ஃபென்யா: ரஷ்ய சிறை முகாம்களில் உருவாகி இன்று சைபர் குற்றவாளிகளின் ரகசிய மொழியாக மாறிய கதை

ரஷ்யா, சோவியத் ஒன்றியம், ஃபென்யா மொழி

பட மூலாதாரம், Alamy

    • எழுதியவர், டாம்லின் மாகி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

ரஷ்யாவில் ஜோசப் ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் சிறை காவலர்களைக் குழப்பத்தில் ஆழ்த்திய 'ஃபென்யா' என்கிற ரகசிய மொழி இன்று ரஷ்ய சைபர் குற்றவாளிகளால் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு ராஸ்பெர்ரி பழத்துக்குள் நீ எப்போது மறைவாய்? ஏன் உனக்கு சிக்ஸராக விருப்பமில்லை? அகடெமியாவுக்குச் செல் என்பதற்கு என்ன அர்த்தம்?

ரஷ்ய மொழியில் பேச்சு வழக்கு என்பது பல சிக்கலான நிலைகளைக் கொண்டது. அருவருப்பான சொற்களுக்கு என்றே ரஷ்ய மொழியில் 'மேட்' (Mat) என்கிற பிரிவு உள்ளது. ரஷ்ய வசவு சொற்களில் புலமை பெற்ற ஒருவரால் கூட மேற்கண்ட வரிகளுக்கான அர்த்தங்களைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கும். ரஷ்யாவின் ரகசிய சிறை மொழியான ஃபென்யா தெரியாதவர்களுக்கு இந்த வார்த்தைகள் புரியாது.

குற்றவாளிகள் பயன்படுத்தும் இந்த மொழியை நிழல் உலக மனிதர்கள் பல நூற்றாண்டுகளாக குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும் தப்பிப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் 20ம் நூற்றாண்டில், அதன் இரட்டை அர்த்தப் பயன்பாடு மற்றும் பிறமொழிகளில் இருந்து கடன் பெறப்பட்ட சொற்களின் கலவை சோவியத் சிறைகளில் பரவியது.

ஜெர்மன், கிரேக்கம் மற்றும் யிட்டிஷ் மொழிகளின் தாக்கத்தால் குழப்பமான மறைமுக அர்த்தங்கள் ஃபென்யா மொழியில் நிரம்பி வழிகிறது. ரஷ்ய மொழியில் 'பாப்கி' என்றால் பாட்டி என்று அர்த்தம், ஆனால் ஃபென்யாவில் அதற்கு 'பணம்' என்கிற பொருள். 'வரேஸ்கா' என்றால் 'கையுறைக் கவசம்' என்று அர்த்தம், ஆனால் ஃபென்யாவில் 'வாய்' என்று பொருள்படும். பால் என்று பொருள்படுகிற ஹீப்ரு வார்த்தையான 'கால்யவா'வுக்கு 'இலவசம்' என்று பொருள்.

ஃபென்யாவில் ஒரு வார்த்தையில், அந்த பேச்சுவழக்கைத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும் பல மறைமுக அர்த்தங்கள் உள்ளன. ஒரு காலத்தில் சிறை காவலாளிகளை குழப்பத்தில் ஆழ்த்திய இந்த மொழியின் நுட்பங்கள் தற்போது இணையத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சைபர் குற்றவாளிகளின் நோக்கங்களை மறைப்பதோடு அதிகாரிகளையும் குழப்பி வருகிறது.

உதாரணமாக மைகாப் அல்லது முசோர் ஆகிய ரஷ்ய வார்த்தைகளுக்கு "குப்பை" என்று அர்த்தம். ஆனால் ஃபென்யா மொழியில் அதற்கு, சைபர் தாக்குதல்கள் ஒருங்கிணைக்கப்படும் டார்க் வெப் தளங்களில் ஊடுருவிய ஒரு காவலரைக் குறிக்கும்.

ரஷ்யாவில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டுமென்றால் புலனாய்வாளர்கள் இந்த மொழியின் சொற்களுக்குப் பரிச்சயப்பட வேண்டியுள்ளது.

செயற்கை நுண்ணறிவில் முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும் தொடர்ந்து வளர்ந்து வரும் இந்த மொழியின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்வதில் அவை திணறலாம்.

இப்படி ஒரு சூழ்நிலை எவ்வாறு உருவானது? ரஷ்யாவில் ஜார் ஆட்சிக் காலத்தில் தெருக்களில் ஃபென்யா மொழி முணுமுணுக்கப்பட்ட நிலையில் சோவியத் நீதி அமைப்பு எடுத்த தொடர் முடிவுகளே இந்த மொழி மையநீரோட்டத்திலும் இறுதியாக இணையத்திலும் பரவக் காரணமாக அமைந்தது. அதன் வரலாறு பற்றி இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஃபென்யாவின் ஆரம்பக்கட்டம்

ரஷ்யா, சோவியத் ஒன்றியம், ஃபென்யா மொழி

பட மூலாதாரம், Alamy

படக்குறிப்பு, விவசாயிகள் தொடங்கி அறிவுஜீவிகள் வரை அனைவருக்கும் ஃபென்யா மொழி பரிச்சயமானது.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஃபென்யா என்பது மற்றவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவதற்காக பயன்படுத்தப்பட்ட ஒரு மொழியாக இருந்து வந்தது. அந்த வார்த்தைகள் எல்லாம் ஒரு காலத்தில் நிழல் உலகத்தோடு தொடர்புடையது என்பது தெரியாத அளவுக்கு தற்போது ரஷ்ய கலாசாரத்தில் இந்த மொழி கலந்திருக்கிறது.

இந்த மொழியின் தோற்றம் மர்மம் நிறைந்ததாகவே இருக்கிறது. ஒரு சுவாரஸ்யமான ஆனால் மறுதலிக்கப்படும் கோட்பாடு, இந்த மொழி ரஷ்யாவில் மத வழிபாடு சார்ந்த பொருட்களை விற்க நடைபயணமாகவே பயணித்த ஓஃபெனி என்கிற நாடோடி வியாபாரியிடமிருந்து தொடங்கியதாக தெரிவிக்கிறது.

இந்த வியாபாரிகளின் பொருட்கள் மதச் சட்டங்களுக்கு எதிரானது என 17-ஆம் நூற்றாண்டு தேவாலயம் அறிவித்ததால் அந்த நாடோடி வணிகர்கள் தங்களுக்கான தனித்துவமான பேச்சு வழக்கை வளர்த்துக் கொண்டதாகவும் அந்தக் கோட்பாடு தெரிவிக்கிறது.

ஃபென்யா எவ்வாறு பரவியது என்பதற்கு நிறைய கதைகள் உள்ளன. இதன் அகராதி 19-ஆம் நூற்றாண்டில் விரிவடைந்திருக்கலாம் என மார்க் கலியோட்டி 2018-இல் வெளியான தனது 'தி வோரி: ரஷ்யாவின் சூப்பர் மாஃபியா' புத்தகத்தில் எழுதியுள்ளார்.

லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் கௌரவ பேராசிரியராகவும் உளவு ஆலோசகராகவும் இருக்கும் அவர் நவீன ரஷ்யாவில் நிபுணத்துவமும் பெற்றிருக்கிறார். அப்போது தான் குற்றவாளிகள் மற்றும் தெருவோரவாசிகள் வார்த்தைகளுக்கு நடுவே "ஃபெ" (fe) மற்றும் "நியே" (nye) ஒலிகளைச் சேர்க்கத் தொடங்கியதாக அவர் தெரிவிக்கிறார்.

இந்த ஒலிகள் காலப்போக்கில் கைவிடப்பட்டதாகவும் கலியோட்டி குறிப்பிடுகிறார். ஆனால் அதற்குள்ளாகவே மோசடி குழுக்களால் ஃபென்யா வழக்கத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்தக் குழுக்களில் சேர வேண்டுமென்றால் இந்த மொழி பற்றிய அடிப்படை புரிதல் அவசியமானது.

இந்த வார்த்தைகளும் சொற்றொடர்களும் 1863-ஆம் ஆண்டில் ரஷ்ய அகராதியில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அப்போது பேச்சு வழக்கில் இருந்தவாறே ரஷ்ய மொழியை ஆவணப்படுத்த இந்த அகராதி முயன்றது.

ஃபென்யாவில் படிநிலை என்பது விளையாட்டு சொற்கள் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. அதில் திருடர்களைக் குறிக்க வித்தியாசமான வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. விலங்குகளின் பெயர்கள் வெவ்வேறு பொருட்களைக் குறிக்கவும் பயன்படுகின்றன.

அதில் குரங்கு என்றால் கண்ணாடி என்று அர்த்தம், நரி என்றால் மடக்குகத்தி என்று அர்த்தம் என்பது அம்மொழியைப் பேசுபவர்களுக்குத் தெரியும். ஓட்டுமொத்தமாக ஃபென்யா அகராதியில் 10,000 முதல் 27,000 சொற்கள் வரை இருக்கலாம் என நம்பப்படுகிறது.

நிழல் உலகில் ஒரு குற்றச் சமூகம் இயங்கி வருகிறது என்பது ஜார் ஆட்சிக் காலத்தின் அறிவுஜீவிகள் மற்றும் இலக்கியவாதிகளுக்கு உத்வேகமாக அமைந்தது. 'வாகபான்ட்' என்கிற இசை வடிவத்துக்கும் இது உந்துதலாக அமைந்தது. அதில் பாடகர்கள் ஃபென்யா மொழியில் பாடி குடிசை வாழ்வை ரம்மியமானதாகச் சித்தரித்தனர்.

ஆனால் போரினால் ஏற்பட்ட பெரும் சமூக கொந்தளிப்பு மற்றும் புரட்சியே ஃபென்யாவின் எழுச்சியை தக்கவைத்தது.

ஃபென்யாவின் எழுச்சி

ரஷ்ய உள்நாட்டு போரை வென்று சோவியத் ஒன்றியத்தை நிறுவிய பிறகு, நாட்டின் சிறை முகாம்களை விரிவுபடுத்த முயற்சியில் போல்ஷெவிக்குகள் இறங்கினர். ஸ்டாலினின் ஆட்சிக் காலத்தில் இருந்த குலாக் முறைக்கு முன்னோடியான இந்த முகாம்களில் அனைத்து வகையான குற்றங்களைச் செய்தவர்களும் தங்க வைக்கப்பட்டனர். இதன்மூலம் விவசாயிகள் தொடங்கி அறிவுஜீவிகள் வரை அனைவருக்கும் ஃபென்யா மொழி பரிச்சயமானது.

ஸ்டாலின் அதிகாரத்துக்கு வந்தபிறகு லட்சக்கணக்கானவர்கள் சிறைவைக்கப்பட்டனர். இது இந்த அகராதி மேலும் பல சிறைவாசிகள் மத்தியில் பரவி குற்றவாளிகள் மத்தியில் நிலையான ஒன்றாக மாறுவதற்கு வித்திட்டது. அதன் தொடர்ச்சியாக பல புதிய சொற்களுடன் சிறை முகாமுக்கு உரித்தான அகராதியாக உருவெடுத்தது.

"மொழி என்பது ஒரு விதமான பிழைத்திருக்கும் தொடர்பு கருவியாக மாறியது," என்கிறார் மார்டின் புச்னர். அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழத்தில் ஆங்கிலப் பேராசிரியராக இருக்கும் இவர் 'திருடர்களின் மொழி: ராட்வெல்ஷ் மற்றும் ஒரு குடும்பத்தின் ரகசிய வரலாற்றின் கதை' என்கிற புத்தகத்தின் ஆசிரியராகவும் உள்ளார்.

சிறைகளில் தொழில்முறை குற்றவாளிகள் ஃபென்யாவை திருடர்களின் விதிமுறையாக மாற்றினர். ஒருவரின் நிலையைக் குறிக்கும் சட்டமாக இது மாறிப்போனது. அந்த விதிகளைத் தெரிந்த குற்றவாளிகள், அந்தக் குற்றவாளிகள் குழுவுக்கு வெளியே இருக்கும் சாதாரண குற்றவாளிகள் என்கிற இரு குழுக்களை இது உருவாக்கியது.

இதற்கிடையே, குற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்தையும் கட்டுப்படுத்த ஸ்டாலின் முயன்றார். ஃபென்யா மொழியும் அதில் அடங்கும். 1930 வாக்கில் சோவியத் இதழ்கள் "திருடர்களின் பாடல்கள்" பாட்டாளி கலாசாரத்துக்கு விரோதமானது எனக் கூறி நிராகரிக்கத் தொடங்கினர்.

ஆனால் பிரபலமான கலைஞர்கள் சித்தாந்த ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் தங்களை மீட்டுருவாக்கம் செய்து கொண்டனர். பிரபல சோவியத் பாடகரான லியோனிட் உடெஸோவின் திருடர்கள் பற்றிய பாடல் ரசிகர்களைக் கவர்ந்த ஒன்றாக இருந்தது.

ஆனால் காலப்போக்கில் அவர் ராணுவத்துக்காக இசை நிகழ்ச்சிகளை நடத்த தொடங்கினார். அவரது பாணியை "சீர்கேட்டிலிருந்து தாய்மைப்படுத்தப்பட்ட சோவியத் தயாரிப்பு" என ஒரு வரலாற்றாசிரியர் குறிப்பிட்டிருந்தார்.

ரஷ்யா, சோவியத் ஒன்றியம், ஃபென்யா மொழி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜோசப் ஸ்டாலின்

சிறைகளைக் கடந்து சென்ற ஃபென்யா

1953-இல் ஸ்டாலின் இறந்த பிறகான நாட்கள் ஃபென்யாவின் கதையில் மற்றுமொரு திருப்பத்தைக் கொண்டு வந்தது.

லட்சக்கணக்கான சிறைவாசிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால் குலாக் சிறை முகாம்களில் இருந்த சிறிய திருடர்கள் பெரும் எண்ணிக்கையில் வெளியேறினர். வீடுகளுக்குச் சென்ற அவர்கள் ஃபென்யா மொழியையும் அவர்கள் உடன் எடுத்துச் சென்றனர். "ப்ளாட்னயா பெஸ்னயா" என்கிற பாடல் நாடு முழுவதும் உள்ள மதுக்கூடங்களில் பரவியது.

"அந்தக் காலத்தில் குற்றவியல் கலாசாரம் என்பது அதிகாரப்பூர்வ கட்சியால் ஒடுக்கப்பட்ட நாட்டுப்புற கலாசாரம் என்கிற உணர்வு இருந்தது," என்கிறார் சமூகவியல் பேராசிரியரான ஸ்வெட்லனா ஸ்டீபன்சன்.

லண்டன் மெட்ரோபொலிடன் பல்கலைக்கழக பேராசிரியரான அவர் 'ரஷ்ய குழுக்கள்: தெருக்களில் இருந்து அதிகார மையங்கள் வரை' என்கிற புத்தகத்தின் ஆசிரியராகவும் இருக்கிறார்.

"அறிவுஜீவிகள் மத்தியில் இந்த உலகின் மீது ஒருவித ஈர்ப்பு இருந்தது," என்று அவர் தெரிவிக்கிறார்.

திருடர்களின் பாடல்களைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் அவற்றைப் பிரபலப்படுத்துவதற்கே உதவின. சோவியத் ஒன்றியம் தனது தணிக்கையைத் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து மக்கள் மலிவான எக்ஸ்-ரே தாள்களைக் கத்தரிக்கோலால் வட்டு வடிவங்களில் வெட்டி, வீட்டில் தயாரிக்கப்பட்ட கடைசல் இயந்திரங்களைப் பயன்படுத்தி அவற்றில் ஒலிகளைப் பதித்து, இசையைக் கள்ளத்தனமாகப் பதிவு செய்தனர்.

"ஜாஸ் ஆன் போன்ஸ்" என அழைக்கப்பட்ட இவற்றை கிராமஃபோன்களில் ஒலிக்கச் செய்து கேட்க முடியும். இந்தத் தாள்களுக்கு உருவான அதிகரித்த கள்ளச் சந்தை மக்கள், நிராகரிக்கப்பட்ட ரஷ்ய கலைஞர்களிடமிருந்து பாடல்களைப் பெற்று வணிகம் செய்வதற்கும் தங்களின் சொந்த பாடல்களைப் பதிவு செய்வதற்கும் அனுமதித்தது. இது சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தது.

வீட்டில் பதிவு செய்யப்பட்ட திருடர்களின் பாடல்கள் பரவலாக பரவின. அதன் பின்னர் கேசட் நாடாவின் வளர்ச்சிக்குப் பிறகு நிழல் உலக கலைஞர்களான ஆர்கெடி செவெர்னி மற்றும் டினா வியர்னி ஆகியோரின் மரபுக்கு மாறான பாடல்கள் சோவியத் ஒன்றியம் முழுவதும் பரவின. இவர்களின் பாடல்கள் பாலியல், திருட்டுகள், வன்முறை மற்றும் குலாக் சிறை முகாம்களைப் பற்றி இருந்தது.

1991-இல் சோவியத் ஒன்றியம் உடைந்த பிறகு, அரசாங்காத்தின் அனைத்து முயற்சிகளைக் கடந்தும் ஃபென்யாவின் நாட்டுப்புற அந்தஸ்து என்பது நிலைத்துப்போனது. ஆயினும், நாகரிக சமூகத்தில் ஃபென்யா பேசுவது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

புத்தாயிர காலகட்டத்தில் இதற்கான ஏற்பு புதிய கட்டத்துக்குச் சென்றது. விளாதிமிர் புதின் உள்ளிட்ட ரஷ்ய அரசியல் ஆளும் வர்க்கத்தினர் ஃபென்யாவை தங்களின் அதிகாரப்பூர்வ தொடர்புகளில் பயன்படுத்தத் தொடங்கினர் என்று லரிஸ்ஸா ரியாஸ்ஸானோவா-கிளார்க் தெரிவிக்கிறார். இவர் பிரிட்டனில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழத்தில் ரஷ்ய மற்றும் சமூக மொழியியல் பேராசிரியராக இருக்கிறார்.

காலப்போக்கில் ஏற்பட்ட அசாத்தியமான மாற்றங்களைக் குறிப்பிட்டு பேசிய அவர் விதிகளில் ஏற்பட்ட பின்னடைவாலே, இந்த 'மொழியியல் குழப்பமான காலகட்டம்' ஏற்பட்டது என்றார்.

இந்த மொழிக்கு மக்கள் ஆதரவு பெற்ற தோற்றம் வேண்டும் என்பதற்காக அதிகாரிகள் இந்த மொழியைப் பயன்படுத்தி உள்ளனர் என்கிறார் ஸ்டீபன்சன். இவர் இந்தப் போக்கை 'கிரெம்லோவ்ஸ்காயா ஃபென்யா' என்று அழைக்கிறார்.

"இது ரஷ்ய சமூகத்தின் தலைமை வரை ஊடுருவிய வன்முறை கலாசாரத்தை பிரதிபலிக்கிறது என்று நினைக்கிறேன்," என அவர் தெரிவிக்கிறார். இதில் முரணான விஷயம் என்னவென்றால் ரஷ்ய சிறைகளில் ஃபென்யாவை தடை செய்த அதிகாரிகள் அவர்களுக்கு உள்ளாகத் தொடர்ந்து பேசிக்கொண்டனர்.

இணையத்தை மறைத்துச் சிக்கலாக்குதல்

21-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அன்றாட மொழியாக ஃபென்யா உருப்பெற்ற நிலையில் டிஜிட்டல் புரட்சியிலும் அது தடம் பதிக்கத் தொடங்கியது.

1999-ஆம் ஆண்டு ஆரம்பகால ரஷ்ய இணையதளமான ரூநெட்டில், ஒரு பயனர் "எழுத்தறிவு எதிர்ப்பு அறிக்கை" என்கிற ஒன்றை வெளியிட்டதாக கல்வியாளர் லரிசா மோர்கோபோரோடோவா.

​இது "இணையத்தில் நிலவும் 'எழுத்துப்பிழையற்ற தன்மை' எனும் போலித்தன்மையை" கடுமையாகச் சாடியதுடன், "உயிருள்ள நமது மொழியை உயிரற்ற இயந்திரங்கள் கொல்வதை எதிர்த்துப் போராடுமாறு" "ரஷ்ய மொழி வல்லுநர்கள் அனைவரையும்" வலியுறுத்தியது.

அவர்களின் திட்டமிட்ட பிழைகள் மற்றும் சொல் விளையாட்டு சார்ந்த கண்டுபிடிப்புகள் 'படோன்கி' என்கிற புதிய பேச்சு வழக்காக உருப்பெற்றது. இது ஒல்பேனியன் என்றும் அழைக்கப்பட்டது.

இணையத்தில் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கானோர் படோன்கியில் பேசுவதாக லரிஸ்ஸா கூறுகிறார். இது பரந்துபட்ட சமூகத்துக்குள்ளும் பரவியது. அதன் பொருள் பெரும்பாலான ரஷ்யர்கள் படோன்கி பேச்சு வழக்கை அறிந்திருக்கின்றனர். அவர்களில் சிலர் மட்டுமே குற்றவாளிகள். ஆனால் அதன் கற்பனைத்திறன் வாய்ந்த அமைப்பு சைபர் புலனாய்வாளர்களுக்கு தலைவலியைக் கொடுக்கிறது.

இந்தப் பேச்சு வழக்கு வேண்டுமென்றே ரஷ்ய மொழி மரபுகளை உடைக்கிறது. இரட்டை மெய்யெழுத்துகள் மற்றும் ஒலிப்புமுறைப்படி எழுதப்பட்ட சொற்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அத்துடன், ஆங்கிலத்திலிருந்து பெறப்பட்டுத் தங்கள் மூலப் பொருள்களிலிருந்து மாறுபட்ட அர்த்தங்களைக் கொண்ட சொற்களைப் பயன்படுத்துகிறது.

உதாரணமாக, ரஷ்ய பேச்சாளர்கள் 'இ-மெயில்' என்பதை 'மைலோ' என்று எழுதுகின்றனர். அதன் பொருள் 'சோப்புக் கிண்ணம்' ஆகும். ஏனெனில் டிஜிட்டல் கலாசாரத்தின் ஆரம்பக் காலத்தில் இ-மெயில் என்பதற்கு நிகரான வார்த்தை ரஷ்ய மொழியில் இல்லை என்கிறார், சைபர் பாதுகாப்பு வல்லுநரான ரோமன் சன்னிக்கோவ், இவர் எஃப்.பி.ஐயில் மொழியியலாளராகப் பணியாற்றி உள்ளார். சோப்புக் கிண்ணத்துக்கான ரஷ்ய வார்த்தை ஒலிப்புமுறைப்படி நெருக்கமான ஒன்றாக இருந்தது.

"நீங்கள் கணினி மொழிபெயர்ப்பை பயன்படுத்தினால் சில நேரங்களில் உங்களுக்கு இ-மெயில் என்பதற்குப் பதிலாக சோப் என்பதே வரும்," என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

சிரிலிக் என்கிற ரஷ்ய தட்டச்சுப் பலகை அப்போது மிகவும் அரிதான ஒன்று என்பதால் சில இணையப் பயனர்கள் 'சிஹச் (ch)' என்பதற்கு நான்கு என்கிற எண்ணை பயன்படுத்தினர். ஏனென்றால் ரஷ்ய மொழியில் "நான்கு" என்பதற்கு ஷெடயர் என்று பொருள்.

"அவற்றில் பெரும்பாலானவை ஆங்கிலத்தில் இருந்து வந்தன, ஏனெனில் அந்த வார்த்தைகள் ரஷ்ய மொழியில் இல்லை. ஒரு ஹார்ட் டிரைவ் அடிக்கடி 'வின்ச்' என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் பெரும்பாலானவை 'வின்செஸ்டர்' முத்திரையிடப்பட்டிருந்தன," என்கிறார் சன்னிகோவ்.

'சைபர்-ஃபென்யா'

ரஷ்யா, சோவியத் ஒன்றியம், ஃபென்யா மொழி

பட மூலாதாரம், Check Point Research

படக்குறிப்பு, கசிந்த உரையாடல்களில் உள்ள ஃபென்ய மொழி வார்த்தைகளை மென்பொருள் கொண்டு மொழிபெயர்த்தபோது கிடைத்த முடிவுகள்

"சைபர் பேச்சு வழக்கை உருவாக்கிய பெரும்பாலானவர்கள் குழந்தைகள் அல்லது இளைஞர்களாகவே இருந்தனர்," என்கிறார் சன்னிகோவ். கடந்த காலத்தில் 'ஃபென்யா' மொழியைப் பேசிய 'வோரி' (திருடர்கள்) வகையினரிடமிருந்து இது முற்றிலும் மாறுபட்டது.

எனவே, ஃபென்யா சொற்கள் தென்படும்போது, ​​அவை ஒரு அரிதான வகைக் கலப்பைக் குறிக்கக்கூடும் என்கிறார், டிரெண்ட் மைக்ரோ என்ற இணையப் பாதுகாப்பு நிறுவனத்தின் ஆய்வாளரான ஃபியோடர் யாரோச்கின்.

கேங்ஸ்டர் திரைப்படங்களில் இருந்து இந்தச் சொற்றொடர்களைக் கற்றுக்கொண்டவர்கள் அவர்களின் கூட்டாளிகளைக் கவரவோ அல்லது தங்களைக் கடினமானவர்களாக காட்டிக் கொள்வதற்கோ அவற்றைப் பயன்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார். ஃபென்யாவைத் தப்பிப்பதற்காக அல்லாமல் அவர்களின் அந்தஸ்தைக் குறிப்பதற்கு அல்லது கலாசார குறியீடாகவே பயன்படுத்துகின்றனர்.

2022- ரஷ்ய சைபர் குற்ற குழுவான கோன்டியின் உரையாடல்கள் கசிந்தபோது அவற்றில் செயல்முறை ஏற்பாடுகள், ஆபாசமான வார்த்தைகள் மற்றும் தேவையற்ற உளறல்கள் ஆகியவற்றோடு ஃபென்யா உடன் தொடர்புப்படுத்தக்கூடிய வார்த்தைகளும் இடம்பெற்றிருந்தன.

செக் பாயின்ட் என்கிற உலகளாவிய சைபர் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இந்த உரையாடல்களில் சிலவற்றை புரிந்துகொள்வது சாத்தியமற்றது எனத் தெரிவிக்கின்றனர்.

ஏனெனில், "என்னுடைய சோப்புகள் குளிக்கவில்லை. நான் பல மாதங்களாக அவற்றைச் சூடாக்கிக் கொண்டிருக்கிறேன்," என்கிற வரிகளை மென்பொருட்களால் மொழிபெயர்க்க முடியவில்லை. குற்றவாளிகள் உண்மையில் மின்னஞ்சல் தடைப் பட்டியல்களில் இடம்பெறுவதைத் தவிர்ப்பது பற்றியே பேசிக்கொண்டிருந்தனர்.

நிறுவனங்களின் கணினி அமைப்புக்குள் நுழைந்து அவற்றை சைபர் தாக்குதல்தாரிகளுக்கு திறந்துவிடும் சைபர் குற்றவாளிகளும் ஃபென்யா மற்றும் மேட் ஆகியவை இணைந்த கலவையில் பேசுகின்றனர். இது அவர்கள் என்ன செய்ய திட்டமிட்டுள்ளனர் என்பதை மறைக்க உதவுகிறது.

"ஃபென்யாவும் இணையக் குற்றச் சொற்களும் கிட்டத்தட்ட ஒருங்கு பரிணாம வளர்ச்சியின் ஒரு வடிவம் போன்றவை," என்கிறார் சன்னிகோவ். இவை பின்பற்ற முடியாத ஒரு விதமான சிக்கலான மொழி அமைப்பை உருவாக்குகின்றன. இணைய குற்றவாளிகள் பேச்சு வழக்கை 'சைபர் ஃபென்யா' என அழைக்கலாம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இந்த இணையப் பயன்பாடு, குற்றவாளிகளின் பேச்சு வழக்கு எவ்வாறு தொடர்ந்து நீர்த்துப்போய், மாறி, இறுதியாக எவ்வாறு ரஷ்ய மொழியின் ஓர் அங்கமாக மாறிப்போயின என்பதற்கான சமீபத்திய உதாரணம். ஃபென்யா மொழி இன்று இந்த அளவுக்கு சென்றடைந்ததற்கு முக்கிய காரணம் ஸ்டாலினும் அவரின் சிறை முகாம்களும் தான். இது அதனை உலகின் மிகவும் பரவலான ரகசிய மொழிகளில் ஒன்றாக மாற்றியது.

அங்குள்ள சிறைவாசிகள் பலரும், ராஸ்பெர்ரி என்பது ஒரு ரகசிய குகை என்பதையும் 'சிக்ஸர்' என்பது குற்ற படிநிலையின் கீழே உள்ளவர் என்பதையும் 'அகாடெமியா' அல்லது சிறை என்பது அவர்கள் சென்று அடைய விரும்பாத இடம் என்பதையும் குறிப்பதை தெரிவித்திருப்பார்கள். இருப்பினும், அது நிச்சயமாக உங்களுக்கு ஃபென்யா குறித்த நல்லதொரு கல்வியை அளித்திருக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு