சிஜேபி போராட்டம் அறிவித்த நிலையில் டெல்லியில் நிலவும் பதற்றமான சூழல்
எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், டெல்லியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நாற்பதுக்கும் மேற்பட்ட மெட்ரோ நிலையங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள் மூடப்பட்டுள்ளன.
புது டெல்லி ரயில் நிலையம் மற்றும் நிஜாமுதின் ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. துணை ராணுவப் படையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். ஜந்தர் மந்தர் அருகே வந்த போராட்டக்காரர்களை அதிகாரிகள் தடுப்புக் காவலில் எடுத்த சம்பவமும் இன்று காலை நடந்தது. மறுபுறம், டெல்லிக்குள் நுழைவதற்கான எல்லை பகுதியிலும் பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு, கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் பாதுகாப்பு காரணங்களால் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், தங்கள் போராட்டத்தை ஒடுக்க பாஜக அரசு நினைப்பதாகவும், பிரதமர் மோதி பயத்தின் காரணமாகவே இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே குற்றம் சாட்டியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



