You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து அமீரகம் விலகல் – யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்?
- எழுதியவர், ஃபைசல் இஸ்லாம்
- பதவி, பொருளாதார ஆசிரியர்
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஓபெக்கிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (அமீரகம்) திடீரென வெளியேறுவதாக அறிவித்திருப்பது ஒரு மிகப் பெரிய விஷயமாகும். எமிரேட்ஸ்கள் இணைந்து 1971-இல் ஒரு தேசமாக உருவாவதற்கு முன்பிருந்தே இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருந்தன.
ஓபெக் என்பது முக்கியமாக வளைகுடா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பாகும். இது பல தசாப்தங்களாக உற்பத்தியைக் குறைப்பதன் மூலமோ அல்லது அதிகரிப்பதன் மூலமோ மற்றும் அதன் உறுப்பினர்களிடையே ஒதுக்கீட்டைப் பகிர்ந்தளிப்பதன் மூலமோ கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்தி வந்தது. 1970-களின் எண்ணெய் நெருக்கடிகளில் இது ஒரு முக்கியப் பங்காற்றியது, இது உலகளாவிய எரிசக்தி கொள்கையையே மாற்றியமைத்தது.
ஓபெக் உற்பத்தியில் செளதி அரேபியா ஆதிக்கம் செலுத்தினாலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இரண்டாவது மிக உயர்ந்த கூடுதல் உற்பத்தித் திறனைக் கொண்டிருந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், விலையைக் குறைக்க உதவும் வகையில் உற்பத்தியை அதிகரிக்கும் திறன் கொண்ட இரண்டாவது மிக முக்கியமான நாடாக இருந்தது.
உண்மையில் இதுவே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது நிலையை நீண்டகாலமாக மறுபரிசீலனை செய்ய வழிவகுத்தது. எளிமையாகச் சொன்னால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தான் முதலீடு செய்துள்ள கணிசமான உற்பத்தித் திறனைப் பயன்படுத்த விரும்பியது.
ஓபெக் ஒதுக்கீடுகள் அதன் உற்பத்தியை ஒரு நாளைக்கு 3-3.5 மில்லியன் பேரல்களாகக் கட்டுப்படுத்தின. ஓபெக் உறுப்பினர் என்ற காரணத்தால் ஏற்படும் வருவாய் இழப்புத் தியாகங்களை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விகிதாச்சாரத்திற்கு அதிகமாகச் செய்து வந்தது.
செளதி என்ன செய்யும்?
இருப்பினும், இந்த நடவடிக்கையின் நேரம் இரான் போரின் விளைவுகளைச் சுட்டிக்காட்டுகிறது. வளைகுடாவில் நிலவும் கடும் அழுத்தம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இரான் இடையிலான உறவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், செளதி அரேபியாவுடன் ஏற்கனவே சுமுகமாக இல்லாத அதன் உறவையும் பாதிக்கலாம்.
ஓபெக்கைப் பொறுத்தவரை, அதன் நீண்டகால ஒருமைப்பாடு குறித்து குறிப்பிடத்தக்க கேள்விகள் எழுப்பப்படும் நிலையில், இது ஒரு பெரிய பின்னடைவாகும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது எண்ணெயை கடல் வழியாகவோ அல்லது குழாய் வழியாகவோ முழுமையாக சந்தைக்குக் கொண்டு வரும்போது, ஒரு நாளைக்கு 5 மில்லியன் பேரல் உற்பத்தியை இலக்காகக் கொள்ள வாய்ப்புள்ளது.
ஆனால் விஷயம் அதுமட்டுமல்ல. இதற்கு செளதி அரேபியா ஒரு எண்ணெய் விலை யுத்தத்தின் மூலம் பதிலளிக்கலாம். அதை ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ஸின் பன்முகப்படுத்தப்பட்ட பொருளாதாரம் தாங்கி நிற்கும், ஆனால் மற்ற ஏழை ஓபெக் உறுப்பினர்களால் அது முடியாமல் போகலாம்.
செளதியின் எதிர்வினையைப் பொறுத்தே பல விஷயங்கள் அமையும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முன்னணி அதிகாரிகள், அபுதாபியில் உள்ள தங்களின் எண்ணெய் வயல்களில் இருந்து ஹோர்மூஸ் நீரிணையைத் தவிர்த்துவிட்டு, குறைவாகப் பயன்படுத்தப்படும் ஃபுஜைரா துறைமுகத்திற்கு புதிய குழாய்களை அமைப்பது பற்றிப் பேசுகிறார்கள்.
தற்போது ஏற்கெனவே ஒரு குழாய் அதிக பயன்பாட்டில் உள்ளது. ஆனால் அதிகரித்த எண்ணெய் உற்பத்தி மற்றும் வளைகுடாவில் கப்பல் போக்குவரத்தில் ஏற்படும் நிரந்திர மாற்றங்கள் மற்றும் கூடுதல் செலவு ஆகியவற்றின் காரணமாக கூடுதல் குழாய்கள் தேவைப்படும்
தற்போதைக்கு, ஹோர்மூஸ் நீரிணையில் கடல் போக்குவரத்தின் இரட்டை முற்றுகை எண்ணெய், எரிவாயு, பெட்ரோல், பிளாஸ்டிக் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளைப் பாதிக்கிறது.
உலகம் ஒரு பேரல் எண்ணெய் 110 டாலர் என்பதில் கவனம் செலுத்தினாலும், அடுத்த ஆண்டு எப்போதாவது அது 50 டாலருக்கு நெருக்கமாக இருக்க வாய்ப்புள்ளது என்பதையும் நாம் நிராகரிக்க முடியாது. உதாரணமாக, இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக நீரிணையில் உள்ள சிக்கல்கள் சரி செய்யப்பட்டால் இது சாத்தியம்.
கடந்த 1970-களில் இருந்ததை விட இப்போது உலக எண்ணெய் சந்தைகளில் ஓபெக் குறைவான முக்கியத்துவத்தையே கொண்டுள்ளது.
அப்போது சர்வதேச அளவில் வர்த்தகம் செய்யப்படும் எண்ணெயில் 85% பங்கை அது கொண்டிருந்தது, இன்று அது 50% ஆக உள்ளது. 1970-களை விட உலகப் பொருளாதாரத்திற்கு எண்ணெய் இப்போது குறைவான முக்கியத்துவம் வாய்ந்தது. ஓபெக்கிற்கு இப்போது செல்வாக்கு உள்ளது, ஆனால் ஏகபோக உரிமை இல்லை. சொல்லப்போனால், முன்புபோல் உலகை பணயக் கைதியாக வைத்து மிரட்ட முடியாது.
ஓபெக் அமைப்பின் முக்கிய நபரான செளதியின் முன்னாள் எண்ணெய் துறை அமைச்சர் ஷேக் யமானி, "கற்கள் தீர்ந்துவிட்டதால் கற்காலம் முடிவடையவில்லை. எண்ணெய் தீர்ந்துவிடும் என்பதால் எண்ணெய் காலம் முடிவடையப் போவதில்லை." என்றார்
ஹைட்ரோகார்பன்களுக்குப் பதிலாக மற்ற எரிசக்தி ஆதாரங்கள் வரும் உலகத்தை இது முன்னறிவிக்கிறது.
உணர்த்துவது என்ன?
எண்ணெய் மீதான சார்பு குறைந்த இந்த உலகத்தின் அடையாளமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இந்த நடவடிக்கையைப் பார்க்கலாம்.
தற்போதைய குழப்பங்களுக்கு இடையே வேறு சில தடயங்களும் உள்ளன. சீனாவின் மின்மயமாக்கல் முதலீடுகள், உயர்ந்து வரும் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளால் ஏற்படும் பொருளாதார பாதிப்பைத் தணிக்க உதவியுள்ளன.
சில கணக்கீடுகளின்படி, சீனாவின் கார்கள், லாரிகள் மற்றும் ரயில்களின் மின்மயமாக்கல், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான அங்கு ஒரு நாளைக்கு 1 மில்லியன் பேரல் எண்ணெய் தேவையைக் குறைத்துள்ளது.
இந்தப் போக்கு உலகம் முழுவதும் வேகமெடுக்கும் போது உலகளாவிய எண்ணெய் தேவை ஒரு நிலையை எட்டி அப்படியே நின்றுவிடக்கூடும்.
இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், தேவை சரிவதற்கு முன்பே எண்ணெய் இருப்புகளிலிருந்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு பணம் திரட்டுவது அர்த்தமுள்ளதாக இருக்கும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸிடம் நிதி வலிமையும், நிதிச் சேவைகள் மற்றும் சுற்றுலா மூலம் ஓரளவு பன்முகப்படுத்தப்பட்ட பொருளாதாரமும் உள்ளது.
வளைகுடாவில் விரோதப் போக்குகள் முடிவுக்கு வரும்போது 'புதிய இயல்பு' என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்தே பல விஷயங்கள் அமையும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஓபெக்கிலிருந்து வெளியேறியது, மற்ற நாடுகளும் வரிசையாக வெளியேறத் தூண்டலாம், மேலும் இப்போது செளதி அரேபியாவுக்கு கடும் அழுத்தம் ஏற்படும்.
டேங்கர்கள் மீண்டும் நீரிணை வழியாகச் செல்லும்போது அல்லது புதிய குழாய்களை அமைக்கும் முயற்சியை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தீவிரப்படுத்தும்போது, ஓபெக் கட்டுப்பாடுகள் இல்லாமல் எமிரேட்ஸ் எண்ணெய் முன்பெப்போதும் இல்லாத அளவுக்கு பாயும்.
தற்போதைய முற்றுகைகளில் இது சிறிய விளைவையே ஏற்படுத்தும். ஆனால் அதன் பிறகு இது அனைத்தையும் மாற்றக்கூடும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு