You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ரஜினி காந்தின் திடீர் பேட்டி - முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து பேசியது என்ன?
நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின. இந்தச் சூழலில் ஸ்டாலினைச் சந்தித்தது ஏன் என ரஜினி விளக்கம் அளித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், விஜய் முதலமைச்சராவதை தடுப்பதற்காக தான் ஸ்டாலினை சந்தித்ததாக விமர்சனங்கள் எழுந்ததாகவும் குற்றம்சாட்டினார்.
கடந்த மே 12ஆம் தேதி அன்று சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரஜினிகாந்த் பதிலளிக்காமல் சென்றது பேசுபொருளானது. இந்நிலையில் இதுபற்றியும் அவர் விளக்கமளித்துள்ளார்.
அதோடு விஜய் மீது ரஜினிகாந்துக்கு பொறாமை என சமூக ஊடங்களில் பகிரப்படும் கருத்துக்கள் பற்றியும் அவர் பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் விஜய் மீது மக்களுக்கு எதிர்ப்பார்ப்புகள் உள்ளன. அவர் மக்களை சந்தித்து அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அவர் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது எனக் கூறினார்.
இறுதியாக 60 ஆண்டுகளுக்குப் பிறகு திராவிட கட்சிகள் அல்லாத ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சி செய்வது பற்றிய கேள்விக்கு விஜய்க்கு சினிமா புகழும், சமூகவலைதளங்களும் கைக்கொடுத்ததாக பதில் அளித்தார்.
ரஜினியின் இந்த விளக்கத்தை அரசியலுடன் தொடர்புப்படுத்த தேவையில்லை என மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் கூறுகிறார்.
"விஜய் முதலமைச்சரானது ரஜினிக்கு பிடிக்கவில்லை என்பது போல சமூக வலைதளங்களில் உருவான பிம்பத்தை தகர்ப்பதற்காகவும், விஜய் முதலமைச்சராக இருக்கும் சூழலில் இப்படி ஒரு தோற்றம் இருக்க வேண்டாம் எனவும் அவர் நினைத்து இவ்வாறு தெளிவுப்படுத்தியிருக்கலாம் என நான் கருதுகிறேன்" என ப்ரியன் கூறியுள்ளார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு