மும்பை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு - தர்பூசணி சாப்பிட்டதால் உணவு நஞ்சா என விசாரணை

மும்பை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு, தர்பூசணி
படக்குறிப்பு, மும்பை, பைதுனியில் வசித்து வந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் உயிரிழந்தனர்.
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

மும்பையின் பைதுனி பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

இரவு உணவுக்குப் பிறகு அந்த குடும்பத்தினர் தர்பூசணி சாப்பிட்டிருந்த நிலையில், அவர்களுக்கு உணவு நஞ்சு ஏற்பட்டதால் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என உள்ளூர் மருத்துவர்கள் கருதுகின்றனர்.

இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. எனவே, மரணத்துக்கான சரியான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருவதுடன், உணவு மற்றும் தர்பூசணி மாதிரிகளையும் சேகரித்துள்ளனர்.

ஏப்ரல் 25 அன்று இரவு 10 முதல் 10:30 மணியளவில் அந்தக் குடும்பத்தினர் சில உறவினர்களுடன் இணைந்து இரவு உணவு சாப்பிட்டுள்ளனர்.

உறவினர்கள் சென்ற பிறகு, நள்ளிரவு 1:30 மணியளவில் அவர்கள் தர்பூசணி சாப்பிட்டதாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் உண்மையில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்வோம்.

நடந்தது என்ன ?

அந்தக் குடும்பத்தினர் பைதுனி பகுதியில் உள்ள ஒரு பழைய முகலாய கட்டடத்தின் முதல் தளத்தில் வசித்து வந்தனர். அப்துல்லா டோகாடியா (40 வயது), அவரது மனைவி நஸ்ரின் டோகாடியா (35 வயது) மற்றும் 16 மற்றும் 13 வயதுடைய இரண்டு இளம் மகள்கள் அந்தக் குடும்பத்தில் இருந்தனர்.

அவர்களில் மூவர் ஜேஜே மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்து அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது மற்றொரு சிறுமி உயிரிழந்ததாக உள்ளூர் மருத்துவர் ஜைத் குரேஷி தெரிவித்துள்ளார்.

உறவினர்கள் உட்பட அனைவரும் ஏப்ரல் 25 அன்று இரவு உணவு உண்டனர். உறவினர்கள் சென்ற பிறகு, நள்ளிரவு சுமார் 1:30 மணியளவில் அவர்கள் அனைவரும் தர்பூசணி சாப்பிட்டதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதன் பிறகு, காலையில் அக்குடும்பத்தினர் அனைவருக்கும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அப்போது, கட்டடத்தில் இருந்தவர்கள் அவர்களுக்கு உதவ முயன்றனர்.

மும்பை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உரிழப்பு, தர்பூசணி
படக்குறிப்பு, தான் சம்பவ இடத்துக்குச் சென்றபோது, ​​அறையில் இருந்த நான்கு பேரும் கவலைக்கிடமான நிலையில் இருந்தனர் என்று மருத்துவர் குரேஷி பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார்.

அதே கட்டடத்தின் நான்காவது மாடியில் வசிக்கும் மருத்துவர் ஜைத் குரேஷி, உடனடியாக அவர்களின் உடல்நிலையை பரிசோதித்தார்.

மருத்துவர் குரேஷி சம்பவ இடத்துக்குச் சென்றபோது, அறையில் இருந்த நான்கு பேரும் ஆபத்தான நிலையில் இருந்ததாக, அவர் பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார்.

"அப்போது, நான்கு பேரில் இளைய பெண் சுவாசிக்க சிரமப்படுவதை நான் கவனித்தேன். நான் உடனடியாக அவருக்கு சிபிஆர் (CPR) சிகிச்சை அளித்தேன். ஆனால், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அவர் அப்போதே இறந்துவிட்டார்," என்று மருத்துவர் குரேஷி கூறினார்.

"மற்ற மூவரும் பின்னர் உள்ளூர் மருத்துவமனையிலிருந்து ஜேஜே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்குச் சில மணிநேரங்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்களும் உயிரிழந்தனர்," என்றும் அவர் தெரிவித்தார்.

மும்பை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உரிழப்பு, தர்பூசணி
படக்குறிப்பு, ஜேஜே மார்க் காவல் நிலையம்

இதற்கிடையில், பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை. அது வந்த பிறகுதான் உணவு நஞ்சு பாதிப்பு இருந்ததா என்பதும் மரணத்துக்குத் துல்லியமான காரணம் என்ன என்பதும் தெரியவரும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், உள்ளூர் எம்ஐஎம் தலைவரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வாரிஸ் பதான், மாநில அரசும் போலீஸ் கமிஷனரும் இவ்விவகாரத்தைக் கவனத்தில் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.

காவல்துறை கூறுவது என்ன?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்த வழக்கில் ஜேஜே காவல் நிலையத்தில் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அளித்த துணை காவல் ஆணையர் பிரவீன் முண்டே, "ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களும் உயிரிழந்துள்ளனர். அவர்கள் ஏப்ரல் 25-ஆம் தேதி இரவு சில உறவினர்களுடன் சேர்ந்து இரவு உணவு உண்டனர்." என்று கூறினார்.

உறவினர்கள் சென்ற பிறகு, நள்ளிரவு சுமார் 1:00 மணி முதல் 1:30 மணியளவில் அவர்கள் தர்பூசணி சாப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இதன் பிறகு, காலையிலிருந்து அவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் ஜேஜே மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் நான்கு பேருமே உயிரிழந்துவிட்டனர்." என்று அவர் தெரிவித்தார்.

"உடற்கூராய்வு நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் உண்ட உணவு மாதிரிகளைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர். தர்பூசணி மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன, மேலும் அவர்களின் உடல்களிலிருந்தும் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த மரணம் குறித்த விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது," என்று போலீசார் தெரிவித்தனர்.

சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் வாரிஸ் பதான் கூறியது என்ன?

எம்ஐஎம் உள்ளூர் தலைவரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வாரிஸ் பதான், மாநில அரசும் மும்பை காவல் ஆணையரும் இவ்விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

எக்ஸ் தளத்தில் தனது கருத்தை பகிர்ந்துள்ள வாரிஸ் பதான், "எப்படி இவர்கள் இப்படி இறக்க முடியும்? இதற்கு காரணம் என்ன என்று கேட்டு எனக்குப் பல அழைப்புகள் வந்தன. நாங்கள் தற்போது பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம். மாநில அரசும் காவல்துறை ஆணையரும் இந்த விவகாரத்தை விசாரித்து, உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிய வேண்டும். ஒரே நேரத்தில் ஒரு குடும்பம் முழுவதும் இறப்பதற்குக் காரணம் என்ன? அவர்கள் தர்பூசணி சாப்பிட்டதால் இறந்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். மற்றவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக அரசு அந்த தகவல்களை வெளியிட வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு