You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
துருக்கி-இஸ்ரேல் இடையே நேரடி போர் மூளும் அபாயம் உள்ளதா?
- எழுதியவர், ஹில்கென் டோவாச் புரன்
- பதவி, பிபிசி துருக்கி
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
கடந்த மூன்று ஆண்டுகளில், துருக்கி-இஸ்ரேல் இடையிலான உறவு, ராஜ்ஜீய ரீதியாக இயல்பு நிலைக்குத் திரும்பும் நிலையில் இருந்து மாறி, தற்போது நேரடி ராணுவ மோதலின் விளிம்பிற்கு வந்துள்ளது.
இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே வார்த்தைப் போர் தொடர்ந்து வரும் நிலையில், அவர்களுக்கு இடையிலான ராணுவ மோதலுக்கான வாய்ப்பு இப்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஏப்ரல் 11 அன்று வெளியிட்ட ஒரு சமூக ஊடகப் பதிவில், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்துவான் இரானின் "பயங்கரவாத ஆட்சிக்கு" உதவுவதாகவும், "தனது சொந்த குர்திஷ் குடிமக்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்வதாகவும்" குற்றம் சாட்டினார்.
"காஸாவில் 73,000 பாலத்தீனியர்களின் ரத்தம் படிந்த கைகளையும் முகங்களையும் பார்க்காமல், அவர்கள் நம் நாட்டின் மீது நம்முடைய குர்திஷ் சகோதரர்கள் மூலமாக வெட்கமின்றி குற்றம் சாட்டுகிறார்கள்" என்று ஏப்ரல் 15 அன்று துருக்கி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் எர்துவான் கூறினார்.
சமீபத்திய நிகழ்வுகள் குறித்து பிபிசி துருக்கி சேவையிடம் பேசிய நிபுணர்கள், துருக்கி மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் ஏற்படும் அபாயம், "எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது" என்று கூறுகின்றனர்.
இருப்பினும், இரு தரப்பினரும் சாத்தியமான மோதலைத் தவிர்க்க முயற்சிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
'அமைதிக்குப் பதிலாக, போட்டியைக் காண்கிறோம்'
அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல்கள் மற்றும் காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, துருக்கி மற்றும் இஸ்ரேல் இடையே கருத்து மோதல்கள் அதிகரித்து, பதற்றம் நிலவி வருகிறது.
மூன்று ஆண்டுகால கடுமையான அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, ராஜ்ஜீய உறவுகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் செயல்முறை முடங்கியது.
அத்துடன் இஸ்ரேலுடனான வர்த்தகத்தைத் நிறுத்தி வைப்பதாக துருக்கி அறிவித்தது.
இஸ்மிர் காதேப் சலபி பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறை இணைப் பேராசிரியர் முனைவர் டோக்சி எர்சோய், இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய நிலைமைக்கு ராஜ்ஜீயக் கொள்கைகளை விட உள்நாட்டு நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதே காரணம் என்று நம்புகிறார்.
மேலும், "வெளியுறவுக் கொள்கை உள்நாட்டு அரசியலுக்குப் பிணைக்கைதியாகிவிட்டது" என்றும், அவர் கூறுகிறார்.
"அதிகரித்துள்ள பதற்றம், மோதல் போக்கு மற்றும் வார்த்தைப் போர் ஆகியவை உண்மையில் இரு தரப்பு உள்நாட்டு அரசியலையும் ஊக்குவிக்கின்றன. நெதன்யாகு ஒரு கடுமையான மற்றும் மோதல் போக்கைக் கொண்ட பிம்பத்தைக் காட்டுவதன் மூலம் உள்நாட்டு அரசியலில் தனது நிலையை வலுப்படுத்த முயல்கிறார். துருக்கியைப் பொறுத்தவரை, இந்தச் சூழல் பிராந்தியத் தலைமைத்துவக் கோரிக்கைகளுடன் தொடர்புடையது" என்றும் அவர் தெரிவித்தார்.
துருக்கியும் இஸ்ரேலும் ஒருவரையொருவர் "பிராந்தியத்தின் நிலையைச் சீர்குலைப்பவர்களாக" பார்ப்பதாக எர்சோய் கூறுகிறார்.
மேலும் , சமீபத்திய உறவுகள் குறித்து அவர் கூறுகையில், "துருக்கி-இஸ்ரேல் உறவுகளை நாங்கள் எப்போதும் நெருக்கமில்லாத ஆனால் மோதலில்லாத சூழல் என்றுதான் நாங்கள் குறிப்பிடுவோம். ஆனால் இப்போது அந்த நிலை மாறி, ஒரு 'கடுமையான பகைமை' உருவாகி வருவதைக் காண்கிறோம்" என்றும் தெரிவித்தார்.
முன்னாள் இஸ்ரேலிய தூதர் அலோன் பின்காஸ் கூறுகையில், துருக்கியைப் போட்டியாளராகச் சித்தரிக்கும் பெஞ்சமின் நெதன்யாகுவின் கருத்துக்கள் "ஆபத்தானவை" என்று குறிப்பிட்டார்.
"இத்தகைய சொல்லாடல்கள் மிகவும் ஆபத்தானவை, குறிப்பாக எர்துவான் இதற்குப் பதிலடியாக கோபமூட்டும் வகையிலான கருத்துகளைத் தெரிவித்து நிலைமையை மேலும் தீவிரமாக்கும்போது இது இன்னும் ஆபத்தாகிறது" என்றும் அவர் கூறுகிறார்.
"ராணுவ மோதலுக்கான அபாயத்தை அதிகரிக்கும் வார்த்தைப் போர்"
லண்டன் செயின்ட் ஜார்ஜ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறைப் பேராசிரியர் அம்னோன் அரான் , இந்த வார்த்தைப் போர்கள் பெரும்பாலும் உள்நாட்டு அரசியல் நலன்களுக்காகவே செய்யப்படுவதாக நம்புகிறார்.
"துருக்கி மற்றும் எர்துவானின் பார்வையில், இந்த கடுமையான மொழி அவரது நீதி மற்றும் மேம்பாட்டுக் கட்சியின் ஆதரவாளர்களைத் திருப்திப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது" என்று கூறும் அவர்,
"நெதன்யாகுவும் தீவிர வலதுசாரி ஆதரவாளர்களிடையே ஆதரவைப் பெறவும், தனது நிலையை வலுப்படுத்தவும் இதேபோன்ற தொனியைப் பயன்படுத்துகிறார்"என்றும் குறிப்பிட்டார்.
2010 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நடந்த மாவி மர்மாரா நெருக்கடிக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு தற்போது மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அரான் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "என் கருத்துப்படி, நெதன்யாகு மற்றும் எர்துவான் இருவருமே இத்தகைய அறிக்கைகள் மூலம் மிகவும் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்கிறார்கள். இத்தகைய கருத்துகள் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிப்பதோடு, அதை ஊக்குவிக்கவும் செய்கின்றன" என்றார்.
சிரியா, சைப்ரஸ் மற்றும் கிழக்கு மத்தியதரைக்கடல்
பிபிசி துருக்கி சேவையிடம் பேசிய நிபுணர்கள், துருக்கி மற்றும் இஸ்ரேல் இடையே சாத்தியமான மோதல்கள் ஏதேனும் ஏற்பட்டால், அது இரு நாடுகளும் தங்களின் செல்வாக்கு மண்டலங்களாகக் கருதும் இடங்கள் ஒன்றையொன்று சந்திக்கும் புள்ளிகளில் நிகழக்கூடும் என்று கூறுகின்றனர்.
"துருக்கி மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் ஏற்படும் அபாயம் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமாக உள்ளது" என்கிறார் டோக்சே எர்சாய்.
இருப்பினும், ஒரு முழு அளவிலான போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.
சிரியா, சைப்ரஸ் மற்றும் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதிகளில் அதிகரித்து வரும் போட்டியைச் சுட்டிக்காட்டிய அவர், "இங்கே இரு நாடுகளும் ஒன்றையொன்று துருவப்படுத்த முயற்சிப்பதைக் காண்கிறோம். இரு நாடுகளும் தங்களுக்கு எதிராக ஒரு வகையான உலக அரசியல் கேடயத்தை உருவாக்க முயல்கின்றன என்று நாம் சொல்லலாம்" என்றார்.
மேலும், "இஸ்ரேலின் மூலோபாய ஆவணங்களில், துருக்கி இப்போது ஒரு எதிரியாக விவரிக்கப்பட்டுள்ளது, இது ஒரு உண்மை" என்றும் எர்சோய் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அரான், "கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது ராணுவ மோதலுக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக நான் நினைக்கிறேன், ஆனால் அதை இன்னும் தவிர்க்க முடியும்" என்றார்.
பதற்றங்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து 2025-ஆம் ஆண்டில் அஜர்பைஜானில் துருக்கி மற்றும் இஸ்ரேல் ராணுவக் குழுக்களுக்கு இடையே நடந்த சந்திப்புகளைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், "எனக்குத் தெரிந்தவரை, குறைந்தபட்சம் ராணுவ மட்டத்தில், மோதலுக்கு வழிவகுக்கும் எந்தவொரு அசம்பாவிதங்களையும் அல்லது தவறான புரிதல்களையும் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று கூறினார்.
துருக்கியைப் பற்றிய இஸ்ரேலின் பார்வை குறித்து அரான் கூறுகையில், "இஸ்ரேலிய அரசு மற்றும் ராணுவத்தில் உள்ள அரசியல் மற்றும் ராணுவ உயரடுக்கினரின் ஒரு பெரிய பிரிவினரால் துருக்கி படிப்படியாக ஒரு விரோதமான மற்றும் ஆபத்தான சக்தியாகப் பார்க்கப்படுகிறது" என்றார்.
அலோன் பின்காஸ் இந்த அபாயத்தை விளக்க ஒரு உதாரணத்தைக் கூறுகிறார்.
"துருக்கி காஸா அல்லது லெபனானுக்குச் செல்லும் உதவிப் படகுகளுக்குப் பாதுகாப்பாகச் செல்வதாக வைத்துக்கொள்வோம். இஸ்ரேலிய கடற்படைக் கப்பல்கள் இந்த படைக் கூட்டத்தை எதிர்கொள்ள முயன்று, துருக்கியக் கப்பல்கள் அவற்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினால், இஸ்ரேல் பதிலடி கொடுக்கக்கூடும், இதனால் ஒரு வரையறுக்கப்பட்ட போர் வெடிக்கக்கூடும். ஆனால் அது நடக்கும் என்று நான் நினைக்கவில்லை"என்கிறார்.
துருக்கி மற்றும் இஸ்ரேலிய ராணுவங்கள் இரு நாட்டு அரசியல்வாதிகளை விட "அதிகப் பகுத்தறிவுடன்" செயல்படுவதாக அலோன் பின்காஸ் கருதுகிறார்.
இருப்பினும், சிரியாவில் இரு நாட்டு போர் விமானங்களும் ஒன்றையொன்று சந்திக்கும் இதே போன்ற சூழ்நிலை ஏற்பட்டால், அது ஒரு "பயங்கரமான சூழ்நிலைக்கு" வழிவகுக்கக்கூடும் என்று அவர் எச்சரிக்கிறார்.
"இது குறித்து என்னிடம் எந்தத் தகவலும் இல்லை, ஆனால் மொசாட் மற்றும் துருக்கிய ராணுவம் மற்றும் வெளிநாட்டு உளவு அமைப்புகள் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக யாராவது சொன்னால், நான் ஆச்சரியப்பட மாட்டேன்" என்று அவர் கூறினார்.
'புதிய இரான்' குறித்த கலந்துரையாடல்
பிப்ரவரி 17 அன்று, இரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்குவதற்கு முன்பு, முன்னாள் இஸ்ரேலியப் பிரதமர் நஃப்தாலி பென்னட், துருக்கிதான் "புதிய இரான்" என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலிய மற்றும் சர்வதேச ஊடகங்களில் இது போன்ற கட்டுரைகள் வெளியாகின.
பெஞ்சமின் நெதன்யாகுவும் தனது ஒரு பதிவில், துருக்கி இரானுக்கு ஆதரவளிப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
ஏப்ரல் 13 அன்று அனடோலு ஏஜென்சியிடம் பேசிய துருக்கிய வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான், "இரானுக்குப் பிறகு, இஸ்ரேலால் ஒரு எதிரி இல்லாமல் வாழ முடியாது, எனவே ஒரு புதிய அரசியல் சிக்கலை உருவாக்க அது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. நெதன்யாகு அரசாங்கம் மட்டுமல்ல, அவரது எதிர்ப்பாளர்களில் சிலரும் கூட துருக்கியை ஒரு புதிய எதிரியாகக் காட்ட முயல்வதை நாங்கள் காண்கிறோம்" என்று கூறினார்.
முன்னாள் தூதர் அலோன் பின்காஸ் கூறுகையில், இரானைப் போலல்லாமல், துருக்கி "இஸ்ரேலை அழிப்பதாக உறுதிமொழி எடுக்கவில்லை" என்றும், இஸ்ரேலுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு ராணுவ அணு ஆயுதங்களை உருவாக்கும் நோக்கம் அதற்கு இல்லை என்றும் குறிப்பிட்டார்.
"இஸ்ரேலைப் பற்றி எர்துவான் சொல்லும் எதையும் ஏற்காதவர்கள் கூட, துருக்கி ஒரு எதிரி நாடு அல்ல என்பதை அறிவார்கள். அச்சுறுத்தலின் அடிப்படையில் துருக்கியை இரானுக்கு இணையாகக் கருதும் எவரும் பொறுப்பற்ற முறையிலும் ஆபத்தான முறையிலும் செயல்படுகிறார்கள்," என்றார்.
துருக்கி "புதிய இரான்" அல்ல என்றே அரானும் கூறுகிறார்.
"நான் அப்படி நினைக்கவில்லை. இஸ்ரேலிய அரசாங்க அதிகாரிகள் அதை உண்மையிலேயே நம்புகிறார்கள் அல்லது அந்த அர்த்தத்தில் சொல்கிறார்கள் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. ஏனெனில் துருக்கி நேட்டோவில் உறுப்பினராக உள்ளது, அமெரிக்காவுடன் வலுவான உறவுகளைக் கொண்டுள்ளது மற்றும் அதன் வர்த்தகத்தில் பெரும்பகுதியை ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொள்கிறது" என்று அவர் குறிப்பிட்டார்.
சில இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்களிடையே நிலவும் இந்த பார்வைக்கு, இஸ்ரேலுக்கு எதிராக அதிபர் எர்துவான் மற்றும் துருக்கி எடுத்துள்ள கடுமையான நிலைப்பாடே காரணம் என்று அரான் கருதுகிறார்.
அவரது கூற்றுப்படி, நெதன்யாகுவை ஹிட்லருடன் எர்துவான் ஒப்பிட்டதும், கடந்த காலங்களில் இஸ்ரேல் குறித்து துருக்கி அதிபர் முன்வைத்த விமர்சனங்களுமே இந்தப் பார்வைக்குக் காரணங்களாக அமைகின்றன.
"துருக்கி புதிய இரான் அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது" என்கிறார் டோக்சே எர்சாய்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்த ஒப்பீடு துருக்கியை மேற்கத்திய அமைப்பிலிருந்து பிரித்து தனிமைப்படுத்தும் நோக்கம் கொண்டதாக இருக்கலாம். குறிப்பாக மேற்கத்திய ஊடகங்களில் வெளியாகும் இஸ்ரேல் ஆதரவுக் கட்டுரைகள் ஒருதலைப்பட்சமானவை மற்றும் புனையப்பட்டவை என்று நான் நம்புகிறேன். இவற்றை ஒரு வகையான திட்டமிட்ட அறிக்கை மற்றும் உள்நோக்கம் கொண்டதாக நாம் கருதலாம்" என்றார்.
"எதிர்காலத்தில் முன்னேற்றத்தை எதிர்பார்க்க வேண்டாம்"
மோதல் அச்சுறுத்தல் ஒரு தீவிரமான பிரச்னையாக மாறியுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே நம்பிக்கையை மீட்டெடுப்பது உண்மையிலேயே சாத்தியமா? என்று கேள்வி எழுப்பினால்,
"நெதன்யாகு அதிகாரத்தில் இருந்து விலகிய பிறகு நிலைமை மேம்படும் என்று நான் கூறுவேன், ஆனால் நீங்கள் குறிப்பிட்டது போல, நஃப்தாலி பென்னட், நெதன்யாகுவை விடவும் துருக்கி விஷயத்தில் மிகவும் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்" என்று அலோன் பின்காஸ் கூறுகிறார்.
இஸ்ரேலில் அக்டோபர் 27-ஆம் தேதியே பொதுத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இதில் முன்னாள் இஸ்ரேலிய பிரதமர்களான நஃப்தாலி பென்னட் மற்றும் யாயிர் லாபிட் தலைமையிலான கூட்டணி, பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணிக்கு எதிராகப் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துருக்கி-இஸ்ரேல் உறவில் மாற்றம் என்பது தற்போதைய அரசாங்கங்களின் மூலம் வராது என்றும், அவர்களுக்குப் பின் வருபவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகே அது நிகழும் என்றும் அரான் நம்புகிறார்.
டோக்சி எர்சோயும், " வரக்கூடிய காலத்தில் ஒரு சிறந்த சூழலை நாம் எதிர்பார்க்கக்கூடாது" என்று கூறுகிறார்.
வரலாற்றில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு "எப்போதுமே சிறந்ததாக இருந்ததில்லை" என்பதைக் குறிப்பிட்ட அவர், தற்போதைய சூழ்நிலையை ஒரு "பிளவு" என்று விவரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "துருக்கி-இஸ்ரேல் உறவுகளைச் சீரமைக்கும் பாதையில் கொண்டு செல்ல ஒரு புதிய பாதுகாப்பு கட்டமைப்பு தேவைப்படுகிறது. வேறுவிதமாகக் கூறினால், இருதரப்பு நம்பிக்கை மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு