ரத்த தானம் ஆண்களின் இனப்பெருக்க திறனை அதிகரிக்குமா? கட்டுக்கதையும் உண்மையும்

28 வயதான சைமன், தனது இனப்பெருக்கத் திறனைப் பாதுகாத்துக்கொள்ளப் பல படிகளைக் கொண்ட ஒரு செயல்முறையைப் பின்பற்றுகிறார்.
படக்குறிப்பு, 28 வயதான சைமன், தனது இனப்பெருக்கத் திறனைப் பாதுகாத்துக்கொள்ளப் பல படிகளைக் கொண்ட ஒரு செயல்முறையைப் பின்பற்றுகிறார்.
    • எழுதியவர், Jacqui Wakefield
    • பதவி, Global Health reporter
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

ஒவ்வொரு காலையும் சைமன் எழுந்தவுடன் சௌனாவிற்குச் செல்கிறார். அங்குள்ள வெப்பம், உடலில் உள்ள நச்சுக்களை வியர்வையாக வெளியேற்ற அவருக்கு உதவுகிறது, இது தனது விந்தணுக்களின் செயல்பாட்டை மேம்படுத்துவதாக அவர் கூறுகிறார் - ஆனால் அந்த வெப்பத்திலிருந்து அவருக்குக் கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகிறது.

"அதிக விந்தணு எண்ணிக்கையைப் பாதுகாப்பதற்காக, நான் 'சில் நட்ஸ்' எனப்படும் ஒரு பனிக்கட்டிப் பையைப் பயன்படுத்தி, அதை எனது விரைகளின் மீது வைக்கிறேன்," என்று அவர் பிபிசி உலக சேவைக்குத் தெரிவிக்கிறார்.

இது பலன் தருகிறது என்பதை நிரூபிக்க மருத்துவச் சான்றுகள் இல்லாதபோதிலும் இவை அனைத்தும் அவர் பின்பற்றும், அவரது விந்தணுக்களை மேம்படுத்தும் நடைமுறையின் ஒரு பகுதியாகும்.

ஃப்ளோரிடாவின் மயாமியைச் சேர்ந்த 28 வயதான இந்த வெனிசுவேலா-அமெரிக்கர், தினமும் சூரிய ஒளியில் இருப்பதையும், தவறாமல் உடற்பயிற்சி செய்வதையும் உறுதிசெய்கிறார். அவர் தனது மைக்ரோபிளாஸ்டிக் வடிகட்டியிலிருந்து தண்ணீரைக் குடிக்கிறார் மற்றும் நச்சுகளின் சாத்தியமான தாக்கத்தைத் தவிர்க்க பருத்தி பாக்சர் ஷார்ட்ஸ்களை அணிகிறார்.

சைமன் இப்போதைக்குக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிடவில்லை, அவருக்குத் துணை கூட இல்லை. ஆனால், குறைவான விந்தணு எண்ணிக்கை தனது ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து அவர் அதிகக் கவலை கொண்டுள்ளார்.

"குறைந்த இனப்பெருக்கத் திறன், நாளமிலாச் சுரப்பிகளின் செயல்பாடு, உங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் அல்லது பிற ஹார்மோன்களைப் பாதிக்கக்கூடும் - அது ஒரு பெரிய அச்சம்," என்று அவர் எங்களிடம் கூறுகிறார். நாளமிலாச் சுரப்பிகளின் செயல்பாடு விந்தணுக்களின் எண்ணிக்கையைப் பாதித்தாலும், குறைந்த இனப்பெருக்கத் திறன் நாளமிலாச் சுரப்பிகளின் செயல்பாட்டையோ அல்லது டெஸ்டோஸ்டிரோன் அளவுகளையோ நேரடியாகப் பாதிப்பதில்லை.

தங்களது விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டக் கூடிய ஆண்களில் சைமனும் ஒருவர். உலகளவில், #malefertility, #semenanalysis மற்றும் #sperm போன்ற ஆண்களின் இனப்பெருக்கத் திறன் தொடர்பான ஹேஷ்டேக்குகள் டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நூற்றுக்கணக்கான மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளன. அதே நேரத்தில், ஆண்களின் இனப்பெருக்கத் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் மிகப்பெரிய சப்ரெடிட்கள் (subreddits) ஜனவரி முதல் மும்மடங்காக அதிகரித்துள்ளன.

தனது விந்தணுக்களின் எண்ணிக்கையில் கவனம் செலுத்துவதன் மூலம் தனது ஆரோக்கியத்தைப் பாதுகாத்து வருவதாக சைமன் கூறுகிறார்.
படக்குறிப்பு, தனது விந்தணுக்களின் எண்ணிக்கையில் கவனம் செலுத்துவதன் மூலம் தனது ஆரோக்கியத்தைப் பாதுகாத்து வருவதாக சைமன் கூறுகிறார்.

உலகெங்கிலும் உள்ள ஆண் இனப்பெருக்கத் திறன் நிபுணர்கள், விந்தணுப் பரிசோதனையைக் கோரும் ஆண்களின் எண்ணிக்கையும், தங்களின் எதிர்கால இனப்பெருக்கத் திறன் குறித்த கவலைகளை வெளிப்படுத்தும் ஆண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகக் கூறுகின்றனர்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

டெஸ்டோஸ்டிரோன் மாற்று சிகிச்சைகள் (TRT) மற்றும் ஸ்டீராய்டுகளின் அதிகரித்து வரும் பயன்பாடு, அத்துடன் சுற்றுச்சூழல் நச்சுகள் குறித்த கவலைகள் ஆகியவை இனப்பெருக்கம் தொடர்பான ஹார்மோன்களைச் சீர்குலைக்கக்கூடும் என்பதால், இது ஓரளவு இதற்குக் காரணம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

பிரிட்டனைச் சேர்ந்த கருவுறுதல் துறை நிபுணர் பேராசிரியர் சுக்ஸ் மின்ஹாஸ், இந்த கவனம் கலவையான பலன்களை அளிக்கிறது என்கிறார். "ஆண்களின் மலட்டுத்தன்மை குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது அவசியம். ஆனால், நாம் அந்தக் கவலையைத் தேவையற்ற முறையில் தூண்டுகிறோமா?" என அவர் கேள்வி எழுப்புகிறார்.

இதற்கிடையில், இந்த கவலையைப் பயன்படுத்தி, இன்ப்ளுயன்சர்கள் மற்றும் தயாரிப்புகள் அடங்கிய ஒரு தொழில் துறை உருவாகி வருவதாகவும் பேராசிரியர் மேலும் கூறுகிறார்.

மற்ற பலரைப் போலவே, சைமனும் முதலில் சமூக ஊடகங்களில் இந்தத் தலைப்பைப் பற்றி அறிந்துகொண்டார். ஆனால் அவர் இன்னும் தனது விந்தணுவைப் பரிசோதிக்கவில்லை. தனது உடல்நலம் குறித்துக் கவலைப்பட அவருக்குக் குறிப்பிட்ட காரணங்களும் இல்லை.

"இது நான் பொதுவாகப் பயப்படும் ஒரு விஷயம், அதனால் எனது இனப்பெருக்கத் திறனைப் பாதுகாக்க நான் விரும்புகிறேன்," என்கிறார் அவர்.

சிலிக்கான் வேலியைச் சேர்ந்த முன்னாள் செல்வந்தரான பிரையன் ஜான்சன், சராசரி அளவை விட நான்கு மடங்கு அதிகமான விந்தணு எண்ணிக்கையை தான் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிலிக்கான் வேலியைச் சேர்ந்த முன்னாள் செல்வந்தரான பிரையன் ஜான்சன், சராசரி அளவை விட நான்கு மடங்கு அதிகமான விந்தணு எண்ணிக்கையை தான் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்.

இன்புளூயன்சரான பிரையன் ஜான்சனின் பதிவுகள்தான், சைமன் தனது இனப்பெருக்கத் திறன் குறித்து "உண்மையிலேயே அக்கறை கொள்ள" வழிவகுத்தது.

உலகெங்கிலும் ஆண்களிடம் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், சிலிகான் பள்ளத்தாக்கின் முன்னாள் செல்வந்தரான அவர், தன்னிடம் சராசரியை விட நான்கு மடங்கு அதிக விந்தணுக்கள் இருப்பதாகக் கூறுகிறார்.

டெஸ்டோஸ்டிரோன் மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் சுகாதார வழிமுறைகளான சானா மற்றும் ஐஸ் பேக் முறைகளை அவர் ஊக்குவிக்கிறார், அவற்றை சைமனும் பின்பற்றுகிறார்.

ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பின்தொடரப்படும் ஜான்சனின் பதிவுகள், அவர் சத்து மாத்திரைகளை விற்கும் 'ப்ளூபிரிண்ட்' என்ற வலைத்தளத்திற்கு வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன.

இந்தக் கருத்தை முன்வைக்கும் ஒரே நபர் அவர் மட்டுமல்ல. மருத்துவ ஆதாரங்கள் இல்லாமல் இன்புளூயன்சர்களால் ஊக்குவிக்கப்படும் பிற வழிமுறைகளில் சில சத்து மாத்திரைகள், சிவப்பு ஒளி சிகிச்சை, மற்றும் நுண்பிளாஸ்டிக்குகளை "வடிகட்டுவதற்காக" இரத்த தானம் செய்தல் போன்றவையும் அடங்கும்.

அமெரிக்க சுகாதாரத்துறை செயலாளர் ஆர்.எஃப்.கே ஜூனியர் - சமீபத்தில் ஒரு "இனப்பெருக்க நெருக்கடி" பற்றிப் பேசினார். 1970-ல், "இன்றைய நமது பதின்வயதினரை விட ஆண்களிடம் இரண்டு மடங்கு விந்தணுக்கள் இருந்தன" என்று வாதிட்டார்.

1970-ல் இருந்த ஆண்களை விட பதின்வயதினருக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. கடந்தகால ஆய்வுகளின் சில பெரிய அளவிலான பகுப்பாய்வுகள் 1970-களிலிருந்து உலகளவில் விந்தணுக்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டாலும், இந்தத் துறை இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லை. இதன் பொருள், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதற்கான காரணங்களும், ஒட்டுமொத்த பிறப்பு விகிதங்களில் ஏற்படும் தாக்கங்களும் தெளிவாக இல்லை.

இதற்கிடையில், ஆண்ட்ரூ ஹூபர்மேன் போன்ற ஆண்கள் சார்ந்த இன்புளூயன்சர்கள் தங்கள் பாட்காஸ்ட்களில் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவது குறித்து விவாதித்துள்ளனர். ஜோ ரோகன் வரவிருக்கும் "மக்கள் தொகை சரிவு" குறித்து எச்சரித்துள்ளார்.

உயிரியல் திறனைத் தவிர, பிறப்பு விகிதம் குறைவதற்கு வேறு பல காரணங்களும் உள்ளன - இது உலகளவில் ஏழு தம்பதிகளில் ஒருவரைப் பாதிக்கிறது. பொருளாதார மற்றும் சமூகப் பிரச்னைகள், மக்கள் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தடுப்பதாகத் தொடர்ந்து குறிப்பிடப்படுகின்றன.

இம்பீரியல் கல்லூரியின் இனப்பெருக்க மண்டல நாளமிலாச் சுரப்பியியல் நிபுணரான பேராசிரியர் சன்னா ஜெயசேனா, இதுகுறித்து நியாயமான கவலைக்கு இடமிருப்பதாக நம்பினாலும், சமூக ஊடகங்களில் கூறப்படும் கூற்றுகள் மிகைப்படுத்தப்பட்டவை என்று நம்புகிறார்.

"சில சவால்கள் உள்ளன, ஆனால் அவற்றின் காரணங்கள் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை," என்கிறார் அவர்.

 இயற்கை மருத்துவ நிபுணரான லூகாஸ் ஒரு பயோஹேக்கர் ஆவார். அவர் சிவப்பு ஒளி சிகிச்சை உள்ளிட்ட உடல்நல மேம்பாட்டு நடைமுறையைப் பின்பற்றுகிறார், இருப்பினும் இதற்கான சான்றுகள் குறைவாகவே உள்ளன.
படக்குறிப்பு, இயற்கை மருத்துவ நிபுணரான லூகாஸ் ஒரு பயோஹேக்கர் ஆவார். அவர் சிவப்பு ஒளி சிகிச்சை உள்ளிட்ட உடல்நல மேம்பாட்டு நடைமுறையைப் பின்பற்றுகிறார், இருப்பினும் இதற்கான சான்றுகள் குறைவாகவே உள்ளன.

இயற்கை மருத்துவ நிபுணர் லூகாஸ், கருவுறுதல் விகிதங்கள் குறித்த எச்சரிக்கைகளை தனது உள்ளடக்கத்தில் சேர்க்கும் இன்புளூயன்சர்களில் ஒருவர்.

"உலகளாவிய ஒரு பெருந்தொற்றை நாம் காண்கிறோம், எல்லா மட்டங்களிலும் கருவுறுதல் குறைந்து வருகிறது," என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார். 33 வயதில் ஆண்கள் மலட்டுத்தன்மை அடைவார்கள் என்ற தவறான கூற்றையும் அவர் தனது யூடியூப் பார்வையாளர்களிடம் கூறியுள்ளார்.

டெஸ்டோஸ்டிரோன் மற்றும் கருவுறுதலை அதிகரிக்க விரும்பும் ஆண்களுக்காக அவர் ஆன்லைன் படிப்புகள், 1:1 பயிற்சி மற்றும் சப்ளிமெண்ட் உணவுகளை விற்கிறார்.

இனப்பெருக்கத் திறனை மேம்படுத்த நிரூபிக்கப்படாத சில வழிமுறைகளை ஊக்குவிக்கும் அவரது சமூக ஊடக உள்ளடக்கம் வைரலாகியுள்ளது.

"ஆண்கள் தங்கள் உள்ளாடையில் ஒரு ஐஸ் கட்டியை, ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை, சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைக்குமாறு நான் பரிந்துரைக்கிறேன்," என்று அவர் கூறுகிறார். இதை முயற்சித்த பிறகு தங்கள் துணைவர்கள் கர்ப்பமாகிவிட்டதாக வாடிக்கையாளர்கள் தன்னிடம் கூறியதாகவும் அவர் கூறுகிறார்.

அவரைப் பின்தொடர்பவர்களில் சிலர், தங்கள் விரைகளுக்கு எதிராக அல்லது அவற்றை நோக்கியவாறு ஒரு சிவப்பு ஒளி சாதனத்தையும் பயன்படுத்துகின்றனர்.

"இது ஒரு ஆரம்பகட்ட முயற்சிதான். தனிநபருக்கு எந்தத் தீங்கும் ஏற்படாத வரை, இதை முயற்சித்துப் பார்ப்பதற்கு இது போதுமான சாத்தியமான உத்தி என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறுகிறார்.

தனது ஆலோசனையின் நிரூபிக்கப்படாத தன்மை குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது, விரைகளுக்குப் பனிக்கட்டி வைப்பது ஒரு "நம்பிக்கைக்குரிய சிகிச்சை" என்று தாம் நம்புவதாக லூகாஸ் கூறினார், ஆனால் இதுகுறித்து மேலும் ஆய்வுகள் வெளிவர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆரோக்கியமான உணவு, உறக்கம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றையும் லூகாஸ் அறிவுறுத்துகிறார் - இந்த நடவடிக்கைகளுக்கு வலுவான சான்றுகள் உள்ளன.

இனப்பெருக்க நாளமில்லாச் சுரப்பி நிபுணரான பேராசிரியர் சன்னா ஜெயசேனா, மருத்துவ ஆலோசனையின்றி கருவுறுதலுக்கான மருந்துகளை உட்கொள்வது ஆபத்தானது என்று கூறுகிறார்.
படக்குறிப்பு, இனப்பெருக்க மண்டல நாளமிலாச் சுரப்பி நிபுணரான பேராசிரியர் சன்னா ஜெயசேனா, மருத்துவ ஆலோசனையின்றி கருவுறுதலுக்கான மருந்துகளை உட்கொள்வது ஆபத்தானது என்று கூறுகிறார்.

உடற்கட்டமைப்பு மற்றும் தோற்றத்தை மேம்படுத்தும் ஆன்லைன் போக்கான 'லுக்ஸ்மேக்சிங்' ஆகியவற்றின் எழுச்சியால், டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கும் மருந்துகளை உட்கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இந்த இனப்பெருக்கத் திறன் மேம்பாடு குறித்த ஆலோசனைகளும் வருகின்றன.

ஆனால், ஸ்டீராய்டுகள் மற்றும் டெஸ்டோஸ்டிரோனை எடுத்துக்கொள்வது கருவுறுதலைப் பாதிக்கிறது.

இந்த பாதிப்பை சரிசெய்ய முயற்சிக்கும் விதமாக, இன்ஃப்ளூயன்சர்கள் பல்வேறு மருந்துகளை ஊக்குவிக்கின்றனர். அவற்றை அவர்கள் பெரும்பாலும் தங்கள் வலைத்தளங்களில் விற்கின்றனர்.

இவற்றில், இனப்பெருக்க மண்டல ஹார்மோன்களை "செயல்படுத்த" பொதுவாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் பயன்படுத்தப்படும் HCG மற்றும் HMG (Human Chorionic Gonadotropin and Human Menopausal Gonadotropin) போன்ற மருந்துகளும் அடங்கும். உரிய மருத்துவ வழிகாட்டுதல் இல்லாமல் எடுத்துக்கொள்ளும்போது, இவை ஆபத்தான பக்க விளைவுகளையும் நிரந்தர பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடும்.

"இது மிகவும் ஆபத்தானது," என்கிறார் பேராசிரியர் ஜெயசேனா, "[சில] இரத்தக் கட்டிகளை ஏற்படுத்தக் கூடும், இது மார்பக வளர்ச்சியையும் ஏற்படுத்தக் கூடும், இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் தோற்றம் சிதைந்துவிடும்."

டெஸ்டோஸ்டிரோன் மாற்று சிகிச்சைக்குப் பிறகு தங்கள் இனப்பெருக்கத் திறனை மீண்டும் பெறுவதற்காக மருந்துகளை உட்கொண்டு வந்த, உலகெங்கிலும் உள்ள ஏழு வெவ்வேறு ஆண்களிடம் நாங்கள் பேசினோம். ஸ்டீராய்டுகள் போன்ற மருந்துகளை ஆன்லைனில் வாங்குவது சட்டவிரோதமானது என்பதால், அவர்கள் தங்கள் அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.

ஒருவர் என்னிடம், "எச்எம்ஜி மற்றும் எச்சிஜியை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்திய பிறகு, எனக்குப் பல குழந்தைகள் பிறக்கும்" என்று நினைப்பதாகக் கூறினார்.

'ஜமால்' ஆரம்பத்தில் தனது தசை வளர்ச்சியை அதிகரிக்க ஸ்டீராய்டுகளையும் டெஸ்டோஸ்டிரோனையும் எடுத்துக்கொண்டார்.
படக்குறிப்பு, 'ஜமால்' ஆரம்பத்தில் தனது தசை வளர்ச்சியை அதிகரிக்க ஸ்டீராய்டுகளையும் டெஸ்டோஸ்டிரோனையும் எடுத்துக்கொண்டார்.

உடற்கட்டை (bodybuilding) மேம்படுத்த அதிக அளவிலான டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஸ்டீராய்டுகளை உட்கொண்டதால், ஜமால் (இது அவரது உண்மையான பெயர் அல்ல) குழந்தை பெறும் திறனை இழந்தார். அவரும் அவரது இணையரும் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து யோசிக்கத் தொடங்கிய போது, ​​கடந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர் அவற்றை உட்கொள்வதை நிறுத்தினார்.

இணையம் மற்றும் யூடியூப் மூலம், அதே மருந்துகளை உட்கொண்ட ஆண்களிடமிருந்து இனப்பெருக்கத் திறன் மேம்பாடு தொடர்பான ஆலோசனைகளையும், "எந்தத் தவறும் நடக்காத வகையிலான மருந்துத் தொகுப்புகளை" பயன்படுத்துவது குறித்த பரிந்துரைகளையும் அவர் அறிந்துகொண்டார்.

"இணையத்தில் இருந்தவர்கள், 'இதை இப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும், இப்படித்தான் செய்ய வேண்டும்' என்று கூறினார்கள்," என்று ஜமால் கூறுகிறார். "ஒரு நாளமிலாச் சுரப்பி நிபுணரை (endocrinologist) அணுகுவதுதான் சிறந்த வழி என்பது எனக்குத் தெரியும்; ஆனால், நான் அந்த மருந்துகளை இணையதளங்கள் அல்லது வெளியீடுகள் மூலமாகவே நேரடியாக வாங்கினேன்." என அவர் குறிப்பிடுகிறார்.

அவை பலனளிக்காத நிலையில், அவர் தொழில்முறை மருத்துவ உதவியை நாடி பேராசிரியர் ஜெயசேனாவைச் சந்தித்தார். அதுவரை, மருத்துவக் கண்காணிப்பு இல்லாமல் இத்தகைய மருந்துத் தொகுப்புகளை உட்கொள்வது ஆபத்தானது என்பது அவருக்குத் தெரியாது.

பேராசிரியர் ஜெயசேனாவின் அறிவுறுத்தலின் பேரில், ஜமால் அந்த மருந்துத் தொகுப்பு உட்பட அனைத்து மருந்துகளையும் உட்கொள்வதை நிறுத்திவிட்டார். ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவரது இயற்கையான டெஸ்டோஸ்டிரோன் அளவு மேம்பட்டு வருகிறது; இருப்பினும், விந்து உற்பத்தியைத் தூண்டும் ஹார்மோனின் அளவு இன்னும் குறைவாகவே உள்ளது. அதுவும் மேம்படும் என்று அவரும் பேராசிரியரும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஆண்களின் கருவுறுதிறன் குறித்த விழிப்புணர்வு அதிகரிப்பது ஒரு நல்ல விஷயமாக இருந்தாலும், அது தகவல்களின் அடிப்படையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளதாக பேராசிரியர் ஜெயசேனா எச்சரிக்கிறார். அதாவது, நிபுணர்களை எப்போதும் எளிதில் அணுக முடியாத சூழல் இருப்பதால், ஜமால் போன்ற ஆண்கள் சமூக ஊடகப் பிரபலங்களின் ஆலோசனைகளை நாடுகிறார்கள்.

"சிறந்த நிலையில் பார்த்தால், இது அவர்களுக்கு உண்மையில் உதவக்கூடிய விஷயங்களிலிருந்து அவர்களைத் திசைதிருப்பக்கூடும்; ஆனால் மோசமான நிலையில், இது அவர்களுக்குத் தீங்கு விளைவிக்காத விஷயங்களைச் செய்யத் தூண்டக்கூடும்," என்று அவர் மேலும் கூறுகிறார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு