காணொளி: ஆந்திராவில் மக்கள் உணவாக விரும்பி சாப்பிடும் 'புளிய மர இலை'

காணொளிக் குறிப்பு, புளிய இலையை உணவாக உட்கொள்ளும் ஆந்திர மக்கள் - ஆண்டு முழுவதும் அறுவடை
காணொளி: ஆந்திராவில் மக்கள் உணவாக விரும்பி சாப்பிடும் 'புளிய மர இலை'
பிரசுரிக்கப்பட்டது

ஆந்திரப் பிரதேசத்தில் சிண்ட சிகுரு' என்று அழைக்கப்படும் இளம் புளிய இலைகளுக்கான தேவையைப் பற்றி விவரிக்க வேண்டியதில்லை. பல குடும்பங்களில் மிகவும் விரும்பப்படும் இந்த இலைகள், பொதுவாக ஆண்டுக்குச் சில மாதங்கள் மட்டுமே, முக்கியமாக கோடைக்காலத்தின் இறுதியிலும் முதல் மழைக்காலத்தின் தொடக்கத்திலும் கிடைக்கின்றன.

ஆனால், விஜயவாடா அருகிலுள்ள கங்கிபாடு பகுதியைச் சேர்ந்த விவசாயியான பர்வதனேனி ஸ்ரீனிவாஸ், ஆண்டு முழுவதும் புளிய இலைகளை விற்பதற்கான ஒரு வழியைக் கண்டறிந்துள்ளார். இதற்காக, அவர் பிரத்யேகமாக புளியந்தோப்பு ஒன்றை உருவாக்கியுள்ளார்.

விவசாயியான பர்வதனேனி ஸ்ரீனிவாஸ் கூறுகையில், "காய்கறிகளுக்கு எப்போதும் நல்ல தேவை இருப்பதை நாங்கள் கவனித்தோம். புளிய இலைகளை ஒரு கீரை வகையாகக் கருதினால், அவற்றுக்கான தேவை மிக அதிகமாக உள்ளது.

வியாபாரிகள் சந்தைக்குச் சிறிய அளவிலேயே இவற்றை விற்பனைக்குக் கொண்டு வருகிறார்கள். அவை விரைவாக விற்றுத் தீர்ந்துவிடுவதால், மாலை நேரத்துக்குள் புளிய இலைகள் கிடைப்பதில்லை. இதைப் பார்த்தபோது, ​​அவற்றில் விற்பனைக்கான சிறந்த வாய்ப்பு இருப்பதாக எனக்குத் தோன்றியது.

அதிக மகசூல் தரக்கூடிய வீரிய ரகப் புளியை நான் தேடத் தொடங்கினேன். அந்தத் தேடலின்போது, ​​அனந்தபூரில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட இரண்டு ரகங்கள் குறித்து எனக்கு தெரியவந்தது.

இந்த வகை மரங்கள் பயிரிடப்படும் தோட்டங்களுக்கு நான் நேரில் சென்று பார்வையிட்டேன்; பின்னர் அவற்றை நானே பயிரிட முடிவு செய்தேன். இப்போது சுமார் பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன.

முதல் ஐந்து ஆண்டுகளுக்குப் பயிரிலிருந்து எந்த வருமானமும் கிடைக்கவில்லை. மரங்கள் வளர்வதற்கு அவகாசம் தேவைப்படுகிறது. அறுவடை செய்வதை எளிதாக்குவதற்காக, நாங்கள் அவற்றை சுமார் நான்கு முதல் ஐந்து அடி உயரத்தில் பராமரிக்கிறோம்; அவை இன்னும் உயரமாக வளர்ந்தால், அறுவடை செய்வது கடினமாகிவிடும்.

அந்த முதல் ஐந்து ஆண்டுகளில், நான் கொய்யாவை ஊடுபயிராகப் பயிரிட்டேன்; விளைச்சலும் சந்தைப்படுத்துதலும் சிறப்பாக அமைந்தன.

இப்பண்ணை மொத்தம் நான்கு ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இங்கு நான் பல பயிர் முறையைப் பின்பற்றுகிறேன். மல்பெரி, புளிய இலை மற்றும் வாட்டர் ஆப்பிள் (water apple) ஆகியவற்றை முக்கியப் பயிர்களாக வளர்க்கிறேன். மீதமுள்ள இடங்களில், பருவத்துக்கேற்றவாறு காய்கறிகளைப் பயிரிடுகிறேன்.

மொத்தத்தில், நான் சுமார் 100 புளிய மரங்களை நட்டுள்ளேன்." என்றார்.

தோட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் தினமும் இளம் புளிய இலைகளைப் பறிக்கின்றனர்.

விவசாய தொழிலாளியான ரமணா கூறுகையில், "நான் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் புளிய இலைகளைப் பறித்து வருகிறேன்.

ஒரு தொழிலாளியால் ஒரு நாளைக்கு சுமார் ஒன்று முதல் ஒன்றரை கிலோ வரை மட்டுமே பறிக்க முடியும். நாங்கள் காலை எட்டு மணிக்கு வந்து மதியம் ஒரு மணி வரை வேலை செய்வோம். பிறகு வீட்டுக்குச் சென்றுவிட்டு, மீண்டும் மூன்று மணிக்கு வந்து மாலை ஐந்து மணி வரை தொடர்ந்து வேலை செய்வோம்.

இளம் இலைகளை மட்டுமே பறிக்க வேண்டும்; அவற்றை கவனமாகப் பறிக்க வேண்டும். நாங்கள் இதைத் தினமும் செய்கிறோம்." என்றார்.

குறிப்பிட்ட சாகுபடி முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், ஆண்டு முழுவதும் இளம் புளிய இலைகளை உற்பத்தி செய்ய முடிவதாக பர்வதனேனி ஸ்ரீனிவாஸ் கூறுகிறார்.

பர்வதனேனி ஸ்ரீனிவாஸ் கூறுகையில், "இப்பயிர் ஆண்டு முழுவதும் வருமானம் தரக்கூடியது.

இதில் சில எளிய வழிமுறைகள் உள்ளன. விவசாயிகள் அவற்றை முறையாகப் பின்பற்றினால், ஆண்டு முழுவதும் புளிய இலைகளை அறுவடை செய்யலாம்.

இலைகளை அவ்வப்போது அகற்றிவிட வேண்டும். இலைகளை அறுவடை செய்தவுடன், புதிய இலைகள் துளிர்க்கத் தொடங்கும். மரம் தனக்கான உணவைத் தானே தயாரித்துக்கொள்ள வேண்டியிருப்பதால், வளர்ச்சியைத் தக்கவைக்க அது இயல்பாகவே புதிய இலைகளை உருவாக்குகிறது.

அப்படித் தோன்றும் புதிய இலைகளையே நாம் அறுவடை செய்து விற்பனை செய்கிறோம்." என தெரிவித்தார்.

புளிய இலைகள் ஒரு கிலோவுக்கு 1,000 ரூபாய் வரை விலை போனாலும், அவற்றின் உற்பத்திச் செலவும் அதிகம் என்று பர்வதனேனி ஸ்ரீனிவாஸ் கூறுகிறார்.

பர்வதனேனி ஸ்ரீனிவாஸ் கூறுகையில், "புளிய இலைகள் ஒரு கிலோகிராம் சுமார் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவது உண்மைதான் என்றாலும், அந்தத் தொகை முழுவதும் விவசாயிக்கு லாபமாகக் கிடைப்பதில்லை.

இதில் மிகப்பெரிய செலவு கூலிதான். ஒரு தொழிலாளியால் ஒரு நாளைக்கு ஒன்று முதல் ஒன்றரை கிலோகிராம் வரை மட்டுமே பறிக்க முடியும்.

தினக்கூலி சுமார் 400 ரூபாயாக உள்ளது. இதனுடன், சுமார் 40 ரூபாய் போக்குவரத்துச் செலவும், தேநீர், சிற்றுண்டி மற்றும் பிற செலவுகளும் சேர்கின்றன.

இவை அனைத்தையும் கணக்கிட்டுப் பார்க்கும்போது, ​​ஒரு கிலோவுக்கான உற்பத்திச் செலவு 500 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை ஆகிறது.

பொதுவாக, ஒரு கிலோ புளிய இலைகளை 1,000 ரூபாய்க்கும் குறைவான விலைக்கு விற்பது லாபகரமானதாக இருப்பதில்லை. இத்தொழில் லாபம் தருவதாக அமைய வேண்டுமானால், விலை அந்த அளவிலேயே நீடிக்க வேண்டும்." என கூறினார்.

செய்தியாளர்: உமாகாந்த் கரிகாபட்டி

ஒளிப்பதிவு: சாய் கிருஷ்ணா

படத்தொகுப்பு: ஸ்ரீநிவாஸ் சிண்டா

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு