காணொளி: எவரெஸ்டில் 30 ஆண்டுகளாக கிடக்கும் இந்தியரின் உடல்

காணொளிக் குறிப்பு, காணொளி: எவரெஸ்டில் 30 ஆண்டுகளாக இருக்கும் இந்தியரின் உடல்
காணொளி: எவரெஸ்டில் 30 ஆண்டுகளாக கிடக்கும் இந்தியரின் உடல்
பிரசுரிக்கப்பட்டது

முப்பது ஆண்டுகளாக, 'கிரீன் பூட்ஸ்' என்று அறியப்படும் ஒரு சடலம் எவரெஸ்ட் சிகரத்தின் ஓரத்தில் கிடக்கிறது. தற்போது இந்தியா, அவரது உடலை மீட்டு, அவரது குடும்பத்தினருக்கு ஒரு ஆறுதலை அளிக்க முயன்று வருகிறது.

1996 முதல் அவரது உடல் அங்கேயே இருப்பதால் எவரெஸ்ட் மலையேற்ற வீரர்களுக்கு வழிகாட்டும் ஓர் அடையாளமாக அது மாறிப்போனது.

பல ஆண்டுகளாக அந்த உடல் யாருடையது என உறுதியாகத் தெரியாமல் இருந்தது. ஆனால் அது டோர்ஜே மோருப் தான் என இந்திய அதிகாரிகள் இப்போது கூறுகின்றனர். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர அவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

எவரெஸ்ட் சிகரம் உலகின் மிக உயரமான சிகரமாகும். இது 8,849 மீட்டர் உயரம் கொண்டது. அந்த உடல் 8,500 மீட்டர் உயரத்தில் கிடக்கிறது. செப்டம்பர் மாதத்துக்குள் அந்த உடலை மீட்டுக் கொண்டுவர இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) திட்டமிட்டுள்ளது.

இலையுதிர் கால மலையேற்றப் பருவமான செப்டம்பரில் உடலை மீட்க வேண்டுமெனில், கயிறுகள் உள்ளிட்ட தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கும். இதனால் இந்தப் பணி மேலும் கடினமாகும் என்று ஷெர்பா வட்டாரங்கள் பிபிசி நியூஸ் நேபாளியிடம் தெரிவித்தன.

மலையேற்ற வீரர்கள் பொதுவாக மார்ச் முதல் மே வரை நீடிக்கும் வசந்தகால மலையேற்றப் பருவத்தில்தான் எவரெஸ்ட்டில் ஏற விரும்புகின்றனர்.

"மரண மண்டலம்" என்று அழைக்கப்படும் பகுதியில் இருந்து உடல்களை மீட்பது ஆபத்தானதும் அதிக செலவு பிடிப்பதுமான பணியாகும். இந்தப் பகுதியில் வெப்பநிலை -40 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும். கடல் மட்டத்துடன் ஒப்பிடும்போது இங்கு ஆக்சிஜன் அளவு மூன்றில் ஒரு பங்கு குறைவாக இருக்கும். பெரும்பாலான குடும்பங்களால் இதற்கான செலவை ஏற்க முடியாது.

நிபுணர்களின் கூற்றுப்படி, உடல்களைக் கீழே கொண்டு வருவதற்கு 40,000 முதல் 80,000 அமெரிக்க டாலர் வரை செலவாகலாம்.

உடல்களை கீழே சுமந்து வர வேண்டும் என்பதால் இந்தப் பணியும் மிகவும் கடினமானது. இதற்கு ஆறு முதல் 10 அல்லது அதற்கும் அதிகமான ஷெர்பாக்கள் கொண்ட குழு தேவைப்படலாம்.

நேபாளத்தின் முன்னணி மலையேற்ற வீரரும் பயணக் குழு வழிகாட்டியுமான சேரிங் ஜாங்பு ஷெர்பா, மலையின் சரிவுகளில் 30 ஆண்டுகளாகப் பனியில் உறைந்த நிலையில் இருக்கும் உடலை மீட்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று நம்புகிறார்.

அவர் பிபிசி நியூஸ் ஹிந்தி-யிடம் கூறுகையில், "வானிலை மற்றும் பனி நிலவரங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும். வடக்குப் பகுதியில் பிளவுகள் குறைவாக உள்ளன. ஆனால் அது அதிக ஆபத்தானது. நேபாளப் பகுதியில் எதிர்பாராத ஏதாவது நடந்தால், ஹெலிகாப்டர் மூலம் விரைவாக உங்களை வெளியேற்ற முடியும். ஆனால் சீனப் பகுதியில் இதுபோன்ற ஏற்பாடு இல்லை" என்றார்.

உடலை மீட்டுக் கொண்டு வருவதற்கான திட்டத்தை வகுக்கும்போது, அதன் தற்போதைய உடல் நிலையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று தடயவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு