காணொளி: ஆப்கனில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்ட மற்றொரு சிறுவன்

காணொளிக் குறிப்பு, ஆப்கன்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்ட மற்றொரு சிறுவன்
காணொளி: ஆப்கனில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்ட மற்றொரு சிறுவன்
பிரசுரிக்கப்பட்டது

இவர்கள் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கின்றனர்.

பயத்துடனும் குளிரில் நடுங்கியபடியும் இருந்த ஐந்து வயது ஜைனுல்லா, தான் விழுந்த ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கப்படுகிறார்.

70 மீட்டர் ஆழமான அந்தக் கிணற்றுக்குள் அவர் இரண்டு நாட்களாக சிக்கியிருந்தார்.

ஆழ்துளை கிணறு மிகவும் குறுகலாக இருந்ததால், பெரியவர்கள் உள்ளே செல்ல முடியவில்லை. அதனால், இந்தச் சிறுவர் உள்ளே இறங்கி ஜைனுல்லாவை மீட்பதற்காக அவருக்கு கயிற்றைக் கட்டினார்.

11 வயதான ஹஸ்ரத் கூறுகையில், "நான் உள்ளே சென்றதும் மற்றொரு கயிறு கிணற்றுக்குள் வரவில்லை. அதனால், நான் மற்றொரு கயிற்றைக் கேட்டேன். அவர்கள் இன்னொரு கயிற்றைக் கீழே இறக்கினர்.

பிறகு, முதலில் என்னை மேலே இழுத்தனர்." என்றார்.

மற்ற சிறுவர்களால் ஜைனுல்லா உள்ளே இருந்த இடத்தை அடைய முடியாததைத் தொடர்ந்து, ஹஸ்ரத் கிணற்றுக்குள் இறங்கினார்.

ஹஸ்ரத்தின் உறவினர் அசீசுல்லா கூறுகையில், "நான் கடவுளை நம்பி, நம்மில் ஒருவர் தியாகம் செய்ய வேண்டும் என்று கூறினேன்.

ஒரு மனிதன் மற்றொருவருக்காகத் தியாகம் செய்ய வேண்டும்." என தெரிவித்தார்.

ஜைனுல்லா தற்போது நலமாக இருக்கிறார். அவரைக் காப்பாற்றிய ஹஸ்ரத்தையும் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் பெரும்பாலும் குழந்தைகள் ஆழ்துளை கிணறுகளில் விழுந்த 112 சம்பவங்களை பிபிசி சரிபார்த்துள்ளது.

தொடர்ந்து நிலவும் வறட்சியால், பாசனத்துக்காக விவசாயிகள் அதிகளவில் ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டி வருகின்றனர்.

இந்தக் கிணறுகள் பெரும்பாலும் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. இதனால், அவற்றில் எளிதில் தவறி விழும் அபாயம் உள்ளது.

நிலத்தடி நீர் இருப்புகள் தொடர்ந்து உறிஞ்சி எடுக்கப்படுவதால், இந்த ஆழ்துளைக் கிணறுகள் மேலும் ஆழமாகத் தோண்டப்படுகின்றன.

ஐந்து பேர் கொண்ட ஒரு மீட்புக் குழு, அரசின் ஒரு பகுதி நிதியுதவியுடன் நாடு முழுவதும் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

மீட்புப் பணியாளர் மிராஜன் அப்துல்லா கூறுகையில், "நான் இதுவரை 142 மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளேன். 110 குழந்தைகளை நாங்கள் மீட்டுள்ளோம். மற்ற 32 குழந்தைகளில் பெரும்பாலானோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்." என்றார்.

குடிநீருக்காக மட்டுமே கிணறுகளைப் பயன்படுத்தும் வகையில், மற்ற தேவைகளுக்காக கிணறுகள் தோண்டுவதைத் தடை செய்யப்போவதாக தாலிபன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு