ஒடிசா காட்டில் 5 குட்டி ஒராங்குட்டான்கள் - இந்தியாவை அல்லாத இவை இங்கு வந்தது எப்படி? அதிகாரிகள் விசாரணை

பட மூலாதாரம், Nandankanan, Bhubaneswar
- எழுதியவர், நிகிதா யாதவ்
- பதவி, பிபிசி
- எழுதியவர், சுப்ரத் குமார் பதி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
தங்களது இயற்கையான வாழ்விடத்திலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இந்தியாவின் ஒடிசாவில் உள்ள ஒரு காட்டில் ஐந்து குட்டி ஒராங்குட்டான்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை அங்கு எப்படி வந்தன என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இணையத்தில் பரவலாகப் பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில், அந்தக் குட்டி குரங்குகள் தரையில் ஒன்றாக அமர்ந்து வாழைப்பழங்களை சாப்பிடுவது தெரிகிறது. அவற்றின் இயற்கையான வாழ்விடமான வெப்பமண்டல மழைக்காடுகளில் இருந்து அவை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ளன.
ஒராங்குட்டான்கள் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டவை அல்ல. மிகவும் அருகிய நிலையில் உள்ள இந்தக் குரங்குகள், காடுகளில் இந்தோனீசியா மற்றும் மலேசியாவில் மட்டுமே காணப்படுகின்றன.
சர்வதேச கடத்தல் கும்பல் ஒன்று இந்த விலங்குகளை இந்தியாவுக்குக் கடத்தி வந்து, பின்னர் நெடுஞ்சாலைக்கு அருகில் கைவிட்டுச் சென்றதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஒடிசா வனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பாலசோர் மாவட்டத்தில் உள்ளூர் மக்கள் இந்த ஒராங்குட்டான்களைக் கண்டதையடுத்து, வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவை மீட்கப்பட்டன.
அவற்றுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் உள்ள நந்தன்கானன் விலங்கியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு அவை தனிமைப்படுத்தப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
பாலசோர் மாவட்ட வன அலுவலர் பிரதிக் பிரகாஷ் இந்தல்கர் பிபிசியிடம், இந்த ஒராங்குட்டான்கள் இயற்கையாக ஒடிசாவுக்கு வந்திருக்க முடியாது என்றும், அவை சாலை வழியாகக் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
"மேற்கு வங்க எல்லைக்கு அருகே, போகராய் வட்டத்தில் உள்ள ரனகட்டா பகுதியில், முன்மொழியப்பட்ட காப்புக்காட்டில் இந்த ஐந்து விலங்குகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
"அந்தப் பகுதியில் பெரும்பாலும் சவுக்கு மரங்களே உள்ளன. அது அடர்ந்த காடு அல்ல. மேலும், மாநில நெடுஞ்சாலையும் அருகிலேயே உள்ளது," என்று அவர் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க இந்தியாவின் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகத்திடமும் ஒடிசா அரசு கேட்டுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறையினர், வனத்துறை அதிகாரிகள் மற்றும் சிறப்புப் பணிக்குழுவினர் இணைந்து இந்த விசாரணையை நடத்தி வருகின்றனர்.

பட மூலாதாரம், ANI
வனத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த ஒராங்குட்டான்கள் அந்தப் பகுதியில் இரண்டு அல்லது மூன்று நாட்களாக மட்டுமே இருந்திருக்கக்கூடும்.
காட்டுப் பகுதியில் தேடுதல் நடத்தியபோது, வேறு எந்த ஒராங்குட்டான்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவை அங்கு எப்படி வந்தன என்பதற்கான எந்தத் தடயமும் கிடைக்கவில்லை என்று இந்தல்கர் தெரிவித்தார்.
அவற்றை குட்டி ஒராங்குட்டான்கள் என்று அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர். எனினும், சில உள்ளூர் ஊடகச் செய்திகள் அவற்றுக்கு ஒன்று முதல் இரண்டு வயது வரை இருக்கலாம் என்று கூறுகின்றன.
அவற்றின் இளம் வயதுதான் இந்தக் கண்டுபிடிப்பை மிகவும் கவலைக்குரியதாக மாற்றுகிறது என்று வனவிலங்கு நிபுணர் பிஸ்வஜித் மொஹந்தி தெரிவித்தார்.
பொதுவாக, குட்டி ஒராங்குட்டான்கள் பல ஆண்டுகள் தங்கள் தாயுடன் தங்கியிருந்து, தனியாக உயிர்வாழத் தேவையான திறன்களைக் கற்றுக்கொள்கின்றன. பெண் ஒராங்குட்டான்களும் மெதுவாகவே இனப்பெருக்கம் செய்கின்றன. பொதுவாக எட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே குட்டியை ஈனுகின்றன.
எனவே, இயற்கையான வாழ்விடத்திலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில், அருகில் எந்த வயது வந்த ஒராங்குட்டான்களும் இல்லாத நிலையில், ஐந்து குட்டி ஒராங்குட்டான்கள் ஒன்றாகக் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, அவை எப்படி ஒடிசாவுக்கு வந்தன என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

பட மூலாதாரம், NurPhoto via Getty Images
உலகில் தற்போது மூன்று வகையான ஒராங்குட்டான்கள் மட்டுமே உள்ளன. போர்னியோ, சுமத்ரா மற்றும் தபானுலி ஒராங்குட்டான்கள் எனப்படும் இந்த மூன்று வகைகளுமே இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் மிகவும் அருகிய நிலையில் உள்ள உயிரினங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
காடழிப்பு, வாழ்விட இழப்பு மற்றும் வேட்டையாடுதல் காரணமாக, பல ஆண்டுகளாக அவற்றின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
அருகிவரும் வனவிலங்குகளின் சர்வதேச வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் உலகளாவிய ஒப்பந்தமான சைட்ஸ் கீழ், ஒராங்குட்டான்களை சர்வதேச அளவில் வணிக நோக்கில் வர்த்தகம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்திய வனவிலங்கு சட்டங்களின் கீழும் அவை பாதுகாக்கப்படுகின்றன.
இருப்பினும், செல்லப்பிராணிகளாக விற்பனை செய்வதற்கும், தனியார் சேகரிப்பாளர்களிடம் விற்பதற்கும் ஒராங்குட்டான்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் குட்டி ஒராங்குட்டான்கள் கண்டுபிடிக்கப்படுவது இது முதல்முறையல்ல.
2022-ஆம் ஆண்டு, அசாம் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கு இடையிலான எல்லைக்கு அருகே உள்ள ஒரு சோதனைச் சாவடியில் இரண்டு குட்டி ஒராங்குட்டான்கள் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. அவை அண்டை நாடான மியான்மர் வழியாக இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று அப்போது அதிகாரிகள் சந்தேகித்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































