You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'அவசர முடிவெடுக்க ஸ்டாலினுக்கு அதிகாரம்': திமுக - அதிமுக கூட்டணி குறித்த ஊகமும் எம்.எல்.ஏ.க்களின் பதிலும் என்ன?
- எழுதியவர், ப. சிவசங்கர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
''கடந்த ஐந்தாண்டு காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் அப்படியே தொய்வின்றி தொடர்ந்தால்தான் தமிழ்நாடு அதே வேகத்தில் வளர்ச்சியைத் தக்க வைக்க முடியும். இத்தகைய சூழலில் உருவாகும் அரசியல் நிலைமைகளை ஆராய்ந்து அவசர முடிவுகளை உடனடியாக எடுக்கும் அதிகாரம் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்படுகிறது'' இன்று நடைபெற்ற திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று இதுவாகும்.
அதிமுகவும் திமுகவும் இணைந்து ஆட்சியமைக்கப்போகிறது என்று பரவிய ஊடக செய்திகளுக்கு மத்தியில் இந்த தீர்மானம் அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.
"கட்சியின் தலைவர் எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவோம்" என்று திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
"திமுக - அதிமுக கூட்டு சேர உள்ளதாக வெளியான செய்தியை எந்த கட்சி தலைவர்களும் மறுக்காதபோது அதில் உண்மை இருக்கக்கூடும்" என பத்திரிகையாளர்களும் கருதுகின்றனர்.
தனிப்பெரும் கட்சி தவெக
சட்டப்பேரவை தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவானாலும் பெரும்பான்மை இல்லாததால் அவர்களால் ஆட்சியமைக்க முடியவில்லை. 5 இடங்களை வைத்துள்ள காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது.
ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைக்கோரினாலும் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை தவெக இன்னும் பெறவில்லை என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தவெக தலைவர் விஜயை அழைத்து விளக்கினார்.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவற்றிடம் தவெக ஆதரவு கோரிய நிலையில் அக்கட்சிகள் இன்னும் தங்கள் முடிவுகளை அறிவிக்கவில்லை
இதற்கு இடைப்பட்ட நேரத்தில் திமுக - அதிமுக கூட்டணி அமையப்போவதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின, சமூக வலைதளங்களிலும் இவை பரவத்தொடங்கியது.
தீர்மானம் கூறுவது என்ன?
சென்னையில் நடந்த திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ் கட்சிக்கும் கண்டனம், அவசர முடிவெடுக்கும் அதிகாரத்தை ஸ்டாலினுக்கு வழங்குவது உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
''நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத வகையில் முடிவுகள் வந்துள்ளது. இது நெருக்கடியான, சிக்கலான காலகட்டம் ஆகும்.
இன்னொரு தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராக இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே நமது முதன்மை நோக்கம். அதேவேளையில், திராவிட இயக்கத்தின் கொள்கைகளுக்கு ஊறுவிளைவிக்கும் மதவாத சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது என்பது உள்ளிட்டவற்றையும் பரிசீலித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.'' என அவசர முடிவெடுக்க முக ஸ்டாலினுக்கு அதிகாரம் அளிக்கும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'மாற்று ஏற்பாடுக்கு திமுக தயார்'
"விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்காவிட்டால் அதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து முடிவெடுக்க திமுக தயாராக உள்ளது" என்றார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ் பாரதி.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்க மக்கள் தயாராக இல்லை, எனவே கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து சூழலுக்கு ஏற்ப எங்கள் தலைவர் முடிவெடுப்பார்" என்று அவர் கூறினார்.
திமுக அதிமுக கூட்டணி தொடர்பாக எழும் விவாதங்கள் குறித்து ஆர் எஸ் பாரதியிடம் கேட்டபோது அவர் அதை மறுக்கவில்லை. மாறாக ''ஜனநாயக மாண்பை காக்க திமுக எந்த முடிவையும் எடுக்கும்" என்று பதிலளித்தார்.
அதிமுக - திமுக சேர்வது சாத்தியமா?
''இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் இரண்டு கட்சிகளிலும் உள்ள சில தலைவர்களுக்கு வந்திருக்கலாம்'' என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ராமகிருஷ்ணன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''மாறி மாறி ஆட்சியமைத்த கட்சிகளை மூன்றாவது ஒரு கட்சி பின்னுக்கு தள்ளியுள்ளது. இதனால் இந்த தேர்தல் திமுக அதிமுகவை உலுக்கியுள்ளது. " என்றார்.
" ஆட்சி அமைக்க திமுக, அதிமுக சேர உள்ளதாக வந்த செய்திகளை இரண்டு கட்சிகளும் மறுக்கவில்லை. இணைந்து செயல்பட வேண்டிய எண்ணம் இரண்டு கட்சியிலும் உள்ள சில தலைவர்களுக்கு வந்திருக்கலாம்.''
''இவை கற்பனையான செய்தியாக இருந்தால் இரண்டு கட்சியில் உள்ள தலைவர்களும், கடுமையாக விமர்சித்திருப்பார்கள். அவர்கள் அமைதியாக இருப்பது இதில் உண்மை இருக்குமோ என்று எண்ண வைக்கிறது" என்று அவர் கூறினார்.
திமுக எம்.எல்.ஏக்கள் கருத்து என்ன?
தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்கிறார்கள் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள்.
பிபிசி தமிழிடம் பேசிய வாசுதேவநல்லூர் திமுக எம்.எல்.ஏ ராஜா, ''தமிழ்நாட்டில் இப்போது உள்ள நிலைமைக்கு என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று எங்கள் கட்சியின் தலைமைக்கு தெரியும், அவர்கள் எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும் நாங்கள் கட்டுப்படுவோம்'' என்று தெரிவித்தார்.
திமுக - அதிமுக கூட்டணி தொடர்பான கருத்துக்கு பதிலளித்த அவர், ''என்ன பேசி இருக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியாது. ஆனால் எங்கள் தலைமையை நாங்கள் முழுமையாக நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.
இதே போன்ற கருத்தை பேசிய நாகர்கோயில் திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின், ''திமுகவில் ஆரம்பம் முதலே தலைமை எந்த முடிவை எடுத்தாலும் தொண்டர்கள் கட்டுப்படுவார்கள். அவ்வாறு கட்டுக்கோப்பான கட்சி திமுக. எனவே தலைமை எந்த முடிவெடுத்தாலும் அதில் நாங்கள் உடன்படுவோம்'' என்றார்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு