கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனை பிரசவ வார்டுக்கு கட்டப்பை கொண்டுவர தடை ஏன்?

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவ வார்டுக்குள் கட்டப்பைகள் கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளது.
குழந்தை கடத்தலைத் தடுப்பதற்காக மட்டுமின்றி, பிரசவ வார்டில் தேவையற்ற அளவுக்குப் பொருட்களைக் கொண்டு வருவதால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டும் கட்டப்பைகளை அனுமதிப்பதில்லை என்று மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவத்துறை தலைவர் கீதா கூறினார்.
அதர்வா - நிமிஷா விஜயன் நடித்த 'டிஎன்ஏ' என்ற திரைப்படத்திலும், அவர்களுக்குப் பிறந்த குழந்தையை பெண் ஒருவர் கட்டப்பையில் வைத்து கடத்துவதாக காட்சி அமைக்கப்பட்டிருந்தது. உண்மைச் சம்பவத்தின் அடிப்படையிலேயே அந்தப் படத்தை எடுத்ததாக படத்தின் இயக்குநர் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
ஆனால் இப்படி கட்டப்பையில் பச்சிளங்குழந்தையைக் கடத்த முயற்சிக்கும் போது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து அதிகமுள்ளதாக பிபிசியிடம் கூறினார் பச்சிளங்குழந்தைகள் மருந்துவர் சித்தார்த்.
வெவ்வேறு ஊர்களில் குழந்தை கடத்தல் நிகழ்வுகள்

பட மூலாதாரம், Getty Images
சம்பவம் 1:
தஞ்சாவூர் பர்மா காலனியைச் சேர்ந்த குணசேகரனின் மனைவி ராஜலட்சுமிக்கு, கடந்த 2021 அக்டோபர் 4-ஆம் தேதி, தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்திருந்தது. இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள் என்பதால் இரு வீட்டிலிருந்தும் உதவிக்கு யாரும் வராத நிலையில், ராஜலட்சுமிக்கு உதவுவதாகக் கூறி ஒரு பெண் தானாக முன்வந்துள்ளார்.
ராஜலட்சுமி கழிப்பறை சென்று திரும்புவதற்குள் குழந்தையைக் காணவில்லை. தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அப்போது தஞ்சாவூர் எஸ்பியாக இருந்த ரவளிப்ரியா காந்தபுனேனி, குழந்தையைக் கண்டறிய 3 தனிப்படைகள் அமைத்தார். தனிப்படையினர், மருத்துவமனை மற்றும் சுற்றுவட்டார சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, மருத்துவமனையில் உடனிருந்து உதவுவதாகமுன்வந்த பெண், கட்டப்பையில் வைத்து குழந்தையை எடுத்துச்சென்றது கண்டு பிடிக்கப்பட்டது. பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விஜி என்ற அந்தப் பெண்ணை, காவல்துறையினர் கைது செய்து குழந்தையை மீட்டனர்.
சம்பவம்: 2
பொள்ளாச்சி குமரன் நகரைச் சேர்ந்த திவ்யபாரதிக்கு, 2022 ஜூலை முதல் வாரத்தில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஒரு நாள் வார்டுக்கு வெளியே அவர் சென்று திரும்புவதற்குள், குழந்தையை காணவில்லை. பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பொள்ளாச்சி பகுதியிலுள்ள சிசிடிவிக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
அப்போது மருத்துவமனைக்கு கல்லூரி மாணவிகளைப் போல வந்த இரு பெண்கள், அந்தக் குழந்தையை கட்டப்பையில் வைத்து எடுத்துச்சென்றது தெரியவந்தது. போலீசார் விரைவாக விசாரணை நடத்தி, மறுநாள் பாலக்காட்டில் அந்தப் பெண்களை கைது செய்து குழந்தையை மீட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
சம்பவம்: 3
2022 ஆகஸ்ட் முதல் தேதி, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு குழந்தை கடத்தப்பட்டது. பேரணாம்பட்டு அரவட்லாவைச் சேர்ந்த கோவிந்தன்–சின்னு தம்பதியருக்கு, ஜூலை 27 அன்று ஆண் குழந்தை பிறந்தது. அடுத்த 5 நாட்களில் அந்த குழந்தையும் கடத்தப்பட்டது. வேலூர் டிஎஸ்பி தலைமையில் காவல்துறையினர், உடனடியாக சிசிடிவிக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு சிறுவனுடன் மருத்துவமனையை விட்டு வெளியேறும் ஒரு பெண், தன் கையில் இருந்த கட்டப்பையில் குழந்தையை வைத்திருப்பதும், சிறுவன் பையைத் திறந்து பார்ப்பதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. வேலூர் இடையஞ்சாந்து பகுதியைச் சேர்ந்த வைஜெயந்திமாலா என்ற அந்தப் பெண்ணை, பெங்களூருவில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். அவருக்கு உதவியாக இருந்த மேலும் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம்: 4
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி, சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனைக்கு கட்டப்பையில் ஓர் ஆண் குழந்தையை 21 வயது இளைஞர் ஒருவர் தூக்கி வந்தார். திருவல்லிக்கேணியில் ஓரிடத்தில் அந்த குழந்தை கட்டப்பையுடன் கிடந்ததாக அவர் தெரிவித்தார். காவல்துறையினர் சந்தேகமடைந்து அவரை விசாரித்தபோது, அந்தக் குழந்தை, அவருடைய குழந்தை என்பது கண்டறியப்பட்டது.
சென்னையிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவியான அவருடைய காதலிக்கு, அதற்கு 2 நாட்களுக்கு முன்பு அந்தக் குழந்தை பிறந்தது தெரியவந்தது. பல்கலைக்கழக விடுதியில் மற்ற மாணவிகள் விடுமுறைக்குச் சென்றிருந்தபோது, அங்கேயே அவருக்குக் குழந்தை பிறந்ததும் கண்டறியப்பட்டது. பின்பு குழந்தையும், தாயும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இப்படியாக குழந்தைகள் தொடர்புடைய சம்பவங்கள் பலவற்றில் குழந்தைகளை எடுத்துச் செல்ல கட்டப்பைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில், கோவை அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டுக்குள் கட்டப்பைகளை யாரும் கொண்டு வரக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக எந்த அறிவிப்புப் பலகையும் வைக்கப்படவில்லை என்றாலும், பிரசவ வார்டுக்குள் யாரும் கட்டப்பைகள் கொண்டு வருவது அனுமதிக்கப்படுவதில்லை. அதேநேரத்தில் மற்ற வார்டுகளுக்கு வரும் நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் கட்டப்பைகளைக் கொண்டு வர எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை.
மருத்துவமனையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தனியார் நிறுவன காவலர் முருகனிடம் பிபிசி இதுபற்றி கேட்டபோது, ''சில இடங்களில் கட்டப்பையில் குழந்தைகளைக் கடத்தும் சம்பவம் நடந்திருப்பதால் கண்டிப்பாக இவற்றை அனுமதிப்பதேயில்லை. பிரசவ வார்டு தவிர மற்ற வார்டுகளுக்கு வருவோரிடம் நுழைவாயிலில் பைகளைச் சோதனையிடுவோம். ஆனால் பிரவச வார்டுக்குள் கட்டப்பைகளைக் கொண்டு வந்தால் திருப்பி அனுப்பிவிடுவோம்.'' என்றார் முருகன்.

பட மூலாதாரம், Getty Images
டிஎன்ஏ திரைப்படம்..
கடந்த ஆண்டு வெளியான 'டிஎன்ஏ' தமிழ்த் திரைப்படத்தில், சென்னை அரசு மருத்துவமனைக்கு இரண்டு கட்டப்பைகளுடன் வரும் பாட்டி, அதில்தான் நாயகன்–நாயகிக்குப் பிறந்த குழந்தையைக் கடத்திச் செல்வார். காவல்துறை உதவியுடன் அந்த குழந்தையை மீட்பதற்கு நாயகன் போராடுவதுதான் படத்தின் கதைக்களமாகும்.
இந்தப் படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் வகையில் பத்திரிக்கையாளர்களை படக்குழுவினர் சந்தித்தபோது, படத்தின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், இந்தப் படம் உண்மைக்கதையை மையமாகக் கொண்டது என்றார்.
அவர் பேசுகையில், ''ஆனந்துக்கும், திவ்யாவுக்கும் (நாயகன்–நாயகி) இடையேயான கதை 2009-ஆம் ஆண்டில் இருந்து என்னிடம் இருக்கிறது. பெயர்தான் வேறு வேறு. ஆனால் இந்தக் கதாபாத்திரங்களை என்னுடைய வாழ்வில் சந்தித்திருக்கிறேன். அவர்களின் வலியை இதில் பதிவு செய்திருக்கிறேன். இதன் மூலம் ஒரு வலிமையான கதையை, ஒரு வலிமையான உணர்வுடன் இணைந்து சொல்லும்போது அதற்கு வெற்றி கிடைக்கிறது. இதனை இன்னும் 10 ஆண்டுகள் கழித்த பின்னர் சொன்னாலும் வெற்றியைப் பெறும். அந்த உண்மையான ஆனந்துக்கும், அந்த உண்மையான திவ்யாவுக்கும் இந்த திரைப்படத்தின் வெற்றியைச் சமர்ப்பிக்கிறேன்.'' என்றார்.
கோவை அரசு மருத்துவமனையில் மட்டுமின்றி, சென்னையிலுள்ள முக்கியமான அரசு மருத்துவமனைகளிலும், பிரசவ வார்டுக்குள் கட்டப்பைகளைக் கொண்டு வருவது வாய்மொழி உத்தரவு மூலம் தடை செய்யப்பட்டிருப்பதை பிபிசி தமிழ் உறுதிப்படுத்தியுள்ளது. எந்த மருத்துவமனையிலும் வெளிப்படையான அறிவிப்புகள் எதுவும் வைக்கப்படவில்லை.
கோவை அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவத்துறை தலைவர் கீதாவிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசியபோது, ''கோவை அரசு மருத்துவமனையில் எனக்குத் தெரிய எந்தக் குழந்தையும் கடத்தப்பட்டதில்லை. ஆனால் குழந்தையை கடத்த கட்டப்பைகள் பயன்படுத்தப்படுவது தெரியவந்ததால், பிரசவ வார்டுக்குள் அதை அனுமதிப்பதில்லை. ஆனால் அது மட்டுமே காரணமில்லை.'' என்றார்.
''பிரசவ வார்டு, பிரசவித்த பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் இருக்கும் பகுதி. அங்கு தேவையற்ற பொருட்களைச் சேர்த்து வைத்திருப்பது நல்லதல்ல. தாய், சேய் இருவருடைய ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவமனையின் பிற பகுதிகளுக்கு கட்டப்பை கொண்டு செல்ல எந்தத் தடையுமில்லை.'' என்றார் மருத்துவர் கீதா.

பட மூலாதாரம், Selimaksan/Getty images
'கட்டப்பைகளில் குழந்தைகளை வைப்பதால் ஆபத்து'
மறுபுறம், பச்சிளங்குழந்தைகளை இப்படி கட்டப்பையில் வைத்து எடுத்துச் செல்வது, குழந்தையின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதுபற்றி பிபிசியிடம் விளக்கிய பச்சிளம்குழந்தைகள் மருத்துவர் சித்தார்த், ''கட்டப்பைகளில் மட்டுமல்ல. எந்தப் பையிலுமே பிறந்த பச்சிளம் குழந்தைகளை வைப்பது பெரும் ஆபத்தில் முடியும். முதலில் இப்படி பைகளில் குழந்தைகளை வைக்கும்போது, குழந்தைகளின் கழுத்து வளைந்து, மூச்சு விட முடியாமல் உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது. அது மட்டுமின்றி பைகளில் கொண்டு செல்லும்போது அவை மேல்புறமாக மூடப்பட்டுவிடும் என்பதால், குழந்தைக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் போய்விடும். அப்போதும் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. அதேபோன்று பைகளில் குழந்தைகளைக் கொண்டு செல்லும்போது, அதன் உடல் வெப்பநிலையிலும் மாற்றம் ஏற்படும்.'' என்றார்.
''ஒரு குழந்தையின் உடல் வெப்பநிலை 98–99 டிகிரி இருக்க வேண்டும். ஆனால் பையில் கொண்டு செல்லும்போது, உடலின் வெப்பம் குறைந்துவிடும். அதன் தொடர்ச்சியாக இதயத்துடிப்பும் குறையும். அப்போதும் மூச்சு விட முடியாமல் குழந்தைகள் உயிரிழக்கும் வாய்ப்பு அதிகமிருக்கிறது. இவற்றைத் தவிர்த்து, கடத்தப்படும் குழந்தைக்கு வெகுநேரம் உணவு கிடைக்காமலும் உடல் சக்தியிழந்துவிடும்.'' என்றார் மருத்துவர் சித்தார்த்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































