கைலாஷ் மானசரோவர் எங்கு உள்ளது? மக்கள் அங்கு செல்வது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க. மாயகிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
நேபாளத்தில் பல புகழ்பெற்ற இந்து மதத் தலங்கள் உள்ளன. கைலாஷ் மானசரோவர் செல்பவர்கள் நேபாளம் வழியாகவும் செல்கிறார்கள்.
ஆறுகள், ஏரிகள், பள்ளத்தாக்குகள் உயர்ந்த மலை உச்சிகள் என இயற்கை எழில் நிறைந்த தேசம், நேபாளம். ஆனால் அவ்வப்போது மழை, வெள்ளம், நிலச்சரிவு என இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படும் பகுதியாகவும் அறியப்படுகிறது.
இந்நிலையில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி காலை திடீரென நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் கோஷி ஆற்றங்கரையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு மிகப்பெரிய சேதங்களை ஏற்படுத்தியது. இதற்கு முன் இதுபோல நடந்துள்ளதா? எதற்காக ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள் குறிப்பாக இந்துக்கள் நேபாளத்திற்குச் செல்ல விரும்புகிறார்கள்? அவர்கள் எவ்வாறு சென்று வருகிறார்கள்?
கைலாஷ் மானசரோவர் எங்கு உள்ளது?
இந்து மதத்தினர் அதிக அளவில் புனித யாத்திரை செல்லும் கைலாஷ் மானசரோவர் திபெத்தில் அமைந்துள்ளது.
மானசரோவர் செல்வதற்கு மூன்று பாதைகள் உள்ளன. அதில் இந்தியா வழியாக இரண்டு பாதைகளும் நேபாளம் வழியாக ஒரு பாதையும் உள்ளது.
இந்தியாவில் லிபுலேக் கணவாய் (உத்தராகண்ட்), நாது லா கணவாய் (சிக்கிம்) போன்ற இரண்டு வெவ்வேறு பாதைகள் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்குச் செலல்லாம். அதே போல மேற்கு நேபாளம் ஹும்லா வழியாகவும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.
நேபாளம் வழியாகச் செல்வது எப்படி?
நேபாளத்தின் ஹும்லா மானசரோவர் செல்ல ஏப்ரல் முதல் அக்டோபர் இடையிலான காலம் சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால், பயணிகள் அக்டோபர் இறுதி வரை மானசரோவர் செல்கிறார்கள்.
மானசரோவர் செல்பவர்களில் பெரும்பாலானோர் இந்திய யாத்ரீகர்கள். அவர்கள் முதலில் காத்மண்டுவில் இருந்து நேபாள்குஞ் செல்வார்கள். அங்கு ஓர் இரவு தங்குகிறார்கள். நேபாள்குஞ்சில் இருந்து 45 நிமிட பயணத்தில் சிமிகோட் சென்றுவிடலாம்.
சிமிகோட்டில் சிறிய ரக விமானத்தில் ஹில்சா சென்று அங்கிருந்து மோட்டார் வாகனத்தில் திபெத் டக்லாகோட் செல்லலாம். அங்கிருந்துதான் மானசரோவருக்கான பயணம் தொடங்குகிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியா வழியாகச் செல்வது எப்படி?
இந்திய வெளியுறவு அமைச்சகம் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் வரை லிபுலேக் கணவாய் (உத்தராகண்ட்), நாது லா கணவாய் (சிக்கிம்) போன்ற இரண்டு வெவ்வேறு பாதைகள் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரையை ஏற்பாடு செய்கிறது.
பயண வலைதளத்தின்படி, லிபுலேக் கணவாயில் இருந்து (உத்தராகண்ட்) பயணத்திற்கான மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 1,70,000. இந்தப் பாதையில் சுமார் 200 கி.மீ. மலைப் பாதையில் பயணிக்க வேண்டும். இந்த வழித்தடத்தின் வழியாக ஐந்து தொகுதிகளாக யாத்ரீகர்கள் அனுப்பப்படுவார்கள், முழு பயணமும் முடிவடைய 22 நாட்கள் ஆகலாம்.
நாது லா கணவாய் வழியாகப் பயணிப்போருக்கான தோராயமான செலவு ரூ.2 லட்சத்து 83 ஆயிரமாக அதிகரிக்கும். இந்தப் பாதையில் சுமார் 36 கி.மீ. மலைப்பாதையில் பயணம் செய்ய வேண்டும். இந்தப் பாதை வழியாக 10 குழுக்களாக யாத்ரீகர்கள் பயணிக்கலாம். இந்தப் பயணம் 21 நாட்களில் நிறைவடையும்.
கடல் மட்டத்தில் இருந்து 6,638 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கைலாய மலை, மானசரோவர் ஏரி ஆகியவை பௌத்தம் மற்றும் சமண மதத்திலும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.
கடந்த 2025ஆம் ஆண்டு இந்திய வெளியுறவு அமைச்சகம் வழங்கிய தகவல்களின்படி குழுவினருக்கு, பயணம் தொடங்கும் முன்பாக மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும். வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தகவல்படி, அனைத்துப் பயணிகளும் ஒன்றாகப் பயணம் செய்து திரும்புவது கட்டாயம். அனைத்துப் பயணிகளும் தங்களது பயணத்தை டெல்லியில் இருந்து தொடங்க வேண்டும்.
பயணத்தைத் தொடங்குவதற்கு முன், செல்லுபடியாகும் பாஸ்போர்ட், ஆறு பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படங்கள் மற்றும் ரூ.100 மதிப்பிலான நோட்டரி சான்றளிக்கப்பட்ட இழப்பீட்டுப் பத்திரத்தை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இவற்றுடன், அவசரக் காலங்களில் ஹெலிகாப்டர் மூலம் வெளியேற்றுவதற்கான பிரமாணப் பத்திரமும், சீன பகுதியில் இறந்தால், அங்கேயே சடலத்தைத் தகனம் செய்வதற்கான ஒப்புதல் கடிதமும் வழங்கப்பட வேண்டும். இந்த ஆவணங்களில் ஏதேனும் குறைகள் காணப்பட்டால், பயணத்திற்கான அனுமதி வழங்கப்படாது.

பட மூலாதாரம், Getty Images
யார் விண்ணப்பிக்கலாம்?
இந்தியா வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கான விதிகளை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. அதன் முதல் தகுதி என்னவென்றால், யாத்ரீகர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் என்பதுதான்.
யாத்ரீகர் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும். நடப்பு ஆண்டின் ஜனவரி 1ஆம் தேதிப்படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 70 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும்.
புனித யாத்திரைக்கு மிக முக்கியமான விஷயம் உடல் நிறை குறியீட்டெண், அதாவது யாத்திரை செல்பவரின் பிஎம்ஐ. அதாவது, 25 அல்லது அதற்கும் குறைவான பிஎம்ஐ உள்ளவர்கள் மட்டுமே இந்தப் பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
இந்தப் பயணத்திற்குச் செல்லும் நபர் உடல் ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். வெளிநாட்டினர் இந்தப் பயணத்திற்கு விண்ணப்பிக்க முடியாது. அதே போல, வெளிநாட்டு இந்திய குடிமகன் அதாவது ஓசிஐ (OCI) அட்டை வைத்திருப்பவர்களும் இந்தப் பயணத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.
'சிவனின் வசிப்பிடமாகக் கருதப்படும் நேபாளம்'
இந்துக்களின் முதல் கடவுளாகக் கருதப்படும் சிவனின் வசிப்பிடமாக பார்க்கப்படுவதே நேபாளம் ஆன்மீக சுற்றுலாத் தலமாக இருக்கக் காரணம் என்கிறார் திருவண்ணாமலை போளூரைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் மகராஜ்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "நேபாளம் இயற்கை எழிலுடன் ஆன்மீகத்தையும் தன்னகத்தே கொண்ட சொர்க்க பூமி. தனது வாழ்நாளில் ஒருமுறையேனும் இந்த மண்ணை மிதிக்க வேண்டும், கைலாசத்தைக் காண வேண்டும் என்பது இந்து மதத்தைப் பின்பற்றுவோரின் எண்ணமாக உள்ளது. அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நானும் அங்கு சென்று வரும் வாய்ப்பு கிட்டியது" என்று கூறினார்.
நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள பசுபதி நாதர் ஆலயம் காசிக்கு இணையாகப் பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்ட கோகுலகிருஷ்ணன், "காசியில் இறந்தவர்கள் எரியூட்டப்பட்டால் சொர்க்கத்துக்குச் செல்வார்கள் என்று நம்பப்படுவதைப் போலவே நேபாளத்திலும் இறந்தால் சொர்க்கம் நிச்சயம் என்ற நம்பிக்கை உள்ளது. காசியில் ஓடும் கங்கை நதியைப் போல் இங்கு பாக்மதி ஆறும் இந்த ஆலயத்தை ஒட்டியே செல்கிறது" என்று விவரித்தார்.

பட மூலாதாரம், Subaas Shrestha/NurPhoto via Getty Images
அங்குள்ள வழிபாட்டு முறை குறித்து விளக்கிய அவர், "இங்கு இரண்டில் இருந்து ஐந்து வயதுடைய ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த பெண் குழந்தை தேர்ந்தெடுக்கப்பட்டு வாழும் தெய்வமாக வணங்கப்பட்டு வருகிறார். விழாக் காலங்களில் மட்டுமே வெளிவரும் வாழும் குமாரியை உலகெங்கிலும் இருந்து வந்து பலர் தரிசிக்கின்றனர். தெய்வீக சக்தி வாய்ந்தவராகக் கருதப்படும் இந்தக் குமாரி பூப்பெய்தும் வரை, அங்கு தெய்வமாக இருப்பார்" என்றார்.
அவரது கூற்றுப்படி, "அந்தப் பெண் குழந்தை பூப்பெய்தியதும் வேறொரு பெண் குமாரியாகத் தேர்வு செய்யப்படுகிறார். இன்றளவும் நேபாளத்தில் நடைமுறையில் உள்ள இந்தச் சடங்கு, பெண்களைத் தெய்வமாக வழிபடுவதன் அடையாளமாகக் கருதப்படுகிறது. அதேபோல, பகவதி தேவியின் ஆலயமாகப் புகழ்பெற்றுள்ள மனகமனா சிறந்த வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது."
அதோடு, காத்மாண்டுவை ஒட்டி நாகர்கோட், சந்திரகி மலை, சிசாபணி போன்ற பல இடங்கள் இருந்தாலும் சிறந்த சூரிய உதயத்தை தரிசிக்க நாகர்கோட் சிறந்த இடமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார் கோகுலகிருஷ்ணன்.
அதற்கு, இமயமலையில் இருந்து கண்களைக் கொள்ளை கொண்டு வெளிவரும் சூரியன், அதிகாலையில் ஆரஞ்சு வண்ண ஒளியில் தெரியும் மலை மற்றும் பள்ளத்தாக்கின் அழகில் இறைவனை தரிசிக்கலாம் என்று இந்துக்கள் மத்தியில் நம்பப்படுவது ஒரு காரணம் என்று அவர் தெரிவித்தார்.
அதேபோல, புத்தர் பிறந்த புனித இடமான லும்பெனி, விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வைணவ தலமான முக்திநாத் கோவில், சீதாதேவி பிறந்ததாகக் கருதப்படும் ஜனக்பூர் சீதா கோயில் போன்ற இன்னும் பல இடங்களும் நேபாளத்தில் இந்துக்கள் வழக்கமாக செல்லும் இடங்களாக உள்ளன.

பட மூலாதாரம், BSIP/Universal Images Group via Getty Images
கைலாஷ் மலை
"என்னைப் போன்றவர்களும் குறிப்பாக சாதுக்கள், இந்துக்கள் என ஒவ்வொருவரும் தரிசிக்க நினைக்கும் இடமாக கைலாஷ் விளங்குகிறது. அங்கு சென்று வணங்கினால் ஆன்மீக மாற்றம் ஏற்படுமென நம்பப்படுகிறது. அது மட்டுமின்றி, கைலாஷ் சுற்றுப்பாதை, வழிபாடு உலகில் மிகவும் விரும்பப்படும் புனித யாத்திரைகளில் ஒன்று. இந்த மலை உள்அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் சக்தி வாய்ந்த அடையாளமாகப் போற்றப்படுகிறது" எனக் குறிப்பிடுகிறார் கோகுலகிருஷ்ணன்.
இந்து மத நம்பிக்கையின்படி அங்கு சிவபெருமான் தனது குடும்பத்துடன் வசிக்கிறார். சமண மதத்தினர் இந்த மலையை அஷ்டபாதா என்று அழைக்கிறார்கள். இங்குதான் 24 தீர்த்தங்கரர்களில் முதல்வரான ரிஷபதேவர் ஞானம் பெற்றார். திபெத்தின் பௌத்த மற்றும் ஷாமனிச மதமான போன் மதத்தைப் பின்பற்றுவோர், தேவலோக தேவியான சிபைமெனின் இருப்பிடமான இந்த மலையை 'டைசே' என்று குறிப்பிடுகின்றனர். திபெத்திய பௌத்தர்கள் இந்த சிகரத்தை டெம்சோக், அவரது மனைவி தோர்ஜே பாக்மோவின் இருப்பிடமாகப் போற்றுகிறார்கள்.
"ஆசியாவின் நான்கு பெரிய ஆறுகள் மற்றும் அவற்றின் மூல பனிப் படலங்கள் (glacier) மலையின் உச்சியில் இந்து மத சின்னமான ஸ்வஸ்திகாவை உருவாக்குகின்றன. வடக்கில் இருந்து சிந்து, தெற்கில் இருந்து கர்ணபி (கங்கையின் துணை நதி), மேற்கில் இருந்து சட்லஜ், கிழக்கிலிருந்து பிரம்மபுத்திரா ஆகிய இந்த ஆறுகள் ஆசிய கண்டத்தின் ஜீவ ஆதாரங்களாகும். அதேபோல கைலாய மலைக்கு அருகிலுள்ள மானசரோவர் ஏரி புனிதமானதாகக் கருதப்படுகிறது" என்று விளக்கினார் கோகுலகிருஷ்ணன்.

'பிரம்மாவின் மனதில் உருவான மானசரோவர் ஏரி'
"இந்து சமய நம்பிக்கையின்படி, மானசரோவர் ஏரி முதலில் பிரம்மாவின் மனதில் உருவானதாகக் கருதப்படுகிறது. எனவே இது மானசரோவர் என்று அழைக்கப்படுகிறது. 'மானசரோவர்' என்ற பெயர் இரண்டு சமஸ்கிருத சொற்களின் சேர்க்கையாகும். 'மானஸ்' என்பது 'மனம்' அல்லது 'அறிவு' என்பதைக் குறிக்கும், 'சரோவர்' என்பது 'ஏரி' என்பதைக் குறிக்கும்" என்கிறார் கோகுலகிருஷ்ணன்.
கைலாயம் - மானசரோவரில் தெய்வங்கள் தங்கி தியானம் செய்வதாக ஒரு நம்பிக்கை நிலவுவதாகக் குறிப்பிட்ட அவர், இந்துக்கள் மட்டுமின்றி பல தரப்பட்ட மதங்களைச் சேர்ந்த ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்கள் அங்கு வந்து செல்வதாகவும் தெரிவித்தார்.
அதோடு, "நேபாளத்திற்குச் செல்ல ஏதுவான காலகட்டமாக அக்டோபர், நவம்பர் மாதங்களைக் குறிப்பிட்டார் திருவண்ணாமலையைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் மகாராஜ்.

பட மூலாதாரம், Getty Images
நேபாளம் செல்வது எப்படி?
ஆன்மீக பூமியான நேபாளத்திற்கு குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து இந்துக்கள் ஒவ்வோர் ஆண்டும் ஆர்வத்துடன் சென்று வருவதாக கும்பகோணத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் சூப்பர் யாத்திரா ஏஜென்சி உரிமையாளர் சையது சாதிக் பிபிசி தமிழிடம் விவரித்தார்.
"நேபாளத்திற்கு எங்கள் ஏஜென்சி மூலமாக ஆண்டுதோறும் குழுவாக எங்கள் பிரதிநிதிகளுடன் ஆன்மீக சுற்றுலாவுக்கு அனுப்பி வருகிறோம். சில நேரங்களில் நானும் உடன் சென்று வருவதுண்டு," என்று கூறினார் சையது சாதிக்.
"எங்கள் ஏஜென்சி மூலம் ஏற்கெனவே சுற்றுலா சென்றவர்கள் மூலமாக எங்களை அணுகும் நபர்களை, அவர்கள் விருப்பத்திற்கு உட்பட்டு தேர்வு செய்கிறோம். அத்துடன், அவர்களுடைய உடல்நிலை குறித்து விசாரித்து உரிய உடல் தகுதி இருந்தால் மட்டுமே அழைத்துச் செல்கிறோம்" எனத் தெரிவித்த சையது சாதிக், அதற்கு முன்பாக அவர்களுக்கு நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா செல்லும்போது எப்படிச் செயல்பட வேண்டும் என்பது குறித்து விரிவாக வகுப்பு எடுப்பதாகக் கூறுகிறார்.
நேபாளத்திற்குச் செல்வதற்கான பயணப் பாதை குறித்து விளக்கிய சையது சாதிக், "இங்கிருந்து காத்மாண்டு வரை விமானத்தின் மூலமாகவே பெரும்பாலும் அழைத்துச் செல்வோம். அங்கிருந்து சாம்ராட்கள் மூலமாக தனித்தனி மினி பேருந்துகளில் 25 பேர் கொண்ட குழுவாக மானசரோவர் கைலாஷ் பகுதிக்கு அழைத்துச் செல்வோம்" என்று விவரித்தார்.

நான்கு நாட்கள் பயணம்
"காத்மாண்டுவில் இருந்து சாம்ராட்டுகள் துணையுடன் பேருந்தில் நான்கு நாட்கள் பயண முடிவிலேயே கைலாஷ் பகுதிக்குச் செல்வோம். அங்கு செல்லும்போது மிகப் பொறுமையாகவே பேருந்தில் பயணிப்போம். ஏனெனில் வயதானவர்கள் இருப்பதால் மூச்சு விடுவதற்கு சிரமமாக இருக்கும். அதற்குத் தகுந்தவாறு பேருந்து பயணம் இருப்பதை உறுதி செய்வோம். இடையில் ஏதேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிப்பதற்கான வசதியும் உள்ளது. அதிக உடல்நலக் கோளாறு ஏற்பட்டால் அவர்களை மாற்று வாகனத்தின் மூலமாக தங்குமிடத்திற்கு அனுப்பி வைப்போம்," எனக் கூறினார்.
"நான்கு நாட்கள் பயண முடிவில் கைலாசத்திற்கு சென்றவுடன் அங்கு தரிசனம் முடித்து சிலர் கிரிவலம் செல்வது போல மலையைச் சுற்றுவார்கள். அதற்கு இரண்டு நாட்கள் ஆகும், அதற்கு ஏற்றவாறு நிகழ்வு மாறுபடும். மேலும் குளிர்ப் பிரதேசம் என்பதால் அதற்கு ஏற்றவாறு உடைகளையே அணி வைத்து அழைத்துச் செல்வோம், தேவைப்பட்டால் நாங்கள் வாங்கியும் தருவோம். கைலாஷுக்கு செல்லும்போது நான்கு நாட்கள் பேருந்து பயணம் திரும்பி காத்மாண்டுக்கு வருவதற்கு மூன்று நாட்கள் மட்டுமே ஆகும்" என்று விளக்கினார் சையது சாதிக்.
'15 ஆண்டுகளுக்கு முன் சிக்கினோம்'
"கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக இதேபோன்ற ஒரு பேரிடரில் நானும் என்னுடன் வந்த குழுவினரும் நேபாளத்தில் சிக்கினோம். அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா எங்களை உடனடியாக மீட்க பணிகளை முடுக்கி விட்டதுடன், எங்களைப் பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்கு விமானம் வைத்து அழைத்து வந்ததை என்னால் மறக்க முடியாது," என்று நினைவையும் பகிர்ந்தார் சாதிக்.
தற்போதும் அவரது ஏஜென்சி மூலமாக நேபாளத்திற்கு குழுவாகச் சென்றுள்ளதாகவும் அதில் ஒரு பேருந்து விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வந்து இருப்பதாகவும் கூறும் சாதிக், நிச்சயமாக அவர்கள் மீட்கப்பட்டு பத்திரமாகத் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாகவும் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































