மேற்கு வங்கத்தில் மமதாவை தோற்கடித்த பாஜக தலைவரின் உதவியாளர் கொலை - என்ன நடந்தது?

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

மேற்கு வங்க பாரதிய ஜனதா கட்சித் தலைவரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சந்திரநாத் ரத், புதன்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.

பிபிசி செய்தியாளர் தில்நவாஸ் பாஷாவின் கூற்றுப்படி, இந்தச் சம்பவம் தலைநகர் கொல்கத்தாவுக்கு அருகிலுள்ள மத்தியம்கிராம் பகுதியில் நடந்துள்ளது.

செய்தி முகமைகளால் வெளியிடப்பட்ட வீடியோக்களில், சந்திரநாத் ரத் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதைக் காண முடிகிறது.

சந்திரநாத் ரத்தின் கொலையை "முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று" என்று பாஜக விவரித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்ததுடன், விசாரணை நடத்தவும் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்துத் தங்களது விசாரணையைத் தொடங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பவானிப்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், பதவியிலிருந்து வெளியேறும் முதலமைச்சருமான மமதா பானர்ஜியை சுமார் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சுவேந்து அதிகாரி தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்க தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, வன்முறை ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவியது.

மாநிலத்தில் நடந்த ஏராளமான வன்முறை சம்பவங்கள் குறித்த செய்திகளைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் பொய்யான காரணங்களைக் கூறி இத்தகைய சம்பவங்களில் ஈடுபடுவதாகப் பாரதிய ஜனதா கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டதுடன், இது பொறுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவித்தது.

திரிணாமுல் காங்கிரசும் பாஜகவும் என்ன கூறின?

மாநில டிஜிபி சித்த நாத் குப்தா செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "இந்த வழக்கு தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, ஆனால் அதன் நம்பர் பிளேட் தவறானது. சம்பவ இடத்திலிருந்து தோட்டாக்களையும் நாங்கள் மீட்டுள்ளோம். நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலங்கள் மற்றும் இதுவரை சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை முன்னெடுத்துச் செல்லப்படுகிறது" என்றார்.

இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த சுவேந்து அதிகாரி, "இது திட்டமிடப்பட்ட கொலை.. இதற்காக 2-3 நாட்களுக்கு முன்பே நோட்டம் விடப்பட்டுள்ளது" என்றார்.

மேலும், இது திரிணாமுல் காங்கிரஸின் 15 ஆண்டுகால காட்டாட்சியின் விளைவு என்றும் அவர் கூறினார்.

இதுகுறித்து சுவேந்து அதிகாரி, "நாங்கள் அனைவரும் துக்கத்தில் இருக்கிறோம். எங்கள் துயரத்தை வெளிப்படுத்த எங்களிடம் வார்த்தைகள் இல்லை. எங்களது மத்திய தலைமை இந்தச் சம்பவம் குறித்த தகவல்களைக் கேட்டுப் பெற்றுள்ளது. மத்திய அமைச்சர் சுகந்தா மஜும்தார், சந்திரநாத் ரத்தின் குடும்பத்தினரிடமும் போலீசாரிடமும் பேசியுள்ளார். இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்தக் கட்சியும் ஒற்றுமையாக உள்ளது" என்றார்.

இதற்கிடையில், திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சந்திரநாத் ரத் கொடூரமாகக் கொல்லப்பட்டதையும், தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையில் பாஜகவினரால் மூன்று திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கொல்லப்பட்டதையும் நாங்கள் கண்டிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மேலும், "குற்றம் செய்தவர்களை தாமதமின்றி அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு ஏதுவாக, நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். ஜனநாயகத்தில் வன்முறைக்கும் கொலைகளுக்கும் இடமில்லை" என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரநாத் ரத் என்பவர் யார்?

பிடிஐ செய்தி நிறுவனத்தின்படி, சந்திரநாத் ரத், சுவேந்து அதிகாரியின் உதவியாளர் என்றும், மாநில அரசியலில் அதிகாரியின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் என்றும் கூறப்படுகிறது.

பல ஆண்டுகளாக அதிகாரியின் நெருங்கிய வட்டத்தில் இருந்தபோதிலும், அவர் பெரும்பாலும் திரைமறைவாகவே பணியாற்றினார்.

சந்திரநாத் ரத், தீவிர அரசியல் பணிகளில் ஈடுபடுவதற்கு முன்னதாக இந்திய விமானப்படையில் பணியாற்றினார். மாணவர் பருவத்தில் ராமகிருஷ்ணா மிஷனின் சித்தாந்தங்களால் அவர் ஆழமாக ஈர்க்கப்பட்டதாக அவரது குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

விமானப்படையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற பிறகு, அவர் சில காலம் கார்ப்பரேட் துறையில் பணியாற்றினார், அதன் பின்னரே அரசியல் ஒருங்கிணைப்பு மற்றும் நிர்வாகப் பொறுப்புகளுக்கு மாறினார்.

சுவேந்து அதிகாரியின் குடும்பத்தைப் போலவே, சந்திரநாத் ரத்தின் குடும்பமும் ஆரம்பத்தில் திரிணாமுல் காங்கிரஸுடன் தொடர்புடையதாகவே இருந்தது.

பாஜகவின் பவானிப்பூர் பிரசாரம் உட்பட பல முக்கியமான அரசியல் களங்களில் பாஜகவின் மையக் குழுவில் அவர் ஒரு பகுதியாக இருந்தார்.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசாங்கத்தில் சுவேந்து அதிகாரிக்கு ஒரு பெரிய பொறுப்பு கிடைத்தால், சந்திரநாத் ரத்திற்கு ஒரு பெரிய நிர்வாகப் பொறுப்பு வழங்கப்படலாம் என்ற பேச்சு பாஜகவின் சில பிரிவினரிடையே இருந்தது.

இந்நிலையில் தற்போது அவர் கொலை செய்யப்பட்டிருப்பது மாநிலத்தில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு