இரான் மீதான அணுகுமுறையில் மாறுபடும் வளைகுடா நாடுகள் - எதிர்ப்பது யார்? அனுசரித்து செல்வது யார்?

பட மூலாதாரம், Christopher Pike/Getty Images
- எழுதியவர், பிபிசி மானிட்டரிங்
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
இரான் மற்றும் அமெரிக்கா இடையே தற்போது இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
ஆனால், இதற்கிடையில் இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பாகிஸ்தான் சென்றடைந்தார். அராக்சி முன்னதாக வெள்ளிக்கிழமை நள்ளிரவிலும் இஸ்லாமாபாத் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமையன்று, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்டு மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஆகியோரை அராக்சி சந்தித்துப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து ஓமனுக்குப் பயணம் மேற்கொண்ட அராக்சி, அங்கிருந்து தற்போது மீண்டும் பாகிஸ்தான் வந்துள்ளார். எனினும், பாகிஸ்தானில் சந்திப்புகளை முடித்த பிறகு தான் ஓமன் மற்றும் ரஷ்யாவிற்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அவர் வெள்ளிக்கிழமை அன்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
பிபிசி உருது செய்தியின்படி, ஓமன் சுல்தான் மற்றும் இரான் வெளியுறவு அமைச்சர் இடையிலான சந்திப்பில் பிராந்திய நிகழ்வுகள் மற்றும் மத்தியஸ்த முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஓமன் செய்தி முகமையின் தகவல்படி, ஓமன் ஆட்சியாளர் சுல்தான் ஹைதம் பின் தாரிக் அல் சையத், மஸ்கட் நகரில் இரான் வெளியுறவு அமைச்சர் அராக்சியை சந்தித்தார்.
இதே காலகட்டத்தில், கத்தார் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சருடன் அராக்சி தொலைபேசி வாயிலாக உரையாடினார். மேலும், சௌதி அரேபிய வெளியுறவு அமைச்சருடனும் அராக்சி தொலைபேசியில் பேசியதாக இரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரான் வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, சௌதி மற்றும் கத்தார் வெளியுறவு அமைச்சர்களுடனான உரையாடலின் போது, "போரை முடிவுக்குக் கொண்டு வரவும், பதற்றத்தைக் குறைக்கவும் இரான் மேற்கொண்டு வரும் புதிய ராஜதந்திர முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து" அராக்சி விளக்கினார்
வளைகுடாவில் அமெரிக்கத் தளங்களை இலக்கு வைத்த இரான்

பட மூலாதாரம், IRNA
சமீபத்திய போரின் போது, கத்தார் மற்றும் சௌதி அரேபியாவில் அமைந்துள்ள அமெரிக்கத் தளங்கள் மீது இரான் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியது.
முன்னதாக, ஏப்ரல் 8-ஆம் தேதியன்று அமெரிக்காவும் இரானும் இரண்டு வார கால போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குச் சம்மதித்தபோது, வளைகுடா நாடுகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டன. ராணுவம் மற்றும் பொதுமக்களின் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து இரான் நடத்தி வந்த பதில் தாக்குதல்கள், பல வாரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பின் மூலம் முடிவுக்கு வந்தன.
இந்த விவகாரத்தில் வளைகுடா நாடுகளின் எதிர்வினைகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே இருந்தன. போர்நிறுத்தம் குறித்த அவர்களின் நிலைப்பாட்டில் இரண்டு முக்கிய அம்சங்கள் இருந்தன: நிரந்தர தீர்வு மற்றும் ஹோர்மூஸ் நீரிணையில் தடையற்ற கப்பல் போக்குவரத்து.
இருப்பினும், ஐக்கிய அரபு அமீரகம் இரானை கடுமையாகக் கண்டித்தது. அதே நேரத்தில் ஓமன், அமெரிக்காவை விமர்சித்ததோடு இரானுடன் நேரடித் தொடர்பில் தங்கள் நாடு இருப்பதாகவும் தெரிவித்தது. இது மற்ற வளைகுடா நாடுகளின் நிலைப்பாட்டிலிருந்து மாறுபட்டதாக இருந்தது.
தற்போது எழுந்துள்ள முக்கியக் கேள்வி என்னவென்றால், அமெரிக்கா - இரான் இடையிலான எந்த ஒப்பந்தமும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா என்பதுதான்.
கத்தார்

பட மூலாதாரம், U.S. Navy via Getty Images
போர்நிறுத்தம் குறித்த கத்தாரின் எதிர்வினை, பதற்றத்தைக் குறைத்தல், பிராந்திய பங்களிப்பு மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோகப் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தது.
கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி கூறுகையில், "போர்நிறுத்தத்தை வலுப்படுத்துவதும், அதனை நிரந்தர அமைதியாக மாற்றுவதுமே தற்போதைய உடனடி முன்னுரிமை" என்று தெரிவித்தார்.
வளைகுடா நாடுகளையும், விநியோகச் சங்கிலியுடன் தொடர்புடைய நாடுகளையும் ஒருங்கிணைத்து பேச்சுவார்த்தைக்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று கத்தார் கோரிக்கை விடுத்தது.
கடல்சார் பாதுகாப்பு என்பது கத்தாரின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது. ஹோர்மூஸ் நீரிணையில் வர்த்தகப் போக்குவரத்து தடையின்றித் தொடர்வது சர்வதேசப் பாதுகாப்பிற்கு அவசியமானது என்று குறிப்பிட்ட அன்சாரி, இதனை "அழுத்தம் கொடுக்கும் கருவியாகவோ அல்லது பேரம் பேசும் கருவியாகவோ" பயன்படுத்துவதை நிராகரித்தார்.
ஏப்ரல் 21-ஆம் தேதி நடந்த மற்றொரு செய்தியாளர் சந்திப்பில், கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வது என்பது அனைத்து நாடுகளின் "கூட்டுப் பொறுப்பு" என்றும், அது ஒரு தரப்பின் பொறுப்பு மட்டும் அல்ல என்றும் அவர் கூறினார்.
பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் பிற மத்தியஸ்தர்களுடன் "உயர்நிலை ஒருங்கிணைப்பு" மேற்கொண்டு வருவதைக் குறிப்பிட்ட கத்தார், தற்போது நடைபெற்று வரும் சமாதான முயற்சிகளுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தது. இருப்பினும், இது குறித்த கூடுதல் விவரங்கள் எதையும் அவர்கள் வெளியிடவில்லை.
சௌதி அரேபியா

பட மூலாதாரம், Photo by BRENDAN SMIALOWSKI/AFP via Getty Images
தனது பொருளாதாரத்தைப் பன்முகப்படுத்தும் 'விஷன் 2030' இலக்குகளைக் கொண்டிருந்தாலும், எண்ணெய் வளம் இப்போதும் சௌதி அரேபியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது.
தொடர்ந்து நீடிக்கும் போர் அச்சுறுத்தல் சௌதி அரேபியாவின் 'விஷன் 2030' திட்டத்திற்குப் புதிய சவால்களை உருவாக்கக்கூடும்.
இருப்பினும், இந்தப் போர் சௌதி அரேபியா மற்றும் இரான் இடையே 2023-இல் சீனாவின் மத்தியஸ்தத்துடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் எல்லைகளைச் சோதித்துப் பார்த்துள்ளது. ஆனாலும் இரு நாடுகளும் ஓரளவுக்கு ராஜதந்திரத் தொடர்புகளைத் தக்கவைத்துள்ளன.
அதே சமயம், இரான் மீதான தாக்குதல்களைத் தொடருமாறு அமெரிக்காவிற்குப் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அழுத்தம் கொடுப்பதாக வெளியாகும் செய்திகள், சௌதி அரேபியா ராணுவ வெற்றிக்கே முன்னுரிமை அளிக்கக்கூடும் என்பதைக் காட்டுகின்றன.
கடந்த 2018-ஆம் ஆண்டில் முகமது பின் சல்மான் எச்சரிக்கை விடுத்தபோது, "இரான் அணு குண்டை உருவாக்கினால், நாங்களும் மிக விரைவில் அதையே செய்வோம்," என்று கூறியிருந்தார்.
சௌதி அரேபியாவைப் பொறுத்தவரை, பிராந்திய அளவில் இரானின் ஆதரவு பெற்ற அமைப்புகள், குறிப்பாக அண்டை நாடான ஏமனில் உள்ள ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு அளிக்கப்படும் ஆதரவு கவலையளிக்கும் விஷயமாக உள்ளது.
ஹூத்திகள் தங்களின் அச்சுறுத்தலின்படி பாப் அல்-மண்டப் (Bab al-Mandab) நீரிணையை மூடினால், வளைகுடா நாடுகள் ஒரு முக்கியமான எண்ணெய் ஏற்றுமதிப் பாதையை இழக்க நேரிடும்.
பஹ்ரைன்
போர்நிறுத்த ஒப்பந்தத்தையும், ஹோர்மூஸ் நீரிணை பகுதியளவில் மீண்டும் திறக்கப்பட்டதையும் பஹ்ரைன் வரவேற்றுள்ளது. அதே வேளையில், "இரானின் அனைத்து பகைமை கலந்த மற்றும் நியாயமற்ற தாக்குதல்களையும் உடனடியாகவும் முழுமையாகவும் நிறுத்த வேண்டும்" என்று அது அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி பஹ்ரைன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "ஒரு நிரந்தரத் தீர்வின் அவசியத்தை" வலியுறுத்தியது. இருப்பினும், இரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாது என்பதிலும், பிற ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான அதன் திறன் முடக்கப்பட வேண்டும் என்பதிலும் பஹ்ரைன் உறுதியாக உள்ளது.
பிராந்திய அளவில் தனது 'சார்பு அமைப்புகளை' இரான் பயன்படுத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பஹ்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது.
ஹோர்மூஸ் நீரிணை உள்ளிட்ட சர்வதேச கடல்சார் மற்றும் வான்வழிப் பயணங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் ஒரு ஒப்பந்தத்திற்குப் பஹ்ரைன் அழைப்பு விடுத்தது. இதனுடன், "எரிசக்தி விநியோகத்தின் நிலைத்தன்மை மற்றும் உலகளாவிய வர்த்தகத்தின் தடையற்ற ஓட்டம்" ஆகியவற்றின் அவசியத்தையும் அது வலியுறுத்தியது.
இரானின் தாக்குதல்களால் தனது மண்ணில் ஏற்பட்ட இழப்புகளுக்கு "முழுமையான, பயனுள்ள மற்றும் உடனடி இழப்பீடு" வழங்க வேண்டும் என்றும் இரானிடம் பஹ்ரைன் கோரியுள்ளது.
குவைத்

பட மூலாதாரம், AFP via Getty Images
கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி குவைத் நாடு போர்நிறுத்த ஒப்பந்தத்தை வரவேற்றது. சமாதான முயற்சிகளுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்த குவைத், "பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு விரிவான மற்றும் நிரந்தரத் தீர்வை இது ஏற்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தியது.
பகைமை கலந்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவும், நாட்டின் இறையாண்மையை மதிக்கவும் இரான் மற்றும் அதன் கூட்டணி அமைப்புகளுக்கு குவைத் வேண்டுகோள் விடுத்தது. அத்துடன், "பிராந்திய ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் நடவடிக்கைகளிலிருந்து இரான் விலகி இருக்க வேண்டும்" என்றும் அது அழைப்பு விடுத்தது.
ஹோர்மூஸ் நீரிணையைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் இரானின் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த குவைத் வெளியுறவு அமைச்சர், "1982-ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் கடல்சார் சட்ட ஒப்பந்தத்தின்படி (UNCLOS), தடையற்ற போக்குவரத்திற்கான உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது," என்று குறிப்பிட்டார்.
ஏப்ரல் 17-ஆம் தேதி இந்த நீரிணை குறித்த சர்வதேசக் கூட்டத்தில் பேசிய குவைத், கடல்சார் பாதுகாப்பு மற்றும் சர்வதேசச் சட்டங்களை இரான் மதிக்க வேண்டியதன் அவசியம் குறித்துத் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்தது.
வளைகுடா நாடுகளின் உள்கட்டமைப்புகள் மற்றும் முக்கியச் சொத்துகளை இலக்கு வைத்து இரான் தனது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்குக் குவைத் கடும் கண்டனம் தெரிவித்தது.
ஐக்கிய அரபு அமீரகம்

பட மூலாதாரம், Photo by Christopher Pike/Getty Images
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளில், ஐக்கிய அரபு அமீரகம் இரானின் மிகக் கடுமையான விமர்சகராக இருந்து வருகிறது. இரான் "எந்தத் தூண்டுதலும் இன்றி சட்டவிரோத ஆக்கிரமிப்பில்" ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டியுள்ள அமீரகம், தனது தாக்குதல்களை 'பதிலடி நடவடிக்கைகள்' என்று இரான் கூறுவதை முற்றிலுமாக நிராகரித்துள்ளது.
போர்நிறுத்தம் குறித்த தனது எதிர்வினையில், "பிராந்தியத்தில் அனைத்துப் பகைமை நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் மற்றும் ஹோர்மூஸ் நீரிணையை முழுமையாகவும், நிபந்தனையின்றியும் மீண்டும் திறக்க இரான் தனது முழுமையான உறுதிப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்" என்று அமீரகம் கோரியுள்ளது.
இரானின் "அணுசக்தி திறன்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்கள், ராணுவ வலிமை மற்றும் அதன் சார்பு அமைப்புகள்" மீது "விரிவான நடவடிக்கை" எடுக்கப்பட வேண்டும் என அமீரகம் வலியுறுத்தியுள்ளது. மேலும், ஹோர்மூஸ் நீரிணையில் இரான் நடத்தி வரும் "பொருளாதாரப் போர்முறை" (Economic warfare) முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அது கோரியுள்ளது.
கடந்த மார்ச் 29 அன்று ஐக்கிய அரபு அமீரக அதிபரின் ஆலோசகர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இரானிடம் இருந்து இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
"வளைகுடா நாடுகளின் பாதுகாப்பிற்கு முதன்மை அச்சுறுத்தலாக மாறியுள்ள ஒரு சக்தியை எதிர்கொள்ள", நீரிணையின் பாதுகாப்பிற்கான அமெரிக்காவின் நடவடிக்கைகளில் தாங்களும் இணையப்போவதாக ஐக்கிய அரபு அமீரகம் எச்சரித்துள்ளது.
ஓமன்

பட மூலாதாரம், IRNA
அமெரிக்கா மற்றும் இரான் இடையே நீண்டகாலமாக மத்தியஸ்தராகச் செயல்பட்டு வரும் ஓமன், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தைத் தணிப்பதை தொடர்ந்து ஆதரித்து வருகிறது. இதனைத் தனது "அனைவருக்கும் நண்பன், எவருக்கும் எதிரியல்ல" என்ற வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாக ஓமன் குறிப்பிடுகிறது.
அதே சமயம், அமெரிக்காவை அதிகம் விமர்சிக்கும் நாடாகவும் ஓமன் இருந்து வருகிறது. கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி, போருக்கு முந்தைய பேச்சுவார்த்தைகளை "பலவீனப்படுத்தியதற்காக" அமெரிக்கா மீது தனது "ஏமாற்றத்தை" ஓமன் வெளியுறவு அமைச்சர் பத்தர் அல்-புசைதி வெளிப்படுத்தினார்.
இரான் மீது தாக்குதல் நடத்தும் டிரம்பின் முடிவுக்குப் பின்னால் இஸ்ரேலின் பங்கு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, "இது உங்கள் போர் அல்ல" என்று அவர் அமெரிக்காவிடம் தெரிவித்தார்.
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் உறுப்பினர் என்ற தகுதிக்கும், இரானுடனான தனது உறவுக்கும் இடையில் ஒரு சமநிலையைப் பேண ஓமன் முயற்சி செய்து வருகிறது.
தற்போதைய போர்நிறுத்தத்தை வரவேற்றுள்ள ஓமன், இப்பிராந்தியத்தில் "போர்ச் சூழலை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வர" அழைப்பு விடுத்துள்ளது.
ஊடகத் தகவல்களின்படி, ஹோர்மூஸ் நீரிணையில் கடல்சார் போக்குவரத்தைக் கண்காணிப்பதற்கான ஒரு கூட்டு நெறிமுறையை உருவாக்கும் பணியில் ஓமனும் இரானும் ஈடுபட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி, ஓமன் மற்றும் இரானின் உயர்மட்ட அதிகாரிகள், இதன் வழியாக "தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதற்கான சாத்தியமான வழிகள்" குறித்து விவாதித்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























