குழந்தைகளிடையே உடல் பருமன் பிரச்னை அதிகரிப்பதாக மருத்துவர்கள் எச்சரிப்பது ஏன்? சமாளிப்பது எப்படி?

அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடல் பருமன் ஏற்படும். உடல் பருமன் பல நோய்களுக்கு அடிப்படையாக அமையும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

உலகில் பத்தில் ஒரு குழந்தை உடல் பருமனாக இருப்பதாக ஐ.நா.வின் குழந்தைகளுக்கான யுனிசெஃப் அமைப்பின் 2025ஆம் ஆண்டு குழந்தை ஊட்டச்சத்து உலக அறிக்கை ஆய்வறிக்கை கூறுகிறது. அதாவது உலகில் பள்ளி செல்லும் வயதில் உள்ள 188 மில்லியன் குழந்தைகள் பருமனாக இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. இதனால் அவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், 190 நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட தரவுகள் அடிப்படையில் அந்த அறிக்கை இவ்வாறு கூறுகிறது.

அதிக பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளுதல் இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகில் முதல் முறையாக குழந்தைகளிடம் எடை குறைவு காணப்படுவதைவிட உடல் பருமன் அதிகமாகக் காணப்பட்டு இருப்பதாகவும் இந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. 2000ஆம் ஆண்டு முதலான தரவுகளைப் பார்க்கும்போது, 5 -19 வயதிலான குழந்தைகளிடம் எடை குறைவு 13% முதல் 9.2% ஆகக் குறைந்துள்ளது. அதேநேரம், உடல் பருமன் 3% முதல் 9.4% ஆக அதிகரித்துள்ளது. இதுவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டின் ஒரு வகையாகவே பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் 5-19 வயதிலான குழந்தைகளில் 21% பேர் உடல் பருமனாக உள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் 21% குழந்தைகள் உடல் பருமனாக உள்ளனர். இந்தியாவில் 2005-06ஆம் ஆண்டு முதல் 2020-21ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கூடுதல் எடை கொண்ட மற்றும் உடல் பருமனாக உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 127% அதிகரித்துள்ளது.

"ஊட்டச்சத்து குறைபாடு என்று கூறும்போது, எடை குறைவைப் பற்றி மட்டுமே நாம் பேசவில்லை. உடல் பருமன் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் பாதிக்கும் என்ற கவலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பழங்கள், காய்கறிகள், புரதம் ஆகியவற்றுக்குப் பதிலாக அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளப்படுகின்றன" என்று யுனிசெஃப் அமைப்பின் செயல் இயக்குநர் காத்தரின் ரஸல் கூறுகிறார்.

கடந்த 2000ஆம் ஆண்டில் தெற்கு ஆசிய நாடுகளில்தான் 'கூடுதல் எடை' கொண்டவர்கள் குறைவாக இருந்தனர். ஆனால் 2022ஆம் ஆண்டில் 5-19 வயதிலான குழந்தைகளில் இது கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. உடல் பருமன், ஒரு காலத்தில் வளமான நாடுகளின் பிரச்னையாகப் பார்க்கப்பட்டது, ஆனால் இப்போது குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளிலும் வேகமாக அதிகரித்து வருகிறது.

குழந்தைகள் உடல் பருமன் பிரச்னை

பட மூலாதாரம், Getty Images

எந்த குழந்தை பருமனாகக் கருதப்படும்?

உலக அளவிலான தரவுகள்படி, 5 முதல் 19 வயதிலான குழந்தைகளில் 391 மில்லியன் பேர் ' கூடுதல் எடையுடன்' இருக்கின்றனர்.

'கூடுதல் எடை' என்பது குழந்தைகள் தங்கள் வயது, உயரம், பாலினம், ஆகியவற்றுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டிய எடையைவிட கூடுதலாக இருப்பதாகும். 'உடல் பருமன்' என்பது 'கூடுதல் எடை'யின் தீவிர வடிவம். உடல் பருமனாக இருப்பவர்களுக்கு எதிர்காலத்தில் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இருதய நோய், சில வகை புற்றுநோய் உள்பட உயிருக்கு ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம்.

இந்தியாவில் தேசிய குடும்ப நல ஆய்வு தரவுகளின்படி இந்தியாவில் 'கூடுதல் எடை' மற்றும் 'உடல் பருமன்' கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில், தேசிய குடும்ப நல ஆய்வு (2005-06) தரவுகள்படி 'கூடுதல் எடை' மற்றும் 'உடல் பருமன்' 1.5% ஆக இருந்தது. இதுவே தேசிய குடும்ப நல ஆய்வு (2019-21) -ல் 3.4% ஆக உயர்ந்திருந்தது.

இந்தியாவில் 2030ஆம் ஆண்டுக்குள் 5-19 வயதிலான குழந்தைகளில் 27 மில்லியன் பேர் உடல் பருமன் கொண்டிருப்பார்கள் என்று யுனிசெஃப் எச்சரிக்கிறது.

இந்திய பொருளாதார ஆய்வு (2024-25) அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளின் உட்கொள்ளல் 2006இல் 900 மில்லியன் டாலராக இருந்தது, அதுவே 2019இல் 37.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது எனக் கூறுகிறது. மேலும், 2011-2021 காலகட்டத்தில் அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளின் சில்லறை விற்பனையின் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் 13.7% ஆக உள்ளது.

உடல் பருமன் - குழந்தைகள்

பட மூலாதாரம், Getty Images

அதிக பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள்

அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக சர்க்கரை, உப்பு, கொழுப்பு கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதாக இருக்கின்றன. அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் சில:

  • அனைத்து வகையான சிப்ஸ்,
  • கேக், பேஸ்ட்ரி வகைகள்
  • மைதாவில் தயாரிக்கப்படும் பொருட்கள்
  • சீஸ் நிறைந்த உணவுகள்,
  • கார்பனேற்றப்பட்ட பானங்கள்,
  • சில ரெடிமேட் குக்கீஸ்

"உணவுகளைப் பதப்படுத்தும்போது, அவற்றிலுள்ள சத்துகள் நீர்த்துப் போய்விடும். அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருப்பது வெறும் கலோரிகள் மட்டுமே(empty calories)" என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் டாஃப்னி ஸ்டீபன்.

உதாரணமாக "பழங்களை பழமாக அப்படியே சாப்பிடும்போது அதிலுள்ள நார்ச்சத்து உடலில் சேரும். ஆனால் அந்தப் பழத்தை ஜூஸாக குடித்தால், அதில் நீங்கள் சர்க்கரை சேர்க்கவில்லை என்றாலும், அதில் உள்ள நார்ச்சத்து குறைந்து சர்க்கரை மட்டுமே உடலுக்குக் கிடைக்கும். அதேதான் பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் நடக்கிறது. உணவுகளை அதிகமாகப் பதப்படுத்தும்போது அவற்றிலுள்ள வைட்டமின், தாதுகள் போன்ற நுண் ஊட்டச்சத்துகள் அழிந்துவிடும்" என்றும் அவர் விளக்கினார்.

OBESE CHILDREN

பட மூலாதாரம், DAFNI STEPHEN

படக்குறிப்பு, ஊட்டச்சத்து நிபுணர் டாஃப்னி ஸ்டீபன்

இந்த உணவுகளை அடையாளம் காண்பது எப்படி?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பொதுவாக, பார்க்கும் போதே சாப்பிட வேண்டுமென நினைக்கும் வகையில் கவர்ச்சியான தோற்றம் கொண்டுள்ள உணவுகள் அனைத்துமே தவிர்க்கப்பட வேண்டியவை அல்லது எச்சரிக்கையுடன் உட்கொள்ள வேண்டியவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

"நிறமிகள் பயன்படுத்தப்பட்டுள்ள சாக்லேட், கேக் போன்ற உணவுகள், அதிக காலம் கெட்டுப் போகாத உணவுகள், சுவை கூடுதலாக அடிக்கடி சாப்பிடத் தூண்டும் உணவுகள் ஆகியவற்றைக் குறிப்பாக குழந்தைகளுக்கு வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். இவற்றில் அதிக சர்க்கரை இருக்கும், கெட்டுப் போகாமல் இருக்க அதிக உப்பு இருக்கும், சுவையைக் கூட்ட வெண்ணெய், நெய், எண்ணெய், சீஸ் போன்றவை சேர்க்கப்பட்டிருக்கும். வீட்டில் சமைத்த சாம்பார் சாதமும், காய்கறியும் சாப்பிடும்போது, சாப்பிட்ட திருப்தி இருக்கும். ஆனால் இந்த உணவுகளில் சத்துகள் இல்லாததால், எவ்வளவு சாப்பிட்டாலும் மீண்டும் சாப்பிட வேண்டும் என்றே தோன்றும்" என்கிறார் டாஃப்னி ஸ்டீபன்.

உணவுகளின் லேபிளை படிப்பது மிகவும் முக்கியம் என வலியுறுத்தும் ஊட்டச்சத்து நிபுணர் சில்வியா சற்குணம், "அடைத்து வைக்கப்பட்ட உணவுகளை வாங்கும்போது, அவற்றின் உள்ளடக்கம் என்னவென்று கவனிக்க வேண்டும். அதில் சோடியம் பென்சேட், நைட்ரேட், சல்ஃபைட் ஆகியவை இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அவற்றை எச்சரிக்கையுடன் உட்கொள்ள வேண்டும்" என்று எச்சரித்தார்.

அவரது கூற்றுப்படி, "சில உணவு பாக்கெட்டுகளில் எந்த வயதுக்கு மேலான குழந்தைகள் அதைச் சாப்பிடலாம் என்பது மிகச் சிறிய எழுத்துகளில் எங்காவது எழுதியிருக்கும். அதையும் கவனிக்க வேண்டும். கார்பனேற்றப்பட்ட பானங்கள் கண்டிப்பாக குழந்தைகளுக்கானவை அல்ல. இந்த உணவுகளைத் தொடர்ந்து உட்கொண்டால் நரம்பியல் ரீதியான பிரச்னைகளும் ஏற்படலாம்."

குழந்தைகள் உடல் பருமன் பிரச்னை

பட மூலாதாரம், Silvia Sargunam

படக்குறிப்பு, ஊட்டச்சத்து நிபுணர் சில்வியா சற்குணம்

கண்ணைக் கவரும் விளம்பர உத்திகள்

தீவிரமாகக் குறி வைத்து நடத்தப்படும் விளம்பரப் பிரசாரங்கள் இந்த ஆரோக்கியமற்ற உணவுகளின் உட்கொள்ளுதலைத் தூண்டுகின்றன.

உலகில் 170 நாடுகளில் 13 முதல் 24 வயதிலான 64 ஆயிரம் இளைஞர்களிடம் நடத்தப்பட்ட யுனிசெஃப் ஆய்வில் 75% பேர், சர்க்கரை நிறைந்த பானங்கள், திண்பண்டங்கள், துரித உணவுகள் ஆகியவற்றுக்கான விளம்பரங்களை இந்த ஆய்வுக்கு முந்தைய வாரத்தில் ஒரு முறையாவது பார்த்ததாகக் குறிப்பிட்டனர்.

மேலும் 60% பேர், அந்த விளம்பரங்களைப் பார்த்து அந்த உணவுகளைச் சாப்பிட வேண்டுமென்ற ஆசை அதிகரித்தது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

"முதலில் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் காணப்பட்ட இந்தப் போக்கு இப்போது இந்தியாவில் அதிகரித்து வருவதைக் காண்கிறோம். இதற்குக் காரணம் அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் மிக எளிமையாகக் கிடைக்கின்றன. வீடுகளுக்கும், பள்ளிகளுக்கும் அருகில் உள்ள சிறு சிறு கடைகளில்கூட பாக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மிக எளிதாகக் கிடைக்கின்றன, வேண்டுமென்றால் வீட்டிலேயேகூட டெலிவரி செய்யப்படுகின்றன. குழந்தைகள் அதிக நேரம் தொலைக்காட்சி மற்றும் செல்போன் பார்க்கும்போது, இந்த உணவுகள் குறித்த விளம்பரங்கள் நேரடியாக குழந்தைகளைச் சென்றடைகின்றன. பெற்றோர்களுக்கும் அதை வாங்கித் தருவது எளிதாக உள்ளது" என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் டாஃப்னி ஸ்டீபன்.

உலகில் பத்தில் ஒரு குழந்தைக்கு உடல் பருமன் பிரச்னை - தவிர்க்க வேண்டிய உணவுகள் யாவை?

பட மூலாதாரம், Getty Images

அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளால் என்ன ஆபத்து?

அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடல் பருமன் ஏற்படும். உடல் பருமன் பல நோய்களுக்கு அடிப்படையாக அமையும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதுகுறித்துப் பேசிய குழந்தைகள் நல மருத்துவர் டி.ரவிக்குமார், "ஒரு நாளுக்கு 2 அல்லது 3 உடல் பருமனான குழந்தைகள் என்னிடம் வருகிறார்கள். மந்தமான வாழ்க்கை முறை உடல் பருமனுக்கு வழி வகுக்கிறது. தொலைக்காட்சி முன் அமர்ந்துகொண்டு அதிக கலோரிகள் கொண்ட நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடுவது பெரும்பாலான வீடுகளில் காணக்கூடிய காட்சியாக இருக்கிறது. குழந்தைகள் பசி அறிந்து சாப்பிடுவது அரிதாகிவிட்டது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களிலும் இதே நிலைதான். அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் எளிதாக, மலிவாக கிடைப்பது இதற்கு முக்கிய காரணமாகும். பழங்கள், காய்கறிகள் உட்கொள்வது மிகவும் குறைந்துவிட்டது. 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதும் அதிகரித்து வருகிறது" என்றார்.

"உடல் பருமன் காரணமாக இருந்தால், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புண்டு. இவை இதய நோய் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். அடுத்து உடலில் சிறுநீரகங்கள், கல்லீரல் பாதிக்கப்படும். உயரத்திற்குத் தகுந்த எடை இல்லையெனில், கூடுதலான எடையை உடல் சுமக்க வேண்டியிருக்கும், அப்போது உறுப்புகள் பாதிக்கப்படுவதும், செயலிழப்பதும் தவிர்க்க முடியாதது" என்றார் டாஃப்னி.

இவை மட்டுமின்றி, "புற்றுநோய்க்கான ஆபத்து அதிகரிக்கும், உடல் எடை அதிகமானால் நுரையீரல் பாதிப்புகள், சுவாசப் பிரச்னைகள் ஏற்படலாம்" என்று ஊட்டச்சத்து நிபுணர் சில்வியா சற்குணம் சுட்டிக் காட்டுகிறார்.

இந்தியாவின் நோய் சுமையில் 56% ஆரோக்கியமற்ற உணவுகளால் ஏற்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் குறிப்பிடுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு