You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழக அமைச்சரவையில் மீண்டும் காங்கிரஸ்: 1967-ல் அரியணை இழந்த கட்சி, பிறகு வாய்ப்பை தவறவிட்ட கதை
தமிழகத்தில் ஏறத்தாழ 59 ஆண்டுகளுக்குப் பின்பு, அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. முன்பு அதிமுக, திமுக கூட்டணியில் இருந்தபோது காங்கிரஸ் கட்சிக்கு அதிகமான எம்எல்ஏக்கள் இருந்தபோது கிடைக்காத வாய்ப்பு, தற்போது 5 எம்எல்ஏக்கள் மட்டுமே இருக்கும் நிலையில் கிடைத்துள்ளது.
கடந்த 1967-ஆம் ஆண்டில் காங்கிரஸ் தோல்வியடைந்த பின்பு, கடந்த 59 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சிக்கு பல முறை அமைச்சரவையில் பங்கேற்கும் வாய்ப்பு நழுவிப்போனதாக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க பல்வேறு வாய்ப்புகள் கிடைத்தபோதும் அதில் பங்கேற்காததுதான், காங்கிரஸ் கட்சியின் தேய்வுக்குக் காரணம் என்று கூறிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கோபண்ணா, இப்போது அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற்றிருப்பது, நிச்சயமாக கட்சிக்குப் புத்துயிர் அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்
தமிழக அமைச்சரவை இன்று (மே 21) விரிவாக்கம் செய்யப்பட்டது. ஏற்கெனவே முதலமைச்சர் விஜய் தலைமையில் அவர் உட்பட 10 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், இன்று 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
அதில், தவெகவுக்கு ஆதரவளித்த காங்கிரஸ் சார்பாக அக்கட்சி எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), விஸ்வநாதன் (மேலூர்) ஆகியோரும் இருந்தனர்.
விஸ்வநாதன், செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூரைச் சேர்ந்தவர். பிஏ படித்தவர். இதற்கு முன்பு காஞ்சிபுரம் மக்களவை தொகுதி எம்.பியாக இருந்தார். பட்டியல் சமூகத்தை சேர்ந்த அவர், பொது தொகுதியில் நின்று வெற்றி பெற்றிருப்பதும், அமைச்சரவையில் அவர் இடம்பெறுவதற்கு ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
கடந்த 1962–1967 இடையிலான கடைசியாக இருந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்தபோது, அவருடைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த கக்கன், இதே தொகுதியில் 1962-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது, தற்போது கட்சியினரால் நினைவுகூரப்படுகிறது. அதே தொகுதியில் வென்றுள்ள விஸ்வநாதன், இப்போது அமைச்சராகியுள்ளார்.
ராஜேஷ்குமார், கிள்ளியூர் தொகுதியில் இப்போது மூன்றாம் முறையாக வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது முறையாக காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதல்முறையாக அமைச்சராகியுள்ளார். கூடுதல் இடங்கள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று தேர்தலுக்கு முன்பிருந்தே குரல் கொடுத்து வந்தவர் ராஜேஷ்குமார்.
இதன் மூலமாக தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின்பு கூட்டணி அமைச்சரவை அமைவதுடன், காங்கிரஸ் கட்சிக்கும் 59 ஆண்டுகளுக்குப் பின்பு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. இவர்களில் விஸ்வநாதனுக்கு உயர்கல்வித்துறை, தொழில்நுட்பக் கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையும், ராஜேஷ்குமாருக்கு சுற்றுலாத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றிருப்பதை காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் கொண்டாடி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை இழந்தது எப்படி?
தமிழகத்தில் கடந்த 1962-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்தது. காமராஜர் மீண்டும் முதலமைச்சரானார். ஆனால் 1963-ஆம் ஆண்டு காமராஜர் ஒரு திட்டத்தை (கே பிளான்) அறிவித்து, தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதாவது அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள், கட்சிப் பணிக்குச் செல்ல வேண்டுமென்பதே அத்திட்டம்.
அதன்படி தமிழ்நாட்டில் காமராஜருக்கு பதிலாக பக்தவத்சலம் முதல்வராக பொறுப்பேற்றார். அவருடைய அமைச்சரவையில் முன்னாள் குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமன், தொழில் துறை அமைச்சராக இருந்தார். கக்கன் உள்துறை அமைச்சராகவும், ஜோதி வெங்கடாசலம் சுகாதாரத்துறை அமைச்சராகவும், ராமையா உணவுத்துறை அமைச்சராகவும், அப்துல் மஜீத் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், நல்ல சேனாபதி சரக்காரி மன்றாடியார் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும், பூவராகன் செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சராகவும் இருந்தனர்.
முதலமைச்சர் வசம் பொதுத்துறை, நிதி, கல்வி உள்ளிட்ட வேறு சில துறைகளும் இருந்துள்ளன.
பக்தவத்சலம் தலைமையிலான ஆட்சிதான், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் இறுதி ஆட்சிக்காலமாக இருந்தது. 1967 ஆம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடித்தது. அதற்குப் பின்பு காங்கிரஸ் கட்சி, மீண்டும் ஆட்சிக்கு வரவேயில்லை.
''காமராஜரின் திட்டமான கே பிளான்படி, அவர் முதலமைச்சர் பதவியை விட்டு விலகியது, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கியக் காரணமானது. அப்போதே அதை வேண்டாமென்று கூறிய பெரியார், அகில இந்திய நலனை விட தமிழக நலன்தான் முக்கியம் என்று காமராஜரிடம் வலியுறுத்தினார். 'நீங்கள் பதவி விலகுவது பெரும் கேடு' என்றே எச்சரித்தார். அத்துடன் காமராஜரை டெல்லிக்கு அழைக்கக்கூடாது என்று நேருவுக்கும் தந்தி கொடுத்தார் பெரியார். ஆனால் தனது திட்டத்துக்கு முன்மாதிரியாக காமராஜரே பதவி விலகினார். அதுதான் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் துவக்கமானது.'' என்றார் தமிழக காங்கிரஸ் துணைத்தலைவர் கோபண்ணா.
''பக்தவத்சலம் ஆட்சிக்காலத்தில்தான், இந்தி எதிர்ப்புப் போராட்டம், தமிழகத்தில் தீவிரமானது. உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர் சுடப்பட்டார். இதையெல்லாம் பயன்படுத்தி திமுக தீவிரமாக பரப்புரை செய்தது. மூன்று படியரிசி லட்சியம், ஒரு படி நிச்சயம் என வாக்குறுதி கொடுத்து ஆட்சியைக் கைப்பற்றியது. அதனால் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதை சமூக மாற்றமாக திமுக கொண்டாடியது. அந்தத் தேர்தலில் சுமார் 45 சதவிகித வாக்குகள் பெற்றாலும், 51 இடங்களில்தான் காங்கிரஸ் வென்றது. ஆனால் கூட்டணி பலத்துடன் திமுக 137 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தது.'' என்றார் கோபண்ணா.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை முடிவுக்கு பக்தவத்சலம் கட்டுப்பட வேண்டியிருந்ததால்தான் இந்த நிலை ஏற்பட்டதாக எழுத்தாளர் செல்வ புவியரசன் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
காமராஜரின் அமைச்சரவை எந்த மாற்றமும் இல்லாமல் பக்தவத்சலம் காலத்தில் தொடர்ந்ததாகவும், தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாமல் அவர் இருந்தார் என்றும் அவர் எழுதியுள்ளார்.
''அன்றைய காங்கிரஸின் தேசியத் தலைமை எடுத்த முடிவுகளுக்கெல்லாம் பக்தவத்சலம் தலையசைத்தார். மிக முக்கியமாக, கட்சித் தலைமையின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப மொழிப் போராட்டங்களை அவர் கையாளத் தொடங்கியபோது அவருடைய ஆட்சி மூர்க்கமானது.
தமிழ்நாட்டில் கொழுந்துவிட்டு எரிந்த தமிழ் உணர்வு பக்தவத்சலத்தின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்ததோடு, தமிழ்நாட்டில் தேசியக் கட்சிகளின் ஆட்சிக்கனவுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. எவ்வளவு நல்ல நிர்வாகியாக இருந்தாலும், தியாகங்களை செய்தாலும் 'மக்களா, கட்சியா?' என்ற சூழல் வரும்போது அரசியலில் மக்கள் பக்கம் நின்று அவர்களுடைய உணர்வுகளைப் பிரதிபலிப்பவர்களே மக்கள் மனதில் நிலைத்திருப்பார்கள் என்பதற்கான வரலாற்றுப் பாடம் பக்தவத்சலம்.'' என்கிறார் செல்வ புவியரசன்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு - காங்கிரஸ் நழுவவிட்ட வாய்ப்புகள்
அதற்குப் பின்பு, பல முறை ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கும் வாய்ப்பு வந்தும் அதை காங்கிரஸ் கட்சி நழுவ விட்டதாகச் சொல்கிறார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ். அந்த வாய்ப்புகளில் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தால் தமிழகத்தில் கட்சி இவ்வளவு பெரிய வீழ்ச்சியைச் சந்தித்திருக்க வாய்ப்பில்லை என்கிறார் அவர்.
பிபிசியிடம் பேசிய பீட்டர் அல்போன்ஸ், ''கடந்த 2006–2011 இடையில் நான் உட்பட கணிசமான சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருந்தபோது, எங்கள் ஆதரவுடன்தான் திமுக ஆட்சியில் இருந்தது. அப்போது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாயிருந்திருக்கும். அதேபோன்று ரஜினிகாந்த் ஆதரவு கிடைத்தபோது காங்கிரஸ் தனித்து நின்றிருந்தாலும் பெருமளவில் வென்று ஆட்சிக்கு வந்திருக்கலாம். ராஜிவ் காந்தி கொலை நடந்த காலம் உட்பட பல முறை ஆட்சியில் பங்கேற்கும் வாய்ப்பை காங்கிரஸ் தவறவிட்டது.'' என்றார்
இருப்பினும் இப்போது 5 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அவர்களில் இருவருக்கு அமைச்சர் பதவி கிடைத்திருப்பது, கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கான ஒரு டோக்கன் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது என்றார் பீட்டர் அல்போன்ஸ்.
இவர்களிருவரின் செயல்பாட்டைப் பொறுத்தே, தமிழகத்தில் கட்சியின் வளர்ச்சி அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் என்கிறார் அவர்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்காததுதான் காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் தேய்வடைந்ததற்கு மிக முக்கியக் காரணம் என்கிறார் கோபண்ணா. தேசிய அரசியலில் கட்சியின் பலத்தைக் காண்பிப்பதற்கு, மாநிலக்கட்சிகளின் கூட்டணி தேவைப்பட்டதால் மாநிலங்களில் அதிகாரத்தில் இருப்பதை காங்கிரஸ் தலைமை பல முறை விட்டுக் கொடுத்ததும் இதற்கு ஒரு காரணம் என்கிறார் அவர்.
தற்போது அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது குறித்துப் பேசிய கோபண்ணா, ''ஏறத்தாழ 59 ஆண்டுகளுக்குப் பின்பு, கதர்சட்டை அணிந்த காங்கிரஸ்காரர்கள் இருவர், தமிழக அமைச்சரவையில் இடம்பெறுவது மிகப்பெரும் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தந்துள்ளது. இவர்களில் ஒருவரான ராஜேஷ்குமார், காமராஜரின் வாக்குவங்கியின் பிரதிநிதியாகவுள்ளவர். மற்றொருவர் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பது சரியான தேர்வு. இது நிச்சயமாக தமிழக காங்கிரஸுக்கு புத்துயிர் அளிக்கும்.'' என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு