புலி பிடிக்கும் பணியில் கும்கி யானைகள் என்ன செய்யும்?
காட்டு யானைகளைப் பிடிக்க கும்கி யானைகள் பயன்படுத்தப்படுவது பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால் புலிகளைப் பிடிக்கவும் அவை பயன்படுத்தப்படுவது பற்றி உங்களுக்கு தெரியுமா?
நீலகிரி மாவட்டம் கூடலூரில் சமீபத்தில் இருவரைக் கொன்ற புலியைப் பிடிக்க கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. இந்த பணி கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி தொடங்கியது.
இதன் ஒரு பகுதியாக தெப்பக்காடு யானைகள் முகாமிலிருந்து பொம்மன், உதயன், சீனிவாசன், கிரி ஆகிய நான்கு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.
28 நாட்கள் தேடலுக்குப் பிறகு ஹலாலா எஸ்டேட் பகுதியில் வைக்கப்பட்ட கூண்டில் புலி சிக்கியது. இந்த நடைமுறை குறித்து அதிகாரிகள் பிபிசி தமிழுக்கு விளக்கியுள்ளனர்.
புலியை பிடிக்கும் பணியில் யானைகளை ஈடுபடுத்துவது வழக்கமான நடைமுறை தான் என்கிறார் கூடலூர் மாவட்ட வன அலுவலர் தேவராஜ்.
அவர் கூறிய தகவலின்படி, "புலிகளைப் பிடிக்க பிரதானமாக இரண்டு வழிகள் உள்ளன. முதலில் கூண்டில் பொறி வைத்து பிடிப்பது, இரண்டாவது மயக்க ஊசி செலுத்திப் பிடிப்பது. புலிகளைப் பிடிக்க காடுகளில் கூண்டு வைக்கப்படும். ஆனால் மயக்க ஊசியை நேரடியாக மட்டுமே செலுத்த முடியும். அதனை கால்நடை மருத்துவர்கள், வனத்துறை அலுவலர்கள்தான் மேற்கொள்வார்கள். இங்குதான் கும்கி யானைகளின் பங்களிப்பு முக்கியமாகிறது.
புலிகள் நடமாடும் கடினமான மற்றும் புதர்கள் நிறைந்த காட்டுப்பகுதிக்குள் மனிதர்கள் நேரடியாக கண்காணிப்பில் ஈடுபடுவது கடினம். இது போன்ற இடங்களில் யானைகளால் எளிதில் செல்ல முடியும்.
பாதுகாப்பான உயரத்திலிருந்து புலியின் இடத்தை அடையாளம் காண முடியும். கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தும் கருவிகளுடன் யானைகளின் மீது அமர்ந்து கொள்வார்கள். புலிகள் தென்பட்டால் உயரத்திலிருந்து மயக்க ஊசிகளைச் செலுத்தவும் உதவியாக இருக்கும்.
யானைகள் மீது செல்வது வனத்துறையினருக்கு பாதுகாப்பானது மட்டுமல்லாமல் புலிகளின் நடமாட்டத்தை யானைகளால் உணர்ந்து சரியாக வழிகாட்டவும் முடியும் என ஊட்டி அரசு கலைக் கல்லுாரியின் காட்டுயிர் உயிரியல் துறைத்தலைவர் ராமகிருஷ்ணன் கூறுகிறார்.
"அடர்ந்த புதர்கள் நிறைந்த பகுதிகளில் புலிகள் தாக்கும் ஆபத்தும் உள்ளது. அதனால் யானைகள் மீது செல்வது ஒரு விதத்தில் பாதுகாப்பான அணுகுமுறையும் எனக் கூறும் அவர் கும்கி யானைகளால் கரடு முரடான வழித்தடத்திலும் நீண்ட தூரம் நடந்து செல்ல முடியும். காடுகளில் புலிகள் யானைக் குட்டிகளை வேட்டையாடும். இதனால் யானைகள் புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து பழக்கப்பட்டவை. அதனால் புலிகளின் இருப்பை யானைகளால் உணர முடியும். யானைப் பாகன்கள் அதனை உணர்ந்து சரியான இடத்திற்கு வழிநடத்திச் செல்லவும் முடியும்." என்றார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



