சென்னையை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றை சன்ரைசர்ஸ் உறுதி செய்தது எப்படி?

பட மூலாதாரம், ANI
ஐபிஎல் 2026 சீசனின் 63வது போட்டியில் இன்று (மே 18) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ். சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
இந்த சீசன் சேப்பாகத்தில் நடைபெறும் கடைசி ஐபிஎல் போட்டி இது.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. அந்த அணியின் பிளேயிங் லெவனில் 1 மாற்றம் செய்யப்பட்டது. குர்ஜப்னீத் சிங் நீக்கப்பட்டு, அகீல் ஹொசைன் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இந்தப் போட்டியில் எம்.எஸ்.தோனி விளையாடுவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில், அவர் இன்றும் களமிறங்கவில்லை. "தோனி இங்கு மைதானத்தில் இருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக அவர் போட்டியில் விளையாடும் அளவுக்கு ஃபிட்டாக இல்லை." என்று சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸின்போது தெரிவித்தார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டெவால் பிரெவிஸ் 44 ரன்கள் எடுத்தார். சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அடுத்து விளையாடிய சன்ரைசர்ஸ் 19 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இஷான் கிஷன் 70 ரன்கள் அடித்து தன் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
இந்தப் போட்டியின் முடிவால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறினர். 13 போட்டிகளில் 12 புள்ளிகள் பெற்றிருக்கும் சூப்பர் கிங்ஸின் பிளே ஆஃப் வாய்ப்பு கடினமாகியிருக்கிறது.
வேகம் குறைந்ததால் ஏற்பட்ட சவால்

பட மூலாதாரம், ANI
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்தப் போட்டியில் தொடக்கம் நன்றாக அமைந்தது. ஆட்டத்தின் முதல் பந்தையே நோ பாலாக வீசினார் நித்திஷ் குமார் ரெட்டி. அதனால், கிடைத்த 'ஃப்ரீ ஹிட்' வாய்ப்பில் சிக்ஸர் அடித்தார் சஞ்சு சாம்சன். மேலும், அவர் 2 பவுண்டரிகள் அடித்ததால் அந்த ஓவரில் 17 ரன்கள் கிடைத்தது.
அடுத்ததாக, பிரஃபுல் ஹிங்கே வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவருடைய கடைசி 3 பந்துகளிலுமே பவுண்டர்கள் அடித்தார் சாம்சன். அதனால், 2 ஓவர்கள் முடிவில் 30/0 என்ற நிலையில் இருந்தது சிஎஸ்கே.
இந்நிலையில், மூன்றாவது ஓவரை வீச வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ், சஞ்சு சாம்சனை வெளியேற்றினார். 13 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து வெளியேறினார் சாம்சன். அடுத்து களமிறங்கிய உர்வில் பட்டேல், அந்த ஓவரின் கடைசி 2 பந்துகளிலுமே சிக்ஸர்கள் விளாசினார். 3வது ஓவரின் முடிவில் 43/1 என்ற நிலையில் இருந்தது சூப்பர் கிங்ஸ்.
அதன்பிறகு தான் அந்த அணியின் ரன்ரேட் குறையத் தொடங்கியது. 4வது ஓவரை வீசிய இஷான் மலிங்கா 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 5வது ஓவரை வீசிய சகிப் ஹுசைன் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து உர்வில் விக்கெட்டை வீழ்த்தினார். உர்வில் 8 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
6வது ஓவரில் மலிங்கா 5 ரன்கள் மட்டும் கொடுக்க, பவர்பிளே முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.
இந்தப் போட்டி விளையாடப்பட்ட ஆடுகளம் மெதுவானதாக இருந்தது. அதனால், வேகம் குறைவாக வீசப்பட்ட பந்துகளில் பெரிய ஷாட்கள் அடிப்பது சிரமமாக இருந்தது. சன்ரைசர்ஸ் பௌலர்களும் வேகத்தைக் குறைத்துப் பந்துவீசி சிஎஸ்கே பேட்டர்களுக்கு சவால் கொடுத்தனர்.
எட்டாவது ஓவரில் பிரஃபுல் ஹிங்கே பந்துவீச்சில் 2 பவுண்டரிகளும், 1 சிக்ஸர்களும் அடித்த கார்த்திக் ஷர்மா, ஷிவாங் குமார் வீசிய 9வது ஓவரில் 1 சிக்ஸர் அடித்தார். அதனால் 9 ஓவர் முடிவில் 89/2 என்ற நிலையில் இருந்தது சிஎஸ்கே. அப்போது டைம் அவுட் எடுக்கப்பட்டது. முதல் 3 ஓவர்களில் 43 ரன்கள் எடுத்த அந்த அணி, அடுத்த 6 ஓவர்களில் 46 ரன்கள் தான் எடுத்தது.

பட மூலாதாரம், ANI
அணியை மீட்ட பிரெவிஸ் - துபே கூட்டணி
டைம் அவுட் முடிந்து வந்த முதல் ஓவரிலேயே கார்த்திக் ஷர்மா விக்கெட்டை வீழ்த்தினார் பேட் கம்மின்ஸ். 19 பந்துகள் சந்தித்த கார்த்திக் ஷர்மா 32 ரன்கள் எடுத்தார். தேவையான நேரத்தில் விக்கெட்டுகள் வீசிய கம்மின்ஸ், 12வது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டையும் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் வேகமாக ஆட முடியாமல் தடுமாறிய கெய்க்வாட், 21 பந்துகளை சந்தித்து 15 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
12 ஓவர்கள் முடிவில் 100/4 என்ற நிலையில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸுக்கு டெவால் பிரெவிஸ் - ஷிவம் துபே. 14வது ஓவரை நித்திஷ் குமார் ரெட்டி வேகமாகப் பந்துவீச, அதைப் பயன்படுத்தி துபே 1 பவுண்டரியும், பிரெவிஸ் 1 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரியும் அடித்தார். அந்த ஓவரில் 18 ரன்கள் அடிக்கப்பட்டது.
சீரான இடைவெளியில் அந்த பார்ட்னர்ஷிப் பவுண்டரியோ, சிக்ஸரோ அடிக்க சிஎஸ்கே ரன்ரேட் மெல்ல உயர்ந்தது. இந்த பார்ட்னர்ஷிப் 38 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தது. 44 ரன்கள் எடுத்த பிரெவிஸ், மலிங்காவின் பந்துவீச்சில் போல்டானார். துபேவும் 26 ரன்கள் எடுத்து சகிப் ஹுசைன் பந்துவீச்சில் போல்டானார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். சன்ரைசர்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
நெருக்கடி ஏற்படுத்திய சிஎஸ்கே பௌலர்கள்
சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இருவருக்கும் சூப்பர் கிங்ஸ் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசி நெருக்கடி ஏற்படுத்தினார்கள். முகேஷ் சவுத்ரி மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் முதல் இரு ஓவர்களில் சரியான லென்த் மற்றும் லைனில் பந்துவீசியதால் பெரிதாக ரன் வரவில்லை. குறிப்பாக டிராவிஸ் ஹெட் பந்து சரியாகப் படாத விரக்தியில் இருந்தார். அப்படியொரு நிலையில் முகேஷ் சவுத்ரி வீசிய மூன்றாவது ஓவரில் பந்தை அவர் தூக்கி அடிக்க முயற்சி செய்ய, டாப் எட்ஜ் ஆகி வெளியேறினார். அவர் 6 பந்துகளில் 6 ரன்களே எடுத்தார்.
அதன்பிறகு களமிறங்கிய இஷான் கிஷனுக்கு எட்ஜ் மூலமே இரண்டு பவுண்டரிகள் கிடைத்தன. அவ்வப்போது பவுண்டரிகள் கிடைத்தாலும், தொடர்ந்து டாப் பால்கள் வீசி சிஎஸ்கே பௌலர்கள் நெருக்கடி கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். அதனால், பவர்பிளேவில் 1 விக்கெட்டை இழந்து 45 ரன்களே எடுத்திருந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.
பவர்பிளே முடிந்ததும் சூப்பர் கிங்ஸ் ஸ்பின்னர்கள் அதே வேலையை செய்யத் தொடங்கினார்கள். ரன்ரேட்டை அதிகப்படுத்தவேண்டிய நெருக்கடியில் அகீல் ஹொசைன் வீசிய பந்தைத் தூக்கியடித்து பவுண்டரி எல்லையில் கேட்சாகி வெளியேறினார் அபிஷேக் ஷர்மா. அவர் 21 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.
அபிஷேக் ஷர்மா அவுட்டானபோது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஸ்கோர் 7.4 ஓவர்களில் 56/2. அவர்களின் ரன்ரேட் 7.3 ஆகத்தான் இருந்தது. இது சன்ரைசர்ஸ் அணிக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
வெற்று பெறவைத்த கிளாசன் - கிஷன் கூட்டணி

பட மூலாதாரம், ANI
நெருக்கடியான நிலையில் இருந்த சன்ரைசர்ஸ் அணிக்கு ஹென்ரிக் கிளாசன் - இஷான் கிஷன் கூட்டணி உயிர்ப்பூட்டியது. களமிறங்கியது முதல் கிளாசன் அதிரடியைக் கட்டவிழ்க்க, மறுபக்கம் நிதானமாக விளையாடி ரன்ரேட் உயர உதவினார் இஷான்.
நூர் அஹமது வீசிய 9வது ஓவரில் 1 பவுண்டரி அடித்து தன் அதிரடியைத் தொடங்கினார் கிளாசன். அகீல் ஹொசைன் வீசிய 10வது ஓவரிலும், நூர் அஹமது வீசிய 11வது ஓவரிலும் தலா 1 பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார் அவர். 11வது ஓவரின் முதல் பந்தில், கிளாசன் கொடுத்த கேட்ச் வாய்ப்பை டீப் ஃபைன் லெக் திசையில் நின்றிருந்த ஸ்பென்சன் ஜான்சன் தவறவிட்டார். அப்போது கிளாசன் 18 ரன்கள் தான் எடுத்திருந்தார்.
அதனால், உடனடியாக மீண்டும் வேகப்பந்துவீச்சின் பக்கம் திரும்பினார் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்.
வேகப்பந்துவீச்சாளர்கள் களமிறங்கியதும் இஷான் கிஷன் அதிரடி காட்டத் தொடங்கினார். ஸ்பென்சர் ஜான்சன் வீசிய வீசிய 12வது ஓவரில் ஒரு பவுண்டரி, அன்ஷுல் கம்போஜ் வீசிய 13வது ஓவரில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் என அவர் இன்னொரு பக்கம் அதிரடி காட்ட, சன்ரைசர்ஸ் அணியின் ரன்ரேட் நன்கு உயர்ந்தது.
ஸ்பின்னர்களின் ஓவரை சரிசெய்வதற்காக ஷிவம் துபேவுக்கு ஒரு ஓவர் கொடுத்தார் ருதுராஜ் கெய்க்வாட். ஆனால், அந்த ஓவரில் கிளாசன் இரு பவுண்டரிகள் அடிக்க 14 ரன்கள் வந்தது.
மீண்டும் 15வது ஓவரில் நூர் அஹமது வர, கிளாசன் ஸ்டம்பிங் முறையில் அவுட் ஆனார். பெரிய ஷாட் அடிக்க முயற்சி செய்து பந்தை அவர் விட்டுவிட, கண்ணிமைக்கும் நொடியில் அவரை ஸ்டம்பிங் செய்தார் சாம்சன். கிளாசன் இறங்கியெல்லாம் வரவில்லை, அவர் கால் காற்றில் இருந்த தருணத்தில் பந்தப் பிடித்தவுடனேயே ஸடம்புகளை சாம்சன் தகர்த்துவிட்டார்.
26 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார் கிளாசன். மூன்றாவது விக்கெட்டுக்கு ஹென்ரிக் கிளாசன், இஷான் கிஷன் ஜோடி 41 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தது.
கிளாசன் ஆட்டமிழந்த பிறகு இஷான் கிஷன் அணியை வெற்றிக்கு அழைத்துச்செல்ல வேண்டிய பொறுப்பை எடுத்துக்கொண்டார். நித்திஷ் குமார் ரெட்டியும் வெளியேறியிருந்தாலும் (11 ரன்கள்), கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி தன் அணியை நல்ல நிலைக்கு எடுத்துச் சென்றார் அவர். 37 பந்துகளில் அரைசதம் அடித்த இஷன், 47 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து 19வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
கடைசி கட்டத்தில் சலில் அரோரா மற்றும் ரவிச்சந்திரன் ஸ்மரன் போட்டியை முடித்துக் கொடுக்க, 19வது ஓவரின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 16 புள்ளிகள் பெற்றதோடு, பிளே ஆஃப் இடத்தையும் உறுதி செய்தது. இதற்குமேல் ராஜஸ்தான் ராயல்ஸால் மட்டுமே 16 புள்ளிகளைத் தொடமுடியும் என்பதால், ஏற்கெனவே 16 புள்ளிகள் பெற்றிருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. 13 போட்டிகளில் 12 புள்ளிகள் பெற்றிருக்கும் சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு மேலும் கடினமாகியிருக்கிறது.
பிளேயிங் லெவனில் யார்?
சென்னை சூப்பர் கிங்ஸ்
இந்தப் போட்டிக்கான சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. குர்ஜப்னீத் சிங்குக்குப் பதிலாக அகீல் ஹொசைன் சேர்க்கப்பட்டார்.
பிளேயிங் லெவன்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), உர்வில் பட்டேல், டெவால் பிரெவிஸ், கார்த்திக் ஷர்மா, ஷிவம் துபே, பிரஷாந்த் வீர், அகீல் ஹொசைன், அன்ஷுல் கம்போஜ், நூர் அஹமது, ஸ்பென்சர் ஜான்சன்.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: முகேஷ் சவுத்ரி, மேத்யூ ஷார்ட், சர்ஃபராஸ் கான், அமன் கான், குர்ஜப்னீத் சிங்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
இந்தப் போட்டிக்கான சன்ரைசர்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
பிளேயிங் லெவன்: அபிஷேக் ஷர்மா, இஷன் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹெய்ன்ரிக் கிளாசன், நித்திஷ் குமார் ரெட்டி, சலில் அரோரா, ஆர்.ஸ்மரன், பேட் கம்மின்ஸ், சகிப் ஹுசைன், ஷிவாங் குமார், இஷான் மலிங்கா, பிரஃபுல் ஹிங்கே.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: அனிகேத் வெர்மா, டிராவிஸ் ஹெட், லியாம் லிவிங்ஸ்டன், ஹர்ஷ் துபே, ஹர்ஷல் பட்டே.
































