You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'நிலவை தெளிவாக காட்டுவதில் ஐபோனை விஞ்சும் சாம்சங் கேலக்ஸி' - நீங்கள் செல்போனில் படம் பிடிக்கையில் என்ன நடக்கிறது?
- எழுதியவர், தாமஸ் ஜெர்மைன்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
எளிய மேம்பாடுகள் முதல் கற்பனையான முக அம்சங்கள் வரை, நமது நினைவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை நவீன போன்கள் தீர்மானிக்கின்றன. அதன் விளைவுகள் உங்களுக்குப் பிடிக்கலாம், ஆனால் அவை நாம் உலகைப் பார்க்கும் விதத்தையே மாற்றக்கூடும்.
உங்கள் போனில் எப்போதாவது சந்திரனைப் புகைப்படம் எடுத்ததுண்டா? உங்கள் கையில் சாம்சங் கேலக்ஸி சாதனம் இல்லையென்றால், நீங்கள் அநேகமாக ஏமாற்றமடைந்திருப்பீர்கள். இந்த போன்களில் "100x ஸ்பேஸ் ஜூம்" அம்சம் உள்ளது, இது விரல் நகத்தின் அளவே உள்ள கேமரா லென்ஸ்கள் மூலம் சந்திரனை வியக்கத்தக்க தெளிவுடன் படம் பிடிக்கிறது. இது ஆப்பிள் ஐபோனிலிருந்து நீங்கள் பெறுவதை விடச் சிறந்தது, ஆனால் இதில் ஒரு சூட்சுமம் உள்ளது: சாம்சங்கின் சந்திர புகைப்படங்கள் போலியானவை.
ஒரு ரெட்டிட் பயனர் தனது கணினியில் வேண்டுமென்றே மங்கலாக்கப்பட்ட, பிக்சலேட் ஆன சந்திரனின் படத்தை சாம்சங் போனில் படம்பிடித்ததன் மூலம் இதை நிரூபித்தார். அந்த போன் சிறப்பாக ஒத்துழைத்து, அசல் புகைப்படத்தில் இல்லாத பள்ளங்கள் மற்றும் நிழல்கள் நிறைந்த ஒரு தெளிவான படத்தை எடுத்தது. நிறுவனம் இதை "விவரங்களை மேம்படுத்தும் செயல்பாடு" என்று அழைக்கிறது. உண்மை என்னவென்றால், கேமராவால் விவரங்களை எடுக்க முடியாதபோது, சந்திரனை அடையாளம் கண்டு விவரங்களை நிரப்புவதற்கு சாம்சங் ஒரு செயற்கை நுண்ணறிவிற்கு பயிற்சி அளித்துள்ளது.
ஒவ்வொரு போனிலும் இயல்பாகவே இவ்வளவு வியத்தகு ஒன்று இயக்கப்பட்டிருப்பதை நீங்கள் காண முடியாது. ஆனால் உங்கள் பாக்கெட்டில் எந்த சாதனம் இருந்தாலும், கேமரா பட்டனைத் தட்டும் ஒவ்வொரு முறையும் பின்னணியில் இயங்கும் தொடர்ச்சியான அல்காரிதம்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு செயலாக்கக் கருவிகளைத் தூண்டுகிறது. புகைப்படம் உங்கள் போட்டோ ரோலில் சேமிக்கப்படுவதற்கு முன்பே, அவை டிரில்லியன்கணக்கான செயல்பாடுகளைச் செய்ய முடியும்.
பொதுவாக, இவை அனைத்தும் அழகான மற்றும் (பெரும்பாலும்) உண்மையான புகைப்படங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் உச்சகட்டமாக, சில போன்களில் உள்ள ஏஐ மேம்பாடுகள் உங்கள் சொந்தக் கண்களால் பார்ப்பதிலிருந்து வெகுதூரம் விலகிச் செல்கின்றன. அடுத்த முறை நீங்கள் ஒரு புகைப்படம் எடுக்கும்போது, உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், உங்கள் கேமரா யதார்த்தத்தை ஆவணப்படுத்துகிறதா - அல்லது அதனுடன் சமரசம் செய்கிறதா?
"இது கம்ப்யூட்டேஷனல் போட்டோகிராபி என்று அழைக்கப்படுகிறது," என்கிறார் கிளாஸ் இமேஜிங்கின் தலைமை நிர்வாக அதிகாரி ஜிவ் அட்டர். இவர் ஐபோனின் போர்ட்ரெய்ட் மோட்-ஐ (Portrait Mode) உருவாக்கிய குழுவில் பணியாற்றியவர். உங்கள் போன் உங்கள் கேமராவின் சென்சார்களில் விழும் ஒளியைச் சேகரிப்பதற்கும் மேலாகச் செயல்படுகிறது. கேமரா இன்னும் சிறப்பாக இருந்தால் படம் எப்படி இருக்கும் என்று அது கணித்து, உங்களுக்காக அதை உருவாக்குகிறது என்று அவர் கூறுகிறார்.
"ஏஐ-அடிப்படையிலான அம்சங்கள் படத்தின் தரத்தை மேம்படுத்தும் அதே வேளையில் நம்பகத்தன்மையைப் பராமரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன," என்று சாம்சங் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார். "பயனர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் ஏஐ செயல்பாடுகளை முடக்கும் திறனுடன் முழுமையான கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்கிறார்கள்."
ஆனால் தலைப்புச் செய்திகளில் இடம் பெறும் ஏஐ-ஆற்றல் கொண்ட எடிட்டிங் அம்சங்கள் முடக்கப்பட்டிருந்தாலும், நீங்கள் எடுக்கும் படங்களில் அல்காரிதம்கள் இன்னும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
நீங்கள் செல்போனில் படம் பிடிக்கையில் என்ன நடக்கிறது?
"நீங்கள் ஒரு போனில் கேப்சர் என்பதைக் கிளிக் செய்யும்போது, நீங்கள் ஒரு படத்தை மட்டும் எடுப்பதில்லை, சாதாரண வெளிச்சத்தில் பொதுவாக 4 முதல் 10 படங்களை எடுக்கிறீர்கள்," என்று அட்டர் கூறுகிறார். தனிப்பட்ட ஒரு படத்தை விடச் சிறந்ததாக இருக்க வேண்டிய ஒரு படத்திற்காக உங்கள் போன் இந்தப் படங்களை ஒன்றாகக் கலக்கிறது. அந்தப் படங்களில் சில நகல்களாக (duplicates) இருக்கலாம். மற்றவை படத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கலாம்.
இது மற்றும் இதர அடிப்படைச் செயல்முறைகள், ஒரு சராசரி நபர் பார்க்க விரும்பாத சிக்கல்களைச் சரிசெய்ய புகைப்படத்தை மாற்றியமைக்கின்றன. உதாரணமாக, 'நாய்ஸ் ரிடக்ஷன்' (Noise reduction) என்பது ஒரு குருணை போன்ற அமைப்பாகத் தோன்றும் சீரற்ற பிழைகளைச் மென்மையாக்குகிறது. 'கலர் கரெக்ஷன்' (Colour Correction) படத்தை நிஜ வாழ்க்கையில் நீங்கள் காண்பதற்கு நெருக்கமாகக் கொண்டுவருகிறது. பின்னர் 'ஹை டைனமிக் ரேஞ்ச்' அல்லது HDR உள்ளது, இது ஒரே ஷாட்டில் ஆழமான நிழல்கள் மற்றும் பிரகாசமான சிறப்பம்சங்களைப் பாதுகாக்க அதிக மற்றும் குறைந்த வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களை இணைக்கிறது. உங்கள் போன் மங்கலான அனைத்து விஷயங்களையும் வெறுக்கிறது மற்றும் அதை எதிர்த்துப் போராட பலமுனைத் தாக்குதலைத் தொடங்குகிறது.
உதாரணமாக, ஐபோன்கள் 'டீப் ஃபியூஷன்' என்ற அம்சத்தைப் பயன்படுத்துகின்றன, இது மில்லியன்கணக்கான படங்களில் பயிற்சி பெற்ற செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது. மேலே விவரிக்கப்பட்ட பல நுட்பங்களைக் கையாள்வதோடு மட்டுமல்லாமல், இந்த நியூரல் நெட்வொர்க்குகள் ஒரு படத்தில் உள்ள பொருட்களை அடையாளம் கண்டு அவற்றை வித்தியாசமாகச் செயலாக்க முடியும். ஏஐ இதற்கு முன்பு பார்த்த மற்ற படங்களின் அடிப்படையில் தனிப்பட்ட பிக்சல்களை மாற்றும். "இது மிகவும் உயர்மட்டப் பிரிப்பு," என்று அட்டர் கூறுகிறார்.
இதன் விளைவாக, நிலைமைகள் சாதகமாக இருக்கும்போது புகைப்படம் துல்லியமாகவும் தெளிவாகவும் இருக்கும். ஆனால் சில விமர்சகர்களும் நுணுக்கமான ஆர்வலர்களும் நவீன போன்கள் இன்னும் அதிக தூரம் செல்வதாக வாதிடுகின்றனர், சில சமயங்களில் விசித்திரமான, செயற்கையானவை போன்ற உணர்வு அல்லது நீர் வண்ண ஓவியங்கள் போன்ற தட்டையான அமைப்புகளைக் கொண்ட படங்களை உருவாக்குகின்றன.
சிக்கல்களை அகற்ற போன்கள் மிகவும் கடினமாக உழைப்பதால், நுணுக்கமான விவரங்களை நீங்கள் பெரிதாக்கினால் (zoom in), அவை ஏஐ மாயத்தோற்றங்கள் போன்ற விசித்திரமான சிதைவுகளைக் கூட ஏற்படுத்தக்கூடும். புதிய போன்களின் அளவுக்கு அதிகமாக மெருகூட்டப்பட்ட புகைப்படங்களால் சிலர் மிகவும் அதிருப்தி அடைந்து, பழைய மாடல்களுக்கு மாறுகிறார்கள் அல்லது படம் எடுப்பதற்காகவே இரண்டாவது போனை எடுத்துச் செல்கிறார்கள்.
"ஆப்பிளில், எங்களின் கவனம் எப்போதும் பயனர்கள் உண்மையான தருணங்களைப் படம்பிடிக்க உதவுவதாகும், இதன் மூலம் அவர்கள் நினைவுகளைத் தாங்கள் அனுபவித்தபடியே மீண்டும் பார்க்க முடியும்," என்று ஆப்பிள் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.
"செயற்கை நுண்ணறிவை ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக நாங்கள் பார்க்கும் அதே வேளையில், புகைப்படக் கலையின் பாரம்பரியத்தின் மீதும் எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது மற்றும் அது கவனமாகக் கையாளப்பட வேண்டும் என்று நம்புகிறோம். எங்களது பயனர்களுக்கு உண்மையான மற்றும் நம்பகமான புகைப்படங்களைப் படம்பிடிக்கும் ஒரு சாதனத்தை வழங்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம், அதே நேரத்தில் அவர்கள் விரும்பியபடி அவற்றைத் தனிப் பயனாக்குவதற்கான கருவிகளையும் வழங்குகிறோம்."
இதை நேர்மறையாக பார்க்க ஒரு வழியும் இருக்கிறது. நீங்கள் திறமையானவராகவும் பொறுமையுடனும் இருந்தால், இந்த எடிட்டிங் வேலைகளில் பெரும்பாலானவற்றை நீங்களே கையால் செய்யலாம். இப்போது, "இந்த வெவ்வேறு அளவுருக்களுடன் விளையாடுவதற்குப் பதிலாக, எங்களிடம் ஆட்டோமேஷன் உள்ளது," என்கிறார் நியூயார்க் சிட்டி பல்கலைக்கழகத்தின் பட்டதாரி மையத்தில் டிஜிட்டல் கலாசாரம் மற்றும் ஊடகப் பேராசிரியரான லெவ் மனோவிச். "இதற்கு முன்பு நிபுணர்களுக்கு மட்டுமே கிடைத்த சில திறன்கள் இப்போது அமெச்சூர் நபர்களுக்கும் கிடைக்கின்றன."
ஆனால் அதே நேரத்தில், உங்கள் போன் நீங்கள் படம்பிடிக்கும் நினைவுகளைப் பற்றி ஆக்கப்பூர்வமான அல்லது கலைநயமிக்க முடிவுகளை அடிக்கடி எடுக்கிறது. இது நடப்பது பயனர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம் - மேலும் சில போன்களில், அளவுருக்களைச் சரிசெய்வதை விட ஏஐ இன்னும் நிறையச் செய்கிறது.
"ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் மக்கள் படம்பிடிப்பதை அப்படியே புகைப்படங்கள் பிரதிபலிக்க வேண்டும் என்று உண்மையில் விரும்புவதாக நான் நம்புகிறேன். அவர்கள் போலியான படங்களை உருவாக்க முயலவில்லை," என்கிறார் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கிராபிக்ஸ் மற்றும் டிஸ்ப்ளே பேராசிரியரான ரஃபால் மான்டியுக்.
"ஆனால் நீங்கள் ஒரு படத்தை எப்படி வழங்குகிறீர்கள் என்பதில் நிறைய ஆக்கப்பூர்வமான கட்டுப்பாடு உள்ளது. ஒவ்வொரு போனுக்கும் ஒரு ஸ்டைல் இருக்கிறது. பிக்சல் போன்களுக்கு ஒரு ஸ்டைல் இருக்கிறது. ஆப்பிள் போன்களுக்கு ஒரு ஸ்டைல் இருக்கிறது. இது வெவ்வேறு புகைப்படக் கலைஞர்களைப் போன்றது."
'இது வெறும் மாயத்தோற்றம்'
நிச்சயமாக, விவாதத்தில் ஒரு மறைமுகமான தரம் ஒளிந்துள்ளது: ஒரு "உண்மையான" புகைப்படம் ஃபிலிம் காலத்திலிருந்து வந்தது போல் இருக்க வேண்டும் என்ற கருத்து. அந்த ஒப்பீடு அநேகமாக நியாயமானதல்ல. ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொரு கேமராவும் சில உள்ளமைக்கப்பட்ட செயலாக்க முடிவுகளைக் கொண்டுள்ளது. "செயற்கை நுண்ணறிவு" என்ற வார்த்தையைக் கேட்டவுடன் அது ஏதோ பயங்கரமானது என்று நினைப்பது எளிது. பல சந்தர்ப்பங்களில், போன் கேமராக்களில் பயன்படுத்தப்படும் சிறிய லென்ஸ்கள் மற்றும் சென்சார்களில் உள்ள குறைபாடுகளை அல்காரிதம்கள் சரிசெய்கின்றன.
இருப்பினும், சில அம்சங்கள் எல்லைகளை இன்னும் விரிவுபடுத்துகின்றன.
உதாரணமாக, ஆசியச் சந்தைகளுக்காகத் தயாரிக்கப்படும் போன்கள், குறிப்பாகச் சீன பிராண்டுகளின் போன்கள், பெரும்பாலும் இயல்பாகவே செயற்கை நுண்ணறிவு "பியூட்டி ஃபில்டர்களை" கொண்டுள்ளன. அவை தானாகவே சருமத்தை மென்மையாக்குகின்றன அல்லது நிறத்தை மாற்றுகின்றன மற்றும் முக அம்சங்களைச் சரிசெய்கின்றன.
"இது வெறும் மாயத்தோற்றம்," என்கிறார் அட்டர். "ஆசிய போன் மாடல்களில் இந்தத் தீவிரமான செயற்கை நுண்ணறிவு உருவாக்க அம்சங்கள் இயல்பாகவே உள்ளன. அவை புருவத்தைக் கண்டறிந்து, அதைப் புரிந்துகொள்ள போதுமான தெளிவுத்திறன் இல்லையென்றால் அங்கே முடியை வரையும், அல்லது பின்னணியில் வெகுதூரத்தில் இருக்கும் மனிதர்களுக்கு வெவ்வேறு திசைகளில் பார்க்கும் கண் விழிகளைச் சேர்க்கும்."
இது கலாசார நெறிமுறைகள் மற்றும் விருப்பங்களைப் பொறுத்தது என்று அட்டர் மற்றும் பிறர் கூறுகின்றனர். அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களால் தயாரிக்கப்படும் போன்களில் இதைக் காண முடியாது. ஐபோன்கள் உள்ளமைக்கப்பட்ட பியூட்டி ஃபில்டர்களை வழங்குவதில்லை. கூகுள் நிறுவனம் 2020-ஆம் ஆண்டில் பிக்சல் சாதனங்களில் மனநலப் பாதிப்புகளைக் காரணம் காட்டி அவை இயல்பாக ஆன் ஆகாமல் இருக்கும்படி முடக்கிவிட்டது.
"அழகியல் மேம்பாடு ஒன்றும் புதிதல்ல," என்கிறார் மனோவிச். "புகைப்படங்களை மெருகூட்டுவது (retouching) 1850-களில் இருந்தே புகைப்படக் கலையின் ஒரு முக்கிய பகுதியாக இருந்து வருகிறது, அது இன்று மக்கள் செய்வதைப் போலவே இருந்தது, அடிப்படையில் முகத்தை அழகாக்குவது, சருமத்தை இன்னும் சிறப்பானதாக மாற்றுவது. ஆனால் அந்த இடத்தில் இல்லாத புதிய விவரங்களைத் தானாகவே சேர்ப்பது போன்ற விஷயங்கள் முற்றிலும் புதியவை என்று நான் உணர்கிறேன்... சில வழிகளில், இது இன்னும் புகைப்படக்கலைதான். சில வழிகளில், இது வேறு ஏதோ ஒன்று."
இது வெறும் தத்துவப் பிரச்னை மட்டுமல்ல. ஏஐ-ஆல் திருத்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தவறான நினைவுகளை உருவாக்கலாம் அல்லது நமது சொந்த உடலைப் பற்றி நாம் எப்படி நினைக்கிறோம் என்பதை மாற்றலாம் என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
அமெரிக்கத் தயாரிப்பாளர்கள் கூட செயற்கை நுண்ணறிவு புகைப்படக் கலையில் குறிப்பிடத்தக்க போக்குகளைப் பிரதிபலிக்கும் அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். உதாரணமாக, கூகுள் பிக்சல் போன்களில் "பெஸ்ட் டேக்" (என்ற அம்சம் உள்ளது. யாராவது கண்களை மூடிய அல்லது சிரிக்க மறந்த ஒரு குழுப் புகைப்படத்தை நாம் அனைவரும் எடுத்திருப்போம். (பொதுவாக அது நானாகத்தான் இருப்பேன், எனக்கு போஸ் கொடுக்கத் தெரியாது.) கூகுளின் பெஸ்ட் டேக் மூலம், நீங்கள் பல படங்களை எடுத்து, பின்னர் ஒரு இறுதிப் படத்திற்காக வெவ்வேறு ஷாட்களில் இருந்து அழகான முகங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
அது ஒரு நல்ல படமாக இருக்கலாம், ஆனால் அது ஒருபோதும் நிகழாத ஒரு தருணத்தின் புகைப்படம். மறுபுறம், "நீங்கள் இந்தத் தருணத்தை இப்படித்தான் நினைவில் கொள்ள விரும்புகிறீர்கள்," என்கிறார் மான்டியுக். எல்லாவற்றிற்கும் மேலாக, இது ஒரு குழுப் புகைப்படம், குற்றத்திற்கான ஆதாரம் அல்ல என்று அவர் கூறுகிறார்.
"பிக்சல் கேமராவை நாங்கள் எவ்வாறு உருவாக்குகிறோம் என்பதில் நம்பகத்தன்மை எப்போதும் ஒரு முக்கிய கொள்கையாக இருந்து வருகிறது," என்று கூகுள் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.
"இறுதியில், நாங்கள் ஆர்வமுள்ள புகைப்படக் கலைஞர்களின் குழு. மொபைல் கேமராக்கள் மூலம் மக்கள் (எங்களை உள்ளடக்கியே ) எப்போதும் செய்ய விரும்புவதைச் சாத்தியமாக்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்."
'ரா' (raw) புகைப்படத்தை எப்படி பார்ப்பது?
உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் நீங்கள் ஹெச்டிஆர் அம்சத்தை முடக்கலாம், பியூட்டி ஃபில்டர்களைச் செயலிழக்கச் செய்யலாம் மற்றும் உண்மையான (ஆனால் அவ்வளவு அழகாக இல்லாத) சந்திர புகைப்படங்கள் வேண்டுமென்றால் சாம்சங்கின் ஸீன் ஆப்டிமைசர் அமைப்பை அணைத்து வைக்கலாம். ஆனால் கேமரா சென்சார்களிலிருந்து நேரடியாக வரும், செயற்கை நுண்ணறிவால் தீண்டப்படாத தூய படம் உங்களுக்கு வேண்டுமென்றால், நீங்கள் கூடுதல் படிகளை எடுக்க வேண்டும்.
புதிய சாம்சங் போன்களில் உள்ள 'ப்ரோ மோட்' (Pro Mode) அமைப்பு முற்றிலும் அலங்காரமற்ற, அழகுபடுத்தாத புகைப்படங்களை எடுக்கிறது. பெயர் அவ்வாறு இருந்தாலும், ஐபோனின் 'ப்ரோ ரா' (ProRAW) அம்சங்களில் (ப்ரோ மாடல்களில் மட்டுமே கிடைக்கும்) சில செயற்கை நுண்ணறிவு செயலாக்கங்கள் அடங்கும். உண்மையிலேயே 'ரா' ஐபோன் புகைப்படங்களுக்கு, மூன்றாம் தரப்பு செயலிகளில் (third-party app) சிறப்பு அமைப்புகள் உங்களுக்குத் தேவை. VSCO கேப்சர் மற்றும் அடோப் லைட்ரூம் ஆகியவை சில பிரபலமான இலவச தேர்வுகளாகும்.
நீங்கள் பெறுவது பாரம்பரிய அர்த்தத்தில் அழகாக இருக்காது. யாரும் 'ரா' படங்களை மறைக்க முயற்சிக்கவில்லை, அவை பெரும்பாலான சாதாரண மக்களுக்கு அவ்வளவு பயனுள்ளதாக இருப்பதில்லை (இருப்பினும் தொழில்முறை புகைப்படக் கலைஞர்கள் அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்). அதில் வண்ணங்கள் சரியாகத் தெரியாமல் இருக்கலாம், அது மென்மையாகவும் ஃபோகஸ் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் உங்களுக்குப் பிடிக்கும் என்றால், 'ரா' புகைப்படங்கள் ஒரு "ரெட்ரோ பாணியில் மோசமான" உணர்வைக் கொடுக்கும்.
இருப்பினும், கொஞ்சம் 'ரா' புகைப்படக் கலை உங்கள் நேரத்திற்குத் தகுந்தது என்று நம்புபவர்களில் மனோவிச்சும் ஒருவர். "உங்கள் போன் பொதுவாக என்ன செய்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவும், உங்கள் புகைப்படங்கள் சரியாக என்ன, அவை எதைப் பிரதிபலிக்கின்றன என்பதைப் பற்றிய தெளிவான உணர்வைப் பெறவும் இது உதவும்," என்கிறார் மனோவிச்.
தாமஸ் ஜெர்மைன் பிபிசியின் மூத்த தொழில்நுட்ப பத்திரிகையாளர் மற்றும் வாராந்திர கட்டுரை பகுதியான 'கீப்பிங் டேப்ஸ்'-ன் ஆசிரியர் ஆவார். இது டிஜிட்டல் உலகில் பயணிப்பதற்கும் நமது சாதனங்களுடன் சிறந்த உறவை உருவாக்குவதற்குமான வழிகாட்டியாகும்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு