ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய விஜய் - நேரலை

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

தவெக தலைவர் விஜய், தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

விஜய் உடன் தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், செங்கோட்டையன், என்.ஆனந்த், அருண் ராஜ் ஆகியோரும் சென்றிருந்தனர்.

தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உடன் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் விஜயை நேரில் சந்தித்து ஆதரவு கடிதத்தை வழங்கினர்.

இந்த நிலையில் 16வது சட்டப்பேரவை மே 5-ஆம் தேதி முதல் கலைக்கப்படுவதாக இன்று (மே 6) ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில் தவெகவிடம் 108 இடங்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியிடம் 5 இடங்கள் உள்ளன.

'தவெகவிற்கு அதிமுக ஆதரவு இல்லை - கேபி முனுசாமி

தவெகவிற்கு அதிமுக ஆதரவு அளிப்பது என்பது தவறான செய்தி என அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுக தவெகவிற்கு ஆதரவளிப்பது போன்ற செய்திகளும் கருத்துக்களும் வந்து கொண்டிருக்கின்றன. அது முற்றிலும் தவறான செய்தி. அதிமுக மிகப்பெரிய இயக்கம். எந்தச் சூழ்நிலையிலும் அதிமுகவிலிருந்து தவெகவிற்கு ஆதரவு தெரிவிக்கப்படவில்லை என்பதை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அனுமதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.

பதவியேற்பு எப்போது?

ஆட்சியைமைக்க உரிமை கோரும் தரப்புக்கு ஆளுநர் அனுமதி வழங்கிய பிறகு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

தவெக தரப்பில் முறையாக ஆளுநரைச் சந்தித்து கடிதம் வழங்கப்பட்டுள்ள நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சூழலில் பதவியேற்பு நிகழ்ச்சி தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராத சூழலில் அந்நிகழ்ச்சி எப்போது நடைபெறும் என்பதில் உறுதியற்ற நிலை நிலவுகிறது.

பெரும்பான்மையை நிரூபிக்கும் இடம் சட்டப்பேரவை தான் என்கிறார் ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன்.

"ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும் அதிகாரம் ஆளுநரிடம் தான் உள்ளது. யாருக்கும் பெரும்பான்மை இல்லாத சூழலில் உரிமை கோரும் தரப்பிடம் அதற்கான எண்ணிக்கையைக் காட்டுங்கள் என ஆளுநர் கேட்பதில் தவறில்லை. அதே வேளையில் முழு பலத்தையும் காண்பித்தால் தான் பதவியேற்புக்கு அனுமதிப்பேன் என்றும் கூற முடியாது. பெரும்பான்மையை நிரூபிக்கும் இடம் சட்டப்பேரவைதான். முதலில் சபாநாயகர் தேர்வு நடைபெறும், அதன்பிறகு எம்.எல்.ஏக்கள் பதவியேற்பைத் தொடர்ந்து நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும்." என்றார்.

ஷார்ட் வீடியோ

'புதிய ஆட்சியில் காங்கிரஸ் பங்கு'

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், "புதிய ஆட்சியில் காங்கிரஸ் பங்கு வகிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பதிவியேற்வு விழாவில் பங்கேற்க ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுனா கார்கேவுக்கு விஜய் அழைப்பு விடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறுமா என்ற கேள்விக்கு, "விஜய்யை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பார் என நம்புகிறோம். காங்கிரஸ் இந்த ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு மட்டும் தரமாட்டோம், பொறுப்புடன் இருப்போம்." எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து "காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டதாக" திமுக விமர்சிப்பது குறித்த கேள்விக்கு, "மக்களின் தீர்ப்பே இறுதியானது, அதை நாங்கள் மதிக்கிறோம்." என்றார்.

"டெல்லியில் உள்ள மூத்த தலைவர்கள் திமுக தலைவர்களுடன் தொடர்பில் உள்ளனர். இந்தியா கூட்டணி தொடரும், ஏனெனில் மிகப்பெரிய சக்தியுடன் நாங்கள் சண்டையிடுகிறோம். மூத்த திமுக தலைவர்கள் தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலையைப் புரிந்துகொள்வார்கள். மக்களின் உணர்வு, மக்களின் தீர்ப்பு முக்கியமானது." என்று கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.

தவெக ஆட்சியில் காங்கிரஸ் சார்பில் யார் அமைச்சராவார் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.

'விஜயும் மதச்சார்பற்ற அணிதான்" - காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கருத்து

பிபிசி தமிழிடம் பேசிய காங்கிரஸ் எம்.எல.ஏ தாரகை கத்பர்ட், "இதுநாள் வரையில் திமுக உடன் பயணித்திருக்கிறோம். இப்போதும் நட்புணர்வுடன் தான் இருக்கிறோம். அவர்கள் ஆட்சியில் பங்கு தரவில்லை. இப்போது இவர்கள் கொடுத்திருக்கிறார்கள். அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்." எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் அமைச்சரவையில் பங்கு பெற வேண்டும் என்பது தொண்டர்களின் கோரிக்கையாக உள்ளது என காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ் குமார் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "விஜய்யை நேரில் சந்தித்து ஆதரவு கொடுத்துள்ளோம். அவரும் மதச்சார்பற்ற அணி தான். பாஜக எந்த விதத்திலும் தமிழ்நாட்டில் வேரூன்றி விடக்கூடாது என்பதற்காக தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்." என்றும் கூறினார்.

ஷார்ட் வீடியோ

'அடுத்தடுத்த தேர்தல்களுக்கும் கூட்டணி தொடரும்'

இந்திய அரசமைப்பில் நம்பிக்கை இல்லாத வகுப்புவாத சக்திகளைக் கூட்டணியில் இருந்து வெளியே வைக்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன் தவெக-வுக்கு ஆதரவு அளிப்பதாக கிரிஷ் சோடங்கர் பெயரில் வெளியான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் அந்த செய்திக் குறிப்பில்,"தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள், மிகத் தெளிவான, வலுவான தீர்ப்பை அளித்து, அடுத்த அரசை அமைப்பதற்காக விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டு மக்களின் இந்தத் தீர்ப்பை மதித்து, பாதுகாத்து, நிறைவேற்றுவது எங்கள் அரசமைப்புக் கடமை. அதன்படி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் காங்கிரஸ் சட்டமன்றக் குழுவும், அரசு அமைப்பதற்காக தவெக-வுக்கு முழுமையான ஆதரவை வழங்கத் தீர்மானித்துள்ளன." என்று கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.

தவெக-வுக்கு காங்கிரஸ் விதித்துள்ள நிபந்தனை பற்றிக் குறிப்பிட்ட அவர், "இந்த ஆதரவு, அரசமைப்பை நம்பாத எந்த மதவாத சக்திகளையும் இந்தக் கூட்டணியில் சேர்க்காமல் இருப்பதற்கு உள்பட்டதாக இருக்கும். தவெக மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் இணையும் இந்தக் கூட்டணி, தமிழ்நாட்டின் "பெருந்தலைவர் காமராஜர்" காலத்தின் மகத்துவத்தை மீண்டும் கொண்டு வர முயலும்." என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர், "இந்தக் கூட்டணி பரஸ்பர மரியாதை, சரியான பங்கு பகிர்வு, இரு கட்சிகளின் பொறுப்புணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். இது தற்போதைய அரசாங்கத்தை அமைப்பதற்கு மட்டுமின்றி, எதிர்கால உள்ளாட்சி, மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தல்களுக்கும் தொடரும்" என்றும் குறிப்பிட்டார்.

ஷார்ட் வீடியோ

"காங்கிரஸ் கட்சிக்கே பலன்கள் அதிகம்" - மூத்த பத்திரிகையாளர் மணி

திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிந்துள்ளதால் காங்கிரஸ் கட்சிக்கே பலன்கள் அதிகம் என மூத்த பத்திரிகையாளர் மணி பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இந்தக் கூட்டணி முறிந்துள்ளதால் திமுகவுக்கே பின்னடைவு அதிகம். தேசிய அரசியலில் காங்கிரஸ் இல்லாமல் திமுகவின் பிடி தளரும். இந்தியா கூட்டணியின் எதிர்காலமும் கேள்விக்கு உள்ளாகியுள்ளது. தேசிய அளவில் பிற மாநில கட்சிகள் நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ் உடன் எவ்வாறு செயலாற்றப் போகிறார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது." என்றார்.

மேலும், "இனி சிறுபான்மையினரின் வாக்கு வங்கி பிரியும். காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு வங்கி மிகக்குறைவுதான். அக்கட்சி மாநிலத்தில் இழப்பதற்கு எதுவுமில்லை. ஆனால் விஜய் உடன் செல்வதால் காங்கிரஸ் கட்சி பலனடைவதற்கு நிறையவே இருக்கிறது." என்றும் தெரிவித்தார்.

'விஜய் நல்லாட்சி தருவார் என நம்புகிறேன்' - திருமாவளவன்

இந்த நிலையில் தவெக உடனான கூட்டணி தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன், "விஜய் மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப நல்லாட்சி தருவார் என நம்புகிறேன். விஜய் ஆதரவு கோரி கடிதம் எழுதியுள்ளார். கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.

"திமுக தலைமையிலான கூட்டணியில் நீண்ட காலமாக பயணித்துள்ளோம். இப்போதும் நட்பு நீடிக்கிறது. முன்னணி பொறுப்பாளர்களின் கருத்தை அறிந்து முடிவெடுப்போம்," என்றார் திருமாவளவன்.

மேலும் அவர், "பாஜக ஒரு இடத்தில்தான் வெற்றி பெற்றுள்ளது. தவெக ஆட்சி அமைப்பதில் பாஜக தாக்கம் செலுத்தும் என நினைக்கவில்லை. காங்கிரஸின் முடிவு பற்றி கருத்து தெரிவிக்க எதுவுமில்லை." எனத் தெரிவித்தார்.

"பரஸ்பரம் மரியாதையோடு பிரிவதுதான் நல்லது" - ஜோதிமணி

தமிழ்நாட்டின் நலன் மற்றும் எதிர்காலம் கருதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒருமனதாக த.வெ.கவுடன் கூட்டணி சேர்வது என்ற முடிவை எடுத்துள்ளது என்று கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், "இப்பொழுது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு அரசியல் நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே நாம் பரஸ்பரம் மரியாதையோடு கூட்டணியில் இருந்து பிரிவதுதான் நல்லது. இருபுறமும் தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்." எனப் பதிவிட்டுள்ளார்.

"இது ஒன்றும் புதிதல்ல" - கார்த்தி சிதம்பரம்

ஷார்ட் வீடியோ

விஜய்க்கு ஆதரவு அளித்ததற்கான காரணத்தை சிவகங்கை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் விளக்கியுள்ளார்.

ஏ.என்.ஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், "விஜய் முதல்வராக வர வேண்டுமென்றால் அவர் தனியாக வர முடியாது, யாரையாவது சேர்த்துக் கொள்ள வேண்டும் என மக்கள் முடிவெடுத்துள்ளனர் இல்லையென்றால் அவருக்கு 118 இடங்கள் கொடுத்திருப்பார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் வென்ற 5 தொகுதிகள்

சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் மயிலாடுதுறை, மேலூர், விளவங்கோடு, குளச்சல், கிள்ளியூர் ஆகிய தொகுதிகளில் வென்றிருந்தது. இதில் மூன்று தொகுதிகளில் 3,000க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வென்றிருந்தது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் யார்?

மயிலாடுதுறை - ஜமால் முகமது யூனுஸ்

மேலூர் - விஸ்வநாதன்

குளச்சல் - தாரகை கத்பர்ட்

விளவங்கோடு - பிரவீன்

கிள்ளியூர் - ராஜேஷ் குமார்

10 ஆண்டுகள் கழித்து முறிந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தல் முதல் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வரும் நிலையில் தற்போது 10 ஆண்டுகள் கழித்து இந்தக் கூட்டணி முறிந்துள்ளது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை, 2004 நாடாளுமன்றத் தேர்தலுக்காக நீண்ட இடைவெளிக்குப் பிறகு திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைத்திருந்தது. இந்தக் கூட்டணி 2011 சட்டப்பேரவைத் தேர்தல் வரை தொடர்ந்தது.

கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியது. அந்தத் தேர்தலை காங்கிரஸ் தனித்துச் சந்தித்தது.

அதன் பிறகு 2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இரண்டு கட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைத்தன. அதைத் தொடர்ந்து 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வரை இந்தக் கூட்டணி தொடர்ந்து.

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு, நீண்ட இழுபறிக்குப் பிறகே இரு கட்சிகளுக்கும் கூட்டணி உடன்படிக்கை எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

"இது முதுகில் குத்தும் செயல்" - திமுக விமர்சனம்

காங்கிரஸ் நம்பகத்தன்மை இல்லாத கூட்டாளி என திமுக விமர்சித்துள்ளது.

திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை இது தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், "காங்கிரஸ் தவெக-வுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது. இதை முதுகில் குத்துவது என நாங்கள் கூறுகிறோம். வெற்றிச் சான்றிதழ் வருவதற்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சி அணி மாற முடிவெடுத்துள்ளது. அதற்கு அவர்கள் கூறும் காரணம் திருப்திகரமானதாக இல்லை."

"பாஜகவை வெளியில் வைக்கத்தான் இந்த முடிவை எடுப்பதாகக் கூறுகிறார்கள். விஜய் எப்போதுமே பாஜக, ஆர்.எஸ்.எஸுக்கு எதிராகப் பேசியதில்லை. தவெக வெற்றி பெற்றவுடன் வாக்காளர்களுக்கு முதலில் நன்றி தெரிவிக்காமல் நேரடியாக முதலில் பிரதமர் மோதிக்குதான் விஜய் நன்றி தெரிவித்திருந்தார். விஜயின் முக்கியத்துவம் என்னவென்பதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்."

"பாஜக தோற்கடிப்பது எப்படி என்பது எங்களுக்குத் தெரியும். காங்கிரஸ் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அவசர கதியில் காங்கிரஸ் எடுக்கும் இந்த முடிவின் தாக்கம் நாடு முழுவதும் எதிரொலிக்கும். கூட்டணியில் மற்றவர்களும் இருக்கிறார்கள்."

"காங்கிரஸ் இவ்வாறு நம்பகத்தன்மை இல்லாத கூட்டாளியாக இருந்தால் பிற தலைவர்களின் எண்ணத்தில் இது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? தவெக-வுக்கு எதிராகப் போட்டியிட்டார்கள், தற்போது அவர்களுடன் சேர்கிறார்கள். காங்கிரஸை நம்ப முடியாது என்கிற நிலையைத்தான் இது உருவாக்கும். காங்கிரஸ் தலைமை ஏன் இதை அறிவிக்கவில்லை. இந்த முடிவை ஏன் மாநில தலைமையிடம் கொடுத்துவிட்டார்கள். நாளை ஏதாவது தவறாகச் சென்றால் அதிலிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவே இந்த முடிவு." எனத் தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் தொடர்வோம் - ஐயுஎம்எல் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 2 தொகுதிகளில் வென்றுள்ளது.

இந்தச் சூழலில் தமிழகத்தில் தொங்கு சட்டசபை முஸ்லிம் லீக்கின் நிலைப்பாடு என அக்கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் பெயரில் எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில். "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உடன் நேற்றும் இருந்தோம்! இன்றும் இருக்கிறோம்!! நாளையும் இருப்போம்!!!," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், "திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறவு என்பது தேர்தல் காலத்து உறவு அல்ல, இது கொள்கை ரீதியான கூட்டணி." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாணியம்பாடி மற்றும் பாபநாசம் ஆகிய இரு தொகுதிகளில் முஸ்லிம் லீக் வென்றுள்ளது.

'ஆலோசனைக்குப் பிறகு முடிவை அறிவிப்போம்' - சிபிஐ

இந்தச் சூழலில் தவெக-விடம் இருந்து ஆதரவு கோரி கடிதம் வந்திருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வீரபாண்டியன் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், முற்போக்கு அரசை அமைக்க விரும்புகிறோம், அதற்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

"நாங்கள் அந்தக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டோம்" என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பாக மேலும் விவரித்த அவர், "எங்களுக்கு வருகிற அமைச்சரவை வாய்ப்புகளை நாங்கள் நிராகரிக்கவில்லை. அந்த வாய்ப்புகளைவிட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கே முக்கியத்துவம் அளித்திருக்கிறோம். கூட்டணி ஆட்சி தொடர்பாக எங்களுக்கு எதிர்மறை கருத்து இல்லை. ஜனநாயகத்தில் அதிகாரப் பரவலாக்கம் வரவேற்கத்தக்கதுதான். ஆனால் அது கொள்கை அடிப்படையில், குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். அதற்கான சூழல் இன்னும் எழவில்லை. அப்படி எழுந்தால் குறைந்தபட்ச செயல்திட்டம் முக்கியம்." என்றார்.

செயற்குழுவில் ஆலோசித்த பிறகு முடிவு அறிவிக்கப்படும் எனக் கூறும் வீரபாண்டியன், "விஜய் ஆதரவு கேட்டிருக்கிறார். அதைப் பரிசீலித்து, எங்கள் முடிவைத் தெரிவிப்போம். மக்கள் ஒரு தீர்ப்பை அளித்துள்ளார்கள். பெரும்பான்மை இடங்கள் தவெக-வுக்குச் சென்றுள்ளது. இதை நாங்கள் அங்கீகரித்து ஏற்கிறோம். நாளை மறுநாள் நடைபெறக் கூடிய செயற்குழுவில் ஆலோசித்த பிறகு ஆதரவு அளிப்பது தொடர்பாக முடிவெடுத்து அறிவிப்போம்." என்றும் தெரிவித்தார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு