You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது ஆர்சிபி - பஞ்சாப் தொடர்ந்து 6வது தோல்வி
ஐபிஎல் 2026 சீசனில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக இன்று (மே 17) நடந்த போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆஃப் இடத்தை உறுதி செய்தது அந்த அணி.
முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது. அதை சேஸ் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இது இந்த சீசனில் ஆர்சிபி பெறும் 9வது வெற்றி. 18 புள்ளிகள் பெற்றிருக்கும் அந்த அணியின் ரன்ரேட் மிகச் சிறப்பாக இருப்பதால் (+ 1.065) அந்த அணி டாப் 2 இடங்களுக்குள் முடிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
அதேசமயம் பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக 6வது தோல்வியை சந்தித்திருக்கிறது. முதல் 7 போட்டிகளில் ஒன்றில் கூட தோற்காத அந்த அணி, அதன்பிறகு இன்னும் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. தற்போது 13 புள்ளிகள் பெற்றிருக்கும் அந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு தற்போது கேள்விக்குறியாகியிருக்கிறது.
அதிரடி காட்டிய ஆர்சிபி பேட்டர்கள்
தரம்சாலாவில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் பந்துவீசவில்லை.
ஹர்ப்ரீத் பிரார் ஜேக்கப் பெதெல் (11 ரன்கள்) விக்கெட்டை விரைவாக வீழ்த்தியிருந்தார். ஆனால், அதன்பிறகு அவர்களால் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. விராட் கோலி - தேவ்தத் படிக்கல் பார்ட்னர்ஷிப் அதிரடியாக ரன் சேர்த்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த இணை 42 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தது. அந்த இணையையும் ஹர்ப்ரீத் பிரார் பிரித்தார். 25 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து வெளியேறினார் படிக்கல்.
அதன்பிறகு வெங்கடேஷ் ஐயர் உடன் இணைந்தும் ஒரு பார்ட்னர்ஷிப்பைக் கட்டமைத்தார் விராட் கோலி. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோலி, 31 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஐபிஎல் தொடரில் அவர் அடித்த 67வது அரைசதம் இது. அவர் 37 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து சஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஆரம்பத்தில் நிதானமாகத் தொடங்கிய வெங்கடேஷ் ஐயர், மெல்ல தன் வேகத்தைக் கூட்டினார். யுஸ்வேந்திர சஹல், லாகி ஃபெர்குசன் ஆகியோரின் ஓவர்களைப் பயன்படுத்தி தன் வேகத்தை அதிகப்படுத்தினார். ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் காயமடைந்ததன் காரணமாக இந்தப் போட்டியில் வாய்ப்பு பெற்ற வெங்கடேஷ் ஐயர், அதை சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். 29 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் (40 பந்துகள்) எடுத்தார்.
கடைசி கட்டத்தில் டிம் டேவிட் அதிரடி காட்டி 12 பந்துகளில் 28 ரன்கள் விளாசியதால், 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது ஆர்சிபி. பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சாளர்களில் அதிகபட்சமாக ஹர்ப்ரீத் பிரார் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஆர்சிபி அபார வெற்றி
பவர்பிளே பந்துவீச்சில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுவரும் ஆர்சிபி அணி இந்தப் போட்டியிலும் அதே மாதிரியான ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது. முதல் ஓவரிலேயே பிரியான்ஷ் ஆர்யாவை டக் அவுட் ஆக்கினார் புவனேஷ்வர் குமார். தான் வீசிய இரண்டாவது ஓவரில், மற்றொரு ஓப்பனர் பிரப்சிம்ரன் சிங் விக்கெட்டையும் (2 ரன்கள்) கைப்பற்றினார் அவர். இம்பேக்ட் வீரராகக் களமிறங்கிய ராஷிக் தார், தான் வீசிய இரண்டாவது பந்திலேயே கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை வெளியேற்றினார். அதனால், 3.2 ஓவர்களில் 19/3 என்ற நிலையில் தத்தளித்தது பஞ்சாப் கிங்ஸ்.
முதல் 3 விக்கெட்டுகள் விரைவாக வெளியேறியிருந்தாலும், மற்ற வீரர்கள் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினார்கள். கூப்பர் கானலி 37 ரன்கள், சூர்யான்ஷ் ஷெட்கே 35 ரன்கள், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 37 ரன்கள் எடுத்தார்கள். இருந்தாலும், அவர்களால் தேவைப்பட்ட வேகத்தில் விளையாட முடியவில்லை. அவர்களில் யாருமே 170க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடவில்லை. அதனால் பஞ்சாப் கிங்ஸ் அணிக்குத் தேவைப்பட்ட ரன்ரேட் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே தான் இருந்தது.
கடைசி கட்டத்தில் சஷாங்க் சிங் கடுமையாகப் போராடினார். இருந்தாலும், தேவைப்படும் ரன்ரேட் அதிகமாக இருந்ததால், அவரால் அணி மீதான நெருக்கடியைக் குறைக்க முடியவில்லை. அவரும் 27 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்களே எடுக்க முடிந்தது. ஆர்சிபி பந்துவீச்சாளர்களில் அதிகபட்சமாக ராஷிக் தார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் எடுத்த வெங்கடேஷ் ஐயர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.