அமெரிக்க பயணத்தில் ஜின்பிங் விரும்பிய அனைத்தும் கிடைத்ததா?

காணொளிக் குறிப்பு, காணொளி: ஆடம்பர வரவேற்புக்குப் பின்னால் நீடிக்கும் அதிகாரப் போட்டி- சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அமெரிக்கப் பயணம்
அமெரிக்க பயணத்தில் ஜின்பிங் விரும்பிய அனைத்தும் கிடைத்ததா?
பிரசுரிக்கப்பட்டது

சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் சமீபத்திய அமெரிக்க பயணம் கவனம் ஈர்த்திருக்கிறது. பிரமாண்ட வரவேற்புகள் பேசிபொருளாகி உள்ளன. இந்த பயணத்தில் ஷி ஜின்பிங் விரும்பிய அனைத்தும் கிடைத்ததா என பிபிசி சீன செய்தியாளர் லாரா பிக்கர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளவற்றை இந்த காணொளியில் பார்க்கலாம்.

சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையிலான சமீபத்திய சந்திப்பு ஒரு தெளிவான நோக்கத்தை கொண்டிருந்தது. தான் ஒரு வல்லரசாக உருவெடுப்பதை அமெரிக்கா தடுக்க முயற்சிப்பதாக சீனா நம்புகிறது. குறிப்பாக வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் தைவான் விவகாரங்களில் தனது பாதையிலிருந்து அமெரிக்கா விலக வேண்டும் என சீனா விரும்புகிறது.

இந்த பயணத்தின் போது டிரம்ப், ஷி ஜின்பிங்குக்கு மிகப் பிரமாண்ட வரவேற்பை அளித்தபோதிலும், சீன அதிபர் தான் விரும்பிய அனைத்தையும் பெறவில்லை.

வரி விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட உடன்பாடு சில மாதங்களுக்கு மட்டுமே, அதாவது நவம்பர் முதல் ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டிரம்பின் அதிபர் பதவிக்காலத்தில் மீதமுள்ள காலத்தை எப்படியாவது சமாளிக்க ஷி ஜின்பிங் முயற்சித்து வரும் நிலையில், குறைந்தது ஓராண்டுக்காவது இது நீட்டிக்கப்படும் என சீனா எதிர்பார்த்தது.

அதாவது, வரி விதிப்புகள் தொடர்பான முக்கிய பிரச்னைகள், அரிய கனிமங்களின் விநியோகத்தில் சீனாவின் ஆதிக்கம் மற்றும் அமெரிக்காவின் அதிநவீன சிப்களுக்கான அணுகல் ஆகிய விவகாரங்கள், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளுக்காக மீண்டும் தள்ளிவைக்கப்படுகின்றன என்பது தான் இதன் பொருள்.

நீண்ட கால சலுகைகளை வழங்குவதற்கு முன்னதாக, தனது தரப்பு கடமைகளை நிறைவேற்ற சீனா கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா விரும்புவதையே இது உணர்த்துகிறது.

ஷி ஜின்பிங்கைப் பொறுத்தவரை சீனாவின் உள்நாட்டு பொருளாதாரம் சிக்கலில் உள்ளது என்பது அவருக்கு கசப்பான உண்மை. உலக அளவில் சீனா மிகப்பெரிய அளவில் பொருட்களை விற்பனை செய்து வரும் நிலையில், உள்நாட்டு நுகர்வோர் தங்களது கொள்முதலில் சிக்கனமாக இருக்கின்றனர். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து அதிகமாக உள்ளது.

எனவே வெளிநாட்டுச் சந்தைகளுக்கான அணுகல் முன்னெப்போதையும் விட முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு அமெரிக்கா விதித்த வரிகளிலிருந்து இந்த ஏற்றுமதிகளை ஷி ஜின்பிங் பாதுகாக்க வேண்டியிருக்கும்.

தைவான் விவகாரத்தைப் பொறுத்தவரை, தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்வது சீனாவால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பதை ஷி ஜின்பிங் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.

சுயாட்சி நிர்வாகத்தைக் கொண்ட இந்தத் தீவு தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை வழங்க அமெரிக்கா சட்டப்படி கடமைப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை தவறாக கையாள்வது இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அல்லது பெரும் சண்டைக்கு கூட வழிவகுக்கும் என ஷி ஜின்பிங் மே மாதம் டிரம்பை எச்சரித்திருந்தார்.

அதன்பின்னர், தைவானுக்கான 14 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதத் தொகுப்புக்கு ஒப்புதல் அளிப்பதை டிரம்ப் ஒத்திவைத்தார். இதை மிகச் சிறந்த பேச்சுவார்த்தை கருவி என அவர் குறிப்பிட்டார்.

பேச்சுவார்த்தைகளின் போது ஷி ஜின்பிங் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தியிருக்கலாம். தைவானுக்கான ஆதரவைக் கட்டுப்படுத்துவது மோதல் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் என அவர் வாதிட்டிருக்கலாம்.

அதே போல இரு தலைவர்களும் செயற்கை நுண்ணறிவு குறித்தும் விவாதித்துள்ளனர். எனினும், ஏஐ பாதுகாப்பு தொடர்பாக அவர்கள் ஏதேனும் நடவடிக்கைகளில் உடன்பட்டார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை

செயற்கை நுண்ணறிவை எப்போதும் மனிதர்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் முக்கியத்துவம் குறித்து ஷி ஜின்பிங் பேசியதைத் தவிர, வேறு அதிகமான தகவல்கள் இது தொடர்பாக கிடைக்கவில்லை. ஏ.ஐ மனித இனம் அழிவதற்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தை டிரம்ப் சமீபத்தில் நிராகரித்தார்.

அது மட்டுமல்லாமல், பாண்டாக்களையும் நாம் மறந்துவிடக் கூடாது. அட்லாண்டாவுக்கு பிங் பிங் மற்றும் ஃபு ஷுவாங் (Ping Ping and Fu Shuang) ஆகிய பாண்டாக்களை பரிசாக வழங்குவது குறித்து ஏப்ரல் மாதமே அறிவிக்கப்பட்டிருந்தது. அவை இன்னும் சில நாட்களில் வந்து சேரும் என ஷி ஜின்பிங் தற்போது அறிவித்துள்ளார். இதன் மூலம் சீனாவின் பாண்டா ராஜதந்திரம் மீண்டும் தொடங்குகிறது.

இப்போதைக்கு இந்த உச்சி மாநாட்டின் மூலம் சீனாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்று, சர்வதேச அளவில் சீனாவின் பிம்பத்தை மேம்படுத்தியிருப்பது தான். பிரமாண்டமான வரவேற்பு, விமான நிலையத்தில் தனிப்பட்ட முறையில் அளிக்கப்பட்ட வரவேற்பு, சிறப்பான அரசு முறை விருந்து ஆகியவை சீன மக்களால் பாராட்டப்பட்டன. இதன் மூலம், டிரம்புக்கு இணையான தலைவராக சீனாவில் ஷி ஜின்பிங்கின் பிம்பம் மேலும் வலுப்பெற்றுள்ளது.

டிரம்ப் உண்மையான மிகச் சிறந்த நட்பு குறித்து பேசினாலும், ஷி ஜின்பிங் அதைவிட மிகப் பெரிய இலக்கில் அதாவது, அமெரிக்காவுக்கு இணையாக ஒரு வல்லரசாக சீனாவின் இடத்தை உறுதி செய்வதில் கவனம் செலுத்துகிறார்.

பாண்டாக்கள், பிரமாண்டமான நிகழ்வுகள் மற்றும் இனிமையான வார்த்தைகள் இந்த உறவைச் சீரமைக்க உதவக்கூடும். ஆனால், இந்தப் பிரமாண்ட காட்சிகளுக்குப் பின்னால், உலகின் இரு சக்திவாய்ந்த நாடுகளுக்கு இடையிலான போட்டி முன்பை போலவே தீவிரமாகவே நீடிக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு