டிரம்பின் சீன பயணம் இரு நாடுகளின் உறவுகளை எவ்வாறு மாற்றக்கூடும்?

    • எழுதியவர், அந்தோனி சர்ச்சர்
    • பதவி, வட அமெரிக்கச் செய்தியாளர்
    • எழுதியவர், லாரா பிக்கர்
    • பதவி, சீனா செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

சீனாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தியனன்மென் சதுக்கத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பு பல நாட்களாக பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஒரு சிறப்பு அணிவகுப்பு அல்லது ஒரு பெரிய திட்டமிடப்பட்ட நிகழ்வு நடைபெறவிருப்பதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. இந்த மாபெரும் நிகழ்விற்கான ஏற்பாடுகள் மெதுவாகத் தொடங்கினாலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்காக ஒரு பிரமாண்டமான வரவேற்பை அளிக்க சீனா தயாராக இருப்பதாகத் தெரிகிறது.

இந்தப் பயணத்தில் பேச்சுவார்த்தைகள், ஒரு விருந்து மற்றும் சொர்க்கத்தின் கோவிலுக்குச் செல்வது ஆகியவை அடங்கும்.

இந்தப் பயணம் நல்ல பலனைத் தரும் என்று டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகிய இருவரும் நம்புவார்கள்.

உலகின் மிக சக்திவாய்ந்த இரண்டு தலைவர்களுக்கு இடையிலான இந்த உச்சிமாநாடு, பல ஆண்டுகளில் நிகழவிருக்கும் மிக முக்கியமான சந்திப்புகளில் ஒன்றாக அமையவிருக்கிறது.

பல மாதங்களாக, அமெரிக்க-சீனா உறவுகளுக்கு டிரம்ப் பெரியளவில் முன்னுரிமை அளிக்கவில்லை. அவரது கவனம் இரானுடனான போர், மேற்கு அரைக்கோளத்தில் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் உள்நாட்டுக் கவலைகள் ஆகியவற்றின் மீதே இருந்தது. ஆனால் இந்த வாரம் அவை அனைத்தும் மாறுகிறது.

உலகளாவிய வர்த்தகத்தின் எதிர்காலம், தைவானில் அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களுக்கான போட்டி ஆகியவை அனைத்தும் தற்போது முக்கிய பங்காற்றுகின்றன.

பொருளாதார ரீதியாக, அமெரிக்காவுடனான தற்போதைய வர்த்தகப் போர் மற்றும் இரானில் நிலவும் மோதல் ஆகியவை ஷி ஜின்பிங்கிற்கு கெட்ட செய்தியாக இருக்கலாம். ஆனால் கருத்தியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அவை ஒரு பரிசு போன்றவை, மேலும் தான் வலுவான நிலையில் இருப்பதாக அவர் உணர்வார்.

இந்தப் பயணம், வரும் ஆண்டுகளில் எதிர்கால ஒத்துழைப்புக்கோ அல்லது மோதலுக்கோ அடித்தளம் அமைக்கக்கூடும்.

இரான் பிரச்னை

செவ்வாயன்று சீனா புறப்படுவதற்கு முன்னதாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இரான் குறித்து சீனத் தலைவருடன் "நீண்ட நேரம் பேசப்போவதாக" தெரிவித்தார்.

தற்போது மூன்றாவது மாதமாக நீடிக்கும் இந்தப் போரில், அமைதி ஏற்படுத்தும் நாடாக மெதுவாகத் தலையிட சீனா முயன்று வருகிறது. இரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரில் பாகிஸ்தானுடன் இணைந்து சீனா ஒரு மத்தியஸ்தராக இணைந்துள்ளது.

சீனா மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள், போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதையும், ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பதையும் நோக்கமாகக் கொண்டு மார்ச் மாதத்தில் ஒரு ஐந்து அம்சத் திட்டத்தை முன்வைத்தனர். மேலும் திரைமறைவில், சீன அதிகாரிகள் இரானியத் தரப்பை பேச்சுவார்த்தை மேசைக்கு வருமாறு மெதுவாகத் தூண்டி வருகின்றனர்.

இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதில் சீனா ஆர்வமாக உள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நாட்டின் பொருளாதாரம் ஏற்கனவே மந்தமான வளர்ச்சி மற்றும் வேலையின்மையுடன் போராடி வருகிறது.

உயர்ந்து வரும் எண்ணெய் விலைகள், ஜவுளி முதல் பிளாஸ்டிக் வரை பெட்ரோ கெமிக்கல் பொருட்களால் தயாரிக்கப்படும் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளன. சீனாவில் உள்ள சில உற்பத்தியாளர்களுக்கு, உற்பத்திச் செலவு 20% வரை அதிகரித்துள்ளது.

சீனாவிடம் எண்ணெய் இருப்பு உள்ளது .மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சார கார்களில் சீனா பெற்றுள்ள முன்னிலை, எரிபொருள் நெருக்கடியின் மோசமான விளைவுகளிலிருந்து அதைப் பாதுகாத்துள்ளது.

ஆனால் ஏற்றுமதியை பெரிதும் நம்பியிருக்கும் சீனப் பொருளாதாரத்திற்கு இந்தப் போர் அதிக வலியைத் தருகிறது. இருப்பினும், அமெரிக்காவிற்கு உதவ சீனா முன்வந்தால், அதற்குப் பதிலாக அது ஏதேனும் ஒன்றைத் திரும்ப எதிர்பார்க்கும்.

கடந்த வாரம் இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி சீனாவுக்கு மேற்கொண்ட பயணம், மத்திய கிழக்கில் சீனாவுக்கு எந்த மாதிரியான வலிமையையும் செல்வாக்கும் உள்ளது என்பதைக் காட்டுவதற்காக வடிவமைக்கப்பட்டது போல் தோன்றியது.

அமெரிக்கா இதனை உன்னிப்பாகக் கவனித்து வந்தது.

"சீனர்கள் அவரிடம் சொல்ல வேண்டியதைச் சொல்வார்கள் என்று நான் நம்புகிறேன்" என அமெரிக்க வெளியுறத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறினார்.

அதற்குப் பிறகு, ஹோர்மூஸ் வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது இரான் நடத்திய தாக்குதல்களைக் கண்டிக்கும் புதிய ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை தடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா சீனாவிடம் வலியுறுத்த முயன்றது.

இதற்கு முன்னதாக ரஷ்யா ஒரு முன்மொழிவை வீட்டோ அதிகாரம் மூலம் தடுத்திருந்தது .

"இரானை நிலையான முறையில் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவர வேண்டுமானால், அதில் சீனா ஒரு பங்கு வகிக்கும் என்பதை அமெரிக்கா அங்கீகரிக்கிறது என்று நான் நினைக்கிறேன்" என சர்வதேச நெருக்கடி குழுவின் அமெரிக்க-சீனா உறவுகளுக்கான மூத்த ஆராய்ச்சி மற்றும் ஆதரவு ஆலோசகர் அலி வைன் கூறுகிறார்.

டிரம்ப், தன் பங்கிற்கு இரானுடன் சீனா கொண்டுள்ள நெருக்கமான உறவைப் பற்றி கவலைப்படாதது போல் தோன்றுகிறார்.

இரானிய எண்ணெயைக் கொண்டு சென்றதற்காக சீனாவைச் சேர்ந்த ஒரு சுத்திகரிப்பு நிலையத்தின் மீது அமெரிக்கா சமீபத்தில் தடைகளை விதித்திருந்தாலும், கடந்த வாரம், அதிபர் இந்தப் போரின் போது இரானுக்கு சீனா அளிக்கும் எந்தவொரு ஆதரவையும் குறைத்து மதிப்பிட்டார்.

"அது அப்படித்தான் நடக்கிறது?" என்று ஒரு அமெரிக்க ஊடகவியலாளரிடம் கூறிய அவர், "நாமும் அவர்களுக்கு எதிராக சில விஷயங்களைச் செய்கிறோம்"என்றார்.

தைவானின் எதிர்காலம்

தைவான் விவகாரத்தில் டிரம்ப் நிர்வாகம் முரண்பட்ட சமிக்ஞைகளை அனுப்பி வருகிறது.

கடந்த டிசம்பரில், அமெரிக்கா தைவானுடன் 11 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்தை அறிவித்தது. இது சீன அரசாங்கத்தை கோபமடையச் செய்தது.

இருப்பினும், சீனா தனது சொந்த நிலப்பகுதி என்று உரிமை கோரும் தைவானைப் பாதுகாக்க அமெரிக்கா முன்வருவது பற்றி டிரம்ப் தெளிவாக உறுதியை வழங்கவில்லை.

ஷி ஜின்பிங் குறித்துப் பேசிய டிரம்ப், "அவர் தைவானைச் சீனாவின் ஒரு பகுதியாகக் கருதுகிறார், அவர் என்ன செய்யப் போகிறார் என்பது அவருடைய விருப்பம்" என்று கூறினார்.

பாதுகாப்பு உத்தரவாதங்களுக்காக அமெரிக்காவிற்குத் தைவான் போதுமான விஷயங்களை வழங்கவில்லை என்றும், அது "நமக்கு எதையும் தருவதில்லை" என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு, அவர் தைவான் மீது 15% இறக்குமதி வரியை விதித்ததுடன், அமெரிக்காவிலிருந்து செமிகண்டக்டர் உற்பத்தியைத் திருடியதாகத் தைவான் மீது குற்றம் சாட்டினார்.

தைவான் விவகாரம் இரு வல்லரசுகளுக்கும் இடையே புதிய பதற்றத்திற்கு காரணமாக மாறாமல் இருப்பதை உறுதி செய்வதே இலக்காக இருந்தாலும், இந்தப் பயணத்தின் போது தைவான் குறித்துப் பேச்சு இடம்பெறும் என்று கடந்த வாரம் ரூபியோ கூறினார்.

தனது பங்கிற்கு, இந்தப் பேச்சுவார்த்தைகளில் தைவான் ஒரு முன்னுரிமை என்று சீனா சமிக்ஞை செய்துள்ளது.

ரூபியோவுடன் நடத்திய தொலைபேசி உரையாடலில், அமெரிக்கா "சரியான முடிவுகளை" எடுக்கும் என்று தான் நம்புவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ கடந்த வாரம் கூறினார்.

தைவானைச் சுற்றி கிட்டத்தட்ட தினமும் போர் விமானங்கள் மற்றும் கடற்படைக் கப்பல்களை அனுப்பி, சீனா தனது ராணுவ அழுத்தத்தை அதிகரித்து வருகிறது.

தைவான் சுதந்திரத்தை தற்போது ஆதரிக்கவில்லை என்பதே அமெரிக்காவின் மிகச் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கொள்கையாகும்.

"அமெரிக்கா தைவான் சுதந்திரத்தை எதிர்க்கிறது" என்பது போன்ற வலுவான வாசகங்களைச் சேர்க்குமாறு சீனா அழுத்தம் கொடுக்க முடியுமா?

"அதிபர் ஷி அதற்கு செல்வார் என்று நான் நினைக்கவில்லை" என ஆசியா சொசைட்டியின் அமெரிக்க-சீனா உறவுகளுக்கான மையத்தின் மூத்த ஆய்வாளர் ஜான் டெலூரி கூறுகிறார்.

மேலும், "தைவான் விஷயத்தில் விட்டுக்கொடுப்பதுபோன்ற போன்ற ஏதேனும் ஒரு கருத்தை டிரம்ப் சொன்னாலும், சீனர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில், ஒரு வாரம் கழித்து ட்ரூத் சோஷியல் பதிவின் மூலம் அவர் அதை மாற்றிக் கொள்ளக்கூடும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

முக்கியமான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள்

2025 ஆம் ஆண்டின் பெரும்பகுதியில், அமெரிக்காவும் சீனாவும் உலகப் பொருளாதாரத்தின் அடித்தளத்தையே அசைக்கக்கூடிய ஒரு புதிய வர்த்தகப் போரின் விளிம்பில் இருப்பது போல் தோன்றின.

அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியான சீனா மீதான இறக்குமதி வரிகளை டிரம்ப் தொடர்ச்சியாக உயர்த்தியும் குறைத்தும் வந்தார்.

சில நேரங்களில் இந்த வரி விகிதங்கள் 100 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தன.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, அமெரிக்காவிற்கான அரிய வகை கனிமங்களின் ஏற்றுமதியை சீனா குறைத்தது. மேலும் அமெரிக்க விவசாயப் பொருட்களின் கொள்முதல் அளவையும் குறைத்தது; இது டிரம்புக்கு வாக்களித்த விவசாயிகளைப் பாதித்தது.

கடந்த அக்டோபரில் தென் கொரியாவில் டிரம்ப் மற்றும் ஷி ஜின்பிங் சந்தித்த பிறகு, பதற்றம் கணிசமாகக் குறைந்துள்ளது.

பிப்ரவரி மாதம் அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, அதிபரின் வரி விதிப்பு அதிகாரத்தைக் குறைத்தது. இது டிரம்பின் நிலையற்ற வர்த்தக போக்குகளைக் கட்டுப்படுத்த உதவியது.

இருப்பினும், சீனா உச்சிமாநாட்டின் போது டிரம்ப் மற்றும் ஷி ஜின்பிங் பேசுவதற்கு இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன.

அமெரிக்க விவசாயப் பொருட்களைச் சீனா அதிகமாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அமெரிக்கத் தலைவர் டிரம்ப் அழுத்தம் கொடுப்பார்.

நியாயமற்ற வணிக நடைமுறைகள் குறித்து சமீபத்தில் அறிவிக்கப்பட்ட வர்த்தக விசாரணையை அமெரிக்கா கைவிட வேண்டும் என்று சீனா நிச்சயமாக அழுத்தம் கொடுக்கும்.

ஏனெனில் இந்த விசாரணை, சீனப் பொருட்கள் மீது மீண்டும் அதிக வரிகளை விதிக்க டிரம்பிற்கு வழிவகுக்கும்.

அமெரிக்கத் தரப்பிற்கு இது சவாலானதாக இருக்கும்.

வாஷிங்டன் டிசியை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான புரூக்கிங்ஸ் நிறுவனத்தின் பாதுகாப்பு மற்றும் உத்தி பிரிவின் தலைவர் மைக்கேல் ஓ'ஹான்லன் கூறுகையில், "சீனாவின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் எவ்வளவு பரவலாகவும் பாதிப்பை ஏற்படுத்துபவையாகவும் இருக்கின்றன என்பதைக் கருத்தில் கொள்ளும்போது, அவை தொடர்பான அனைத்து விசாரணைகளையும் அமெரிக்கா கைவிடுவது கடினமாக இருக்கலாம்" என்றார்.

இந்தப் பயணத்தின் போது என்விடியா , ஆப்பிள் , எக்ஸான் , போயிங் மற்றும் பிற பெரிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுக்கும் தன்னுடன் வருமாறு டிரம்ப் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிரம்பின் முதல் அதிபர் காலத்தைப் போல வர்த்தகத்திற்காக அமெரிக்காவைச் சீனா இப்போது அந்தளவுக்குச் சார்ந்திருக்கவில்லை என்றாலும், உலகப் பொருளாதாரத்தில் நிலைத்தன்மை தேவைப்படுவதால் இந்தச் சந்திப்பு சிறப்பாக அமைய வேண்டும் என்று ஷி ஜின்பிங் விரும்புவார்.

சீனா இப்போது 120-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு முன்னணி வர்த்தகக் கூட்டாளியாக உள்ளது. ஆனால் டிரம்பின் வருகையின் போது, தான் அதிக நம்பிக்கையுடன் இருப்பதாகக் காட்டிக்கொள்ள முடியாது என்பது ஷி ஜின்பிங்கிற்குத் தெரியும்.

புரூக்கிங்ஸ் நிறுவனத்தின் ஜான் எல். தோர்ன்டன் சீனா மையத்தின் இயக்குனர் ரியான் ஹாஸ் கூறுகையில், "இந்தப் பயணம் சுமுகமாக நடைபெற்று, தான் மரியாதையுடன் நடத்தப்பட்டதாக டிரம்ப் கருதினால், இருதரப்பு உறவில் நிலவும் தற்காலிக அமைதி நீடிக்கும். மாறாக, தான் அவமதிக்கப்பட்டதாகவோ அல்லது அலட்சியப்படுத்தப்பட்டதாகவோ டிரம்ப் உணர்ந்து வெளியேறினால், அவரது மனநிலை மாறக்கூடும்" என்றார்.

செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம்

எதிர்காலத்தைத் தன் வசமாக்கும் போட்டியில் சீனா ஈடுபட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் மனித உருவம் கொண்ட ரோபோக்களில் அது பெருமளவில் முதலீடு செய்து வருகிறது.

இவை ஷி ஜின்பிங் விவரிக்கும் "புதிய உற்பத்தி சக்திகளின்" ஒரு பகுதியாகும். இதன் மூலம் சீனாவின் பொருளாதாரத்தை முன்னோக்கிச் செலுத்த முடியும் என்று அவர் கருதுகிறார்.

இருப்பினும், தங்களது உள்நாட்டுத் தொழில்களை மேம்படுத்துவதற்காக அமெரிக்கத் தொழில்நுட்பத்தைத் தந்திரமாகப் பெறுவது அல்லது நேரடியாகத் திருடுவதே சீனாவின் அதிகாரப்பூர்வக் கொள்கை என்று பல அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள் நம்புகின்றனர்.

இதன் விளைவாக, அமெரிக்க நிறுவனங்களின் எதிர்ப்புகளையும் மீறி, சமீபத்திய தலைமுறை மைக்ரோபிராசஸர்கள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பிரபலமான சமூக ஊடக செயலியான டிக்டாக்கின் சீன உரிமம் மற்றும் செயல்பாடு தொடர்பான சிக்கலான விவகாரத்தில் ஏற்பட்ட வெற்றிகரமான தீர்வு, குற்றச்சாட்டுகளும் சந்தேகங்களும் நிறைந்த அமெரிக்க - சீனத் தொழில்நுட்ப உறவுகளில் ஒரு அரிதான மகிழ்ச்சியான முடிவாக இருந்தது.

நவீன காலத்தின் மிக முக்கியமான புதிய தொழில்நுட்ப வளர்ச்சியாகக் கருதப்படும் ஏஐ அமைப்புகளை உருவாக்குவதற்கான போட்டியில் இந்த சூழல் வெளிப்படுகிறது. டீப்சீக் போன்ற சீன நிறுவனங்கள் அமெரிக்க ஏஐ-ஐ திருடுவதாக அமெரிக்கா முன்வைக்கும் குற்றச்சாட்டுகளால் இந்த விவகாரம் சிக்கலாகியுள்ளது.

புரூக்கிங்ஸ் நிறுவனத்தின் ஜான் எல். தார்ன்டன் சீனா மையத்தைச் சேர்ந்த யிங்யி மா கூறுகையில், "ஏஐ பனிப்போரின் தொடக்க அத்தியாயம் உருவாகி வருகிறது. அமெரிக்க ஏஐ மாடல்களைச் சீனா 'தொழில்துறை அளவில்' திருடுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

அதே நேரத்தில் மெட்டா நிறுவனம், சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு சீனர்களால் தொடங்கப்பட்ட ஏஐ ஸ்டார்ட்-அப் நிறுவனமான மானஸ்-ஐ கையகப்படுத்துவதைத் தடுக்க சீனா நடவடிக்கை எடுத்ததாகத் தெரிகிறது.

இந்தப் போட்டி யார் யாருடைய மாடலை நகலெடுக்கிறார்கள் என்பது பற்றியது மட்டுமல்ல, அடுத்த தலைமுறை ஏஐ-ஐ உருவாக்கும் திறன் கொண்ட திறமையாளர்களைப் பற்றியதுமாகும்" என்றார்.

சீனாவின் ரோபோக்கள் சாகசக் காட்சிகளை அரங்கேற்றவும், குங் ஃபூ அசைவுகளைச் செய்யவும், பெய்ஜிங்கில் நடைபெறும் மாரத்தான் ஓட்டத்தின்போது மனிதர்களை விட வேகமாகப் பந்தயத்தில் ஈடுபடவும் ஏற்ற வகையிலான திறன் கொண்டவை.

சீன நிறுவனங்கள் இந்த ரோபோக்களின் உடல்களைக் கட்டமைப்பதில் திறமையானவர்களாகத் தோன்றினாலும், பல நிறுவனங்கள் இன்னும் அவற்றின் மூளைகளுக்கான புரோகிராமிங் பணிகளிலேயே ஈடுபட்டுள்ளன.

மிகச் சிறந்தவற்றை உருவாக்க சீன நிறுவனங்களுக்கு உயர்தர கணினி சிப்கள் தேவைப்படுகின்றன, அவை அமெரிக்காவிலிருந்துதான் வருகின்றன.

இங்குதான் தங்களுக்குச் சாதகமான அரிய வகை கனிமங்கள் மீதான பிடியைப் சீனா பயன்படுத்தக்கூடும்.

இந்தத் துறையை டிரம்ப் வெளிப்படையாகவே விரும்புகிறார். ஸ்மார்ட்போன்கள் முதல் காற்றாலைகள் மற்றும் ஜெட் என்ஜின்கள் வரை அனைத்து நவீன தொழில்நுட்பங்களுக்கும் அத்தியாவசியமான உலகின் 90% அரிய வகை கனிமங்களைச் சீனாவே செயலாக்குகிறது.

எனவே, இங்கு ஒரு ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.

உயர்தர சிப்களுக்குப் பதிலாக அமெரிக்காவிற்குச் சீனாவின் அரிய வகை கனிமங்கள் கிடைக்கலாம். இது சீனாவின் சொந்த 'ஹோர்மூஸ் நீரிணை ' போன்றது.

அதனால் எந்த நேரத்திலும் விநியோகத்தை அவர்களால் நிறுத்த முடியும்.

ஒரு குறுகிய பயணத்தின் போது டிரம்ப் மற்றும் ஷி ஜின்பிங்கிற்கு விவாதிக்க நிறைய விஷயங்கள் உள்ளன.

இரு தரப்பும் விவாதிக்க வேண்டிய கொள்கை ரீதியான விஷயங்கள் அதிகமாக இருந்தாலும், டிரம்பின் இந்தப் பயணம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திட்டமிடப்பட்ட கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளுடன் கூடிய ஒரு பரபரப்பான பயணமாக இருக்கும்.

இரு தலைவர்களும் கணிசமான ஒப்பந்தங்களை எட்டுவதற்கு அதிக நேரம் இல்லாமல் இருக்கலாம்.

இருப்பினும், இத்தகைய குறுகிய சந்திப்பு கூட, வரவிருக்கும் ஆண்டுகளில் இரு வல்லரசுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் உறவுகளின் போக்கை நிர்ணயிக்கக்கூடும்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு