89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி - பிளேஆஃப் வாய்ப்பை தவறவிட்ட சென்னை

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 தொடரின் 66வது போட்டியில் இன்று (மே 21) குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ். ஆமதாபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்க இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது அவசியமாக இருந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே சிஎஸ்கே-வால் 14 புள்ளிகள் பெற்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பைத் தவறவிட்டு வெளியேறியிருக்கிறது சிஎஸ்கே.

குஜராத் டைட்டன்ஸ் அணியோ ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேயிருந்தது. இருந்தாலும், இந்தப் போட்டியின் வெற்றி அவர்களின் டாப் 2 வாய்ப்பை பலப்படுத்தியிருக்கிறது. லீக் சுற்றில், 14 போட்டிகளில் 9 வெற்றிகள் பெற்றிருக்கும் டைட்டன்ஸ், புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தது. ஆடுகளத்தில் வேகமும் பவுன்சும் நன்றாக இருப்பதால் முதலில் பந்துவீச முடிவு செய்திருப்பதாக சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறினார்.

முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் டாப் 3 வீரர்களான சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில், ஜாஸ் பட்லர் அனைவருமே அரைசதம் அடித்தனர்.

இந்த இலக்கை சேஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 13.4 ஓவர்களில் 140 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷிவம் துபே 47 ரன்கள் எடுத்தார். குஜராத் டைட்டன்ஸ் பௌலர்களில் மொஹம்மது சிராஜ், ககிஸோ ரபாடா & ரஷீத் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.

சிறப்பாகத் தொடங்கிய கில் - சாய் சுதர்ஷன்

குஜராத் டைட்டன்ஸ் ஓப்பனர்கள் ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன் இருவரும் வழக்கம்போல் இந்தப் போட்டியிலும் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தார்கள். ஆரம்பம் முதலே சீராக ரன் சேர்த்தது இந்தக் கூட்டணி. முதல் சில ஓவர்களில் சாய் சுதர்ஷன் நிதானமாக விளையாடினார். ஆனால், கேப்டன் கில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார்.

பவர்பிளேவில் முகேஷ் சவுத்ரி ஓரளவு கட்டுக்கோப்பாகப் பந்துவீச, ஸ்பென்சர் ஜான்சன் ஓவரில் பவுண்டரிகளாக விளாசினார் கில். ஆட்டத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது ஓவர்களை வீசிய ஸ்பென்சர் ஜான்சன், அந்த இரு ஓவர்களிலுமே தலா 15 ரன்கள் கொடுத்தார்.

ஐந்தாவது ஓவரை வீசிய குர்ஜப்னீத் சிக்கனமாகப் பந்துவீசி 3 ரன்கள் மட்டும் கொடுத்தாலும், 6வது ஓவரை வீசிய அன்ஷுல் கம்போஜ் 14 ரன்கள் கொடுத்தார். அதனால், பவர்பிளேவில் விக்கெட் இழக்காமல் 62 ரன்கள் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ்.

குஜராத்தின் இந்த நல்ல தொடக்கத்துக்கு மத்தியில், சிஎஸ்கே விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனும் காயமடைந்து வெளியேறினார். அதனால், உர்வில் பட்டேல் கீப்பராக செயல்பட்டார்.

சுழற்பந்துவீச்சால் தாக்கம் ஏற்படுத்த முடியும் என்று நம்பி பவர்பிளே முடிந்ததும் நூர் அஹமதுவின் கையில் பந்தைக் கொடுத்தார் ருதுராஜ் கெய்க்வாட். ஆனால், அந்த ஓவரின் முதல் பந்து மற்றும் கடைசிப் பந்து இரண்டிலுமே சிக்ஸரடித்தார் கில்.

8வது ஓவரை வீசவந்த குர்ஜப்னீத் மீண்டும் சிறப்பாகப் பந்துவீசினார். அந்த ஓவரிலும் அவர் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஆனால், அந்த ஓவரின் கடைசிப் பந்தில் கில் பேட்டில் உரசிச் சென்று கீப்பர் உர்வில் பட்டேலின் கையில் விழுந்தது பந்து. உர்வில் மட்டும் ஆர்வத்தோடு அப்பீல் செய்ய, பௌலர் உள்பட வேறு யாரும் அதில் ஆர்வம் காட்டவில்லை. அதனால், அந்தத் தருணத்தைக் கடந்துவிட்டார்கள். சில பந்துகள் கழித்து ரீப்ளேவில் பார்த்தபோதுதான், பந்து பேட்டில் உரசிச் சென்றது அனைவருக்கும் தெரியவந்தது. கில்லை வெளியேற்றும் வாய்ப்பைத் தவறவிட்டது சிஎஸ்கே.

8வது ஓவர் வரை நிதானமாக ஆடிக்கொண்டிருந்த சாய் சுதர்ஷன், 9வது ஓவரிலிருந்து தன் வேகத்தைக் கூட்டினார். 10 ஓவர்கள் முடிவிலேயே 111/0 என்ற நல்ல நிலைக்குச் சென்றது குஜராத் டைட்டன்ஸ்.

கில் 23 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்த, 35 பந்துகளில் அரைசதம் கடந்தார் சாய் சுதர்ஷன்.

11வது மற்றும் 12வது ஓவர்களில் குர்ஜப்னீத் சிங் மற்றும் நூர் அஹமது இருவரும் சிறப்பாக வீசியதால் அந்த ஓவரில் பவுண்டரிகளே வரவில்லை. அந்த 2 ஓவர்களிலும் சேர்த்து 13 ரன்களே எடுக்கப்பட்டிருந்தது. அதனால், சற்று அவசரம் காட்டிய கில், ஸ்பென்சர் ஜான்சன் வீசிய பந்தை தூக்கியடிக்க முயற்சி செய்தார். பந்து டாப் எட்ஜாகி துபேவிடம் கேட்சானது.

37 பந்துகளை சந்தித்த ஷுப்மன் கில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு கில் - சாய் சுதர்ஷன் கூட்டணி 74 பந்துகளில் 125 ரன்கள் குவித்தது.

அதிரடியைத் தொடர்ந்த பட்லர் - சாய் சுதர்ஷன்

கில் அவுட்டானதால், குஜராத் அணியின் வேகம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சாய் சுதர்ஷனோடு இணைந்த ஜாஸ் பட்லர், அப்படி எதுவும் நடக்காமல் பார்த்துக்கொண்டார்.

தன் இரண்டாவது ஓவரை சிறப்பாக வீசிய நூர் அஹமது, மூன்றாவது ஓவரில் 22 ரன்கள் கொடுத்தார். சாய் சுதர்ஷன் அந்த ஓவரில் ஒரு பவுண்டரி அடிக்க, பட்லரோ 2 சிக்ஸர்கள் விளாசினார். வழக்கமாக அதிகம் பவுண்டரிகளே அடிக்கும் குஜராத் டைட்டன்ஸ் பேட்டர்கள், இம்முறை சிக்ஸர்களும் தொடர்ச்சியாக அடித்தார்கள். அதிலும் குறிப்பாக பட்லர் அடுத்தடுத்து சிக்ஸர்கள் அடித்தார்.

வேகம், சுழல் என அனைத்தையும் சிறப்பாகக் கையாண்டு ரன்ரேட் சுமார் 11 என்ற ரீதியிலேயே இருக்குமாறு பார்த்துக்கொண்டது இந்தக் கூட்டணி.

கடைசி கட்டத்தில் தன் வேகத்தை பன்மடங்கு அதிகரித்த சாய் சுதர்ஷன் 53 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து அன்ஷுல் கம்போஜ் பந்துவீச்சில் வெளியேறினார்.

மறுபக்கம், 200+ ஸ்டிரைக் ரேட்டிலேயே ஆடிக்கொண்டிருந்த ஜாஸ் பட்லர், 23 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து 2வது போட்டியாக டைட்டன்ஸின் முன்னணி டாப் ஆர்டர் பேட்டர்கள் கில், சாய் சுதர்ஷன், பட்லர் மூவருமே அரைசதம் கடந்தனர்.

சூப்பர் கிங்ஸ் மெதுவாகப் பந்துவீசியதால் பெனால்டி கொடுக்கப்பட்டது. கடைசி 2 ஓவர்களுக்கு அவர்கள் பவுண்டரி எல்லையில் அதிகபட்சம் 4 ஃபீல்டர்களையே நிறுத்த முடியும் என்ற நிலை வந்தது. அதனால், குஜராத் பேட்டர்கள் பவுண்டரி அடிப்பது எளிதாக இருந்தது.

பட்லர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 57 ரன்கள் விளாச, குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் குவித்தது.

படுதோல்வி அடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ்

பெரிய இலக்கை சேஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் தொடக்க ஜோடியில் ஒரு மாற்றம் செய்தது. ருதுராஜ் கெய்க்வாடுக்குப் பதிலாக சஞ்சு சாம்சனோடு ஓப்பனராகக் களமிறங்கினார் மேத்யூ ஷார்ட். ஆனாலும், அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. முதல் பந்திலேயே சாம்சனின் விக்கெட்டை வீழ்த்தினார் சிராஜ்.

மூன்றாவது வீரராகக் களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சற்று அதிரடியாக தன் இன்னிங்ஸைத் தொடங்கினார். வேகமாக அவர் 1 பவுண்டரியும், 2 சிக்ஸர்களும் விளாசினாலும் அவர் இன்னிங்ஸ் 7 பந்துகள் தான் நீடித்தது. 16 ரன்கள் மட்டுமே எடுத்த அவரையும் சிராஜ் வெளியேற்றினார். அடுத்து வந்த உர்வில் பட்டேல், 2 பந்துகளை மட்டுமே சந்தித்து அதே ஓவரில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

ஓரளவு தாக்குப்பிடித்து 24 ரன்கள் எடுத்த மேத்யூ ஷார்ட், ரபாடாவின் பந்துவீச்சில் வெளியேறினார். அதனால் பவர்பிளேவுக்குள்ளாகவே 4 விக்கெட்டுகளை இழந்தது சிஎஸ்கே.

அதன்பிறகு அந்த அணியில் சரிவிலிருந்து மீளவே முடியவில்லை. அடுத்தடுத்து வந்த வீரர்கள் தொடர்ச்சியாக வெளியேறிக்கொண்டே இருந்தார்கள். ஷிவம் துபே மட்டும் அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்தார். கார்த்திக் ஷர்மா 19, டெவால் பிரெவிஸ் 8, அன்ஷுல் கம்போஜ் 19, நூர் அஹமது 1, ஸ்பென்சர் ஜான்சன் 0 என அனைவருமே விரைந்து வெளியேறினார்கள்.

அதன் காரணமாக 13.4 ஓவர்களிலேயே 140 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது சென்னை சூப்பர் கிங்ஸ். இதன்மூலம் 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ். அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் மொஹம்மது சிராஜ், ககிஸோ ரபாடா, ரஷீத் கான் மூவருமே தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.

பிளேயிங் லெவனில் யார்?

குஜராத் டைட்டன்ஸ்

இந்தப் போட்டிக்கான டைட்டன்ஸ் அணியில் 1மாற்றம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்பின்னர் சாய் கிஷோருக்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அந்த அணியில் சேர்க்கப்பட்டார்.

பிளேயிங் லெவன்: சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில் (கேப்டன்), ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), நிஷாந்த் சிந்து, வாஷிங்டன் சுந்தர், ஜேசன் ஹோல்டர், ராகுல் திவேதியா, ரஷீத் கான், ககிஸோ ரபாடா, அர்ஷத் கான், மொஹம்மது சிராஜ்.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: அனுஜ் ராவத், கிளென் ஃபிலிப்ஸ், பிரசித் கிருஷ்ணா, குல்வந்த் கெஜ்ரோலியா, குமார் குஷாக்ரா.

சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தப் போட்டிக்கான சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. அகீல் ஹொசைன் மற்றும் பிரஷாந்த் வீர் ஆகியோருக்குப் பதிலாக மேத்யூ ஷார்ட் மற்றும் குர்ஜப்னீத் சிங் சேர்க்கப்பட்டனர்.

பிளேயிங் லெவன்: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), உர்வில் பட்டேல், டெவால் பிரெவிஸ், ஷிவம் துபே, மேத்யூ ஷார்ட், குர்ஜப்னீத் சிங், நூர் அஹமது, அன்ஷுல் கம்போஜ், ஸ்பென்சர் ஜான்சன், முகேஷ் சவுத்ரி.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: சர்ஃபராஸ் கான், கார்த்திக் ஷர்மா, மெக்நீல் நொரான்ஹா, குல்திப் யாதவ், அமன் கான்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு