'பாட்டி வீட்டுக்கு வந்த குழந்தைகள்' - திண்டுக்கல்லில் வேன் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள் உயிரிழப்பு

ஒரே விபத்தில் உயிரிழந்த 4 குழ்ந்தைகள்.

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, விபத்தில் உயிரிழந்த குழந்தைகள்
    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

(எச்சரிக்கை: இந்தக்கட்டுரையில் இடம்பெற்ற சில தகவல்கள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.)

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே சாலையோர புளிய மரத்தின் அடியில் விளையாடி கொண்டிருந்த குழந்தைகள் மீது பால் வண்டி மோதிய விபத்தில் 3 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள் உயிரிழந்தனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இரண்டு குழந்தைகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

விபத்து குறித்து நேரில் விசாரிக்கும் காவல்துறை அதிகாரி.

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, விபத்து குறித்து நேரில் விசாரிக்கும் காவல்துறை அதிகாரி.

காவல்துறையினர் அளித்த தகவலின்படி, கொல்லப்பட்டி சமத்துவபுரம் கணவாய் மேடு பகுதிக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அஞ்சம்மாள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அவருடைய பேரப்பிள்ளைகள் சாலையோரமாக அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த பால் வண்டி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் அமர்ந்திருந்த குழந்தைகள் மீது மோதியது.

இந்த விபத்தில் யோகவர்ஷினி (11), அனன்யா (6) (யோகவர்ஷினி மற்றும் அனன்யா இருவரும் சொந்த அக்கா - தங்கை), தனுஸ்ரீ (5),மோசிகரன் (6) ஆகிய 4 குழந்தைகளும் கடுமையான காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தை ஏற்படுத்திய பால் வண்டியை பறிமுதல் செய்த வடமதுரை போலீசார் ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'குறுகிய சாலையால் விபத்து'

குறுகிய சாலையாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதை தடிக்க காவல்துறையிடம் மக்கள் புகார் அளித்துள்ளனர்.

பட மூலாதாரம், Handout

விபத்தில் உயிரிழந்த சிறுவன் மோசிகரனின் மாமா செல்வம் பிபிசி தமிழிடம், ''பள்ளி வார விடுமுறை நாட்களில் தனது வீட்டுக்கு குழந்தைகள் அனைவரையும் பாட்டி அஞ்சம்மாள் அழைத்துச் சென்று விடுவார். அதே போல் வார விடுமுறையை ஒட்டி வெள்ளிக்கிழமை ஆறு குழந்தைகளையும் அஞ்சம்மாள் அழைத்துச் சென்றுள்ளார்.'' என்றார்

"அஞ்சம்மாளும் ஆறு குழந்தைகளும் கணவாய் மேடு பகுதிக்கு வளர்ப்பு ஆடுகளுடன் சென்றுள்ளனர். நான்கு குழந்தைகள் சாலை ஓரம் உள்ள புளிய மரத்தின் கீழே அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். இரண்டு குழந்தைகளுடன் அஞ்சம்மாள் தோப்பில் தேங்காய் எடுக்க சென்றுள்ளார்" என்றார்.

"அப்போதுதான் இந்த விபத்து நடந்துள்ளது. குழந்தைகள் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்." என்று அவர் கூறினார்.

"ஒரு வழி சாலையாக உள்ள கொல்லப்பட்டி சமத்துவபுரம், கணவாய் மேடு சாலையில் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதால் விபத்துகள் நடைபெறுவதை சுட்டிக்காடி அதிவேகமாக செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் ஒன்று சேர்ந்து காவல் துறையிடம் புகார் அளித்துள்ளோம்''

விபத்தை நேரில் பார்த்த கலையரசன் பிபிசி தமிழிடம், " நான் என் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு பயங்கர சத்தம் கேட்டது. திரும்பி பார்க்கையில் குழந்தைகள் மீது வண்டி மோதிவிட்டு வேகமாக சென்றது. அந்த வாகனத்தை துரத்தி பிடிக்க முயன்ற போது வாகனத்தை சாலையின் விட்டு விட்டு ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்" என்றார்.

ஒரே விபத்தில் உயிரிழந்த 4 குழ்ந்தைகள்.

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, விபத்தில் உயிரிழந்த குழந்தைகள்

காவல்துறையினர் கூறுவது என்ன?

இந்த விபத்து குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் நிதி குமார், ''பால் வண்டியை மது போதையில் அதிவேகமாக ஓட்டி வந்த சரவணக்குமார், ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.'' என்றார்.

"கொல்லம்பட்டி சமத்துவபுரம், கணவாய் மேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலை மிகவும் குறுகிய சாலையாக உள்ளது. அந்தச் சாலையில் தினசரி போலீசார் வாகன சோதனை நடத்தி மது அருந்தி வாகனம் ஓட்டி வருபவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது." என்று அவர் கூறினார்.

திண்டுக்கல் வடமதுரை அருகே வாகனம் மோதிய விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்த செய்தி கேட்டு வேதனை அடைந்தேன் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு