ஏஐ மூலம் அமைச்சரின் போலி கையெழுத்தைப் போட்டு மோசடி - அம்பலமானது எப்படி?

செயற்கை நுண்ணறிவு, போலி கையெழுத்து, மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் சத்ய குமார், அனந்தபூர், சாட் ஜிபிடி

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, கங்காத்ரி, வேணு
    • எழுதியவர், துளசி பிரசாத் ரெட்டி
    • பதவி, பிபிசிக்காக
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

செயற்கை நுண்ணறிவு மூலம் போலி ஆவணங்களை உருவாக்கிய தந்தையும் மகனும் கைது செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி ஆவணங்களைத் தயாரித்த தந்தை மற்றும் மகன் பிடிபட்டனர்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில், மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யகுமார் யாதவ் அவர்களின் கையெழுத்தைப் போலியாக உருவாக்கி, இடமாற்ற உத்தரவு உருவாக்கப்பட்டது.

ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட இந்த போலி உத்தரவைக் காட்டி அரசுப் பணியாளர் ஒருவரின் குடும்பத்தை ஏமாற்ற முயன்ற மோசடி புகாரில், காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்த விவரங்களை, ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தின் கதிரி ஊரகப் பிரிவு ஆய்வாளர் நாகேந்திரா, பிபிசிக்கு விளக்கமாக தெரிவித்தார்.

நடந்தது என்ன?

ஸ்ரீசத்யசாய் மாவட்டம் தனகல்லு மண்டலம் சீகட்டிமானுபல்லியைச் சேர்ந்த ஜெயச்சந்திராவின் மனைவி ரமணம்மா, கடப்பா ரிம்ஸ் (RIMS) மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார்.

தனது குழந்தைகள் உட்பட குடும்பத்தினர் ஊரில் இருந்தாலும் பணி நிமித்தமாக கடப்பாவில் விடுதியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். குடும்பத்தைப் பிரிந்து கடப்பாவில் வசிப்பது அவருக்கு மிகுந்த அலைச்சலையும் சிரமத்தையும் ஏற்படுத்தியது.

தனது மனைவி, வேலையை கடப்பா மாவட்டத்திலிருந்து ஸ்ரீசத்யசாய் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்தால் அது குடும்பத்திற்கு நல்லதாக இருக்கும் என்று ரமணம்மாவின் கணவர் விரும்பினார்.

இது பற்றி ஸ்ரீசத்யசாய் மாவட்டம் கதிரி மண்டலம் கவுலேபல்லியைச் சேர்ந்த தனது உறவினர் பாலகா கங்காதிரியிடம் ஜெயசந்திரன் பேசினார்.

இதைவைத்து, தனது மகன் வேணுவுடன் சேர்ந்து கங்காதிரி ஒரு திட்டம் தீட்டினார். அதன்படி, அமைச்சர் கையொப்பமிட்ட இடமாற்ற உத்தரவு கடிதம் என்று சில ஆவணங்களை அவர்கள் ஜெயச்சந்திரா மற்றும் அவரது மனைவிக்கு அனுப்பினார்கள்.

அந்தக் கடிதத்தை ரமணம்மா அதிகாரிகளிடம் சென்று கொடுத்தபோதுதான், அது போலி இடமாற்ற உத்தரவு என்பது தெரியவந்தது" என்று சிஐ நாகேந்திரா தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு, போலி கையெழுத்து, மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர், சத்ய குமார், அனந்தபூர், சாட் ஜிபிடி

பட மூலாதாரம், UGC

காவல்துறையில் புகார்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்த விவகாரம் தொடர்பாக ரமணம்மாவின் கணவர் ஜெயச்சந்திராவிடம் பிபிசி பேசியது. சுகாதாரத் துறை அமைச்சரின் நேர்முக உதவியாளரை தனக்கு நன்றாகத் தெரியும் என்று கூறிய கங்காதிரி, அவரிடம் பேசி இடமாற்றம் செய்து தருகிறேன் என்றும் கூறி ஒரு லட்சம் ரூபாய் வாங்கினார் என்று ஜெயசந்திரன் குற்றம் சாட்டினார்.

"எனது மனைவி ரிம்ஸ் மருத்துவமனையில் ஏஎன்எம்-ஆக பணிபுரிகிறார். அங்கேயே விடுதியில் தங்கி இருக்கிறார். நான் உள்ளூர் எம்.பி.டி.ஓ அலுவலகத்தில் அவுட்சோர்சிங் ஊழியராகப் பணிபுரிகிறேன். என்னுடைய மனைவி வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வந்து செல்வார். எங்களுக்கு எட்டு மற்றும் நான்கு வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். ரமணம்மா வீட்டிற்கு வரும் ஒரு நாள் மட்டுமே பிள்ளைகள் நன்றாகச் சாப்பிடுகிறார்கள். தாய் தங்களுடன் இல்லையே என்று அவர்கள் எப்போதும் ஏக்கத்திலேயே இருக்கிறார்கள். என்னுடைய 80 வயது அம்மாவால் பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ள முடியவில்லை. எனவே, வீட்டில் எல்லா வேலைகளையும் செய்துகொண்டு, குடும்பப் பொறுப்பையும் பார்த்துக்கொள்ள வேண்டியுள்ளது" என்று ஜெயச்சந்திரா தெரிவித்தார்.

"என் மனைவி கடப்பாவிலிருந்து ஊருக்கு வந்து செல்வது சிரமமாக இருப்பதாகவும், குழந்தைகளை பராமரிக்க கஷ்டப்படுவதையும் கங்காதிரியிடம் பேசிக் கொண்டிருக்கும்போது கூறினேன். அப்போது அவர், தனக்கு மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யகுமாரைத் தெரியும் என்று கூறி அமைச்சருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் காட்டினார். தனது தந்தைக்கு அமைச்சர் சத்யகுமார் யாதவின் பிஏ சேஷாத்ரி என்பவரைத் தெரியும் என்று கங்காதிரியின் மகன் வேணுவும் கூறினார். அமைச்சரின் பிஏ-விடம் பேசி உங்கள் மனைவியை இடமாற்றம் செய்து தருகிறோம் என்று கூறிய அப்பாவும் மகனும் எங்களிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வாங்கினார்கள். எனது மனைவியின் விவரங்களைப் பெற்றுக்கொண்ட கங்காதிரியின் மகன் வேணு, பின்னர் இடமாற்ற அசல் உத்தரவு என்று கூறி, போலியான இடமாற்ற உத்தரவை எனது வாட்ஸ்அப்-பிற்கு அனுப்பினார்" என்று ஜெயசந்திரா விவரித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

அந்த உத்தரவு நகலைப் பார்த்தபோதே தங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டாலும், சில நாட்களுக்குப் பிறகு அதிகாரிகளிடம் அதைக் காட்டியபோது தந்தை-மகன் செய்த மோசடி அம்பலமானதாகவும் ஜெயச்சந்திரா கூறினார்.

"அந்த உத்தரவு நகலைப் பார்த்ததும் எனக்கு ஏனோ சந்தேகம் வந்து சில நாட்கள் காத்திருந்தேன். பிறகு அதிகாரிகளிடம் காட்டியபோது அது போலியானது என்று கூறினார்கள். பிறகு, அமைச்சருக்கு சேஷாத்ரி என்ற பெயரில் உதவியாளர் யாராவது இருக்கிறாரா என்றும் விசாரித்தோம். ஆனால், அந்த பெயரில் அமைச்சர் சத்யகுமாரிடம் யாரும் பிஏ-வாக வேலை பார்க்கவில்லை என்று தெரியவந்தது. இதனால் கங்காதிரியும் வேணுவும் எங்களை ஏமாற்றிவிட்டனர் என்று தெரியவந்தது. இதுபற்றி அவர்களிடம் கேட்டபோது, உண்மையை ஒப்புக்கொண்டனர். எங்கள் பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டோம், ஆனால் நாட்கள் பல கடந்தும் அவர்கள் பணத்தைத் திருப்பித் தரவில்லை. இதனால் இந்த மாதம் 26-ம் தேதி தனகல்லு காவல்நிலையத்தில் புகார் அளித்தோம்" என்று ஏமாற்றப்பட்ட ஜெயசந்திரா கூறினார்.

செயற்கை நுண்ணறிவு, போலி கையெழுத்து, மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர், சத்ய குமார், அனந்தபூர், சாட் ஜிபிடி, காவல்துறை, போலீசார்

பட மூலாதாரம், KADIRI POLICE

அமைச்சரின் கையெழுத்துடன் கடிதம் தயாரித்தது எப்படி?

கதிரி மண்டலம், கவுலேபல்லி குவார்ட்டர்ஸைச் சேர்ந்த பாலக கங்காதிரியும் அவரது மகன் பாலக வேணு ஆகிய இருவரும் ஜெயச்சந்திராவிற்கு உறவினர்கள் என்று கதிரி டிஎஸ்பி சிவனாராயண சுவாமி மற்றும் கதிரி ஊரக சிஐ நாகேந்திரா பிபிசியிடம் தெரிவித்தனர்.

கடப்பா ரிம்ஸ் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரியும் ஜெயசந்திராவின் மனைவி ரமணம்மா, அங்கேயே விடுதியில் தங்கியுள்ளார். குடும்பத்தை பராமரிப்பதற்காகச் சொந்த ஊருக்கு வந்து செல்வது சிரமமாக இருப்பதாக அவரது கணவர் ஜெயச்சந்திரா இவர்களிடம் கூறியுள்ளார். இதைப் பயன்படுத்திக்கொண்ட தந்தை-மகன் இருவரும் மோசடி திட்டத்தைத் தீட்டி அரங்கேற்றியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

"கங்காதிரி மற்றும் அவரது மகன் வேணு ஆகிய இருவரும் எளிதாகப் பணம் சம்பாதிக்க ஜெயச்சந்திராவை ஏமாற்ற முயன்றுள்ளனர். அமைச்சருக்கு நெருக்கமான யாரையும் இவர்களுக்குத் தெரியாது. ஆனால், சேஷாத்ரி என்பவர் அமைச்சரின் பிஏ-யாக இருப்பதாகவும், அவரைத் தங்களுக்கு நன்றாகத் தெரியும் என்று பொய் கூறியுள்ளனர். ரமணம்மாவை கடப்பா ரிம்ஸ் மருத்துவமனையிலிருந்து மதனப்பள்ளி அரசு பொது மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்து தருவதாக நம்ப வைத்து, ஜெயச்சந்திராவிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் வாங்கியுள்ளனர்" என்று கதிரி டிஎஸ்பி சிவநாராயண சுவாமி கூறினார்.

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, அமைச்சரின் பெயரில் அசல் போன்றே தோற்றமளிக்கும் போலி கடிதத்தை அவர்கள் எவ்வாறு உருவாக்கினார்கள் என்பதையும் அவர் விளக்கினார்.

"ரமணம்மாவின் விவரங்களை ஜெயச்சந்திராவிடமிருந்து பெற்ற வேணு, சாட் ஜிபிடி மூலமாகப் போலி இடமாற்ற உத்தரவைத் தயாரித்துள்ளார். அதனை இந்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி ஜெயச்சந்திராவிற்கு வாட்ஸ்அப்-இல் அனுப்பி மோசடி செய்துள்ளார்" என்று கதிரி டிஎஸ்பி சிவநாராயண சுவாமி தெரிவித்தார்.

உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்
செயற்கை நுண்ணறிவு, போலி கையெழுத்து, மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர், சத்ய குமார், அனந்தபூர், சாட் ஜிபிடி, காவல்துறை, போலீசார்

பட மூலாதாரம், UGC

வழக்குப் பதிவு

பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act) பிரிவு 66 (D)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து, பாலக வேணு (23) மற்றும் பாலக கங்காதிரி (45) ஆகியோரைக் கைது செய்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மோசடி செய்த இருவரையும் கைது செய்த காவல்துறையினர், இந்த வழக்கின் விவரங்களை ஊடகங்களுக்குத் தெரிவிக்க செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்கள். சாட் ஜிபிடி மூலம் போலி இடமாற்றக் கடிதத்தைத் தயாரித்ததை ஊடகங்கள் முன்னிலையில் வேணு ஒப்புக்கொண்டார்.

இருப்பினும், குற்றவாளிகள் ரிமாண்டில் இருந்ததால், உள்ளூர் ஊடகங்களின் உதவியுடன் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் பேச பிபிசி முயற்சி செய்தது. ஆனால், அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

குற்றவாளிகள் மீது, போலி ஆவணம் தயாரித்தல், மோசடி மற்றும் ஐடி சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக சித்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.எஸ். சரஸ்வதி பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த மோசடியில் ஆந்திர மாநில அமைச்சர் சத்யகுமார் யாதவின் கையெழுத்தை பயன்படுத்தியுள்ளதால், அவரிடம் இந்த விவகாரம் குறித்து பிபிசி பேசியது. அவர் இது குறித்து இவ்வாறு கூறினார்:

"இதற்கு முன்பும் எனக்குத் தெரியாமலேயே எனது பெயரில் திருமலையில் பரிந்துரை கடிதங்கள் வழங்கப்பட்டதாக தெரியவந்தது. அப்போது நான் அவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்தேன். தற்போது மீண்டும் எனது கையெழுத்தைப் போலியாகப் போட்டு இடமாற்றக் கடிதம் வழங்கப்பட்ட விஷயத்தை ஊடகங்கள் வாயிலாக தெரிந்துக்கொண்டேன். காவல்துறையினர் அவர்களைக் கைது செய்துள்ளனர். இது குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு எஸ்பி-யிடம் கேட்டுக் கொண்டுள்ளேன். பொதுவாழ்க்கையில் இருக்கும் எங்களைப் போன்றவர்கள் மக்களிடையே செல்லும்போது பலர் எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் யார் என்ற விவரங்கள் எங்களுக்குத் தெரிவதில்லை, அதை அவர்கள் மோசடிக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்."

செயற்கை நுண்ணறிவு, போலி கையெழுத்து, மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர், சத்ய குமார், அனந்தபூர், சாட் ஜிபிடி, காவல்துறை, போலீசார்

பட மூலாதாரம், Getty Images

ஏஐ நிறுவனங்கள் என்ன கூறுகின்றன?

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி போலி ஆவணங்கள் உருவாக்கப்படுவது இது முதல் முறையல்ல. அண்மையில், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட காசோலை ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது.

அதுமட்டுமன்றி மனிதர்களின் உதவியில்லாமல், செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் சில வழக்கறிஞர்கள் மனுக்களைத் தயாரிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள், பயனர்கள் தங்கள் கருவிகளைப் பொறுப்புடன் பயன்படுத்துமாறு வலியுறுத்துகின்றன. மோசடி நோக்கங்களுக்காகவோ அல்லது போலி ஆவணங்களை உருவாக்குவதற்காகவோ அவற்றைப் பயன்படுத்துவதைத் தடைசெய்து, பல்வேறு வழிகாட்டுதல்களை அவை வெளியிட்டுள்ளன.

பிறரை ஏமாற்றுவதற்காகத் தங்கள் கருவிகளைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று ஓப்பன்ஏஐ-இன் பயன்பாட்டுக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது.

கூகிள் ஜெமினி மற்றும் மைக்ரோசாஃப்ட் கோபைலட் ஆகியவையும் இதேபோன்ற வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளன.

உயர் மட்ட கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தபோதிலும், செயற்கை நுண்ணறிவை தவறான பயன்படுத்தி மோசடி செய்யும் நிகழ்வுகள் அவ்வப்போது அம்பலமாகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு