வெற்றிப் பயணத்தைத் தொடரும் கேகேஆர் - சன்ரைசர்ஸ் அணியை எளிதாக வீழ்த்தியது

பட மூலாதாரம், ANI
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஹைதராபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் 165 ரன்கள் எடுக்க, அந்த இலக்கை 18.2 ஓவர்களில் சேஸ் செய்தது கேகேஆர்.
இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இதுவரை 9 போட்டிகளில் விளையாடியிருக்கும் அந்த அணி 7 புள்ளிகள் பெற்றிருக்கிறது. அதேசமயம், தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வெற்றிப் பயணம் இதன்மூலம் முடிவுக்கு வந்தது.
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த சன்ரைசர்ஸ் அணிக்கு அபிஷேக் ஷர்மா - டிராவிஸ் ஹெட் கூட்டணி வழக்கம்போல் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. குறிப்பாக டிராவிஸ் ஹெட் ஆரம்பம் முதலே பவுண்டரிகளாக விளாசினார். அதனால் 3 ஓவர்களிலேயே 37 ரன்கள் எடுத்தது சன்ரைசர்ஸ். ஆனால், இந்தக் கூட்டணியால் மிகப் பெரிய ஸ்கோரை எடுக்க முடியவில்லை. நான்காவது ஓவர் வீசவந்த கார்த்திக் தியாகி, 15 ரன்கள் எடுத்திருந்த அபிஷேக் ஷர்மாவை வெளியேற்றினார்.
அடுத்து டிராவிஸ் ஹெட் உடன் இஷான் கிஷன் இணைய, இருவரும் அந்த அதிரடியைத் தொடர்ந்தார்கள். அதனால் பவர்பிளேவில் 1 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்தது சன்ரைசர்ஸ். சுனில் நரைன், வருண் சக்கவரத்தி, கார்த்திக் தியாகி, கேமரூன் கிரீன் என அனைவரின் பந்துவிச்சிலும் பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக விளாசிய டிராவிஸ் ஹெட் 22 பந்துகளில் அரைசதம் கடந்தார். அவர் 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சில் கேமரூன் கிரீன் வசம் கேட்ச் ஆகி வெளியேறினார்.
9வது ஓவரின் கடைசி ஓவரில் ஹெட் அவுட் ஆனபோது சன்ரைசர்ஸ் அணி 105 ரன்கள் எடுத்திருந்தது. அவர்களின் ரன்ரேட் 11.67. அதன்பிறகு தங்களின் அபாரமான ஃபீல்டிங்கால் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

பட மூலாதாரம், ANI
சன்ரைசர்ஸ் அணியின் மிடில் ஆர்டரில் மிகப் பெரிய அரணாக விளங்கி வந்த கிளாசனை, தன் அபார கேட்சால் வெளியேற்றினார் ராவ்மன் பவல். மிட்விக்கெட் திசையில் நின்றிருந்த அவர், வேகமாக வலது புறம் ஓடி பந்தை நோக்கிப் பாய்ந்து காற்றிலேயே அதை கேட்ச் செய்தார். இந்த சீசனில் இதற்கு முன் ஒவ்வொரு போட்டியிலும் குறைந்தபட்சம் 25 ரன்களாவது எடுத்திருந்த கிளாசன், இந்தப் போட்டியில் 11 ரன்களிலேயே அவுட் ஆனார்.
அதேபோல் அனிகேத் வெர்மாவின் கேட்சை கவர் திசையில் நின்றிருந்த ரஹானே பின்னால் ஓடிச்சென்று அபாரமாகப் பிடித்தார். தன் பந்துவீச்சில், கம்மின்ஸ் கொடுத்த கடினமான வாய்ப்பை சிறப்பாகப் பிடித்தார் அனுகூல் ராய். இந்த கேட்ச்கள் சன்ரைசர்ஸ் இன்னிங்ஸில் மிகப் பெரிய வேகத்தடையாக விளங்கின. தொடர் விக்கெட் வீழ்ச்சிக்கு நடுவே ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடிய கேப்டன் இஷான் கிஷனும் 42 ரன்களுக்கு வெளியேறினார்.
அதுமட்டுமல்லாமல் இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மிடில் ஆர்டர் நிலைத்து நின்று ஆடவில்லை. வழக்கமாக கிளாசன் & நித்திஷ் குமார் ரெட்டி இருவரும் பல போட்டிகளில் தங்கள் அணிக்கு நல்ல பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், உடல்நலக்கோளாறு காரணமாக நித்திஷ் ரெட்டி இந்தப் போட்டியில் விளையாடாத நிலையில், அப்படியான ஒரு பார்ட்னர்ஷிப்பை சன்ரைசர்ஸ் அணியால் உருவாக்க முடியவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் சோபித்த கிளாசனும் இந்தப் போட்டியில் விரைவில் ஆட்டமிழந்துவிட்டதால், அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்துவிட்டன.
நித்திஷ் குமார் ரெட்டி இல்லாதது இன்னொரு விதத்திலும் சன்ரைசர்ஸ் அணியை பாதித்தது. அவர்கள் ஒரு பௌலிங் ஆப்ஷனையும் இழந்ததால், இம்பேக்ட் வீரராக ஒரு பந்துவீச்சாளரை கொண்டுவந்தே ஆகவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அதனால், அந்த அணி விக்கெட்டுகள் இழந்துகொண்டிருந்தபோது ஒரு கூடுதல் பேட்டரை இம்பேக்ட் வீரராகக் களமிறக்க முடியவில்லை.
அதனால் 19 ஓவர்கள் முடிவில் 165 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். வருண் சக்கரவர்த்தி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சுனில் நரைன் மற்றும் கார்த்திக் தியாகி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். இந்தப் போட்டியில் தன் முதல் விக்கெட்டை வீழ்த்தியபோது, ஐபிஎல் அரங்கில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற சாதனை படைத்தார் நரைன்.

பட மூலாதாரம், ANI
166 என்ற இலக்கை சேஸ் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஃபின் ஆலன் மற்றும் அஜிங்க்யா ரஹானே நல்ல தொடக்கம் கொடுத்தார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4 ஓவர்களில் 49 ரன்கள் எடுத்தது. 13 பந்துகளில் 29 ரன்கள் எடுத்த ஃபின் ஆலன் விக்கெட்டை வீழ்த்தினார் சன்ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ். அதன்பிறகு களமிறங்கிய அங்ரிஷ் ரகுவன்ஷி அதிரடியைத் தொடர்ந்தார்.
ரஹானே சற்று நிதானம் காட்டினாலும், சீரான இடைவெளியில் பவுண்டரிகள் விளாசினார் ரகுவன்ஷி. அவர் 39 பந்துகளில் அரைசதம் கடந்தார். 36 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த ரஹானே சகிப் ஹுசைன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய ரகுவன்ஷி, 47 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷிவாங் குமார் அவர் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து ஜோடி சேர்ந்த ரிங்கு சிங் (22 ரன்கள்), கேமரூன் கிரீன் (3 ரன்கள்) இருவரும் ஆட்டமிழக்காமல் விளையாடி கேகேஆர் அணியின் வெற்றியை உறுதி செய்தார்கள்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































