You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

நேரலை, தமிழ்நாடு வாக்கு எண்ணிக்கை நிலவரம் - தவெக 100க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.

முக்கிய சாராம்சம்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் - கட்சிகளின் முன்னிலை நிலவரம்

  2. தமிழ்நாடு: தவெக 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை

    தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரப்படி, தவெக 102 இடங்களிலும் அதிமுக கூட்டணி 70 இடங்களிலும் திமுக 62 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

  3. ஆச்சர்யம் தரும் தவெக - தற்போதைய நிலவரம் என்ன? பிபிசி தமிழ் நேரலை

    தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் காலை 10:00 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 82 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 63 தொகுதிகளிலும் தவெக 75 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. நாம் தமிழர் இரண்டு இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

  4. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் - தற்போதைய நிலவரம்

    தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் காலை 10:00 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 82 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 63 தொகுதிகளிலும் தவெக 75 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. நாம் தமிழர் இரண்டு இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

    புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 22 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களிலும் மற்றவை 4 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

    கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (யூ.டி.எஃப்) 89 இடங்களிலும், இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) 48 இடங்களிலும், மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

    மேற்கு வங்கத்தைப் பொருத்தவரையில் காலை 10:00 மணி நிலவரப்படி திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி 125 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி 150 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

    அசாமைப் பொருத்தவரையில் காலை 10:00 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 92 இடங்களிலும் மற்றும் காங்கிரஸ் கூட்டணி 26 இடங்களிலும், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

    மேற்கு வங்கத்தில் ஃபல்டா சட்டப்பேரவைத் தொகுதியில் மறுவாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில் அந்த தொகுதியைத் தவிர்த்து மீதமுள்ள 293 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.

  5. கொளத்தூர்: இரண்டாம் சுற்று முடிவில் மு.க.ஸ்டாலின் பின்னடைவு

    கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில், மு.க.ஸ்டாலின் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

  6. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் - தற்போதைய முன்னிலை விவரம்

  7. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் - ஆரம்பகட்ட நிலவரம் குறித்து பிபிசி தமிழ் நேரலை

    தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் ஆரம்பகட்ட நிலவரம் வெளியாகி வருகின்றன. அதுகுறித்து பிபிசி தமிழ் செய்தியாளர் விஜயானந்த் களத்திலிருந்து தகவல்களை வழங்குகிறார்.

  8. கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் என்ன நிலவரம்?

    கேரளாவைப் பொருத்தவரையில் காலை 08:45 மணி நிலவரப்படி கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (யூ.டி.எஃப்) 36 இடங்களிலும், இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) 23 இடங்களிலும், மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) 11 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

    மேற்கு வங்கத்தைப் பொருத்தவரையில் காலை 08:45 மணி நிலவரப்படி திரிணாமுல் காங்கிரஸ் 111 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி 95 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

    அசாமைப் பொருத்தவரையில் காலை 08:45 மணி நிலவரப்படி பாஜக 46 இடங்களிலும் மற்றும் காங்கிரஸ் 13 இடங்களிலும், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

    மேற்கு வங்கத்தில் ஃபல்டா சட்டப்பேரவைத் தொகுதியில் மறுவாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில் அந்த தொகுதியைத் தவிர்த்து மீதமுள்ள 293 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.

  9. சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2026 - முன்னிலை நிலவரம்

    சட்டப் பேரவை தேர்தல் முடிவுகள் 2026 - முன்னிலை நிலவரம் (காலை 8:30 மணி)

    தேர்தல் முடிவுகள் குறித்த அப்டேட்களுக்கு http://bbc.in/4f04fZv

  10. தற்போதைய நிலவரம்

  11. வந்துகொண்டிருக்கும் செய்தி, தற்போதைய நிலவரம்

    தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் திமுக ஒரு இடத்திலும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 3 இடங்களிலும் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி தலா 1 இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளது.

    பெரம்பூர், திருச்சி கிழக்கு, பெரம்பலூர் ஆகிய தொகுதிகளில் தவெக முன்னிலை பெற்றுள்ளது.

  12. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

    தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்குத் தொடங்கியது.

    முதலில் தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

    முன்னதாக, தமிழ்நாட்டின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்றது.

    294 இடங்களுக்கான மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

    அசாமின் 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற்றது.

    கேரளாவின் 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற்றது.

    யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற்றது.

  13. திருச்சி மாவட்டத்தில் இரண்டு வாக்கு எண்ணும் மையங்கள்

    திருச்சி மாவட்டத்தில் 9 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் இரண்டு வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

    மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர் தொகுதிகளின் இயந்திரங்கள் திருச்சி ஜமால் முகமது கல்லூரி மையத்திலும், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் தொகுதிகளின் இயந்திரங்கள் புலிவலம் ஒயாசிஸ் தொழில்நுட்பக் கல்லூரி மையத்திலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

    மத்திய பாதுகாப்புப் படை, காவல்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர். 288 சிசிடிவி கேமராக்களுடன் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் மொத்தம் 18,59,016 வாக்குகள் பதிவாகி, 86.58 சதவிகித வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக 27 சுற்றுகளிலும் குறைந்தபட்சமாக 20 சுற்றுகளிலும் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

    காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்போன் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சுற்றுகளின் விவரம்:

    ஸ்ரீரங்கம் : 27 சுற்றுகள்

    திருச்சி கிழக்கு : 22 சுற்றுகள்

    திருச்சி மேற்கு : 22 சுற்றுகள்

    திருவெறும்பூர்: 23 சுற்றுகள்

    மணப்பாறை: 25 சுற்றுகள்

    லால்குடி: 20 சுற்றுகள்

    மண்ணச்சநல்லூர்: 22 சுற்றுகள்

    துறையூர்: 22 சுற்றுகள்

    முசிறி : 21 சுற்றுகள்

  14. தொகுதி வாரியாக முன்னிலை விவரங்களை அறிய...

  15. மேற்கு வங்கத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்

    தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனிய பிரதேசத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் போக்குகள் சற்று நேரத்தில் வெளியாகத் தொடங்கும்.

    மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கைக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்துப் பேசிய அம்மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் அகர்வால், "293 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை திங்களன்று நடைபெறும். மொத்தம் 77 இடங்களில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இதில் 35 மாவட்டத் தலைமையிடங்களும், 42 உட்கோட்டத் தலைமையிடங்களும் அடங்கும்," என்று தெரிவித்தார்.

    செய்தி முகமையான பிடிஐ (PTI)-இன் தகவலின்படி, "தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, பெரும்பாலான வாக்கு எண்ணும் மையங்கள் மாவட்ட அளவில் அமைந்திருக்க வேண்டும். மாநிலம் முழுவதும் மொத்தம் 459 வாக்கு எண்ணும் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையைக் கண்காணிக்க 533 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்," என தெரிவித்துள்ளார்.

    மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நிறைவடைந்தது; இருப்பினும், ஃபால்டா தொகுதியில் மே 21 அன்று மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

    இதன் காரணமாக, மேற்கு வங்கத்தின் 293 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் திங்களன்று வெளியாகவுள்ளன.

  16. குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை தீர்மானித்த தொகுதிகள்

    வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கவிருக்கிறது.

    அதற்கு முன்பு, கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை தீர்மானித்த தொகுதிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

    1.மதுராந்தகம் - 3,570

    2.வாணியம்பாடி - 4,904

    3.கிருஷ்ணகிரி - 794

    4. வேப்பனஹள்ளி - 3,054

    5.ஆரணி - 3,128

    6.மேட்டுர் - 656

    7.மொடக்குறிச்சி - 281

    8.கூடலூர் - 1,945

    9.மேட்டுப்பாளையம் - 2,456

    10.கோவை வடக்கு - 4,001

    11.கோவை தெற்கு - 1,728

    12. கிணத்துக்கடவு - 1,095

    13.பொள்ளாச்சி - 1,725

    14.நன்னிலம் - 4,424

    15. ஆலங்குளம் - 3,539

  17. வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு

    தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    முதல்கட்டமாக வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி 100 மீட்டர் அளவுக்கு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு வருபவர்களின் அடையாளம் காவல்துறையால் உறுதிபடுத்தப்பட்டு உரிய சோதனைகள் செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.

    இரண்டாவது கட்டமான ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்தில் நுழைவு வாயிலிலும் காவல்துறையின் சோதனை சாவடி அமைக்கப்பட்டிருக்கும். வாக்கு எண்ணப்படும் இடத்துக்குள் உள்ளே நுழைபவர்கள் பரிசோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே மொபைல் போன் தொடர்பு சாதனங்கள் அனுமதிக்கப்படும்.

    மூன்றாவது கட்டமாக வாக்குகள் எண்ணப்படும் அரங்குகள் மற்றும் ஈவிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்கள் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும். முழுமையான பரிசோதனைகளுக்குப் பிறகே தேர்தல் அலுவலர்கள் மற்றும் முகவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். வாக்கு எண்ணும் அரங்குக்கு உள்ளே மொபைல் போன்கள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை.

    தற்போது முதல்முறையாக க்யூ-ஆர் அடிப்படையிலான அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் அரங்குக்குள் க்யூ-ஆர் ஸ்கேனிங் மூலம் உறுதிசெய்யப்படும் நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

    காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன்பிறகு சுமார் 08:30 மணிக்கு ஈவிஎம் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும்,

    ஒவ்வொரு சுற்று முடிவின்போது பெறப்பட்ட வாக்குகள் தேர்தல் அலுவலர்களால் ஒலிப் பெருக்கிகள் மூலம் அறிவிக்கப்படும். அதேபோல, தேர்தல் ஆணையத்தின் செயலி மற்றும் இணையதளத்திலும் முடிவுகள் வெளியாகும்.

  18. வணக்கம் நேயர்களே!

    தேர்தல் முடிவுகள் தொடர்பான நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்பது செய்தியாளர் நந்தினி வெள்ளைச்சாமி.

    தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிமுதல் எண்ணப்படுகின்றன. தேர்தல் முடிவுகள், முன்னணி நிலவரங்கள், புகைப்படங்கள், காணொளிகள், களத்தில் உள்ள செய்தியாளர்களின் பகுப்பாய்வுகள் உள்ளிட்டவை இந்த பக்கத்தில் வழங்கப்படும். தொடர்ந்து இணைந்திருங்கள்.

  19. சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: எந்தெந்த கட்சிகளுக்கு இடையே போட்டி?

    தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி (நாளை) காலை 8 மணிமுதல் எண்ணப்பட உள்ளன.

    நான்கு மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் போட்டி எந்த கட்சிகளுக்கு இடையே நிலவியது என்பதை சுருக்கமாக முதலில் அறியலாம்.

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்றது.

    பிராந்தியக் கட்சிகள் தலைமையிலான இரண்டு முக்கிய கூட்டணிகள் களத்தில் உள்ளன. ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), மற்றும் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக).

    நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜய், தனது தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி மூலம் முதன்முதலாகத் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார்.

    மேலும், சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது.

    சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம், ராமதாஸ் மற்றும் இதர அமைப்புகளுடன் இணைந்து கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணி 120 தொகுதிகளில் போட்டியிட்டது.

    மேற்குவங்கம்:

    294 இடங்களுக்கான மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

    இந்தப் போட்டி பெரும்பாலும், நான்காவது முறையாக ஆட்சியைப் பிடிக்க முயலும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி ஆகியவற்றுக்கு இடையே நிலவுகிறது.

    அசாம்:

    அசாமின் 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற்றது.

    இந்தப்போட்டி இரண்டு கூட்டணிகளுக்கு இடையே நிலவுகிறது, ஒன்று ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலானது மற்றும் மற்றொன்று காங்கிரஸ் தலைமையிலானது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க முயல்கிறது.

    பத்ருதீன் அஜ்மல் தலைமையிலான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 27 இடங்களில் தனித்துப் போட்டியிட்டது.

    கேரளா:

    கேரளாவின் 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற்றது.

    இந்தப் போட்டி முதன்மையாக இரண்டு முக்கிய கூட்டணிகளுக்கு இடையே நிலவுகிறது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்). தற்போது ஆட்சியில் இருக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க முயல்கிறது.

    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற்றது.

    இரண்டு முக்கிய கூட்டணிகள் இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்துகின்றன: ஒன்று தற்போது ஆட்சியில் இருக்கும் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியுடன் (பாஜக) இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி. மற்றொன்று காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, இதில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) அங்கம் வகிக்கிறது. தவெக கூட்டணி 30 இடங்களில் களம் கண்டது.

  20. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026: பிபிசி தமிழில் வெளியான சில கட்டுரைகள்

    தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிபிசி தமிழில் வெளியான சில முக்கிய கட்டுரைகள் இங்கே தொகுத்து வழங்கப்படுகின்றன.

    வாக்காளர் பட்டியல் சீர்திருத்தங்களைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் முதல் விஜயின் அரசியல் பிரவேசம் வரை, திராவிட கட்சிகளின் லட்சியங்கள் முதல் தேசிய அளவிலான முக்கியத்துவம் வரை, பல காரணிகள் தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலை தனித்துவமான வழிகளில் வடிவமைக்கின்றன என்பது குறித்த கட்டுரை.

    உண்மையில் வாக்களிக்கும் பெண்கள் வாக்களிக்கும்போது தங்கள் மனதில் என்னென்ன விஷயங்களை யோசித்து வாக்களிக்கின்றனர்? அரசியல் கட்சிகளிடமிருந்து எதை அவர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்? கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் பெண்கள் எதன் அடிப்படையில் வாக்களித்தனர் என்பதை தரவுகளுடன் விளக்கும் கட்டுரை.

    திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த சில ஆண்டுகளில் மாநிலக் கட்சியின் தலைவர் என்ற அடையாளத்தைத் தாண்டி, இந்தியா முழுவதும் கவனிக்கத்தக்க ஒரு தலைவராகவும் மாறிவருகிறார். அவருடைய பயணத்தை குறித்து விளக்கும் கட்டுரை.

    சேலம் மாவட்டத்தில் கோனேரிப்பட்டி அ.தி.மு.க கிளைச் செயலாளராக அரசியல் வாழ்வைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் அதிகார மையமாக உருவெடுத்தது எப்படி? அவரைப் பற்றிய அரசியல் பயோகிராஃபி

    33 ஆண்டுக்காலத் திரைப்பயணத்திற்குப் பிறகு அரசியலில் களம் காணும் விஜய், தனது மௌனம் மற்றும் முரண்பட்ட பிம்பங்களுக்கு இடையே சவாலான 2026 சட்டமன்றத் தேர்தல் பயணத்தை எதிர்கொள்கிறார்.

    சமகால தமிழக அரசியலில் தாக்கம் ஏற்படுத்திய தலைவர்களுள் ஒருவராக சீமான் பார்க்கப்படுகிறார். அதே நேரம், இது போன்ற அவரது பல கருத்துகள் அவ்வப்போது அதிர்வலைகளையும் சர்ச்சைகளையும் கிளப்புகின்றன. சீமானின் அரசியல் பயணம் கடந்து வந்த பாதை எப்படிப்பட்டது என்பதை விளக்கும் கட்டுரை.