You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆட்சியமைக்க உரிமை கோரும் விஜய் – ஆளுநர் முன் உள்ள வாய்ப்புகள் என்ன?
- எழுதியவர், ப. சிவசங்கர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி அதிக இடங்களை தவெக கைப்பற்றியுள்ளது. ஆனாலும் ஆட்சி அமைக்க தேவையான 118 என்ற எண்ணிக்கை அவர்களுக்கு கிடைக்கவில்லை.
திமுக கூட்டணியில் தேர்தலை எதிர் கொண்ட காங்கிரஸ் ஐந்து இடங்களை கைப்பற்றியது. இந்தநிலையில் 108 இடங்களை வென்ற தவெக, காங்கிரஸின் ஆதரவை பெற்றுள்ளது. மேலும் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை பெற திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளிடம் விஜய் ஆதரவு கேட்டுள்ளார்.
உரிமைக்கோரிய விஜய்
இதனையடுத்து தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கரை தவெக தலைவர் விஜய் இன்று சந்தித்து ஆட்சியமைக்க உரிமைக் கோரினார்.
இதன் பிறகு தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவை கலைக்கப்படுவதாகவும் ஆளுநர் ஆர்கலேக்கர் தெரிவித்திருந்தார்.
ஆளுநருடனான சந்திப்புக்கு மத்தியில் விஜய் முதலமைச்சராக பதவியேற்க நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
விஜய் மே 7-ஆம் தேதி பதவியேற்க போகிறார் என்று சில ஊடக செய்திகளும் வெளிவந்தன.
ஆனால் ஆட்சி அமைக்க விஜய் உரிமை கோரியும் தமிழ்நாடு ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. இது தமிழ்நாடு அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.
அதிகாரம் என்ன?
சட்டப்பேரவை தேர்தலில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும்/கூட்டணிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காதபோது அது தொங்கு சட்டசபை என்று அழைக்கப்படுகிறது.
"முழு பலத்தையும் காண்பித்தால்தான் பதவியேற்புக்கு அனுமதிப்பேன் என்று ஆளுநர் சொல்ல முடியாது" என்றார் ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அவர், "ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும் அதிகாரம் ஆளுநரிடம்தான் உள்ளது. யாருக்கும் பெரும்பான்மை இல்லாத சூழலில் உரிமை கோரும் தரப்பிடம் அதற்கான எண்ணிக்கையைக் காட்டுங்கள் என ஆளுநர் கேட்பதில் தவறில்லை" என்று அவர் கூறினார்.
"அதே வேளையில் முழு பலத்தையும் காண்பித்தால்தான் பதவியேற்புக்கு அனுமதிப்பேன் என்றும் கூற முடியாது. பெரும்பான்மையை நிரூபிக்கும் இடம் சட்டப்பேரவைதான்" என்று அவர் தெரிவித்தார்.
"உரிமை கோரும் கட்சி மீது நம்பிக்கை இருந்தால் ஆளுநர் அழைப்பு விடுப்பார்" என்கிறார் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கற்பக விநாயகம்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய அவர், "ஆட்சியமைக்க உரிமை கோரிய கட்சிக்கு ஆளுநர் கட்டாயம் பதிலளிக்க வேண்டும். அதில் கால நிர்ணயம் எதையும் செய்ய முடியாது. அதேநேரத்தில் அதிக நாட்களையும் அவர் எடுத்துக்கொள்ள முடியாது'' என்று தெரிவித்தார்.
சட்டப்பேரவையை கலைத்த பிறகு அதிக நாட்கள் அதனை காலியாக வைத்திருக்க முடியாது எனவே இதில் ஆளுநர் விரைவாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும்" என்றும் அவர் விளக்கினார்.
ஆட்சியைமைக்க உரிமை கோரும் தரப்புக்கு ஆளுநர் அனுமதி வழங்கிய பிறகு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு