மேற்கு வங்கத்தில் மமதா தோல்வி பற்றி வங்கதேசத்தில் என்ன பேசப்படுகிறது?

    • எழுதியவர், ரஜ்னேஷ் குமார்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, தீஸ்தா நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும் என வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் கலிலூர் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.

மமதா பானர்ஜி ஆட்சியில் இருந்து வெளியேறியது குறித்து செவ்வாயன்று கருத்து கேட்டபோது ரஹ்மான் கூறுகையில், " மேற்கு வங்கத்தில் இன்னும் புதிய அரசு அமையவில்லை, அவர்கள் என்ன நினைக்கிறார்கள் அல்லது செய்வார்கள் என்பதை அவர்களால் மட்டுமே சொல்ல முடியும். அவர்களின் எண்ணங்களைப் படிப்பது எனது வேலை அல்ல. நிச்சயமாக, தீஸ்தா நதி குறித்து விவாதம் நடக்கும். இது அந்தப் பகுதி மக்களுக்கு மிக முக்கியமான பிரச்னையாகும்" என்றார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், வங்கதேசம் தொடர்பான பல விவகாரங்களை பாஜக முன்வைத்தது. இதில், ஊடுருவல் மற்றும் வங்கதேசத்தில் உள்ள இந்துக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி ஆகியவை பாஜகவின் முக்கிய விவகாரங்களாக இருந்தன.

ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் இந்துக்களின் பாதுகாப்பு குறித்த பிரச்னையை பாஜக வலுவாக எழுப்பியது.

வங்கதேசத்திலிருந்து ஊடுருவல் நடப்பதாகக் கூறப்படுவதை அது தேசியப் பாதுகாப்புடன் தொடர்புபடுத்தியது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பலமுறை ஊடுருவல் குறித்துப் பேசியுள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை, ஆவணங்கள் இல்லாத புலம்பெயர்ந்தோரை கையாள "கண்டறிதல், நீக்குதல் மற்றும் நாடு கடத்துதல்" என்ற கொள்கையை வலியுறுத்தியது.

கடுமையான எல்லைக் கண்காணிப்பு மற்றும் சட்டவிரோத ஊடுருவலுக்கு எதிராகச் சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையை எடுக்கவும் அது வலியுறுத்தியது.

எல்லை தாண்டி நடக்கும் சட்டவிரோத குடியேற்றம் மேற்கு வங்கத்தின் மக்கள்தொகை கட்டமைப்பை மாற்றி வருவதாக அமித் ஷாவும் கூறினார்.

பாஜக தனது தேர்தல் செயல்திட்டத்தில் ஊடுருவலை ஒரு முக்கிய விவகாரமாக மாற்றியது.

இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையிலான நில எல்லையில் பாதிக்கும் மேலானது மேற்குவங்கத்துக்குள் உள்ளது, இது இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையிலான ஒரு முக்கியமான இணைப்புப் புள்ளியாக உள்ளது.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை கொல்கத்தாவிலிருந்து தீர்மானிக்கப்படுவதில்லை, ஆனால் வங்கதேச விவகாரங்களில் அது பங்கு வகிக்கிறது.

சட்டம் ஒழுங்கு, அரசியல் சொல்லாடல்கள், எல்லை மேலாண்மை மற்றும் நீர் ஒப்பந்தங்கள் கூட மேற்குவங்கத்தின் அரசியல் சூழலால் பாதிக்கப்படுகின்றன. இதனால் தான் இந்த மேற்குவங்கத் தேர்தலில் வங்கதேசம் ஒரு முக்கிய விவகாரமாக இருந்தது.

இந்த ஆண்டு பிப்ரவரியில் வங்கதேசத்தில் தேர்தல்கள் நடைபெற்றன, மேலும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேச தேசியக் கட்சி (பி.என்.பி) மீண்டும் ஆட்சிக்கு வந்தது. பிஎன்பி தவிர, இந்தத் தேர்தலில் ஜமாத்-இ-இஸ்லாமியும் உருவெடுத்துள்ளது.

ஜமாத்-இ-இஸ்லாமி வங்கதேசம் உருவாவதை எதிர்த்திருந்தது, அதன் எழுச்சி இந்தியாவுக்குச் சாதகமானதாகக் கருதப்படவில்லை.

தீஸ்தா நீர் பகிர்வு ஒப்பந்தத்தின் நிலை என்னவாகும்?

மேற்குவங்கத்தில் பாஜகவின் வெற்றி வங்கதேசத்துடனான உறவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? இந்த கேள்வி வங்கதேச ஊடகங்களில் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

"வங்கதேசம் டெல்லியுடன் தான் பேசுகிறது, கொல்கத்தாவுடன் அல்ல என்பதே நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படை உண்மை" என்று டாக்கா பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறை பேராசிரியர் அமினா மொஹ்சின் வங்கதேசத்தின் முன்னணி ஆங்கில நாளிதழான 'தி பிசினஸ் ஸ்டாண்டர்ட்'-யிடம் தெரிவித்தார்.

அமினா மொஹ்சின் கூறுகையில், "பாஜக இப்போது மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் உள்ளது. அது தற்போது வங்கதேசத்துடன் ஒரு நிலையான மற்றும் ஆக்கபூர்வமான உறவை விரும்புகிறது. புதிய அரசாங்கத்தை அமைக்கும்போது இந்த மூலோபாய நலனை அவர்கள் மனதில் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். பல ஆண்டுகளாக, மமதா பானர்ஜியின் எதிர்ப்பால் மட்டுமே தீஸ்தா நதி நீர் பகிர்வு ஒப்பந்தம் முடங்கியுள்ளதாக இந்திய அரசு கூறி வந்தது. இப்போது அந்த ஆட்சி முறைப்படி நீக்கப்பட்டுள்ளதால், அவர்கள் உண்மையில் அந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்துகிறார்களா என்பதே வங்கதேசத்தின் முன்னுள்ள முக்கிய விஷயமாக இருக்கும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அமினா மொஹ்சின், "வங்கதேசம் ஒரு இஸ்லாமிய பெரும்பான்மை நாடு என்பதால், இந்தியா எங்களது உள்நாட்டு விவகாரங்களில் கூடுதல் அக்கறையுடன் நடந்துகொள்ள வேண்டும். எங்களது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலான, எதிர்பைத் தூண்டக்கூடிய அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படாமல் இருப்பதை பாஜக தலைமை உறுதி செய்ய வேண்டும். இத்தகைய ஆத்திரமூட்டும் பேச்சுகள் இருதரப்பு உறவின் நிலைத்தன்மையை நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்றும் குறிப்பிட்டார்.

'பாஜக மீதும் அழுத்தம் ஏற்படும்'

பிரம்மபுத்திரா நதியின் துணை நதியான தீஸ்தா நதி, வட சிக்கிமில் சுமார் 5,280 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சோ லாமோ ஏரியில் உற்பத்தியாகிறது.

இந்த நதியானது சிக்கிமில் சுமார் 150 கி.மீ. தூரமும், மேற்கு வங்கத்தில் 123 கி.மீ. தூரமும் பாய்ந்து, கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள மெக்லிகஞ்ச் வழியாக பங்களாதேஷில் நுழைகிறது.

பின்னர் அங்கு சுமார் 140 கி.மீ. தூரம் பாய்ந்து, இறுதியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

தீஸ்தா நதி வங்கதேசத்தின் நான்காவது பெரிய எல்லை தாண்டிய நதியாகும். இந்த நதியின் நீர் வளப்பகுதியில் 83% இந்தியாவிலும், மீதமுள்ள 17% வங்கதேசத்திலும் உள்ளது.

சர்வதேச நெருக்கடிக் குழுவின் மியான்மர் மற்றும் வங்கதேச விவகாரங்களுக்கான மூத்த ஆலோசகர் தாமஸ் கீன், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 'தி டிப்ளமேட்' இதழுக்கு அளித்த பேட்டியில், "இரு தரப்பும் இந்த முட்டுக்கட்டையை உடைக்க வாய்ப்பில்லை, ஆனால் அது நடக்கவே முடியாதது அல்ல. பாஜக மேற்கு வங்கத்தில் வெற்றி பெற்றால், தீஸ்தா நதி நீர் ஒப்பந்தத்தை எட்டுவதில் உள்ள ஒரு தடையை அது நீக்கும். 2011-இல் தயாரிக்கப்பட்ட ஒப்பந்த வரைவில் கையெழுத்திடுவதை மமதா பானர்ஜி தடுத்தார். வறண்ட காலங்களில் மேற்கு வங்கத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையைச் சுட்டிக்காட்டி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை அவர் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளார்" என்று தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், "எனவே, பாஜகவின் வெற்றி முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது, இருப்பினும் நான் மிகவும் எச்சரிக்கையாகவே இருப்பேன். 2011-இல் இந்தியா உண்மையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்பியதா என்பது நமக்குத் தெரியாது. மேற்கு வங்கத்தில் நீர் பகிர்வுக்கு எதிராக இருக்கும் உண்மையான உள்ளூர் அழுத்தங்கள் மறைந்துவிடப் போவதில்லை" என்றார்.

டெல்லியில் உள்ள தெற்காசியப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறை இணைப் பேராசிரியர் முனைவர் தனஞ்சய் திரிபாதி கூறுகையில், "பாஜக ஆட்சிக்கு வருவதாலேயே வங்கதேசத்துடனான தீஸ்தா நீர் ஒப்பந்தம் எட்டப்படும் என்று நான் நம்பவில்லை. மேற்கு வங்கத்தில் உள்ள பாஜக அரசாங்கமும், வங்கதேசத்துக்குப் பயனளிக்கும் மற்றும் தனது மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் தவிர்க்குமாறு உள்ளூர் அழுத்தத்தை எதிர்கொள்ளும். உள்ளூர் மக்களின் உணர்வுகளை பாஜகவால் புறக்கணிக்க முடியாது. 2011-இல் எட்டப்படவிருந்த தீஸ்தா நீர் பகிர்வு ஒப்பந்தத்தை பாஜக ஏற்கிறதா என்பது மிகவும் சிக்கலான கேள்வியாகும்" என்கிறார்.

'வங்கதேசம் பற்றி மாநில அரசு - மத்திய அரசு இடையே இனி மோதல் இருக்காது'

முனைவர் திரிபாதி கூறுகையில், "இந்திய அரசாங்கம் தினேஷ் திரிவேதியை வங்கதேசத்துக்கான தூதராக நியமித்துள்ளது. இந்த நியமனமானது வங்கதேசத்துடனான உறவில் பாஜக தீவிரமாக இருப்பதை இது காட்டுகிறது.

ஊடுருவலைப் பொறுத்தவரை, ஊடுருவல் நடைபெறுகிறது என்பதை இந்திய அரசு முதலில் நிரூபிக்க வேண்டும். உண்மைக்கும் கற்பனைக்கும் இடையே ஒரு வித்தியாசம் இருக்கிறது. மாநில அரசு நிலம் வழங்காததால் எல்லையில் வேலி அமைக்க முடியவில்லை என்று இந்திய உள்துறை அமைச்சரும் கூறி வருகிறார். இப்போது மத்திய அரசு தனது சொந்த அரசாங்கத்திடமிருந்து நிலத்தை கையகப்படுத்த வேண்டியிருக்கும்"என்றார்.

முன்னாள் வங்கதேச தூதர் ஹுமாயூன் கபீர் 'தி பிசினஸ் ஸ்டாண்டர்ட்' இதழிடம் கூறுகையில், "மத்தியிலும் மேற்கு வங்கத்திலும் ஒரே கட்சி இப்போது ஆட்சியில் இருப்பதால், மாநில அரசு மத்திய அரசின் வழிகாட்டுதல்களையும் மூலோபாய முடிவுகளையும் பின்பற்ற வேண்டியிருக்கும். இந்தியா எங்களுடன் இயல்பான மற்றும் நிலையான உறவுகளுக்கு முன்னுரிமை அளித்தால், இந்தத் தேர்தலின் உள்ளூர் தாக்கம் அஞ்சப்பட்ட அளவுக்கு கவலைக்குரியதாக இருக்காது" என்றார்.

தெற்காசிய அரசியலை உன்னிப்பாக கவனிக்கும் நிருபமா சுப்ரமணியனும், தினேஷ் திரிவேதியை வங்கதேசத்துக்கான தூதராக நியமித்ததன் மூலம், வங்கதேசத்துடனான உறவை வலுப்படுத்த விரும்புவதாக பாஜக அரசு ஒரு செய்தியை அனுப்பியுள்ளதாக நம்புகிறார்.

நிருபமா சுப்ரமணியன் கூறுகையில், "வங்கதேசத்துக்கு ஒரு அரசியல்வாதி தூதராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. தினேஷ் திரிவேதி அடிப்படையில் குஜராத்தைச் சேர்ந்தவர், ஆனால் அவர் வங்காள மொழியும் பேசுவார். ஒரு தூதரக அதிகாரியை விட அரசியல் ரீதியாக நியமிக்கப்படுபவர் அதிக சக்தி வாய்ந்தவர்.

வெளியுறவு அமைச்சகம் தான் முடிவெடுக்கிறது என்பது வெளிப்படையானது, ஆனால் ஒரு தூதரை விட அரசியல் நியமனம் அதிக தீர்க்கமானது. ஷேக் ஹசீனாவின் வெளியேற்றத்துக்குப் பிறகு இந்தியா வங்கதேசத்துடனான உறவைக் கையாண்ட விதம் உறவை மேலும் மோசமாக்கியது. இந்தியா அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டதாக நான் நம்புகிறேன். இப்போது, பாஜகவின் தோள்களில் அதிக பொறுப்பு இருக்கும். ஆனால் சில சமயங்களில், துருவமுனைப்பு அரசியலில் மூழ்கிவிடுவதால், அங்கிருந்து திரும்பி வருவது கடினமாகிவிடும்" என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு மிகவும் தாராளமாக இருந்திருக்கிறார், ஆனால் அதற்குப் பதிலாக வங்கதேசத்துக்கு என்ன கிடைக்கிறது என்ற கேள்வி வங்கதேசத்தில் அடிக்கடி எழுகிறது. இதற்குப் பதிலளிப்பது ஹசீனாவுக்கே எளிதானதாக இருக்கவில்லை. நல்லெண்ணத்தைக் கருத்தில்கொண்டு இந்தியா தீஸ்தா நீர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நான் நம்புகிறேன். மன்மோகன் சிங் அதில் கையெழுத்திடுவதை மமதா பானர்ஜி தடுத்தார் என்பது உண்மைதான், ஆனால் இப்போது மமதா இந்த அரசாங்கத்துக்கு ஒரு தடையாக இல்லை" என்றும் குறிப்பிட்டார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு