சில நேரம் சாதியைக் கேட்ட பிறகு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்வது ஏன்?
அறுவை சிகிச்சைக்கு முன் நோயாளியிடம் மருத்துவர்கள் பொதுவாக உடல்நிலை, மருந்து ஒவ்வாமை, முந்தைய மருத்துவ வரலாறு போன்றவற்றை கேட்பார்கள். ஆனால் சில நேரங்களில், நோயாளி எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் மயக்கவியல் நிபுணர்களுக்கு முக்கிய தகவலாக இருக்கலாம்.
காரணம், தெலுங்கு பேசும் ஆர்ய வைஷ்யா அல்லது தமிழ்நாட்டில் காணப்படும் கொமுட்டி செட்டியார்/ வைஷ்ய செட்டி பிரிவினரில் சிலரிடம் காணப்படும் சூடோகோலினெஸ்டரேஸ் (pseudocholinesterase) எனும் சுரப்பி குறைபாடு. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இந்த சமூகத்தினர் காணப்படுகின்றனர். இந்த குறைபாடு உள்ளவர்களுக்கு, அறுவை சிகிச்சையின்போது பொதுவாக பயன்படுத்தப்படும் ஸ்கோலின் (Succinylcholine) என்ற தசைத் தளர்வு மருந்தின் தாக்கம் எதிர்பார்த்ததை விட பல மணி நேரங்கள் நீடிக்கக்கூடும் என்பதே இதற்குக் காரணம்.
பெங்களூரு ஹோஸ்மத் மருத்துவமனையில் பணிபுரியும் மயக்கவியல் நிபுணர் டாக்டர் சந்தோஷ் சிப்ரே, பிபிசியிடம் பேசுகையில், "அறுவை சிகிச்சைக்கு முன் வழங்கப்படும் மயக்க மருந்துகளில் ஒன்றான ஸ்கோலின், நோயாளியை சிறிது நேரம் மூச்சு விடாமல் இருக்கச் செய்யும். அந்த நேரத்தில் சுவாசக் குழாய் செலுத்தப்படும். வழக்கமாக பத்து நிமிடங்களுக்குள் நோயாளி மீண்டும் தானாக மூச்சுவிடத் தொடங்கிவிடுவார். ஆனால் சூடோகோலினெஸ்டரேஸ் குறைபாடு உள்ளவர்களுக்கு அது பல மணி நேரங்களுக்குப் பிறகுதான் நிகழலாம்," என்றார்.
அவர் மேலும் கூறுகையில், "ஸ்கோலின் கொடுத்தால் உயிருக்கு நேரடி ஆபத்து ஏற்படாது. ஆனால் நோயாளி மீண்டும் தானாக மூச்சுவிடும் வரை வெண்டிலேட்டரில் வைத்திருக்க வேண்டி வரும். அவர்களை உடனடியாக மீண்டும் மூச்சுவிடச் செய்யும் தனிப்பட்ட மருந்து எதுவும் இல்லை. இறுதியில் அவர்கள் தாங்களாகவே மூச்சுவிட ஆரம்பிப்பார்கள்," என்றார்.
டாக்டர் சந்தோஷ் சிப்ரேயின் கூற்றுப்படி, இந்த தன்மை தெலுங்கு பேசும் வைஷ்ய செட்டி சமூகத்தைச் சேர்ந்த சிலரிடம் அதிகமாகக் காணப்படுவதால், மயக்க மருந்தைத் திட்டமிடும்போது நோயாளியின் குடும்பப் பின்னணி பற்றியும் மருத்துவர்கள் விசாரிப்பர். எனினும், அந்த சமூகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் இந்தக் குறைபாடு இருக்கும் என்பது தவறான புரிதல் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

பட மூலாதாரம், Getty Images
சூடோகோலினெஸ்டரேஸ் என்றால் என்ன?
சூடோகோலினெஸ்டரேஸ் என்பது கல்லீரலில் உற்பத்தியாகும் ஒரு சுரப்பி. இது ரத்தத்தில் சுழன்று, குறிப்பாக சக்சினில்கோலின் (succinylcholine) மற்றும் மிவாகுரியம் (mivacurium) போன்ற தசைத் தளர்வு மருந்துகளை உடைத்து செயலிழக்கச் செய்கிறது. இந்த என்சைம் போதுமான அளவில் இல்லை என்றாலோ அல்லது சரியாக செயல்படவில்லை என்றாலோ, அந்த மருந்துகள் உடலில் நீண்ட நேரம் தங்கி, தசை முடக்கம் மற்றும் மூச்சுவிடும் திறன் தாமதமாக மீளும் நிலை ஏற்படும்.
பொதுவாக இந்த குறைபாட்டால் அன்றாட வாழ்க்கையில் எந்த அறிகுறியும் தெரியாது. ஒரு நபர் முதன்முறையாக மயக்க மருந்து பெறும்போதோ அல்லது குறிப்பிட்ட மருந்துகளுக்கு ஆட்படும்போதோ தான் இந்த நிலை கண்டறியப்படுகிறது.
இந்த குறைபாடு உள்ளவர்களுக்கு ஸ்கோலின் கொடுக்கப்பட்டால், அவர்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப ஆறு மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை ஆகலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையின் தாக்கத்தை விளக்கும் ஒரு சம்பவத்தை சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேராசிரியராக உள்ள மயக்கவியல் நிபுணர் டாக்டர் ம. மகேந்திரன் பிபிசியிடம் பேசுகையில் நினைவுகூர்ந்தார்.
"ஒரு முறை கடற்படையில் பணியாற்றிய ஒருவருக்கு பித்தப்பையில் இருந்த கல்லை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொண்டோம். அவர் அந்த குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது அப்போது எங்களுக்கு தெரியாது. அறுவை சிகிச்சை அரை மணி நேரத்தில் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. ஆனால் அதன்பிறகும் நோயாளி எதிர்பார்த்தபடி கண்விழிக்கவில்லை," என்று அவர் கூறினார்.
"அப்போது தான் அவருடைய குடும்பத்தினரிடம் பேசும்போது அவர் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. சூடோகோலினெஸ்டரேஸ் சுரப்பி குறைபாடு இருக்கலாம் என்று சந்தேகித்தோம். அவர் சுமார் ஆறு மணி நேரம் வெண்டிலேட்டர் ஆதரவுடன் இருந்தார். அதன் பிறகே மீண்டும் தானாக மூச்சுவிடத் தொடங்கினார்," என்றார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த அறுவை சிகிச்சையை செய்த மருத்துவர் ராஜா மகேந்திரன், "நோயாளியிடம் அவர் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கேட்பதில் சில நேரங்களில் சங்கடம் இருக்கும். ஆனால் அது தெரியாமல் ஸ்கோலின் கொடுத்தால், சிறிய அறுவை சிகிச்சைக்குப் பிறகும் நோயாளி நீண்ட நேரம் வெண்டிலேட்டர் உதவியில் இருக்க நேரிடலாம். அப்போது ஏன் கூடுதல் சிகிச்சை தேவைப்படுகிறது என்று குடும்பத்தினர் குழப்பமடைவார்கள்; தேவையற்ற மருத்துவச் செலவும் ஏற்படும். அதனால்தான் மயக்க மருந்தைத் தேர்வு செய்வதற்கு முன் இந்த விவரத்தையும் உறுதிப்படுத்திக் கொள்கிறோம்," என்றார்.
ஸ்கோலின் பயன்படுத்தப்படுவது ஏன்?
மருத்துவ உலகில் இன்று ரோகுரோனியம் (Rocuronium), வெகுரோனியம் (Vecuronium) போன்ற மாற்று தசை தளர்வு மருந்துகள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும் சில சூழ்நிலைகளில் ஸ்கோலினுக்கு தனித்துவமான முக்கியத்துவம் இருப்பதாக டாக்டர் ம.மகேந்திரன் கூறுகிறார்.
"மயக்க மருந்து கொடுக்கும் போது தசைகளை தளர்வடையச் செய்ய ஸ்கோலின் கொடுக்கப்படுகிறது. இது நோயாளியை அசைவில்லாமல் வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக வாய்ப் புற்றுநோய்க்காக கதிர்வீச்சு சிகிச்சை பெற்றவர்கள், வாய்ப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்கள் அல்லது பிறவியிலேயே சுவாசக் குழாய் செலுத்துவது கடினமாக இருக்கக் கூடிய உடலமைப்பைக் கொண்டவர்கள் போன்ற சூழ்நிலைகளில் ஸ்கோலின் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்," என்றார்.
"சமீப காலங்களில் ஸ்கோலின் பயன்பாடு குறைந்து, அதற்கு மாற்று மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் சில நேரங்களில் ஸ்கோலின் அளவுக்கு விரைவான மற்றும் சிறந்த செயல்பாட்டை அவை தராது," என்றும் அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



