு வகித்தன.

"உடனடியாக ஏதேனும் பேரிடர் ஏற்படப் போகிறது என்ற உணர்வு எனக்கு இல்லை" என்று கூறிய கவடோனி, "ஆனால், தங்களது கையிருப்பு சொத்துகளை எவ்வாறு நிர்வகிப்பது, அவற்றின் கையிருப்பை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்து மக்கள் சிறப்பாகக் கற்றுக்கொண்டு வருகிறார்கள். அந்த சொத்துகளிலிருந்து அதிகபட்ச பயனை எவ்வாறு பெறுவது என்பது குறித்தும் அவர்கள் மிகவும் திறம்பட சிந்தித்து வருகிறார்கள்" என்றார்.

மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் இந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்ட தங்கம் தற்போது இங்கிலாந்து வங்கியின் பெட்டகங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக டி நெதர்லாண்ட்ஷ் பேங்க் தெரிவித்தது.

"இவற்றை நாம் ஒருபோதும் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படாது என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், நமது நெருக்கடியை சமாளிக்கும் திறனையும் தயார்நிலையையும் வலுப்படுத்த வேண்டியுள்ளது" என்று டச்சு மத்திய வங்கியின் ஆளுநர் ஓலாஃப் ஸ்லெய்பென் தெரிவித்தார்.

உலகின் முக்கிய வர்த்தக மையமாக லண்டன் இருப்பதால், அது சிறந்த தேர்வாகக் கருதப்பட்டது. நெருக்கடியான சூழ்நிலையில் தங்கத்தை விரைவாக வாங்கவோ விற்கவோ விரும்பினால், அதற்கான சிறந்த இடம் லண்டன். இதனால், இங்கிலாந்து வங்கி தங்கத்தை சேமித்து வைக்கும் பிரபலமான இடமாக உள்ளது.

உலகின் முக்கிய வர்த்தக மையமாக லண்டன் இருப்பதால், அது சிறந்த தேர்வாகக் கருதப்பட்டது. நெருக்கடியான சூழ்நிலையில் தங்கத்தை விரைவாக வாங்கவோ விற்கவோ விரும்பினால், அதற்கான சிறந்த இடம் லண்டன். இதனால், இங்கிலாந்து வங்கி தங்கத்தை சேமித்து வைக்கும் பிரபலமான இடமாக உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லண்டனில் உள்ள பேங்க் ஆஃப் இங்கிலாந்து தனது பாதுகாப்புப் பெட்டகங்களில் ஏராளமான தங்கக் கட்டிகளை வைத்துள்ளது.

உலகின் மிகப்பெரிய தங்கப் பாதுகாப்பு நிறுவனங்களில் இங்கிலாந்து வங்கியும் ஒன்றாகும்.

300 ஆண்டுகள் பழமையான இந்த நிறுவனத்தின் மத்திய லண்டன் கட்டடத்துக்குக் கீழே, 200 பில்லியன் பவுண்டுக்கும் அதிகமான மதிப்புடைய சுமார் 4,00,000 தங்கக் கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

உலக தங்க கவுன்சில் மேற்கொண்ட தொழில்துறை ஆய்வுகளின்படி, இங்கிலாந்து வங்கியே தங்கத்தைச் சேமித்து வைப்பதற்கான மிகவும் பிரபலமான இடமாகத் தொடர்ந்து உள்ளது. ஆனால், மத்திய வங்கிகள் தங்கள் விலைமதிப்பற்ற உலோகத்தை எங்கு சேமித்து வைப்பது என்பதைப் பன்முகப்படுத்தி வருகின்றன.

தங்கள் நாட்டின் தங்கத்தை எங்கு சேமித்து வைப்பது என்பது "கையிருப்பு சொத்து மேலாளர்களின் கவனத்தில் அதிகரித்து வரும் முக்கிய விஷயமாக உள்ளது" என்று கோல்ட்மேன் சாக்ஸின் தாமஸ் மற்றும் ஸ்ட்ரூய்வென் தெரிவித்துள்ளனர்.

நவீன உலகில், உங்கள் தங்கத்தை பல்வேறு வழிகளில் இடமாற்றம் செய்ய முடியும். டச்சுக்காரர்கள் நியூயார்க்கில் சுமார் 59 டன் தங்கத்தை விற்றுவிட்டு, பின்னர் லண்டனில் அதிக அளவில் தங்கத்தை வாங்கினர். இதனால், அந்த அளவு தங்கத்தை அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து கொண்டு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

ஆனால், 27 டன்னுக்கும் அதிகமான தங்கம் அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து " இடமாற்றம்" செய்யப்பட்டு, நெதர்லாந்தின் ஸெய்ஸ்ட் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதே அளவு தங்கம் ஸெய்ஸ்ட்டிலிருந்து லண்டனுக்கும் அனுப்பப்பட்டது.

இதுபோன்ற சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், இந்த நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து அதிகம் பேசுவதில்லை.

ஆனால், நிஜத்தில் 'தி இத்தாலியன் ஜாப்' போன்ற சம்பவம் நிகழும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக, பாதுகாப்பு நடவடிக்கைகளும் திட்டமிடலும் மிக விரிவாக மேற்கொள்ளப்படுகின்றன என்று கூறுவது நியாயமானது.

உலக தங்க கவுன்சிலைச் சேர்ந்த கவடோனி கூறுகையில், தங்கக் கையிருப்பை இடமாற்றம் செய்வதற்கான வழக்கமான முறைகளில் ஒன்று, ஒரு இடத்தில் அந்தத் தங்கத்தை விற்றுவிட்டு, மற்றொரு இடத்தில் வாங்குவதாகும் என்றார்.

"நான் எனது தங்கத்தை நியூயார்க்கில் வைத்திருக்க விரும்புகிறேன், ஆனால் அது லண்டனில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நான் அதை லண்டனில் விற்றுவிட்டு, அதே நாளில், அதே நேரத்தில் நியூயார்க்கில் வாங்க முடியும். இதன் மூலம், தங்கத்தை வேறு எந்த இடத்துக்கும் கொண்டு செல்ல வேண்டிய அவசியமின்றி, கணக்கில் மட்டும் இடமாற்றம் செய்துவிட முடியும்" என்று அவர் கூறினார்.

எல்லைகளைக் கடந்து தங்கத்தை அனுப்பும் பணியை மேற்கொள்ளும் நிறுவனங்கள் வெகு சிலவே உள்ளன.

அவற்றில் ஒன்றான பிரிங்க்ஸ் குளோபல் சர்வீசஸ், சமீப காலங்களில் மத்திய வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து "அதிகரித்த தேவையை" கண்டுள்ளதாக பிபிசியிடம் தெரிவித்தது.

"அதிகரித்து வரும் உலக அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை, தங்கம் ஒரு மூலோபாய கையிருப்பு சொத்தாக அதிகரித்து வரும் பங்கு ஆகியவை இந்தப் போக்குக்கு பங்களிப்பதாகத் தெரிகிறது" என்று பிரிங்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் நாதர் அந்தார் தெரிவித்தார்.

மத்திய வங்கிகளின் கவனத்தில் தங்கத்தைச் சேமித்து வைப்பது முக்கியமான விஷயமாக இருப்பதற்கான காரணம், அவை தொடர்ந்து அதிக அளவில் தங்கத்தை வாங்கி வருவது தான்.

ஆனால், தங்கத்தை சொந்த நாட்டிலேயே சேமித்து வைப்பதற்கு செலவு ஏற்படும் என்று கோல்ட்மேன் சாக்ஸின் தாமஸ் மற்றும் ஸ்ட்ரூய்வென் தெரிவித்துள்ளனர்.

"உள்நாட்டில் தங்கத்தைச் சேமித்து வைப்பதற்கு பாதுகாப்பு, தணிக்கை கட்டமைப்பு மற்றும் காப்பீடு ஆகியவற்றில் முதலீடு தேவைப்படுகிறது. சிறிய மத்திய வங்கிகளுக்கு இந்தச் செலவுகள் அளவுக்கு அதிகமானதாக இருக்கலாம்" என்று அவர்கள் தெரிவித்தனர்.

உலக தங்க கவுன்சிலின் கூற்றுப்படி, கடந்த நான்கு ஆண்டுகளில், மத்திய வங்கிகள் ஆண்டுக்கு சராசரியாக 1,000 டன் தங்கத்தைச் சேர்த்துள்ளன. இதற்கு முந்தைய பத்தாண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 500 டன் தங்கம் சேர்க்கப்பட்ட நிலையில், இது குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாகும்.

இந்தப் போக்கு உலகளாவிய நிதி நெருக்கடியிலிருந்தே தொடர்ந்து வருகிறது. அடுத்த ஆண்டில் இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீப ஆண்டுகளில் தங்கம் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது. அதன் விலை தொடர்ந்து பல புதிய சாதனை உச்சங்களைத் தொட்டு உயர்ந்துள்ளது. ஜனவரியில் ஒரு ட்ராய் அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,000 டாலரைத் தாண்டியது.

தங்கத்தின் மதிப்பு அதிகரிப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஆனால், வர்த்தகம் மற்றும் ராணுவ மோதல்களால் ஏற்படும் நிதி மற்றும் உலக அரசியல் நெருக்கடி காலங்களில் முதலீடு செய்வதற்கான 'பாதுகாப்பான புகலிட சொத்து' என்ற இடத்தை மனிதர்களின் மனதில் விலைமதிப்பற்ற உலோகமான தங்கம் பெற்றிருப்பது முக்கிய காரணியாக உள்ளது.

பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்களும் தங்கத்தின் தங்கத்தின் தேவைமீதும் தாக்கம் செலுத்துகின்றன.

தங்கம் அரிதானது என்பதாலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதற்கு மதிப்பு வழங்கப்பட்டு வருவதாலும், விலைவாசி உயர்வுக்கு எதிராக ஓரளவு பாதுகாப்பைக் கொண்டுள்ளது. எனவே, இது ஒரு நல்ல முதலீடாகக் கருதப்படுகிறது.

"கடந்த அரை நூற்றாண்டில், தங்கத்தின் விலை நுகர்வோர் விலைக் குறியீட்டை (CPI) விட மிக வேகமாக உயர்ந்துள்ளது. பணவீக்கத்தை அளவிடுவதற்காக மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் அளவுகோல் இதுவாகும்" என்று முதலீட்டு வங்கியான சார்லஸ் ஸ்வாப் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பதிவான சாதனை உச்சத்திலிருந்து தங்கத்தின் விலை தற்போது குறைந்திருந்தாலும், வரலாற்று ரீதியாக அது இன்னும் உயர்ந்த நிலையிலேயே உள்ளது.

கோல்ட்மேன் சாக்ஸ் ஆய்வாளர்களின் கணிப்பின்படி, 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு ட்ராய் அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,900 டாலராக (3,624 பவுண்டுகள்) உயரும். ஆகஸ்ட் மாதத்தில் இருந்த விலையை விட இது 300 டாலர் அதிகமாகும்.

மத்திய வங்கிகளிடமிருந்து தங்கத்துக்கான தேவை அதிகரித்து வருவது, அதன் விலை உயர்வதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்று தாமஸ் மற்றும் ஸ்ட்ரூய்வென் தெரிவித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு