You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர் இலவசம்: தவெகவின் முக்கிய 13 தேர்தல் வாக்குறுதிகள்
தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய், விழா மேடையிலேயே கீழ்க்கண்ட 3 உத்தரவுகளை பிறப்பித்தார்.
- 500 யூனிட் வரை பயன்படுத்தினால் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம்
- சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை
- போதைப் பொருள் தடுப்புக்கு மாவட்டந்தோறும் சிறப்புப் படை
தவெக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டிருந்த முக்கிய வாக்குறுதிகள் சிலவற்றை சுருக்கமாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
மின் கட்டண சலுகை
த.வெ.க. தேர்தல் அறிக்கையில்,"தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு மாதமும் தலா 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று தேர்தல் பிரசாரத்தில் விஜய் குறிப்பிட்டிருந்தார்.
முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதும் கையெழுத்திட்ட முதல் அரசாணைகளில் ஒன்றாக மின் கட்டண சலுகை உள்ளது. ஆனால் இந்த அறிவிப்பில் 500 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு 2 மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் எனவும். 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற நடைமுறை தொடரும் என்றும் விளக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று தற்போது இருக்கும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணக் கணக்கீடு நீக்கப்பட்டு, மாதம் ஒருமுறை மின்கட்டணம் கணக்கிடுவது அமல்படுத்தப்படும் என்றும் த.வெ.க. தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.
"மதிப்புமிகு மகளிர் திட்டம்"
ஒவ்வொரு குடும்பத்தலைவிக்கும் அவர்கள் 60 வயதை எட்டும் வரையில், அவர்களுடைய வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் 2500 ரூபாய் வரவு வைக்கப்படும் என தவெக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்காலத்தில், பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தைத் தொடர வேண்டும் என முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
6 சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசம்
"அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்" என்ற பெயரில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர்கள் வாங்குவதற்கான தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும், என த.வெ.க. வாக்குறுதி அளித்திருந்தது.
அரசுப் பேருந்துகளில் இலவச பயணம்
தற்போது மகளிர் கட்டணமில்லாப் பயணம் நகரப் பேருந்து உள்ளிட்ட குறிப்பிட்ட அரசுப் பேருந்துகளில் மட்டுமே நடைமுறையில் உள்ளது.
இந்த நிலையை மாற்றி, மாநிலம் முழுவதும் இயங்கும் நகர, மாநகர, மாவட்டங்களுக்கிடையிலான அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லாமல் பயணிக்கும் "வெற்றிப் பயணம்" திட்டம் செயல்படுத்தப்படும், என த.வெ.க. தேர்தல் அறிக்கை உறுதியளித்திருந்தது.
"அண்ணன் சீர் திட்டம்"
ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களில் நடைபெறும் திருமணங்களில் மணப்பெண்ணுக்கு 8 கிராம்(சவரன்) தங்கமும், பட்டுச் சேலையும் வழங்கப்படும் என த.வெ.க. உறுதியளித்திருந்தது.
"தாய்மாமன் தங்க மோதிர திட்டம்"
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தங்க மோதிரம் மற்றும் மென்மையான துணி, டயப்பர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தாய்மாமன் சீர் பெட்டகம் வழங்கப்படும் என த.வெ.க. உறுதியளித்திருந்தது.
"காமராஜர் கல்வி உறுதித் திட்டம்"
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் பன்னிரென்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் தாயார் அல்லது காப்பாளர் வங்கிக்கணக்கில் ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் இரண்டு தவணைகளாக வரவு வைக்கப்படும் என தவெக தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு துரிதப் பணியாளர் சட்டம்
தமிழ்நாட்டில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட துரிதப் பணியாளர்களின் நலன் கருதி (GIG Workers), தமிழ்நாடு துரிதப் பணியாளர் சட்டம் இயற்றப்பட்டு, அவர்களின் பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட சமூக அந்தஸ்து உறுதி செய்யப்படும் என தேர்தல் அறிக்கை கூறுகிறது.
ராணி வேலுநாச்சியார் படை
பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், தமிழகத்தில் ராணி வேலுநாச்சியாரின் பெயரில் செயல்படும் 500 கண்காணிக்கும் குழுக்கள் அமைக்கப்படும், என தவெக தேர்தல் அறிக்கை கூறுகிறது.
விலையில்லா சானிட்டரி நாப்கின்
ரேசன் கடைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பெண்களுக்கான விலையில்லா சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும் என த.வெ.க. அறிவித்திருந்தது.
இளைஞர் வெற்றி நிதி
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு மாதம் 4 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.
12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ உள்ளிட்ட டிப்ளமோ படிப்புகள் முடித்துவிட்டு வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு மாதம் 2500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித் தொகை பதிவு செய்ததில் இருந்து முதல் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும் என த.வெ.க. தேர்தல் அறிக்கை கூறுகிறது.
விவசாயக் கடன் தள்ளுபடி
5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும் எனவும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள ஒவ்வொரு விவசாயிகளின் குடும்பத்திற்கும் விதைப்புக் கால நிதியுதவியாக ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் இரண்டு தவணைகளில்(ஜூலை - ஆகஸ்ட் பருவம், ஜனவரி-பிப்ரவரி பருவம்) வழங்கப்படும் எனவும் தேர்தல் அறிக்கையில் த.வெ.க. அறிவித்திருந்தது.
போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு
முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் போதைப்பொருள் தடுப்பு படை உருவாக்கப்படும் என, த.வெ.க. தேர்தல் அறிக்கை கூறியிருந்தது.
முதலமைச்சர் விஜயின் முதல் 3 உத்தரவுகளில் ஒன்றாக போதைப்பொருள் தடுப்புக்கு மாவட்டந்தோறும் சிறப்புப் படை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
100 சிறப்பு பள்ளிகள்
இது தவிர தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு பள்ளிகள், காலை உணவுத்திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவாக்கம், ஏஐ அமைச்சகம் , அனைத்து குடும்பங்களுக்கு ரூ.25 லட்சத்திற்கான மருத்துவக் காப்பீடு மற்றும் குழந்தையில்லா தம்பதிகளுக்கு இலவச சிகிச்சை உள்ளிட்டவையும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு