You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யார் இந்த 'ஜோதிடர்' ராதன் பண்டிட்? விஜயின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட ஒரே நாளில் நீக்கம் ஏன்?
முதலமைச்சரின் அரசியல் விவகாரங்களை கவனிப்பதற்காக சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட 'ஜோதிடர்' ராதன் பண்டிட் வெற்றிவேலின் நியமனத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.
அரசின் உயர் பதவியில் ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டதற்கு அரசியல் கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இதனை விமர்சித்து சட்டப்பேரவையில் பேசிய தே.மு.தி.க எம்.எல்.ஏ பிரேமலதா, "முதலமைச்சரின் ராஜகுருவாக இருந்தால் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கலாம். இதன்மூலம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?" எனக் கேள்வி எழுப்பினார்.
யார் இந்த ராதன் பண்டிட் வெற்றிவேல்? 24 மணிநேரத்துக்குள் அவரது நியமனம் வாபஸ் பெறப்பட்டது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அரசியல் பிரிவு தனி அலுவலராக ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்படுவதாக, செவ்வாய்க் கிழமையன்று (மே 12) அரசு உத்தரவிட்டிருந்தது.
'இதற்கான பணி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து தனியாக அறிக்கை வெளியிடப்படும்' எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
'இந்த நியமனம் ஏற்புடையதல்ல'
ராதன் பண்டிட் வெற்றிவேலுக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டது அரசியல்ரீதியாக பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. முதல்வரின் அரசியல் பிரிவு செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராதன் பண்டிட் அடிப்படையில் ஒரு ஜோதிடர்' எனக் கூறியுள்ளார்.
'அரசு செலவில் அதிகாரியாக இத்தகைய ஒருவரை நியமித்திருப்பது மக்கள் மத்தியில் ஜோதிடம் தொடர்பான நம்பிக்கையை அதிகப்படுத்தவே செய்யும். அரசின் இந்தப் பணி நியமனம் ஏற்புடையதல்ல' எனவும் அவர் விமர்சித்திருந்தார்.
இதே தொனியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியனும் விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.
அவர் தனது அறிக்கையில், 'நாடறிந்த ஜோதிடர் முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் தனது முகப்பு பதாகையில் மதச்சார்பின்மை, சமூகநீதி ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற குறளை கொள்கை நிலையாக அறிவித்துள்ளது' எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து, 'முதலமைச்சர் ஜோசப் விஜய், கடவுள் மீதும் வழிபாடுகள் மீதும் நம்பிக்கை கொண்டவராக இருக்கலாம். அது அவரது தனிப்பட்ட வாழ்க்கை முறையாகும். ஆனால், அரசியலமைப்பு அதிகாரம் கொண்ட அரசு, மதச்சார்பு அடையாளத்தைக் கொண்டிருக்கக் கூடாது என்பது நாடு பின்பற்றி வரும் மரபாகும்' என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
'அறிவியல் கண்ணோட்டமும் பகுத்தறிவு சிந்தனையும் வளர்த்து வலிமைப்படுத்த வேண்டிய அரசு, முதலமைச்சரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடரை நியமித்திருப்பது சரியல்ல' எனவும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில் தனது எக்ஸ் பக்கத்தில், 'எனக்கே புரியவில்லை. ஒரு ஜோதிடருக்கு ஏன் அரசு சிறப்பு அதிகாரி பதவி வழங்கப்பட வேண்டும்? யாராவது விளக்க முடியுமா?' எனக் கேள்வியெழுப்பியிருந்தார்.
'கட்சியைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு' - திருமாவளவன்
அதேநேரம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மாறுபட்ட கருத்து ஒன்றை முன்வைத்தார்.
அவர் பேசும்போது, "ராதன் பண்டிட் என்பவர் அந்தக் கட்சியின் (தவெக) செய்தித் தொடர்பாளர். அதனால் அந்தக் கட்சியைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பைத் தந்திருக்கிறார் என்று கருதுகிறோம்" எனக் கூறினார்.
"அவர் கூடுதலாக ஜோதிடமும் பார்க்கக் கூடியவராக இருக்கலாம். ஜோதிடத்தை நம்புவது என்பது வேறு. மதவாத அரசியலில் ஈடுபாடு கொள்வது என்பது வேறு. ஜோதிடத்தை நம்புகிறவர்கள் எல்லாம் மதவெறி வெறுப்பு அரசியலைப் பேசுவது இல்லை" எனவும் திருமாவளவன் தெரிவித்தார்.
புதன்கிழமையன்று சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மை பலத்தை த.வெ.க அரசு நிரூபிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அப்போது ராதன் பண்டிட் வெற்றிவேலின் நியமனத்தை விமர்சித்து தே.மு.தி.க எம்.எல்.ஏ பிரேமலதா பேசினார்.
அவர் பேசும்போது, "நான் அரச குடும்பத்தில் இருந்து வந்தவன் இல்லை என முதலமைச்சர் பேசியபோது அனைவரும் வரவேற்றார்கள். ஆனால், அவரின் ராஜகுருவாக இருப்பவரை அரசியல் சிறப்பு அதிகாரியாக நியமித்திருக்கிறார்" என விமர்சனம் செய்தார்.
தொடர்ந்து பேசிய பிரேமலதா, "அவர் ராஜகுருவாக இருந்தால் தனிப்பட்ட ரீதியில் வைத்திருக்கலாம். இளைஞர்களுக்கு என்ன உதாரணத்தை நீங்கள் சொல்ல விரும்புகிறீர்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்" எனப் பேசினார்.
"ஜனநாயகத்தை நம்பி இளைஞர்கள் கையில் ஆட்சியைக் கொடுத்திருக்கிறார்கள். வருங்காலத்துக்கு இந்த அரசு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்" எனவும் அவர் விமர்சித்தார்.
பல்வேறு தரப்பிலும் ஜோதிடர் நியமனம் தொடர்பான சர்ச்சைகள் வெளிவரத் தொடங்கின. சென்னை உயர் நீதிமன்றத்திலும் நியமனத்தை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன.
இதையடுத்து, சட்டப்பேரவையில் த.வெ.க அரசு தனது பெரும்பான்மை பலத்தை நிரூபித்த சில மணிநேரங்களில் ராதன் பண்டிட் வெற்றிவேலின் நியமனத்தை ரத்து செய்துள்ளது.
யார் இந்த ராதன் பண்டிட் வெற்றிவேல்?
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தான் ஆன்மிக வழிகாட்டியாக இருந்ததாக, தனது சமூக ஊடகப் பக்கத்தில் ராதன் பண்டிட் வெற்றிவேல் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் நாற்பது ஆண்டுகளாக ஜோதிடம் சார்ந்த பணிகளில் தான் ஈடுபட்டு வருவதாகவும் அவர் அதில் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ராதன் பண்டிட் வெற்றிவேல், 1990களின் பிற்பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அறிமுகம் ஆனார். சில காலம் அவருக்கு ஜோதிட ஆலோசனைகளை வழங்கி வந்துள்ளார் என ஊடக செய்திகள் குறிப்பிடுகின்றன.
இந்தநிலையில் பின்னர் சசிகலா தரப்பினருக்கும் ஜோதிடருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சசிகலாவின் உறவினர் ராவணன் மீது ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.
மனுவைக் கொடுத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜோதிடர், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார். என்னுடைய சொத்துகளை அபகரிக்கும் முயற்சியில் ராவணன் ஈடுபட்டுள்ளார்" எனக் குற்றம் சுமத்தினார்.
இதே காலகட்டத்தில் ஒரு வார இதழுக்கு பேட்டி ஒன்றையும் ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் அளித்துள்ளார்.
அந்தப் பேட்டியில், "பலருக்கும் நான் செய்து கொடுத்த காரியங்களுக்காக அன்பளிப்புகள் கொடுத்திருக்கிறார்கள். அது எனது உழைப்புக்குக் கிடைத்த பரிசு. யாரையும் ஏமாற்றி சம்பாதிக்கவில்லை" எனக் கூறியுள்ளார்.
"அதை பெரியம்மா (ஜெயலலிதா) கேட்டால் தந்துவிடத் தயாராக இருக்கிறேன். என்னை நிம்மதியாக இருக்க விடுங்கள் என்றுதான் ராவணனிடம் கேட்டேன். அவர் என்னை மிரட்டி வசூல் செய்யத் துடிக்கிறார்" எனவும் ராதன் பண்டிட் வெற்றிவேல் கூறியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ராவணன் தரப்பில் அவரது உதவியாளராக இருந்த மோகன் என்பவர் விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளார். "வெற்றிவேல் என்ற நபரைப் பற்றி தெரிந்ததால் தான், 'அவரை கார்டன் பக்கமே வரக் கூடாது' என அனுப்பிவிட்டனர். இதற்கு ராவணன் தான் காரணம் எனக் கூறி பழிபோடுகிறார்" எனக் கூறியுள்ளார்.
இந்தப் புகார் மனு மீது காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது. ஆனால் அதுதொடர்பான மேலதிக விவரங்கள் எதையும் பிபிசி தமிழால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.
'விஜய் அறிமுகம்... கட்சிப் பதவி'
இதன்பிறகு ஜோதிடப் பணிகளில் தீவிரக் கவனம் செலுத்தி வந்த ஜோதிடருக்கு, 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தை விஜய் தொடங்கிய காலகட்டத்தில் அவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக, 'விஜய் முதலமைச்சர் ஆவார்' என்ற கருத்தை டிஜிட்டல் ஊடகங்களில் ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் பேசி வந்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராகவும் ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டார். அப்போது இது விவாதப் பொருளாக மாறவில்லை.
'நான் கூறியபோது யாரும் நம்பவில்லை'
தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாகவே பல்வேறு தனியார் ஊடகங்களுக்கு ராதன் பண்டிட் வெற்றிவேல் பேட்டி அளித்துள்ளார்.
அதில், "விஜயின் கூட்டத்துக்கு வரும் ஒவ்வொருவரும் கூடுதலாக பத்து ஓட்டுகளைக் கொண்டு வருவார்கள். இது வேடிக்கை பார்க்கும் கூட்டம் அல்ல" எனக் கூறியுள்ளார்.
"பெரும்பான்மையுடன் முதலமைச்சராக விஜய் அமர்வார்" எனவும் பேட்டியில் ராதன் பண்டிட் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை நடந்த நாளில் (மே 4) த.வெ.க முன்னிலையில் இருப்பதாக செய்திகள் வெளிவரத் தொடங்கின. இதையடுத்து நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டின் முன்பாக ஊடகங்கள் குவியத் தொடங்கின.
அன்று மாலை ஐந்து மணியளவில் ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல், த.வெ.க தலைவரின் வீட்டில் இருந்து வெளியில் வந்தார். அப்போது பிபிசி தமிழ் அவரிடம் பேசியது.
"தொடக்கத்தில் இருந்தே விஜய் முதலமைச்சர் ஆவார் எனக் கூறி வந்தேன். யாரும் நம்பவில்லை" என்று மட்டும் பதில் அளித்தார்.
தற்போது விவாதிக்கப்படும் சர்ச்சைகள் தொடர்பாக ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேலிடம் பேசுவதற்கு பிபிசி தமிழ் முயற்சி செய்தது. ஆனால், அதற்கான முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு