எம்ஜிஆர் காலம் முதல் எடப்பாடி பழனிசாமி காலம் வரை - 54 ஆண்டுகளில் அதிமுக சந்தித்த பிளவுகள்

பட மூலாதாரம், EPS/CV Shanmugam
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு தரப்பினர் விரும்புவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் (அதிமுக சின்னத்தில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் உள்பட) வெற்றி பெற்றிருந்தது. சமீபத்திய அரசியல் நிகழ்வுகள், சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட அதிமுகவிற்குள் ஏற்பட்டுள்ள பிளவையே காட்டுகின்றன.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பெரும்பான்மையைப் பெற தவெக முயன்று வந்த சூழலில் கூட்டணி ஆட்சி பற்றிய பல்வேறு பேச்சுக்களும் நிலவி வந்தன.
ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், "தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்." என எக்ஸ் பதிவின் மூலம் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன் பிறகு திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது.
சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தனியாக ஆலோசனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகின. சட்டப்பேரவையில் பதவியேற்க வந்த சி.வி.சண்முகம் பதவியேற்பில் பங்கெடுக்காமல் பாதியிலேயே திரும்பிவிட்டார். பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்காக அவர் பெயர் அழைக்கப்பட்டும் பங்கேற்கவில்லை. பின்னர் பேரவைத் தலைவர் அறையில் சி.வி.சண்முகம் பதவியேற்றார்.
மறுபுறம் அதிமுகவிற்குள் வேறு விதமான நகர்வுகள் அரங்கேறின. அதிமுகவின் சட்டமன்றக் குழுவின் தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர் நியமனம் தொடர்பாக ஓ.எஸ்.மணியன் தலைமையிலான எம்.எல்.ஏக்களும், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான எம்.எல்.ஏக்களும் தற்காலிக சட்டப்பேரவைத் தலைவரிடம் தனித்தனியே கடிதம் அளித்தனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்.எல்.ஏ ஓ.எஸ் மணியன் தவெக ஆட்சி அமைக்க அதிமுக ஆதரவு அளிக்காது எனத் தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழலில் செவ்வாய் கிழமை காலை செய்தியாளர்களைச் சந்தித்த சிவி சண்முகம், தவெக அரசுக்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார். மேலும் திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாம் என எடப்பாடி பழனிசாமி கூறியதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சிவி சண்முகம், "சட்டப்பேரவை அதிமுக குழு தலைவராக எஸ்.பி.வேலுமணி, கொறடாவாக சி.விஜயபாஸ்கர், துணை தலைவராக ஹரி, செயலாளராக காமராஜ் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக தற்காலிக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்திருக்கிறோம்." எனத் தெரிவித்தார்.
அதிமுகவில் இருவேறு அணிகள் இயங்கி வருவதையே சமீபத்திய நகர்வுகள் உணர்த்துகின்றன. இது அதிமுகவிற்குள் மற்றுமொரு பிளவை ஏற்படுத்துமா என்கிற விவாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு பிளவுகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ராமச்சந்திரன் காலம் தொட்டே அதிமுக தலைவர்கள் தனியாகவும் அல்லது ஓர் அணியாகவும் பிரிந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
அதிமுகவின் முதல் பிளவு

பட மூலாதாரம், ADMK
1972-ஆம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்து அதிமுகவைத் தொடங்கிய எம்.ஜி.ஆர் 1977-இல் ஆட்சியைப் பிடித்தார்.
அதிமுகவின் தொடக்க காலத்திலிருந்தே எம்ஜிஆருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர் எஸ்.டி.எஸ் என்கிற எஸ்.டி.சோமசுந்தரம். இருவருக்கும் இடையில் பிணக்கு ஏற்பட, 1984-ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார் எஸ்.டி.எஸ்.
இதையடுத்து, எஸ்.டி.சோமசுந்தரம், அதே ஆண்டில் 'நமது கழகம்' என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி தேர்தல்களையும் சந்தித்தார்.
பின்னர் 1987-ஆம் ஆண்டு எம்ஜிஆரின் அழைப்பை ஏற்று நமது கழகத்தை அதிமுகவுடன் இணைத்தார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் சட்டத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் அமைச்சராகச் செயல்பட்டார்.
எம்.ஜி.ஆர் மறைவு, ஜெயலலிதா - ஜானகி அணி உருவாக்கம்

முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர், உடல்நலக்குறைவால் 1987-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அதிமுக ஜானகி அணி - ஜெயலலிதா அணி என்று இரண்டாகப் பிளவுபட்டது.
இரு அணிகளும் போட்டி பொதுக் குழு கூட்டங்களை அறிவித்தன. மொத்தமுள்ள 130 எம்.எல்.ஏக்களில் 33 பேர் ஜெயலலிதா அணியில் இருந்தனர். அப்போதைய ஆளுநர் ஜானகிக்கு முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றபோது திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு செய்தன.
அப்போதைய சட்டப்பேரவைத் தலைவர் பி.எச்.பாண்டியன் ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்தார். வாக்கெடுப்பில் ஜானகி அணி வெற்றி பெற்றதாக அறிவித்தார். சட்டப்பேரவை சண்டைக் களமாகியது. இதையடுத்து ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் இரு அணிகளும் தனித்தனியாக போட்டியிட்டன. திமுக பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது.
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலலிதா அணி 27 இடங்களிலும் இரட்டைப் புறா சின்னத்தில் போட்டியிட்ட ஜானகி அணி 2 இடங்களில் மட்டுமே வென்றது. தேர்தலுக்குப் பிறகு இரு அணிகளும் ஜெயலலிதா தலைமையின் கீழ் இணைந்தன.
ஆர்.எம்.வீரப்பன், எஸ்.திருநாவுக்கரசர் தொடங்கிய தனிக்கட்சிகள்

பட மூலாதாரம், Facebook/Su.Thirunavukkarasar
கடந்த 1995-ஆம் ஆண்டு ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்த பாட்ஷா பட வெள்ளி விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், வெடிகுண்டு கலாசாரம் பற்றியும், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி குறித்தும் விமர்சனம் செய்தார்.
அந்த மேடையில் அமர்ந்திருந்தும் மவுனமாக இருந்த ஆர்.எம்.வீரப்பன் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, எம்ஜிஆர் கழகம் என்ற கட்சியை ஆர்.எம்.வீரப்பன் தொடங்கினார்.
அதிமுக ஜெயலலிதா அணியில் இருந்த அறந்தாங்கி எஸ்.திருநாவுக்கரசர் ஜெயலலிதாவுடன் முரண்பட்டு, கடந்த 1990-ஆம் ஆண்டு 'அண்ணா புரட்சித் தலைவர் தமிழக முன்னேற்றக் கழகம்' என்று தனிக்கட்சி ஆரம்பித்தார்.
1996-இல் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டார். அடுத்து, நீக்கப்பட்டார். பின்னர் 'எம்ஜிஆர் அதிமுக'வைத் தொடங்கினார். கடந்த 2004-ஆம் ஆண்டு அந்த கட்சியை பாஜகவுடன் இணைத்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாநிலத் தலைவராகி மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
ஓ.பி.எஸ் பிளவுகள்

பட மூலாதாரம், Facebook/O Panneerselvam
2016-ஆம் டிசம்பர் மாதம் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார் ஓ.பி.எஸ். அப்போது அதிமுக பொதுச் செயலாளராக இருந்த சசிகலா முதலமைச்சராகப் பதவியேற்பார் எனச் சொல்லப்பட்ட நிலையில் அவருக்கு எதிராக ஓ.பி.எஸ் போர்க்கொடி தூக்கினார்.
சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறை சென்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். ஈ.பி.எஸ் அரசு மீது சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பி.எஸ் மற்றும் அவருக்கு ஆதரவாக இருந்த 11 எம்.எல்.ஏக்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
இதனைத் தொடர்ந்தும் ஓ.பி.எஸ் தலைமையிலான எம்.எல்.ஏக்கள் தனி அணியாகவே செயல்பட்டு வந்தனர். பின்னர் அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் இரு தரப்பும் மீண்டும் ஒன்றாகச் சேர்ந்தன. ஓ.பி.எஸ் ஆட்சியில் துணை முதலமைச்சராகவும் கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இணைந்தார்.
2017 செப்டம்பர் மாதத்தில் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஈ.பி.எஸ் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் ஆளுநரிடம் கடிதம் வழங்கினர். அப்போது சட்டப்பேரவைத் தலைவராக இருந்த தனபால் 18 எம்.எல்.ஏக்களையும் தகுதிநீக்கம் செய்தார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்கிற கட்சியைத் தொடங்கிய தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற்றிருந்தார்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலை மற்றும் 2022 உள்ளாட்சித் தேர்தல் தோல்விகளைத் தொடர்ந்து அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கான கோரிக்கை வலுத்தது. ஓ.பன்னீர்செல்வம் அதற்கு எதிராக இருந்த நிலையில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
ஓ.பி.எஸ் தலைமையில் வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் இணைந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்கிற பெயரில் இயங்கி வந்தனர்.
2024 மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆதரவில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட ஓ.பி.எஸ் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திமுகவில் இணைந்து எம்.எல்.ஏ ஆனார்.
செங்கோட்டையன் நீக்கம்

பட மூலாதாரம், Facebook/Sengottaiyan
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா, தினகரன் மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோரைச் சந்தித்ததற்காக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று தற்போது தவெக அரசில் அமைச்சராகவும் இருக்கிறார்.
புதிய கட்சி தொடங்கிய சசிகலா
சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக் காலம் முடிந்து 2021 பிப்ரவரியில் விடுதலை ஆன சசிகலா அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தார். ஆனால் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அதன் பின்னர் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும் அதிமுக தொடர்பாக அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டு வந்தார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்கிற கட்சியைத் தொடங்கினார்.
எம்ஜிஆரைப் போலவே தொண்டர் தொடங்கிய கட்சியில் தான் இணைந்திருப்பதாக சசிகலா கூறினார். பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































