"சென்னையில் 20 லட்சம் சதுர அடியில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம்" - விஜய் அறிவித்தது என்ன?

பட மூலாதாரம், Youtube/ Tamilnadu Assembly
(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)
சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் ரூ. 1,200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று (செப்டம்பர் 3) விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
சென்னையில் தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்
சென்னையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என அவர் அறிவித்தார்.
இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய விஜய், "இது ஒலிம்பிக் தரத்திலான ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகமாக உருவாக்கப்படும். இதில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கங்கள், நவீன உபகரணங்கள், உயர்தர செயல்திறன் பயிற்சி மையம், விளையாட்டு அறிவியல் மற்றும் விளையாட்டு மருத்துவ மையங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தங்கும் வசதிகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படும்" என தெரிவித்தார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் பிற சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வெல்ல வழிவகை செய்யும் என விஜய் தெரிவித்தார்.
பதக்கங்களை வெல்லக்கூடிய திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கான உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த விளையாட்டு மையமாக இது திகழும் எனவும் முதலமைச்சர் விஜய் கூறினார்.
புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்
தமிழ்நாட்டில் சர்வதேச தரத்திலான புதிய 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்' உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவை விதி 110-இன் கீழ் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
"நகரத்தில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தயத்தடம், நவீன உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் ஃபார்முலா 1, ஃபார்முலா 2, ஃபார்முலா 3 மற்றும் ஃபார்முலா 4 உள்ளிட்ட சர்வதேச தரத்திலான போட்டிகளை நடத்துவதற்கான அதிநவீன கட்டமைப்புகள் அமைக்கப்படும். இளைஞர்களின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு உரிய பயிற்சி மற்றும் போட்டி வாய்ப்புகளை வழங்கி, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான திறமையான வீரர்கள் உருவாக்கப்படுவார்கள்" என முதலமைச்சர் தெரிவித்தார்.
உலகத்தரம் வாய்ந்த மோட்டார் வாகன கார் பந்தய அரங்குகளை அமைப்பதன் மூலம் சுற்றுலாத்துறை, சிறப்பு வாகன உற்பத்தித் தொழிற்சாலைகள், புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் மாநிலத்தின் பொருளாதாரம் ஆகியவை பெருமளவில் மேம்பட வாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், tngovt
புதிய சட்டமன்ற வளாகம்
அதேபோன்று, சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் ரூ. 1,200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
இந்த புதிய நிர்வாக வளாகம் தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் சென்றுவர வசதிகள் மற்றும் பசுமைக் கட்டட தரநிலைகளுக்கு உட்பட்டு அமைக்கப்படும். மேலும், இதில் போதுமான வாகன நிறுத்தமிடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்கள் சேவை மையங்கள் மற்றும் அலுவலர்களுக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், அனைத்து அரசுத் துறைகளும் ஒரே நிர்வாக வளாகத்தில் கொண்டுவந்து ஒருங்கிணைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































