பாகிஸ்தான் - சீனா இடையிலான புதிய எல்லை ஒப்பந்தத்திற்கு இந்தியா எதிர்ப்பு ஏன்?

காணொளிக் குறிப்பு, பாகிஸ்தான் - சீனா எல்லையை இந்தியா அங்கீகரிக்க மறுப்பது ஏன்?
பாகிஸ்தான் - சீனா இடையிலான புதிய எல்லை ஒப்பந்தத்திற்கு இந்தியா எதிர்ப்பு ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

பல தசாப்தங்களாக, இமயமலையின் சர்ச்சைக்குரிய பகுதியில் உள்ள பாகிஸ்தான் - சீனா எல்லையை இந்தியா அங்கீகரிக்க மறுத்து வருகிறது. அந்தப் பகுதியை இந்தியா தனது சொந்த நிலப்பரப்பாக கோருகிறது. ஆனால் கடந்த வாரம் அந்த மலைப்பாங்கான பிராந்தியத்தின் தொலைதூரப் பகுதியில் பாகிஸ்தானும் சீனாவும் தங்களது எல்லையை முறைப்படுத்தின. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. என்ன நடக்கிறது?

இரண்டு நாடுகளும் பாகிஸ்தான் - சீனா எல்லை கூட்டு ஆணையம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன. இந்த ஒப்பந்தத்தை முக்கிய மைல்கல் என பாகிஸ்தான் குறிப்பிடுகிறது. எல்லை நிர்வாகம், வர்த்தகம் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான இணைப்பை இது மேம்படுத்தும் என்றும் பாகிஸ்தான் கூறுகிறது.

ஆனால், இந்த நடவடிக்கைக்கு எந்தவித சட்ட அடிப்படையும் இல்லை என்று இந்தியா நிராகரித்துள்ளது. இந்தியா உரிமை கோரும் பகுதியில் அமைந்துள்ள பாகிஸ்தான்-சீனா எல்லை எதையும் அங்கீகரிக்கவில்லை என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

"பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே எந்த எல்லையும் இல்லை. எந்தச் சட்ட அடிப்படையும் இல்லாத இந்தப் பெயர் அளவிலான கூட்டு ஆணையத்தை இந்தியா நிராகரிக்கிறது," என இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறி உள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியாகி உள்ள நேரமும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எல்லையில் பல ஆண்டுகளாக நீடித்த ராணுவ பதற்றத்துக்கு பிறகு, இந்தியாவும் சீனாவும் தங்களது உறவை நிலைப்படுத்த முயன்று வருகின்றன. அதே வேளை, இந்தியா உரிமை கோரும் மற்றொரு எல்லைப் பகுதியில் சீனாவும், பாகிஸ்தானும் தங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகின்றன.

இந்த ஆணையம் பாகிஸ்தான் - சீனா எல்லைப் பகுதி தொடர்பானது. இதில் ஷக்ஸ்காம் (Shaksgam) பள்ளத்தாக்கும் அடங்கும். சுமார் 5,180 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இப்பகுதியை 1963-ல் பாகிஸ்தான் சீனாவிடம் ஒப்படைத்தது. ஆனால், இது லடாக்கில் உள்ள தனது பிரதேசத்தின் ஒரு பகுதி என இந்தியா உரிமை கோருகிறது.

அந்த நிலப்பரப்பு முன்னாள் ஜம்மு-காஷ்மீர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்றும், பாகிஸ்தான் இதனை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து, பின்னர் சீனாவிடம் ஒப்படைத்ததாகவும் இந்தியா கூறுகிறது.

ஜம்மு-காஷ்மீர் ஒரு சர்ச்சைக்குரிய பகுதியாகவே நீடிப்பதாக கூறும் பாகிஸ்தான், 1963-ல் சீனாவுடன் தான் மேற்கொண்ட எல்லை ஒப்பந்தத்தை எதிர்த்து கேள்வி எழுப்ப இந்தியாவுக்கு எந்த உரிமையும் இல்லை என வாதிடுகிறது.

டெல்லியின் ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறை பேராசிரியரான ஜபின் டி ஜேக்கப், இந்த புதிய நகர்வு என்பது ஒரு புதிய ஏற்பாடு என்பதை விட, ஒரு பழைய அமைப்பை மீண்டும் புதுப்பிப்பதே என்கிறார்.

"1963-ஆம் ஆண்டின் சீனா-பாகிஸ்தான் ஒப்பந்தத்திலேயே கூட்டு எல்லை ஆணையத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள ஒரே கேள்வி, அது செயல்படுத்தப்பட்ட நேரத்தை பற்றியதுதான்," என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இது குறித்து இந்தியா கவலைப்பட வேண்டும் என்று ஜேக்கப் கூறினார். அதைவிட முக்கியமாக, இந்த நடவடிக்கை 1963-ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தில் உள்ள ஒரு விதியைப் புறக்கணிப்பதாக தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

காஷ்மீர் பிரச்னை தீர்க்கப்பட்டு, நிலப்பரப்பு இறுதியாக எந்த நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறதோ, அந்த நாட்டுடன் இந்த ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்பந்தத்தின் 6-வது பிரிவு வழிவகை செய்கிறது என ஜேக்கப் கூறுகிறார்.

அமெரிக்காவிற்கான முன்னாள் பாகிஸ்தான் தூதரும், அன்வர் கர்காஷ் டிப்ளமேட்டிக் அகாடமி (Anwar Gargash Diplomatic Academy ) மற்றும் ஹட்சன் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றின் மூத்த ஆராய்ச்சியாளருமான உசேன் ஹக்கானி, இந்த புதிய ஆணையம் நடைமுறை சார்ந்ததாகவும் அரசியல் சார்ந்ததாகவும் இருக்கிறது என்றார்.

"இது இரண்டின் கலவை. எல்லைக் கூட்டுறவை மேம்படுத்துவதற்கும், சட்டவிரோத ஊடுருவல்களை தடுப்பதற்கும், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்துடன் தொடர்புடைய உத்திசார் உள்கட்டமைப்பை பாதுகாப்பதற்குமான அமைப்பாக இது செயல்படும்" என்கிறார் ஹக்கானி.

காஷ்மீர் விவகாரத்தை சீனா தொடர்ந்து பாகிஸ்தானின் கோணத்திலேயே பார்க்கிறது என்பதை இந்தியாவிற்கு உணர்த்தும் எச்சரிக்கையாகவும் இது அமைகிறது என்றும் அவர் கூறினார்.

இது சீனாவை பொறுத்தவரை அண்டை நாடுகளுடனான தனது உறவுகளைப் பயன்படுத்தி இந்தியாவுடனான தனது நிலைப்பாட்டை நிர்வகிப்பதிலும், அது குறித்த சமிக்ஞைகளை வெளிப்படுத்துவதிலும் உள்ள பரந்த நடைமுறையின் ஒரு பகுதி.

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு உறுதியளிப்பது, சீனாவிற்கு உத்தி ரீதியாகவும் புவிசார் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என ஹக்கானி கூறினார்.

"உத்தி ரீதியாக பார்த்தால், இது பாகிஸ்தானுடனான உறவை மேலும் ஆழமாக்கும். புவிசார் உத்தி ரீதியாக பார்த்தால் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளாலும் ஒரே நேரத்தில் இருமுனை அச்சுறுத்தல் ஏற்படும் என்ற இந்தியாவின் அச்சத்தை மேலும் வலுப்படுத்தும். இது பாகிஸ்தானுக்கு மகிழ்ச்சியளிப்பதோடு சீனாவுக்கும் பயனளிக்கும்." என்கிறார் ஹக்கானி.

இந்த அறிவிப்பு வெளியான நேரமும் மிக முக்கியமானது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது பற்றி கூறும் ஹக்கானி, "சீனா எப்போதும் தனது முடிவுகளை பல மாதங்களுக்கு முன்பே, ஏன் சில ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடுகிறது. எனவே, இந்தக் கூட்டு எல்லை ஆணையத்தை நடைமுறைப்படுத்தும் முடிவு சில காலத்திற்கு முன்பே எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதிபர் ஷி ஜின்பிங் சமீபத்தில் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக மேற்கொண்ட பயணத்திற்குப் பிறகு இந்தத் தகவல் வெளியிடப்பட்டது. இது, பாகிஸ்தானுக்குத் தங்களது வியூக கூட்டணி குறித்த உறுதியை அளிக்கவும், அதேவேளையில் பலதரப்பு ஈடுபாடுகள் இருந்தாலும் தெற்காசியா குறித்த சீனாவின் தொலைநோக்குப் பார்வையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதை இந்தியாவுக்கு நினைவூட்டவும் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை'' என்றார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு