You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சௌதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க பாகிஸ்தான் திட்டமிடுவது ஏன்?
- எழுதியவர், ரஷித் ஷகூர்
- பதவி, பிபிசி ஹிந்திக்காக, கராச்சியில் இருந்து
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் ஒரு சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தைக் கட்டுவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும் சௌதி அரேபிய அதிகாரிகளுக்கும் இடையே ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் ஏற்கெனவே நடைபெற்றுள்ளன. ஒரு முறையான ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சௌதி அரேபியாவில் கிரிக்கெட்டை மேம்படுத்துவதே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முக்கிய நோக்கம். இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டால், எதிர்காலத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளை நடத்துவதற்கும் இந்தப் புதிய மைதானம் பயன்படுத்தப்படலாம்.
பாகிஸ்தானும் சௌதி அரேபியாவும் ஏற்கெனவே வர்த்தகம் மற்றும் ராஜதந்திரம் போன்ற பல விஷயங்களில் இணைந்து செயல்படுகின்றன. இப்போது, இந்தக் கூட்டாண்மை கிரிக்கெட்டிலும் விரிவடையக்கூடும்.
அங்கு அதிக எண்ணிக்கையிலான ஆசிய மக்கள் வசிப்பதும், அவர்களில் பலர் கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதுமே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சௌதியில் மைதானம் அமைப்பதற்கான ஒரு முக்கியக் காரணம்.
மற்றொரு முக்கியக் காரணம், சௌதி அரேபியா சமீபத்திய ஆண்டுகளில் விளையாட்டுகளுக்கான ஒரு முக்கிய மையமாக மாறியுள்ளது. அந்நாட்டின் வலுவான பொருளாதார நிலைமை, விளையாட்டுகளில் பெருமளவில் முதலீடு செய்ய வழிவகுக்கிறது. இதன் காரணமாகப் பல சர்வதேச விளையாட்டு அமைப்புகள் இப்போது சௌதியுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளன.
முகமது பின் சல்மானின் முன்னெடுப்புகள்
மூத்த கிரிக்கெட் ஆய்வாளர் நௌமன் நியாஸ், பிபிசி ஹிந்திக்கு அளித்த பேட்டியில், "முகமது பின் சல்மான் பட்டத்து இளவரசராகப் பொறுப்பேற்றதில் இருந்து, விளையாட்டுத் துறை உள்படப் பல்வேறு துறைகளில் முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இதன் மூலம் சௌதியை ஒரு பெரிய விளையாட்டு தேசமாக உலகின் முன்பாக முன்னிறுத்தியுள்ளார்," என்று கூறினார்.
பட்டத்து இளவரசரின் முயற்சியாலேயே, கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற புகழ்பெற்ற கால்பந்து வீரர்கள் சௌதி லீக்கில் விளையாட வந்ததாகவும் நௌமன் நியாஸ் குறிப்பிட்டார்.
மேலும் விளக்கிய அவர், "சௌதி அரேபியாவில் கிரிக்கெட் தொடர்பான வாய்ப்புகள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்குக் கிடைத்தால், அது வாரியத்திற்குப் பெரும் நன்மையாக அமையும். பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் அங்கு நடத்தப்பட்டாலோ அல்லது பாகிஸ்தான் தனது சர்வதேச போட்டிகளை அங்கு ஏற்பாடு செய்தாலோ, பல பெரிய சர்வதேச விளம்பரதாரர்கள் வருவார்கள். இது தவிர, பாகிஸ்தான் - சௌதி இடையிலான இந்த ஒத்துழைப்பு, உள்கட்டமைப்பு மேம்பாட்டிலும் பாகிஸ்தானுக்கு பெரிதும் உதவும்" என்று கூறினார்.
காசிம் நக்வி, சௌதி அரேபிய கிரிக்கெட் கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர். இவர் கடந்த இருபது ஆண்டுகளாக அந்தக் கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
பிபிசி ஹிந்தியிடம் பேசிய அவர், "சௌதியில் ஒரு சிறந்த கிரிக்கெட் மைதானம் அமையவிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். இத்தகைய மைதானத்தின் தேவை நீண்ட காலமாகவே இருந்து வந்தது. இங்கு பல விளையாட்டு மைதானங்கள் இருந்தாலும், பெரும்பாலான கிரிக்கெட் போட்டிகள் சிமென்ட் ஆடுகளங்களிலேயே விளையாடப்படுகின்றன. சௌதி அரேபிய மக்கள் தற்போது கால்பந்துடன் சேர்த்து கிரிக்கெட்டிலும் ஆர்வம் காட்டத் தொடங்கியிருப்பது ஒரு நல்ல மாற்றம்" என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய நக்வி, "2005ஆம் ஆண்டில், ஜெட்டா நகரில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் நாங்கள் 'ஆஸ்ட்ரோடர்ஃப்' செயற்கை ஆடுகளத்தை அமைத்து, பாகிஸ்தான் லெவன் மற்றும் ஆசிய லெவன் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளை நடத்தினோம். ஒரு காலகட்டத்தில், ஐசிசி உலக டி20 தரவரிசையில் சௌதி அரேபியா 24வது இடத்தைப் பிடித்திருந்தது. தற்போது அதன் தரவரிசை 32-ஆக உள்ளது," என்றார்.
அதுமட்டுமின்றி, "சௌதி அரேபியாவில் பாகிஸ்தான் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர். கிரிக்கெட் விளையாட்டின் மீது இவர்களுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அங்கு ஒரு சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டு, அதில் சர்வதேச வீரர்கள் விளையாடும்போது, அது கிரிக்கெட் ரசிகர்களைக் கண்டிப்பாக ஈர்க்கும். அதன் விளைவாக, கிரிக்கெட் விளையாட்டின் மீதான மக்களின் ஆர்வமும் அதிகரிக்கும்," என்று கூறினார்.
மதீனா நகரில் வசிக்கும் பாகிஸ்தானை சேர்ந்த ஓட்டுநரான முகமது ஆமிர், கடந்த பல ஆண்டுகளாக ஹஜ் யாத்ரீகர்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறார்.
கிரிக்கெட் விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், மதீனாவில் நடைபெறும் கிளப் அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். அவர் பிபிசி ஹிந்திக்கு அளித்த பேட்டியில், "சௌதி அரேபியாவில் ஒரு கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டு, வெளியூரில் இருந்து வீரர்கள் இங்கு வந்து விளையாடும் போது, அந்த வீரர்களைத் தங்கள் கண் முன்பாகவே விளையாடுவதைப் பார்க்கையில் இங்கு வசிக்கும் மக்களின் விருப்பமும் இயல்பாகவே நிறைவேறும்," என்று தெரிவித்தார்.
சௌதியில் கிரிக்கெட் கடந்து வந்த பாதை
சௌதி அரேபியாவில் 1960களில் இருந்து கிரிக்கெட் விளையாடப்பட்டு வருகிறது. இருப்பினும், 1970களில் முறையான கிரிக்கெட் சங்கங்கள் உருவாக்கப்பட்ட போது, அது மேலும் ஒழுங்கமைக்கப்படத் தொடங்கியது.
கடந்த 2003இல் சௌதி அரேபியா கிரிக்கெட் மையம் உருவாக்கப்பட்டது. நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட கிரிக்கெட் அதிகாரபூர்வமாக அனுமதிக்கப்பட்டது. அதே ஆண்டில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவும் சௌதிக்கு அனுமதி கிடைத்தது.
காலப்போக்கில், சௌதியில் கிரிக்கெட் மெதுவாக வளர்ந்தது. இன்று சௌதி அரேபிய கிரிக்கெட் கூட்டமைப்புடன் இணைக்கப்பட்ட 15 பிராந்திய கிரிக்கெட் சங்கங்கள் உள்ளன. நாட்டில் சுமார் 400 பதிவு செய்யப்பட்ட கிரிக்கெட் கிளப்புகள் உள்ளன. அவற்றில் 7,000க்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளனர்.
சௌதி அரேபிய கிரிக்கெட் கூட்டமைப்பு ஜனவரி 2020இல் அதிகாரபூர்வமாக உருவாக்கப்பட்டது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாடு செய்யும் போட்டிகளிலும் சௌதி தொடர்ந்து பங்கேற்கிறது.
இந்த ஆண்டு மகளிர் டி20 சேலஞ்ச் என்ற புதிய போட்டியைத் தொடங்கவும் சௌதி அரேபியா திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஒரு தனியார் நிறுவனத்துடன் ஐந்து ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த லீக்கில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இந்தியன் பிரீமியர் லீக்கில் முதலீடு செய்வதிலும் அந்நாடு ஆர்வம் காட்டியுள்ளது.
கிரிக்கெட் வளர்ந்து வந்தாலும், சௌதியில் மிகவும் பிரபலமான விளையாட்டாக இன்னும் கால்பந்துதான் இருந்து வருகிறது. சௌதி தேசிய அணி ஃபிஃபா உலகக் கோப்பையில் விளையாடியுள்ளது. அந்நாட்டின் சொந்த தொழில்முறை கால்பந்து லீக்கும் மிகப் பிரபலமானது.
சௌதி அரேபியா இப்போது தனது விஷன் 2030 திட்டத்தின் ஒரு பகுதியாக கால்பந்து வசதிகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. 2034 உலகக் கோப்பையை நடத்துவதற்காக ஃபிஃபாவிடம் அதிகாரபூர்வமாக விண்ணப்பித்து உள்ளதுடன், ஐந்து வெவ்வேறு நகரங்களில் போட்டிகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
சௌதியின் கால்பந்து லீக் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில், அதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சாடியோ மானே, கரீம் பென்சிமா, ரியாத் மஹ்ரெஸ், நெய்மர் போன்ற பல பிரபலமான வீரர்கள் அதில் விளையாடுகிறார்கள்.
இந்த வீரர்கள் ஒரு காலத்தில் ஐரோப்பிய கால்பந்தின் முன்னணி நட்சத்திரங்களாக இருந்தனர். ஆனால் சௌதி அரேபியா தனது வலுவான பொருளாதார பலத்தைப் பயன்படுத்தி, மிக அதிக சம்பளம் கொடுத்து அவர்களைத் தன் பக்கம் ஈர்த்துள்ளது.
கால்பந்து மட்டுமின்றி, ஃபார்முலா ஒன் கார் பந்தயம், டென்னிஸ், கோல்ஃப் போன்ற முக்கிய சர்வதேச விளையாட்டுகளையும் சௌதி அரேபியா ஈர்த்து வருகிறது. இந்த நிகழ்வுகளும் நாட்டில் பிரபலமடைந்து கவனம் பெற்று வருகின்றன.
வளைகுடா நாடுகளில் கிரிக்கெட்
தற்போது, வளைகுடா நாடுகளில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட்டிற்கு மிகவும் பிரபலமான, முக்கியமான நாடாக அறியப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கிரிக்கெட் மிகவும் பிரபலமாக இருப்பதற்குக் காரணம், அங்கு வசித்து வரும் ஆசிய மக்கள் பலரும் இந்த விளையாட்டை உன்னிப்பாகக் கவனித்து வருவதே ஆகும். துபை, அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் அமைந்துள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது சொந்த சர்வதேச டி20 லீக்கையும் நடத்துகிறது. அதேவேளையில், ஐசிசி டி20 உலகக் கோப்பை, ஆசிய கோப்பை போன்ற பெரிய போட்டிகளையும் முன்னின்று நடத்தியுள்ளது.
பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் சிறிது காலம் நிறுத்தப்பட்டபோது, பாகிஸ்தான் தனது சொந்த போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விளையாடியது. பாகிஸ்தான் சூப்பர் லீக், இந்தியன் பிரீமியர் லீக் ஆகிய போட்டிகளும் அங்கு நடத்தப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தவிர, ஓமன், குவைத், பஹ்ரைன், கத்தார் போன்ற நாடுகளிலும் கிரிக்கெட் பரவலாக விளையாடப்படுகிறது.
இப்போது சௌதி அரேபியா மெதுவாக கிரிக்கெட்டில் ஒரு வலுவான சக்தியாக மாறி வருகிறது. அங்கு இந்த விளையாட்டு எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகிறது என்பதைப் பார்க்கையில், சௌதி விரைவில் வளைகுடா பிராந்தியத்தில் ஒரு முக்கியமான கிரிக்கெட் மையமாக மாறலாம் என்று சிலர் கணிக்கின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு