'எப்போது கரை சேருவோம்?' - கப்பல் நடுக்கடலில் சிக்கிக் கொண்டால் மாலுமிகள் தப்பிப் பிழைக்க என்ன செய்வார்கள்?

கப்பல் நடுக்கடலில் சிக்கிக் கொண்டால் மாலுமிகள் தப்பிப் பிழைக்க என்ன செய்வார்கள்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழல் காரணமாக, ஓமன் நாட்டுக் கடல் பகுதியில் சிக்கியிருந்த கப்பலில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டாம் நிலை அதிகாரி நிஷாந்த் உயிர்த்தநாதன் உயிரிழந்துள்ளார்.

இப்படியாக, மோதல்கள், போர்கள் வெடிக்கும்போது, எல்லைகளில் நெருக்கடிச் சூழல் நிலவும்போது, அதன் தாக்கத்தை உலகம் பொதுவாக கரையிலுள்ள மக்கள் மீதுதான் அதிகமாக உணர்கிறது.

ஆனால், நகரங்கள் மற்றும் போர்க்களங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில், கடலுக்குள் பயணித்துக் கொண்டிருக்கும் மாலுமிகளும் இந்த நெருக்கடிகளின் விளைவுகளை எதிர்கொள்கின்றனர். அவர்கள் சந்திக்கும் சவால்கள் வேறுவிதமானவையாக இருக்கின்றன.

அப்படி முடிவற்ற நீரால் சூழப்பட்டு, பிரமாண்டமான கப்பல்களுக்குள் சிக்கியிருக்கும் மாலுமிகள், வீடு திரும்புவதற்கான பாதுகாப்பான வழியை நாடிக் காத்திருப்பர்.

சமீபத்திய இரான் தொடர்பான கடல்சார் நெருக்கடியால், ஹோர்மூஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது, பாரசீக வளைகுடாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கப்பல்களில் பல மாலுமிகள் சிக்கித் தவித்தனர்.

அவர்களில் ஒருவர்தான், கடந்த மார்ச் மாதம் குவைத் அருகில் நங்கூரமிட்டிருந்த வர்த்தகக் கப்பலில் பயணித்த இந்திய மாலுமியான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முதன்மை பொறியாளர் சசிகுமார்.

கடலில் இருக்கும் மாலுமிகளுக்கு வாரங்கள் அல்லது மாதங்கள் தாமதம் என்பது பல சிக்கல்களுக்கு வித்திடுகிறது. உணவுத் திட்டமிடல், உளவியல் நலம், மருத்துவ அவசர நிலைகள், எரிபொருள் மேலாண்மை ஆகியவற்றையும், அதோடு "நாம் எப்போது கரை சேரப் போகிறோம்" என்ற விடை தெரியாத கேள்வியையும் சமாளித்தாக வேண்டும்.

இந்தச் சூழ்நிலைகளை மாலுமிகள் எப்படி எதிர்கொள்வார்கள்? அதற்கென கப்பலில் முன்னமே தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா? இதுகுறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள அனுபவம் வாய்ந்த மாலுமிகளிடம் பிபிசி தமிழ் பேசியது.

கப்பலில் முதன்மை பொறியாளராகப் பணியாற்றும் சசிகுமார்

பட மூலாதாரம், SASIKUMAR

படக்குறிப்பு, கப்பலில் முதன்மை பொறியாளராகப் பணியாற்றும் சசிகுமார்

கப்பலில் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்க முடியும்?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

நவீனகால வணிகக் கப்பல்கள் நீண்ட காலத்துக்கு நடுக்கடலில் தங்கியிருக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக விளக்கினார், கப்பலில் முதன்மை பொறியாளராகப் பணியாற்றும் சசிகுமார்.

"பொதுவாக, அடிக்கடி நிறுத்தப்பட வேண்டிய தேவையுள்ள பயணிகள் கப்பல்களைப் போலன்றி, சரக்குக் கப்பல் அடிப்படையில் ஒரு மிதக்கும் நகரம் போலச் செயல்படும். இதில் சொந்தமாக மின்சாரம் தயாரிக்கும் வசதி, நீர் விநியோக அமைப்புகள், உணவு சேமிப்பு, மருத்துவப் பொருட்கள், பொறியியல் வசதிகள் இருப்பது முன்கூட்டியே உறுதி செய்யப்பட்டிருக்கும்," என்று கூறுகிறார் சரக்குக் கப்பலில் இரண்டாம் நிலை அதிகாரியாகப் பணியாற்றும் தமிழக மாலுமி முத்து சூர்யா.

சர்வதேச கடல்சார் அமைப்பு மற்றும் சர்வதேச கடல்சார் விதிமுறைகளின்படி, கப்பல்கள் தங்கள் பணியாளர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையிலான சூழலைப் பராமரிக்க வேண்டும். 'கடல்சார் தொழிலாளர் ஒப்பந்தம், 2006'-இன் கீழ் (Maritime Labour Convention - MLC), ஒப்பந்தக் காலம் முழுவதும் மாலுமிகளுக்குத் தரமான மற்றும் போதுமான அளவு உணவு மற்றும் குடிநீர், கப்பல்களில் வழங்கப்பட வேண்டும்.

ஆனால், அனுபவம் வாய்ந்த மாலுமிகளின் கூற்றுப்படி, ஒரு கப்பல் எவ்வளவு காலத்துக்குத் தடையின்றி கடலில் செயல்பட முடியும் என்பது பல காரணிகளைச் சார்ந்துள்ளது. அதில், "கப்பலின் அளவு, பணியாளர்களின் எண்ணிக்கை, சேமிப்பில் இருக்கும் உணவின் அளவு, எரிபொருள் இருப்பு, இயந்திரங்கள் மற்றும் சாதனங்களின் நிலை, தேவையான பொருட்களை மீண்டும் பெற்றுக் கொள்ளும் வசதி, வானிலை மற்றும் இருக்குமிடம் எனப் பல்வேறு காரணிகள் பங்கு வகிப்பதாக" விளக்கினார் முத்து சூர்யா.

கப்பலில் முதன்மை பொறியாளராகப் பணியாற்றும் சசிகுமார் இதுகுறித்து விளக்கியபோது, "ஒரு பெரிய வணிகக் கப்பல் பொதுவாகப் பல வாரங்கள் அல்லது மாதங்களுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களைக் கொண்டிருக்கும். குறிப்பாக, வறண்ட உணவுச் சரக்குகள் குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று மாதம் வரை தாக்குப்பிடிக்கும் வகையில் சேமிக்கப்பட்டிருக்கும்" என்றார்.

அதேபோல, "நீண்ட கடல் பயணங்களை மேற்கொள்ளும் கப்பல்கள், பயணிக்கத் திட்டமிடப்பட்ட காலத்துக்கு ஏற்பவும், அதே நேரம் பயணத் தாமதங்களைக் கருத்தில் கொண்டு கூடுதல் இருப்புகளுடனும் பொருட்களைத் திட்டமிட்டு எடுத்துச் செல்கின்றன. இருப்பினும், எதிர்பாராத நெருக்கடி நிலை ஏற்படும்போது, அந்த இருப்புகள் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கும் என்பதை முன்கூட்டியே கணக்கிட்டு, விரைவாக அருகில் இருக்கும் துறைமுகத்தைச் சென்றடைய என்ன செய்யலாம் என்று கப்பலின் மூத்த அதிகாரிகள் திட்டமிடுவார்கள்," என்று விளக்கினார் சரக்குக் கப்பலில் இரண்டாம் நிலை அதிகாரியாகப் பணியாற்றும் தமிழக மாலுமியான முத்து சூர்யா.

கப்பல் நடுக்கடலில் சிக்கிக் கொண்டால் மாலுமிகள் தப்பிப் பிழைக்க என்ன செய்வார்கள்?

பட மூலாதாரம், MattooShashank/X

படக்குறிப்பு, உயிரிழந்த நிஷாந்த் உயிர்த்தநாதனின் உடல் கெடாமல் குளிரூட்டுவதற்கான வசதியில்லை என சக பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, குளிர்ச்சியான தண்ணீர் பாட்டில்கள் கொண்டு உடலை குளிரூட்டுவதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கப்பல் வாரக்கணக்கில் கடலில் சிக்கிவிட்டால் என்ன நடக்கும்?

ஒரு கப்பலால் தொடர்ந்து பயணிக்க முடியாத சூழல் ஏற்படும்போது, "அதன் பணியாளர்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட பாதுகாப்பான இடத்தில் நங்கூரமிடுவார்கள் அல்லது பாதுகாப்பு அனுமதி பெற்று அருகில் இருக்கும் துறைமுகத்தில் தஞ்சமடைவார்கள். இவை சாத்தியமில்லாத சூழல்களில் நிலைமை மாறும் வரை கட்டுப்படுத்தப்பட்ட கடற்பரப்பில் இருக்க நேரிடலாம்," என்று விளக்கினார் சசிகுமார்.

இதுபோக, "இயந்திர அறை தொடர்ந்து இயங்க வேண்டும், வழிசெலுத்தல் கருவிகள் கண்காணிக்கப்பட வேண்டும், வானிலை நிலவரங்கள் சரிபார்க்கப்பட வேண்டும். கடும் நெருக்கடிக்கு நடுவிலும் இந்தப் பணிகள் தொடர்கின்றன," என்றார் முத்து சூர்யா.

அதோடு, "கப்பலில் இருக்கும் குழுவினருடைய உயிருக்கு ஆபத்து என்ற நிலை வந்தால், அவர்களைக் காப்பாற்றுவதிலேயே முழு கவனமும் திரும்பும். பொதுவாக, கேப்டன், முதன்மை பொறியாளர் ஆகியோர் உள்பட சுமார் நான்கு அதிகாரிகள்தான் தலைமை முடிவுகளை எடுப்பார்கள். அவர்களின் உத்தரவுப்படியே பொறியாளர்கள், தள அதிகாரிகள் என கப்பல் குழுவின் பிற பணியாளர்களின் வேலைகள் நடைபெறும்.

இதில் மன அழுத்தம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இருந்தாலும், அவ்வளவு எளிதில் மாலுமிகள் பிரச்னைகளை எழுப்பி, எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். கடலுக்கு நடுவே, ஒருவர் வேலை நிறுத்தம் செய்தால், புதியதாக வேறொருவரைக் கொண்டு அந்த இடத்தை நிரப்ப முடியாது. ஏற்கெனவே இருப்பவர்களின் மீதுதான் அந்த நபரின் வேலையும் கூடுதல் சுமையாகச் சேரும். இதை உணர்ந்து, தார்மீக அடிப்படையில், உயிருக்கு ஆபத்து நேரிடும் வகையிலான தவிர்க்க முடியாத தேவை எழுந்தாலொழிய, கப்பலின் தலைமை அதிகாரிகளை யாரும் எதிர்க்க மாட்டார்கள்," என்று விளக்கினார் சசிகுமார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஈராயிரம் கிலோமீட்டர் தொலைவில் நடக்கும் ஒரு மோதல் தங்களது வாழ்க்கையில் தாக்கம் செலுத்திவிட்டதை அறிந்தவாறே, மாலுமிகள் வாரக்கணக்கில் வீடு திரும்பும் நாளை எதிர்நோக்கிக் காத்திருக்க நேரலாம்.

சரக்குக் கப்பலில் இரண்டாம் நிலை அதிகாரியாகப் (Second Officer) பணியாற்றும் தமிழக மாலுமி முத்து சூர்யா

பட மூலாதாரம், MUTHU SURYA

படக்குறிப்பு, சரக்குக் கப்பலில் இரண்டாம் நிலை அதிகாரியாகப் பணியாற்றும் தமிழக மாலுமி முத்து சூர்யா

கப்பலில் உணவு, தண்ணீர் இருப்பு எவ்வளவு இருக்கும்?

ஒவ்வொரு கப்பலுக்கும் வெவ்வேறு தேவைகள் இருப்பதால், எவ்வளவு உணவு, தண்ணீர் இருப்பு வைக்க வேண்டும் என்பதில் குறிப்பிட்ட ஒரு பொதுவான கணக்கீடு இல்லை என்று மாலுமிகள் கூறுகின்றனர்.

ஒரு கப்பலின் உணவு இருப்பு என்பது, "பணியாளர்களின் எண்ணிக்கை, பயணத்தின் கால அளவு, அவசரக்கால இருப்புத் தேவைகள், கொடி நாட்டின் விதிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

உணவுப் பொருட்களில் பொதுவாக அரிசி, மாவு, பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் பிற பதப்படுத்தப்பட்ட பொருட்கள், கணிசமான காலத்துக்கு தாக்குப்பிடிக்கக்கூடிய காய்கறிகள், நீண்ட காலம் கெட்டுப் போகாமல் இருக்கக்கூடிய உணவுப் பொருட்கள் ஆகியவை இருக்கும்," என்று விவரித்தார் கப்பலில் முதன்மை பொறியாளராகப் பணியாற்றும் சசிகுமார்.

அதோடு, கப்பலில் நன்னீர் ஜெனரேட்டர்கள் எனப்படும் கடல்நீரை குடிநீராக்கும் அமைப்புகளைப் பயன்படுத்தி நன்னீர் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பும் இருக்கும் என்கிறார், இரண்டாம் நிலை அதிகாரியாகப் பணியாற்றும் முத்து சூர்யா.

அவரது கூற்றுப்படி, "பயணத்தின்போது பதினைந்து நாட்களுக்குத் தாக்குப்பிடிக்கும் அளவிலான பழங்கள், காய்கறிகள் போன்றவற்றையும், ஒரு மாதத்துக்குத் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சியும், அவைபோக, அரிசி போன்ற பிற உணவுப் பொருட்களும் சேமிப்பில் இருக்கும்.

அத்துடன், கடல் நீரைக் குடிநீராக்கும் செயல்முறைக் கட்டமைப்புகள் இப்போது கிட்டத்தட்ட அனைத்து கப்பல்களிலுமே இருக்கின்றன. இதனால், அன்றாட தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்துகொள்வதில் எவ்வித சிக்கலும் இருக்காது. இந்த அமைப்புகள் கடல்நீரைப் பயன்படுத்தக்கூடிய நீராக மாற்றிக் கொடுப்பதால், சேமித்து வைக்கப்படும் குடிநீரைச் சார்ந்திருப்பது குறைகிறது."

இருப்பினும், கப்பல் நெருக்கடிகள் மற்றும் பதற்றங்களுக்கு நடுவில் சிக்கும்போது, உணவு மட்டுமே பிரச்னையாக இருப்பதில்லை என்று மாலுமிகள் கூறுகின்றனர்.

அதைவிடப் பெரும்பாலும் எரிபொருள் இருப்பு, உதிரிபாகங்கள், மருத்துவ உதவி, கப்பல் குழுவினரின் சகிப்புத்தன்மை ஆகியவையே முக்கியத் தடைகளாக அமைகின்றன.

கூடுதலாக, "இந்த அமைப்புகள் செயல்படுவதற்கு இயந்திரங்கள் சுமூகமாகச் செயல்பட வேண்டியது அவசியமாகிறது. ஆகையால், ஒரு கப்பல் மின்சாரத்தை இழந்தாலோ அல்லது பெரிய தொழில்நுட்பக் கோளாறைச் சந்தித்தாலோ, அடிப்படைத் தேவைகள்கூட சிக்கலாகிவிடும்."

கப்பல் நடுக்கடலில் சிக்கிக் கொண்டால் மாலுமிகள் தப்பிப் பிழைக்க என்ன செய்வார்கள்?

பட மூலாதாரம், SASIKUMAR

நடுக்கடலில் ஒரு மாலுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

கடலில் நெருக்கடிகளுக்கு நடுவே சிக்கியிருக்கும்போது மருத்துவ அவசர நிலைகள் ஏற்படுவதுதான் மாலுமிகளின் மிகப்பெரிய அச்சங்களில் ஒன்று என்கிறார் முத்து சூர்யா.

பொதுவாக, "கப்பலின் பணியாளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய மருந்து கையிருப்புகள், பெரிய ஆக்சிஜன் சிலிண்டர், கையில் கொண்டு செல்லக்கூடிய சிறிய ஆக்சிஜன் சிலிண்டர்கள் போன்ற மருத்துவப் பொருட்களும் உபகரணங்களும், முதலுதவி போன்றவற்றில் பயிற்சி பெற்ற பணியாளர்களும் இருப்பதை வணிகரீதியாக இயங்கும் சரக்குக் கப்பல்கள் உறுதி செய்கின்றன.

அதோடு, தலைமை நிலையில் இருக்கும் அதிகாரிகளுக்கு முன்னமே அடிப்படை மருத்துவப் பயிற்சி வழங்கப்படும். சில அளவில் மிகவும் பெரிதாக இருக்கும் கப்பல்களில், அதிலேயே நியமிக்கப்பட்ட மருத்துவ அதிகாரிகள் இருக்கலாம்" என்று விளக்கினார் முத்து சூர்யா.

ஆயினும், கப்பல் ஒரு மருத்துவமனையாக முடியாது என்று கூறும் அவர், "மாரடைப்பு, கடுமையான காயம் அல்லது உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டால், கப்பலின் கேப்டன் செயற்கைக்கோள் ஃபோன் மூலம் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று, அதற்கேற்ப சிகிச்சையளிக்கலாம். முழு நேரமும் மருத்துவர்களுடன் நேரடித் தொடர்பை செயற்கைக்கோள் ஃபோன் மூலம் தக்கவைக்க முடியும் என்பதால், அது ஒரு வகையில் பாதிக்கப்பட்டவரை கவனித்துக் கொள்ள உதவுகிறது.

எனினும், நிலைமை மிகவும் மோசமாக இருந்தால், உடனடியாக அருகிலுள்ள துறைமுகத்துக்குத் திசை திருப்ப முடியுமா, ஹெலிகாப்டர் மூலம் வெளியேற்ற முடியுமா அல்லது அருகிலுள்ள வேறு கப்பல்களின் உதவியை நாட முடியுமா என்பது குறித்துத் திட்டமிட வேண்டும். இந்த முடிவு கடலில் கரையில் இருந்து எவ்வளவு தொலைவில் கப்பல் இருக்கிறது, வானிலை, பாதுகாப்பு நிலைமைகள், சாத்தியமான மீட்பு வழிகள் ஆகியவற்றைப் பொறுத்தது" என்று விளக்கினார்.

கப்பல் நடுக்கடலில் சிக்கிக் கொண்டால் மாலுமிகள் தப்பிப் பிழைக்க என்ன செய்வார்கள்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

மாலுமிகள் எதிர்பாராத அபாயங்களுக்கு தயாராவது எப்படி?

சர்வதேச கடல்சார் அமைப்பின் கீழ் (International Maritime Organization) உருவாக்கப்பட்ட உலகளாவிய கடல்சார் ஒப்பந்தமான, கடல்சார் பணியாளர்களுக்கான பயிற்சி, சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புப் பணித் தரநிலைகள் குறித்த சர்வதேச உடன்படிக்கை (STCW, 1978 - International Convention on Standards of Training, Certification and Watchkeeping for Seafarers) கட்டாயப் பயிற்சிகளுக்கான குறைந்தபட்ச தரநிலைகளை நிர்ணயித்துள்ளது.

அதன்படி, கப்பல்களில் பணிபுரிவதற்கு முன்பாக மாலுமிகள், "உயிர் பிழைப்பதற்கான உத்திகள், தீயணைப்புப் பணிகள், முதலுதவி மற்றும் மருத்துவ உதவி நடவடிக்கைகள், அவசரக்கால நடைமுறைகள், கப்பலைக் கைவிடுதல் தொடர்பான நடைமுறைகள், உயிர் காக்கும் படகுகளை இயக்குதல், அவசரக் கால தொடர்பு, பாதுகாப்பு விழிப்புணர்வு" ஆகிய பயிற்சிகளை முடித்திருக்க வேண்டும்.

"கடல் பயணத்தின்போது ஏற்படும் நெருக்கடி மற்றும் அவசர சூழல்களில் ஆயத்தமாவதற்கு மிகக் குறைந்த நேரமே கிடைக்கும் என்பதால், சர்வதேச கடல்சார் பாதுகாப்பு விதிகளின்படி, கப்பல்களில் வழக்கமான பாதுகாப்பு ஒத்திகைகளும் நடத்தப்படும்" என்றார் முத்து சூர்யா.

கடல்களைக் கடந்து கொண்டு செல்லப்படும் ஒவ்வொரு கொள்கலனும், எரிபொருள் சரக்கும், மூலப்பொருளும் பொதுமக்களின் கவனத்தில் இருந்து வெகுதொலைவில் பணிபுரியும் மாலுமிகளைச் சார்ந்தே இருக்கின்றன.

ஒரு கப்பல் வழித்தடம் மூடப்படும்போது, எண்ணெய் விலைகள், விநியோகச் சங்கிலிகள், சந்தைகள் பற்றி உலகளவில் பேசப்படுகிறது. ஆனால், எதார்த்தத்தில் தாமதமாகும் ஒவ்வொரு கப்பலிலும் நிச்சயமற்ற தன்மையில் வாழும் மாலுமிகளும் இருக்கிறார்கள்.

மத்திய கிழக்கின் போர்ச் சூழலுக்கு நடுவில் சிக்கித் தவித்து மீண்டு வந்த கப்பலில் முதன்மை பொறியாளாராக இருக்கும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாலுமி சசிகுமாரின் கூற்றுப்படி, "புயல்கள், இயந்திரக் கோளாறுகள், அவசர நிலைகளை எதிர்கொள்ள அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. ஆனால், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் நடக்கும் கண்ணுக்குப் புலப்படாத போர் ஒரு வித்தியாசமான சவாலை உருவாக்குகிறது.

அது ஒரு கப்பலை நகர முடியாத நிலையில், நெருக்கடிச் சூழலுக்கு நடுவில் விட்டுவிடக்கூடும். இதனால் கப்பலில் காத்திருக்கும் மாலுமிகளின் மனதில், 'இறுதியாக எப்போது வீடு திரும்புவோம்?' என்ற விடையறியா கேள்வியே சூழ்ந்திருக்கும்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு