பல கோடி டாலர்கள் சொத்துக்கள் இருந்தும் அமெரிக்கா உடன் 'நாணய பரிமாற்றம்' செய்ய அமீரகம் விரும்புவது ஏன்?

அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (யுஏஇ) அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (கோப்புப் படம்)
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு 'நாணயப் பரிமாற்றம்' மூலம் உதவ அமெரிக்க ஆலோசித்து வருவதாக அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்கிழமை அன்று சி.என்.பி.சி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், 'யுஏஇ உடன் நாணயப் பரிமாற்றம் தொடர்பாக ஏதேனும் முன்மொழிவு விவாதிக்கப்பட்டதா' எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த டிரம்ப், "என்னால் உதவ முடிந்தால் நிச்சயம் உதவி செய்வேன். அவர்கள் ஒரு சிறந்த நாடாகவும் நம்முடைய கூட்டாளியாகவும் இருக்கின்றனர்." என்றார்.

இரான் உடனான சமீபத்திய போரில் அமீரகம் மிக கடுமையாக இலக்கு வைக்கப்பட்டதாக குறிப்பிட்ட டிரம்ப், "நான் ஆச்சரியப்பட்டேன், ஏனெனில் அவர்கள் உண்மையிலே பணக்காரர்கள். நான் ஓர் ஆண்டுக்கு முன்பு அங்கு சென்று அமெரிக்காவில் ஒரு டிரில்லியன் டாலர் முதலீடு செய்யுமாறு வலியுறுத்தினேன்." என்றும் தெரிவித்தார்.

"வால் ஸ்ட்ரீட் ஜர்னல்" நாளிதழ் சில தினங்களுக்கு முன்பு இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. அதில் இரான் உடனான போரினால் ஏற்படும் சாத்தியமான நிதி நெருக்கடி சூழலில் உதவுவதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் பேச்சுவார்த்தையை அமெரிக்கா தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்தச் செய்தியின்படி, அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட், கருவூலத் துறையின் மூத்த அதிகாரிகள் மற்றும் அமெரிக்க மத்திய வங்கியின் அதிகாரிகள் ஆகியோரை யுஏஇ மத்திய வங்கியின் ஆளுநர் சந்தித்துள்ளார். அந்தச் சந்திப்பின்போது பணப் பரிமாற்ற சேவை அமைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதர் யூசுஃப் அல் உதைபா இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், "யுஏஇ-க்கு வெளியிலிருந்து நிதியுதவி தேவை என்பது உண்மைகளை தவறாகப் புரிந்து கொள்வதாகும்." எனத் தெரிவித்திருந்தார்.

உலகின் மிகவும் வலிமையான பொருளாதாரங்களில் ஐக்கிய அரபு அமீரகமும் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார்.

2 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள அரசாங்க முதலீட்டு சொத்துகள், மத்திய வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள 300 பில்லியன் டாலர் மதிப்பிலான அந்நிய செலாவணி கையிருப்பு மற்றும் 1.5 டிரில்லியன் மதிப்பிலான வங்கி வைப்பு நிதி ஆகியவற்றைக் குறிப்பிட்டும் அவர் பேசினார்.

அமெரிக்க பொருளாதாரத்தில் யுஏஇ 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சமீபத்தில் பாகிஸ்தான் மூன்றரை பில்லியன் டாலர் மதிப்புள்ள வைப்பு நிதியை 'இயல்பான பரிவர்த்தனைகளின்' கீழ் யுஏஇ-க்கு திருப்பிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அமெரிக்கா உடன் ஏன் 'நாணயப் பரிமாற்றம்' தேவைப்படுகிறது என்கிற கேள்வி எழுகிறது.

அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

பட மூலாதாரம், Irani attack on UAE Christopher Pike/Getty Images

நாணயப் பரிமாற்றம் என்றால் என்ன?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

நாணயப் பரிமாற்ற அமைப்பு என்பது இரு நாடுகளின் மத்திய வங்கிகள், தங்களின் நாணயங்களைத் தற்காலிகமாக பரிமாற்றிக் கொள்வதற்கான முறையான ஒப்பந்தம்.

இந்தச் செயல்முறை ஒரு நிதி உத்தரவாதமாகவும் பணப் புழக்கத்தைப் பராமரிப்பதற்கான ஒரு மாற்று ஏற்பாடாகவும் செயல்படுகிறது.

உதாரணத்திற்கு, போர் போன்ற ஒரு சூழல் நிலவும்போது திறந்த சந்தையில் யுஏஇ வங்கிகளால் அமெரிக்க டாலர்களைப் பெற முடியவில்லையென்றால், மத்திய வங்கி இந்த அமைப்பைப் பயன்படுத்தி அமெரிக்க மத்திய வங்கியிடமிருந்து நேரடியாக டாலர்களைப் பெற முடியும்.

இதன் முதல் கட்டமாக, அமெரிக்க மத்திய வங்கி ஒரு குறிப்பிட்ட தொகையிலான டாலர்களை யுஏஇ மத்திய வங்கிக்கு வழங்கும். அதன்பிறகு யுஏஇ மத்திய வங்கி அந்த டாலர்களுக்கு நிகரான தொகையை அதன் சொந்த நாணயமான திர்ஹாமில் அப்போது நிலவும் பரிமாற்ற விலைக்கு வழங்கும்.

இதன் இரண்டாம் கட்டமாக, இரு தரப்பும் அதே தொகையை ஒரு குறிப்பிட்ட தேதியில் மீண்டும் பரிமாற்றக் கொள்ள ஒப்புக்கொள்வர். இது இயல்பாக 7 நாட்களிலிருந்து 84 நாட்களுக்குள் இருக்கும்.

இந்த இரண்டு கட்டத்திலும் நிர்ணயிக்கப்பட்ட விலை பயன்படுத்தப்படுவதால் பரிமாற்ற விலை ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் ஆபத்துகள் இரு தரப்புக்கும் நீக்கப்படுகின்றன.

யுஏஇ மத்திய வங்கி இந்த டாலர்களை உள்ளூர் வங்கிகளுக்கு வழங்கலாம். அவர்கள் இதனை பரிமாற்றங்கள் மற்றும் பணம் வழங்குவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (கோப்புப் படம்)

பட மூலாதாரம், X/@MohamedBinZayed

படக்குறிப்பு, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (யுஏஇ) அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (கோப்புப் படம்)

இதற்கான தேவை ஏன் எழுகிறது?

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்தப் போர் தனது பொருளாதாரம் மற்றும் சர்வதேச நிதி மையம் என்கிற தன்னுடைய நிலையைக் கடுமையாகப் பாதிக்கும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அஞ்சுகிறது.

இது அந்நிய செலாவணி கையிருப்பில் சரிவை ஏற்படுத்தி, யுஏஇ-யை முதலீடு செய்வதற்கு பாதுகாப்பான இடம் எனக் கருதும் முதலீட்டாளர்களைத் தடுக்கலாம்.

இந்த நாணயப் பரிமாற்ற அமைப்பு குறைந்த விலையில் டாலர்களை அணுக யுஏஇ-யை அனுமதிக்கிறது.

இது திர்ஹாம் மதிப்பை நிலைநிறுத்தவும் அல்லது பண நெருக்கடி ஏற்படும் சூழலில் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும் உதவும்.

டாலர் ஆதரவு கிடைக்கவில்லையென்றால் சீன நாணயத்தைப் பயன்படுத்த வேண்டிய தேவை எழும் என யுஏஇ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, டாலர் ஆதரவு கிடைக்கவில்லையென்றால் சீன நாணயத்தைப் பயன்படுத்த வேண்டிய தேவை எழும் என யுஏஇ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீன நாணயம் பற்றிய அச்சம்

தங்களிடம் டாலர்கள் இல்லாமல் போனால் எண்ணெய் விற்பனை மற்றும் இதர பரிமாற்றங்களுக்கு சீன நாணயம் அல்லது மாற்று நாணயத்தைப் பயன்படுத்த நேரிடும் என யுஏஇ அதிகாரிகள் அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்ததாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

இது நடந்தால், அமெரிக்க டாலருக்கு அச்சுறுத்தலாக அமையும். ஏனெனில் எண்ணெய் வர்த்தகத்தில் டாலர் முழு ஏகபோகத்தை அனுபவித்து வருகிறது.

அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ள தகவல்கள் பற்றி யுஏஇ அதிகாரிகள் தற்போது வரை கருத்து தெரிவிக்கவில்லை.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'தி நேஷனலின்படி', அமெரிக்கா மற்றும் யுஏஇ இடையே நாணயப் பரிமாற்றம் சாத்தியமாகும்போது அமெரிக்க மத்திய வங்கி யுஏஇ மத்திய வங்கிக்கு டாலர்களை வழங்கும்.

இதற்கு முன்னரும் மற்ற நாடுகளுடன் இது போன்ற நடவடிக்கைகள் விவாதிக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கு முன்பாக அர்ஜெண்டினா நாணயத்தை வலுப்படுத்த பொருளாதார நிலைத்தன்மை ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டது.

இது டிரம்பின் கூட்டாளியாக கருதப்பட்ட அர்ஜெண்டினா அதிபருக்கு முக்கியமானதாக இருந்தது.

ப்ளூம்பெர்க் எகனாமிக்ஸில் வளர்ந்துவரும் சந்தைகளின் முதன்மை பொருளாதார நிபுணராக இருக்கும் ஜியாத் தாவூத், "இது நம்பிக்கைக்கான அழைப்பு தானே தவிர, உதவிக்கான கோரிக்கை அல்ல." என்றார்.

அவரது கூற்றுப்படி, "பிரிட்டன், ஜப்பான் மற்றும் ஐரோப்பாவின் மத்திய வங்கிகளை உள்ளடக்கிய குழுவில் தானும் இணைய யுஏஇ விரும்புகிறது. அவர்களுக்கு அமெரிக்க மத்திய வங்கியுடன் நிரந்தர நாணயப் பரிமாற்ற அமைப்பு உள்ளது. இங்கு அது டாலர் என்பதைவிடவும் நிலை மீதான கேள்வி பற்றியது."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு