You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிரம்ப் நிகழ்வில் துப்பாக்கிச் சூடு: "ஆயுதங்களோடு பல மாகாணங்களைக் கடந்து வந்தார்" - நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
- எழுதியவர், ஷைமா கலீல், குவாசி ஜியாம்ஃபி அசெய்டு & ரீகன் மாரிஸ்
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கொலை செய்ய முயற்சித்ததாக கலிஃபோர்னியாவைச் சேர்ந்த நபர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு தொடர்பான மறு ஆய்வை வெள்ளை மாளிகை தொடங்கியுள்ளது.
31 வயதான கோல் ஆலன் தாமஸ் திங்கட்கிழமை அன்று வாஷிங்டனில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜரானபோது இரு ஆயுத குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அவர் எந்த மனுவும் தாக்கல் செய்யவில்லை.
சனிக்கிழமை வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்கத்தின் விருந்தின்போது பாதுகாப்பு சோதனையைக் கடந்த அவர், ஒரு பகுதியளவு தானியங்கி துப்பாக்கி மற்றும் கைமுறையில் இயக்கக்கூடிய துப்பாக்கி (ஷாட் கன்) மற்றும் மூன்று கத்திகளை வைத்திருந்ததாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
அந்த விடுதியில் நடந்த தாக்குதலின்போது ஒரு ரகசிய சேவை அதிகாரி சுடப்பட்டாலும் தீவிரமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் வாழ்நாள் சிறைவாசம் எதிர்கொள்ள நேரிடலாம்.
திங்கட்கிழமை அன்று நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது சந்தேக நபர் அவரின் பெயர் பொருந்திய நீல நிற உடை அணிந்து ஆஜரானார்.
நீதிபதி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும், ஆம் அல்லது இல்லை என நிதானமாகப் பதிலளித்தார். தன்னுடைய வயதைப் பதிவு செய்த அவர் தான் முதுகலை பட்டம் பெற்றிருப்பதாகவும் கூறினார்.
அவருக்குப் பின்னால் மூன்று அதிகாரிகளும் அருகில் ஒரு அதிகாரியும் நின்றிருந்தனர். ஃபெடரல் வழக்கறிஞர் இந்த வழக்கை கையாண்ட நிலையில் வாஷிங்டன் மாகாண அரசின் வழக்கறிஞர் ஜியானின் பிரோவும் அங்கிருந்தார்.
சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்தச் சம்பவத்தின்போது துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்ட உடன் அதிபர் டிரம்ப், துணை அதிபர் ஜேடி வான்ஸ் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் இதர வெள்ளை மாளிகை அதிகாரிகள் வாஷிங்டன் ஹில்டன் விடுதியிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.
சந்தேக நபர் விருந்து நடைபெற்ற இடத்திலிருந்து ஒரு தளத்துக்கு மேலே இருந்த பாதுகாப்பு சோதனை நிலையை அவசரமாக கடந்து செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
"ஒரு ரகசிய சேவை அதிகாரி நெஞ்சில் சுடப்பட்டார். ஆனால் அவர் அணிந்திருந்த பாலிஸ்டிக் உடை வேலை செய்தது," என பொறுப்பு அட்டர்ஜி ஜெனரல் டாட் ப்ளான்ச் திங்கட்கிழமை அன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
"சுடப்பட்ட அந்த வீர அதிகாரி ஐந்து முறை ஆலனை நோக்கிச் சுட்டார். ஆனால் அவர் சுடப்படாத நிலையில் தரையில் விழுந்தபோது உடனடியாக கைது செய்யப்பட்டார்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
அந்த சந்தேக நபர் தனது கைமுறையில் இயக்கக்கூடிய துப்பாக்கியை குறைந்தபட்சம் ஒருமுறையாவது பயன்படுத்தியிருப்பார் என நம்பப்படுவதாகவும் ப்ளான்ச் கூறினார்.
அந்த அதிகாரி சந்தேக நபரால் சுடப்பட்டாரா அல்லது மற்ற அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில் சிக்கிக்கொண்டாரா என்பதில் தெளிவில்லை. அவர் மருத்துவமனையிலிருந்து திரும்பியுள்ளார்.
அதிபரைக் கொலை செய்ய முயற்சிப்பதற்கு ஆயுள் தண்டனை கிடைக்கக்கூடும்.
குற்றம் செய்வதற்கான இரு மாகாணங்கள் இடையே ஆயுதங்கள் எடுத்துச் செல்வது மற்றும் வன்முறை குற்றத்தில் ஆயுதத்தைப் பயன்படுத்துவது ஆகிய இரண்டுக்கும் 10 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கக்கூடும். அந்த சந்தேக நபர் செவ்வாய்கிழமை அன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கிறார்.
டிரம்பைக் கொல்வதற்காக பல மாகாணங்களைக் கடந்து அவர் வந்துள்ளார் என நீதிமன்றத்தில் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சந்தேக நபரான கோல் ஆலன் தாமஸ் லாஸ் ஏஞ்சலிஸில் உள்ள டோரன்ஸ் நகரில் உள்ள அவரது வீட்டிலிருந்து ஏப்ரல் 21-ஆம் தேதி கிளம்பி ரயில் மூலம் சிகாகோவுக்குப் பயணித்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏப்ரல் 24-ஆம் தேதி சிகாகோவிலிருந்து கிளம்பிய அவர் வாஷிங்டன் வந்தடைந்த பிறகு விருந்து நடைபெறவிருந்த ஹில்டன் விடுதியில் அன்றைய தினம் மாலை அறை எடுத்து தங்கினார்.
குற்றம் சாட்டப்பட்டவரின் இலக்கு என்ன?
அவர் புகழ்பெற்ற கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார். மத்திய பரப்புரை நிதி ஆவணங்களின்படி, 2024 அதிபர் தேர்தலில் போட்டியிட்ட கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக ஜனநாயக கட்சியின் அரசியல் செயல் குழுவுக்கு 25 டாலர் நன்கொடை வழங்கியுள்ளார்.
தாக்குதலுக்கு முன்பாக அவர் தனது குடும்பத்துக்கு அனுப்பிய செய்தியின்படி, சந்தேக நபரின் நோக்கம் என்பது உயர் பதவி வகிக்கும் அமைச்சரவை உறுப்பினர்களில் எத்தனை பேரை தன்னால் கொல்ல முடிகிறதோ அத்தனை பேரையும் கொல்ல வேண்டும் என்பது தான் என பிர்ரோ திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ஒரு பிரமாண பத்திரத்தின்படி, குற்றம் சாட்டப்பட்ட நபர் தனது உறவினர்களுக்கு எழுதுகையில், "உயர் பதவியிலிருந்து கீழ் நிலை வரை உள்ள அதிகாரிகளே இலக்கு." எனக் குறிப்பிட்டுள்ளார்.
"முற்றிலும் அவசியமானால் இலக்குகளை அடைய அங்குள்ள அனைவரையும் நான் கடந்து செல்வேன்," என்று அவர் எழுதியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட ஆலனை தொடர்ந்து காவலில் வைக்கக் கோரிய வழக்கறிஞர்கள், கொலை முயற்சி குற்றச்சாட்டு பயங்கரவாதமாக கருதப்படலாம் என தெரிவித்துள்ளனர். கூடுதல் குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படலாம் என்றும் பிர்ரோ குறிப்பிட்டார்.
விசாரணை அதிகாரிகளிடம் ஆலன் ஒத்துழைப்பததில்லை என சட்ட அமலாக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி நிறுவனமான சிபிஎஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு குறித்து ஆய்வு
டிரம்புக்கு எதிரான மூன்றாவது கொலை முயற்சியை அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், அதிபரின் பாதுகாப்பு நெறிமுறைகள் எவ்வாறு உள்ளன என்பதை பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
வாஷிங்டன் ஹில்டன் விடுதியிலிருந்த பாதுகாப்பு வளையம் போதுமானதாக இருந்ததா, நிகழ்வில் கலந்து கொண்டவர்களிடம் ஏன் அடையாள அட்டையைக் காண்பிக்கச் சொல்லி கேட்கப்படவில்லை, ஏன் அதிபர், துணை அதிபர் மற்றும் அதிகார படிநிலையில் உள்ள மற்றவர்களும் ஒரே இடத்தில் குழுமியிருந்தார்கள் எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிகழ்வை பாதுகாக்கும் பணியில் "சட்ட அமலாக்க துறைகள் தோற்கவில்லை" என திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ப்ளாச் குறிப்பிட்டார்.
துப்பாக்கி ஏந்திய அந்த நபர் ஒரு தளத்தைக் கடந்து தான் இருந்தார் எனத் தெரிவித்த அவர், "அவருக்கும் அமெரிக்க அதிபருக்கும் இடையே நூற்றுக்கணக்கான ஃபெடரல் அதிகாரிகள் இருந்தனர்." என்றார்.
45 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய அதிபர் ரொனால்ட் ரீகனை ஜான் ஹின்க்லி ஜூனியர் இதே விடுதியில் கொல்ல முயன்றார். ரகசிய சேவையிலிருந்து வந்த பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றியதாக வாஷிங்டன் ஹில்டன் நிர்வாகம் தெரிவிக்கிறது.
உயர்நிலை அரசு அதிகாரிகளைப் பாதுகாக்கும் உள்நாட்டு பாதுகாப்பு துறையின் ஒரு அங்கமான ரகசிய சேவை பிரிவு தலைமை அதிகாரிகளுக்கு ஆதரவாக டிரம்ப் இருக்கிறார் என, மூத்த வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகை பணியாளரின் தலைவர் சூசி வைல்ஸ் "முக்கிய நிகழ்வுகளுக்கான விதிமுறை மற்றும் நடைமுறைகளை விவாதிப்பதற்கு" இந்த வாரம் கூட்டம் ஒன்றை நடத்த இருக்கிறார் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
இந்த நிலையில், நான்கு நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா வந்துள்ள பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்லஸ் "மிகவும் பாதுகாப்பாக இருப்பார்" என்கிற உத்தரவாதத்தை டிரம்ப் வழங்கினார். அவரது பயணம் திங்களன்று வெள்ளை மாளிகையிலிருந்து தொடங்குகிறது.
கூடுதல் செய்தி சேகரிப்பு: வெள்ளை மாளிகையிலிருந்து பெர்னட் டெபுஸ்மன் ஜூனியர்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு