அதிமுக பிளவுபடுகிறதா? எடப்பாடி பழனிசாமி முன்னுள்ள வாய்ப்புகள் என்ன?

பட மூலாதாரம், EPS
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மே 13ஆம் தேதியன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அரசுக்கு ஆதரவாக 144 பேர் வாக்களித்துள்ளனர்.
எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ-க்களில் 25 பேர், தவெக அரசை ஆதரித்துள்ளனர்.
முன்னதாக, "கொறடா உத்தரவை மீறி வாக்களித்தால் கட்சித் தாவலாகக் கருதப்படும்" என அதிமுக தரப்பு எச்சரித்து இருந்தது. ஆனால் அதை எஸ்.பி.வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பொருட்படுத்தவில்லை.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்களில் ஒரு பகுதியினர் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், அக்கட்சியின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தினந்தோறும் புதுப் புது காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை அக்கட்சி ஆரம்பத்தில் பெறவில்லை.
பின்னர், காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவை தவெக பெற்றது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிப்பதாக சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக-வின் ஒரு பிரிவு அறிவித்தது.
கடந்த சில நாட்களாக திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் உள்படப் பல்வேறு தலைவர்களை தவெக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் சந்தித்துப் பேசினார்.
ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவர் சந்திக்கவில்லை. மாறாக, சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரை செவ்வாய்க்கிழமையன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
மே 13ஆம் தேதியன்று சட்டப்பேரவையில் தனது ஆட்சியின் பெரும்பான்மை பலத்தை விஜய் நிரூபிக்கவிருந்த சூழலில், இந்தச் சந்திப்பு அரசியல்ரீதியாக பேசுபொருளாக மாறியது.
முன்னதாக, தங்கள் தரப்பு சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவுடன் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக வேலுமணியும் கொறடாவாக சி.விஜயபாஸ்கரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
தங்கள் தரப்பில் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியும் கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் தேர்வு செய்யப்பட்டதாக, அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது.

பட மூலாதாரம், AIADMK
எச்சரித்த அதிமுக... ஆனால்?
சட்டப்பேரவையில் தவெக-வுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை சி.வி.சண்முகம் தலைமையிலான குழு அறிவித்த நிலையில், புதன்கிழமையன்று அதிமுக எம்.பி இன்பதுரை தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அதில், "எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்ட அதிகாரபூர்வ கொறடாவின் உத்தரவை மீறிச் செயல்படும் எந்த அதிமுக சட்டப்பேரவை உறுப்பினருக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 10வது அட்டவணையின்கீழ் கட்சித் தாவல் தடைச் சட்டம் பொருந்தும்" எனக் கூறியுள்ளார்.
"சட்டப்பேரவையில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கட்சியின் அதிகாரபூர்வ கொறடா வழங்கும் உத்தரவை மீறி வாக்களித்தாலோ, வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் தவிர்த்தாலோ, நடுநிலை வகித்தாலோ அது கட்சித் தாவலாகக் கருதப்படும்" எனவும் இன்பதுரை தெரிவித்திருந்தார்.
மேலும், "சிலர் தனி அணியாகச் செயல்படுவதாலோ அல்லது பெரும்பான்மை எம்எல்ஏ-க்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகக் கூறுவதாலோ அவர்கள் தனியாக கொறடாவை நியமிக்க முடியாது. அது செல்லாது" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தவெக அரசுக்கு ஆதரவாக எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக-வின் 25 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு கொடுத்துள்ள நிலையில், கட்சித் தாவல் தடைச் சட்டம் தொடர்பாக சில விளக்கங்களை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

'கொறடா உத்தரவு எப்படி செல்லும்?'
மே 8ஆம் தேதியன்று தங்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு சட்டப்பேரவைக் குழுத் தலைவராக எஸ்.பி.வேலுமணியும் கொறடாவாக சி.விஜயபாஸ்கரும் தேர்வு செய்யப்பட்டதாகவும் அதுதொடர்பான கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கியதாகவும் தெரிவித்தார்.
"சட்டப்பேரவையில் பல்வேறு கட்சிகளின் சட்டப்பேரவைக் குழு தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால் அதிமுக-வில் தற்போது வரை இரு தரப்பிலும் அளிக்கப்பட்ட கடிதங்கள் ஏற்கப்படவில்லை" எனவும் சி.வி.சண்முகம் கூறினார்.
அவர் தொடர்ந்து பேசும்போது, "இரண்டு கடிதங்களின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இரு தரப்பும் சட்டப்பேரவை சபாநாயகரால் அங்கீகரிக்கப்படவில்லை. கொறடாவையும் அங்கீகரிக்கவில்லை. அவ்வாறு இருக்கும்போது கொறடா உத்தரவு எப்படி செல்லும்?" எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
அதோடு, தான் சட்டபேரவை அதிமுக குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி காட்டும் கடிதம் பொய்யானது என்றும் சி.வி.சண்முகம் விமர்சித்தார்.

பட மூலாதாரம், @CVShanmugamofl/X
எடப்பாடி பழனிசாமி முன்னுள்ள வாய்ப்புகள்
"இரு தரப்பிலும் கொறடாவை நியமித்துள்ளனர். இதை சபாநாயகர் ஏற்கவில்லையெனில் வழக்கு நீதிமன்றத்திற்குச் செல்லும். அங்கு சபாநாயகர் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்" என்கிறார், மூத்த பத்திரிகையாளர் மாலன்.
மேலும், "சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூடி தங்களுக்குள் தலைவர், கொறடாவை தேர்வு செய்தார்களா அல்லது எடப்பாடி பழனிசாமியின் நியமனமா என்ற கேள்வி வருகிறது. யாரை கொறடாவாக சபாநாயகர் அங்கீகரிக்கப் போகிறார் என்பதைப் பொறுத்து அடுத்தகட்ட முடிவுகள் இருக்கும்" என்கிறார் அவர்.
அதுமட்டுமின்றி, "கொறடா உத்தரவை மீறிய எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்வதில் இறுதி முடிவை சபாநாயகர் எடுக்க வேண்டும்" எனக் கூறும் மாலன், "கடந்த இரு தினங்களாக நடந்து வரும் காட்சிகளைப் பார்க்கையில் வேலுமணி தரப்பை சபாநாயகர் அங்கீகரிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்" என்கிறார்.
"எஸ்.பி.வேலுமணி தரப்பை சபாநாயகர் அங்கீகரித்தால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை" எனவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து பேசும்போது, "சட்டப்பேரவையில் நடக்கும் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஆனால், சபாநாயகரின் முடிவுகளை எதிர்த்து வழக்கு தொடரலாம்" என்றார்.
"நீதிமன்றத்திற்குச் சென்றாலும் சற்று கால தாமதம் ஏற்படும்" எனக் கூறும் மாலன், "அதேநேரம், அதிமுக இரண்டாக உடைவதற்கு வாய்ப்பில்லை. பொதுக்குழுவை கூட்டுமாறு சி.வி.சண்முகம் கூறுகிறார். பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளது" எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், TN ASSEMBLY
'குழப்பங்களுக்குக் காரணம் விஜய்'
ஆனால், "இந்த விவகாரத்தில் அதிமுக-வில் நடக்கும் அனைத்துக் குழப்பங்களுக்கும் தவெக தலைவர் விஜய்தான் காரணம்" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அனைத்துக் கட்சித் தலைவர்களை விஜய் சந்தித்தபோது எடப்பாடி பழனிசாமியை அவர் சந்தித்திருக்க வேண்டும். தவெக-வுக்கு பாமக ஆதரவு கொடுக்கவில்லை. ஆனால், அன்புமணியை விஜய் பார்த்தார். அப்படியிருக்க எடப்பாடி பழனிசாமியையும் அவர் சந்தித்திருக்க வேண்டும்" என்கிறார்.
ஆனால், இந்த விவகாரத்தில் மாறுபட்ட கருத்தை முன்வைக்கும் மாலன், பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடப்பட்டது, ஜோதிடர் நியமன சர்ச்சை ஆகியவை குறித்து விவரித்தார்.
"இதுபோன்ற சர்ச்சைகளில் தவெக அரசு தொடர்ந்து சிக்கும்போது இடதுசாரிகள் மற்றும் விசிக ஆதரவை இழக்கலாம்" என்கிறார்.
வரும் காலங்களில் அப்படியொரு சிக்கலைத் தவிர்ப்பதற்காகவே வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோரை தவெக தலைவர் விஜய் சந்தித்துப் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், TN ASSEMBLY
அதிமுக பிளவை தவெக ஊக்குவித்தது போன்ற நிலைமை ஏற்பட்டுவிட்டதாகக் கூறுகிறார் ஷ்யாம். "எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்து உதயநிதிக்கு கொடுக்கப்பட்டுவிட்டது. அதன் பிறகு எடப்பாடி பழனிசாமியை சட்டப்பேரவைக் குழு தலைவர் எனக் கூறி அழைத்திருக்க வேண்டும். சபாநாயகர் அதைச் செய்யவில்லை" எனக் கூறுகிறார்.
"எடப்பாடி பழனிசாமி பேசிய பிறகு வேலுமணி ஏன் பேச வேண்டும்?" எனக் கேள்வி எழுப்பும் ஷ்யாம், "அது தன்னுடைய அதிகாரம் என சபாநாயகர் கூறினார். சபையை நடத்தும் பொறுப்பு அவருக்கு உள்ளது. கட்சிக்கு ஒருவர் பேச வேண்டும் என்ற விதியை மீற முடியாது" எனக் குறிப்பிட்டார்.
சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு எண்ணிக் கணிக்கும் முறையில் நடத்தப்பட்டது. ஆறு பகுதிகளாக சட்டப்பேரவை பிரிக்கப்பட்டு ஆதரவு, எதிர்ப்பு, நடுநிலை வாக்குகள் எண்ணப்பட்டன.
இதைக் குறிப்பிட்டுப் பேசும் ஷ்யாம், "குரல் வாக்கெடுப்பை மட்டும் நடத்தி முடித்திருக்கலாம். எண்ணிக் கணிப்பதன் மூலம் சட்டப்பேரவை ஆவணங்களில் யார் ஆதரவு கொடுத்தார்கள் என்பது பதிவாகியிருக்கும்" என்கிறார்.
"குரல் வாக்கெடுப்பு என்றால் இந்தப் பிரச்னைகள் வந்திருக்காது" எனக் கூறும் ஷ்யாம், "சபாநாயகர் முடிவை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்றால் சட்டப்பேரவை ஆவணங்களைக் காட்ட வேண்டிய நிலை ஏற்படும்" எனத் தெரிவித்தார்.
"இரண்டில் மூன்று பங்கு பெரும்பான்மை இருந்தால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது. இதில் கொறடா உத்தரவு என்பது முக்கியமானது" என்கிறார் ஷ்யாம்.
அதோடு, "கொறடாவுக்கு அங்கீகாரம் இல்லை என்று சி.வி.சண்முகம் தரப்பு கூறிவிட்டது. எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரிக்கும்போது நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்" எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தச் சூழலில், "அதிமுக பிளவை தவெக ஊக்குவிக்கிறதா?" என்ற கேள்வியை அக்கட்சியின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளரான லயோலா மணியிடம் கேட்க பிபிசி தமிழ் பல முறை முயன்றது. ஆனால், அவர் பதில் அளிக்க முன்வரவில்லை. த.வெ.க. தரப்பு பதிலளிக்கும் நிலையில், அது இந்த கட்டுரையில் சேர்க்கப்படும்.

பட மூலாதாரம், TNDIPR
'விஜய் வந்ததால் மூன்றாம் இடத்தில் அதிமுக'
"அதிமுக உடையாமல் உள்ளுக்குள்ளேயே இரு தரப்பினரும் மோதிக் கொள்வார்கள். ஒரு கட்டத்தில் கட்சி தனது செயல் தன்மையை இழக்கும். அது அதிமுக-வை பலவீனப்படுத்தும்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் மாலன்.
சட்டப்பேரவை தேர்தல் களம் என்பது திமுக எதிர் அதிமுக என்பதாகப் போட்டி இருக்கும்போதும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தொடர்ந்து தோற்று வந்ததாகக் கூறும் மாலன், "மூன்றாவதாக விஜய் களத்திற்கு வந்தவுடன் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டது" எனக் குறிப்பிட்டார்.
சட்டப்பேரவை நிகழ்வுகளுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, "கட்சியில் இருப்பவர்களை வெளியே அனுப்பாமல் சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை இணைத்து கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம்" எனத் தெரிவித்தார்.
இந்தக் கருத்தை வரவேற்றுள்ள அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வி.கே.சசிகலா, அதிமுக-வில் திமுக எதிர்ப்பு மனநிலை உயிர்ப்புடன் இருப்பதைக் கண்டு தான் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.
அனைவரும் ஒன்றிணைவதே அதிமுக-வை காப்பாற்ற இருக்கும் ஒரே வழி எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், காமராஜ், கே.பி.அன்பழகன், சி.விஜயபாஸ்கர் உள்பட 26 பேரின் கட்சிப் பதவிகளைப் பறித்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன் வரிசையில், தனது உத்தரவுக்கு மாறாக வாக்களித்த எம்.எல்.ஏ-க்கள் மீது எடப்பாடி பழனிசாமி மேலும் என்ன நடவடிக்கைகளை எடுக்கப் போகிறார் என்ற விவாதம், அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு





























