போர்ச்சுகலுக்கு எதிராக கடைசி நிமிடத்தில் குரோஷியா அடித்த 'கோல்' நிராகரிக்கப்பட்டது ஏன்?

போர்ச்சுகல் - குரோஷியா, உலகக்கோப்பை கால்பந்து 2026, ரொனால்டோ, மோட்ரிச்

பட மூலாதாரம், Justin Setterfield/Getty Images

    • எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றுப் போட்டியில் குரோஷியாவை 2-1 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது போர்ச்சுகல் அணி.

போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ அல்லது குரோஷிய கேப்டன் லூகா மோட்ரிச் இருவரில் யார் உலகக் கோப்பையில் தொடரப்போவது, யார் வெளியேறப்போவது என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாகக் காத்திருந்தார்கள்.

ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் குரோஷியா கோலடித்து முன்னிலை பெற, 68வது நிமிடத்திலும், ஸ்டாப்பேஜ் டைமின் 4வது நிமிடத்திலும் கோலடித்து வெற்றி பெற்றது போர்ச்சுகல். இதன் மூலம் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தகுதி பெற்றது போர்ச்சுகல். அந்தச் சுற்றில் போர்ச்சுகல் அணி ஸ்பெயினை எதிர்கொள்கிறது.

இந்தப் போட்டியில் கோலடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒருபக்கம் சாதனை படைக்க, கடைசி நிமிடத்தில் குரோஷியா அணி அடித்த கோல் ஆஃப்சைட் என்று கூறி நிராகரிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஸ்டாப்பேஜ் டைமின் 13வது நிமிடத்தில் குரோஷிய வீரர் ஜாஸ்கோ குவார்டியோல் அடித்த கோல், ஆஃப் சைட் காரணமாக நிராகரிக்கப்பட்டது தற்போது பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.

போர்ச்சுகல் - குரோஷியா, உலகக்கோப்பை கால்பந்து 2026, ரொனால்டோ, மோட்ரிச்

பட மூலாதாரம், Justin Setterfield/Getty Images

ரொனால்டோ சாதனையும் போர்ச்சுகல் வெற்றியும்

டொரான்டோ ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே பந்தைத் தங்கள் கட்டுக்குள்ளேயே வைத்திருந்தது போர்ச்சுகல் அணி. ஆனால், லீக் சுற்றைப் போல் அவர்களால் அதை வாய்ப்புகளாகவோ, கோல்களாகவோ மாற்ற முடியவில்லை. ஃபிஃபா தரவுகளின்படி இந்தப் போட்டியில் போர்ச்சுகல் 51% நேரமும், குரோஷியா 39% நேரமும் பந்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் (10% நேரம் இரு அணிகளும் போட்டியிட்டிருந்தன) வைத்திருந்தன. அதிக நேரம் பந்தை வைத்திருந்த போர்ச்சுகல் அணி கோல் நோக்கி செய்த முயற்சிகள் 3. குரோஷியா செய்ததோ 6.

ஒருபக்கம் போர்ச்சுகல் தங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் தடுமாற, குரோஷிய அணி ஒவ்வொரு வாய்ப்பிலும் சவால் கொடுத்தது.. அதன் விளைவாக 53வது நிமிடத்தில் அந்த அணியின் அனுபவ வீரர் இவான் பெரிசிச் கோலடித்தார். இடது விங்கில் கிடைத்த இடைவெளியை நன்றாகப் பயன்படுத்தி அவர் தன் அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார்.

போர்ச்சுகல் பின்தங்கியதால் இது கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கடைசிப் போட்டியாக மாறிவிடுமோ என்று அவரது ரசிகர்கள் கவலைப்பட்ட ஆரம்பித்தனர். அப்படிப்பட்ட நிலையில், 61வது நிமிடத்தில் அட்டகாசமாக ஒரு கோலடித்தார் ரொனால்டோ. ஜோ கன்சலோ தங்கள் பாதியில் இருந்து கொடுத்த பந்தை தன் அற்புதமான 'முதல் டச்' மூலம் கட்டுப்படுத்தி இரண்டாவது டச்சில் லாவகமாக கோலாக்கினார் அவர். ஆனால், அவர் ஆஃப் சைட் பொசிஷனால் இருந்ததாக உடனடியாக அந்த கோல் நிராகரிக்கப்பட்டது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இருந்தாலும், அடுத்த 6 நிமிடங்கள் கழித்து அந்த அணிக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தது. போர்ச்சுகலுக்குக் கிடைத்த கார்னர் வாய்ப்பை, பாக்சுக்குள் அனுப்பினார் நூனோ மெண்டஸ். அந்தப் பந்தை நோக்கிச் சென்ற போர்ச்சுகல் வீரர் ரெனாடோ வேகாவை, குரோஷியாவின் நிகோலா விலாசிச் ஃபவுல் செய்ய, பெனால்டி வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் பெனால்டி வழங்கப்படாத நேரத்தில், விஏஆர் (VAR - வீடியோ அசிஸ்டன்ட் ரெஃப்ரீ) தலையிட்டு கள நடுவரை பரிசோதிக்கச் சொல்லியது. அது ஃபவுல் தானே என்பதிலேயே பல கருத்துகள் நிலவிய நிலையில், நடுவர் எஸ்பென் எஸ்காஸ் அதைப் பெனால்டி என்றார். அப்போதே அந்த ஃபவுல் பற்றி பல விவாதங்கள் எழுந்தன. குரோஷிய வீரர்களும் தொடர்ச்சியாக முறையிட்டார்கள்.

அந்த சலசலப்புகளுக்கு நடுவே 68வது நிமிடத்தில் அந்த பெனால்டியை கோலாக்கி ஆட்டத்தை சமனாக்கினார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. தன்னுடைய 6வது உலகக் கோப்பை தொடரில் விளையாடும் ரொனால்டோ, உலகக் கோப்பையின் நாக் அவுட் சுற்றில் அடிக்கும் முதல் கோல் இதுதான். இதன்மூலம் ஃபிஃபா உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றில் அதிக வயதில் கோலடித்தவர் என்ற பெருமை பெற்றார் ரொனால்டோ.

போர்ச்சுகல் - குரோஷியா, உலகக்கோப்பை கால்பந்து 2026, ரொனால்டோ, மோட்ரிச்

பட மூலாதாரம், Patrick Smith - FIFA/FIFA via Getty Images

அந்த கோலுக்குப் பிறகு குரோஷிய அணி ஆட்டத்தில் தங்கள் பிடியை இறுக்கியது. அந்த அணி தொடர்ந்து வாய்ப்புகளை உருவாக்கியது. அதன் விளைவாக 80வது நிமிடத்தில் அந்த அணியின் பீட்டர் சுசிச் கோலடித்தார். ஆனால், அந்த கோலும் ஆஃப் சைட் காரணமாக நிராகரிக்கப்பட்டது.

முந்தைய போட்டிகளைப் போலவே நடுகளத்தில் போர்ச்சுகல் அணி ஒரு பெரும் வெளியை விட, குரோஷிய வீரர்கள் அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். அதுமட்டுமல்லாமல், போர்ச்சுகல் அணி பின்தங்கியிருந்தபோது முதல் கோலை எதிர்நோக்கி அந்த அணியின் பயிற்சியாளர் ராபர்டோ மார்டினஸ் ஒரேயடியாக 4 மாற்றங்கள் செய்தார். அதனால், தங்கள் கடைசி மாற்றத்தில் ஒரு கூடுதல் நடுகள வீரரை எடுத்துவர, ரொனால்டோவை வெளியே எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. 81வது நிமிடத்தில் ரூபன் நெவஸ் களமிறங்க, தன் உலகக் கோப்பை எதிர்காலம் பற்றிய உறுதி இல்லாமல் வெளியேறினார் ரொனால்டோ.

குரோஷிய அணி கடைசி கட்டத்தில் வாய்ப்புகளை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்க, ஸ்டாப்பேஜ் டைமின் 4வது நிமிடத்தில் கோலடித்து போர்ச்சுகல் அணிக்கு வெற்றி நம்பிக்கை ஏற்படுத்திக் கொடுத்தார் கொன்சாலோ ராமோஸ். இடது விங்கில் இருந்து ரஃபேல் லயோ கொடுத்த கிராஸை பாக்சுக்குள் இருந்த ராமோஸ் ஹெட்டர் மூலம் கோலாக்கினார். இந்த கோல், அந்த அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேற வழிவகுத்தது.

போர்ச்சுகல் - குரோஷியா, உலகக்கோப்பை கால்பந்து 2026, ரொனால்டோ, மோட்ரிச்

பட மூலாதாரம், Mattia Ozbot/Getty Images

குரோஷியாவின் கோல் நிராகரிக்கப்பட்டது ஏன்?

வழக்கமாக ஒவ்வொரு பாதி முடியும்போது, ஆட்டம் நடுவே நிறுத்தப்பட்டதற்கெல்லாம் ஈடுகட்டும் விதத்தில் கூடுதல் சில நிமிடங்கள் வழங்கப்படும். அது ஸ்டாப்பேஜ் டைம் அல்லது அடிஷனல் டைம் என்று சொல்லப்படும். இந்தப் போட்டியின் இரண்டாவது பாதியில் 2 கோல்கள், 2 ஆஃப் சைட் கோல் சோதனைகள், ஒரு பெனால்டி சோதனை, பல வீரர் மாற்றஙகள் நிகழ்ந்ததால் 10 நிமிடங்கள் ஸ்டாப்பேஜ் டைம் வழங்கப்பட்டது. அந்த ஸ்டாப்பேஜ் டைமின் 4வது நிமிடத்தில் தான் கொன்சாலோ ராமோஸ் கோலடித்தார். அந்த கோல், அதன்பிறகான கொண்டாட்டங்கள் நீடித்ததால் கள நடுவர், ஆட்டம் அந்த 10 நிமிடத்தைத் தாண்டிச் செல்லவும் அனுமதி அளித்தார்.

பொதுவாக இப்படியான நேரங்களில் நடுவர்கள் ஒரு நிமிடமோ அல்லது இரண்டு நிமிடங்களோ அனுமதிப்பார். அதனால், வெளியே இருந்த போர்ச்சுகல் வீரர்கள் நடுவர் விசில் ஊதுவதற்காகக் காத்திருந்தார்கள். ஆனால், நடுவரோ ஸ்டாப்பேஜ் டைமின் 12வது நிமிடம் கடந்தும் ஆட்டம் செல்ல அனுமதித்தார். சரியாக அதைப் பயன்படுத்தி குரோஷிய வீரர் குவார்டியோல் கோலடித்தார். ஆட்டம் 2-2 என ஆனது. குரோஷிய வீரர்கள் கொண்டாட்டத்தில் திளைத்திருக்க போர்ச்சுகல் வீரர்கள் ஸ்தம்பித்து நின்றிருந்தார்கள். ஆனால், மீண்டும் தலையிட்ட விஏஆர், கள நடுவரை இந்த கோலை பரிசீலிக்க அழைத்தது. அதைப் பரிசீலித்த நடுவர், மரியோ பசாலிச் ஆஃப்சைட் பொசிஷனில் இருந்ததாகச் சொல்லி கோலை நிராகரித்தார். அது பெரும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது.

போர்ச்சுகல் - குரோஷியா, உலகக்கோப்பை கால்பந்து 2026, ரொனால்டோ, மோட்ரிச்

பட மூலாதாரம், Mattia Ozbot/Getty Images

குரோஷிய வீரர் பெரிசிச் பந்தை கிராஸ் செய்ய, அந்தப் பந்து இகோர் மாடனோவிச் தலையை உரசி, பின்னர் போர்ச்சுகல் டிஃபண்டர் வேகா தலையில் பட்டு, பசாலிச்சிடம் சென்றது. அதை பசாலிச் கட்டுப்படுத்தி மையப்பகுதிக்கு அனுப்ப, குவார்டியோல் அதை கோலாக்கினார். இங்கே மாடனோவிச் தலையில் பந்து பட்டபோது பசாலிச் ஆஃப் சைட் பொசிஷனில் தான் இருந்தார்.

ஆனாலும், இந்த விஷயம் சர்ச்சைக்குள்ளாவதற்கு 2 காரணங்கள் இருக்கின்றன. ஒன்று இகோர் மாடனோவிச் தலையில் பந்து பட்டதா என்பது, இன்னொன்று அப்படிப் பட்டிருந்தாலும், அடுத்ததாக போர்ச்சுகல் வீரர் வேகா மீதும் பந்து பட்டிருந்தது. அதனால் பசாலிச் ஆஃப் சைட் பொசிஷனில் இருந்தது செல்லுமா என்பதும் கேள்வியானது.

இகோர் மாடனோவிச் தலையில் பந்து உரசிச் சென்றது வெளிப்படையாகத் தெரியவில்லை. அதனால், கிரிக்கெட்டில் வருவதுபோல் ஸ்னிக்கோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய விஏஆர், கள நடுவரையும் அதைப் பரிசீலிக்கச் சொல்லியது. அதைப் பரிசீலித்த நடுவர் பந்து இகோர் மாடனோவிச் தலையில் உரசியதை உறுதி செய்தார்.

அடுத்த கேள்வி, வேகா மீது பந்து பட்டதால் அது ஆஃப் சைட் ஆகுமா என்பது. ஆஃப் சைட் விதியைப் பொறுத்தவரை எதிரணி வீரர் பந்தை வேண்டுமென்றே தொட்டிருந்தாலோ அடித்திருந்தாலோ தான் ஆஃப் சைடில் ஒரு வீரர் இருந்தாலும் அது ஆன் சைட் என்று கருதப்படும். இதுவே எதிரணி வீரர் மீது தெரியாமல் பட்டு வந்தாலோ, அவர் பந்தைத் தடுக்கச் செல்லும்போது அவர் மீது பட்டு திசைதிரும்பி வந்திருந்தாலோ, அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. அந்த வீரர் ஆஃப் சைட் பொசிஷனில் இருந்ததாகவே கருதப்படும்.

போர்ச்சுகல் - குரோஷியா, உலகக்கோப்பை கால்பந்து 2026, ரொனால்டோ, மோட்ரிச்

பட மூலாதாரம், Patrick Smith - FIFA/FIFA via Getty Images

அந்த வகையில் இந்தத் தருணத்தில் வேகா குனியும்போது இகோர் மாடனோவிச் மீது பட்டு வந்த பந்து, வேகா மீதும் தெரியாமல் பட்டுச் சென்றிருக்கிறது என்றே கருதப்பட்டது. வேகா பந்தை வேண்டுமென்றே தொட்டாரா என்பதை உறுதி செய்யத்தான் விஏஆர், கள நடுவரை பரிசீலனைக்கு அழைத்தது. வேகா மீது பந்து எதேச்சையாகவே பட்டிருக்கிறது என்ற முடிவுக்கு வந்தார் கள நடுவர். அதனால், பசாலிச் ஆஃப் சைட் பொசிஷனில் இருந்ததாகவே கருதப்பட்டு அந்த கோல் நிராகரிக்கப்பட்டது.

இதுபோன்ற தருணங்களில் ஒவ்வொருவரின் பார்வையும் வேறு வேறு இருக்கும். ஒருவர் வேகா வேண்டுமென்றே பந்தைத் தொட முயற்சி செய்தார் என்று சொல்வார்கள், சிலர் அதை மறுப்பார்கள். இகோர் மாடனோவிச் பந்தைத் தொட்டதும் அப்படித்தான். அனைவரின் பார்வையுமே மாறும். இதுபோன்ற தருணங்களில் கள நடுவரின் பார்வையே இறுதி முடிவைத் தீர்மானிக்கின்றன. அதனால் தான் விஏஆர் கூட தாங்களே முடிவெடுக்காமல் நடுவரை பரிசீலனைக்கு அழைத்து அவரையே முடிவெடுக்க வைத்தன. ஒவ்வொருவரின் பார்வையும் மாறும் என்பதால், இது பெரும் விவாதமாக வெடித்திருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.