தேர்தல் தோல்வியால் தெருவிளக்குகள் அகற்றமா? ராஜஸ்தானில் புதிய சர்ச்சை

காணொளிக் குறிப்பு, தேர்தல் தோல்வியால் தெருவிளக்குகள் அகற்றமா?
தேர்தல் தோல்வியால் தெருவிளக்குகள் அகற்றமா? ராஜஸ்தானில் புதிய சர்ச்சை
பிரசுரிக்கப்பட்டது

ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் உள்ள பீப்லு பஞ்சாயத்தின் வார்டு எண் 2-ன் உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரியங்கா ஷர்மா, தேர்தல் பிரசாரத்தின் போது சில பகுதிகளில் தெருவிளக்குகள் பொருத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான தேர்தல் முடிவுகளில் அவர் தோல்வியடைந்த நிலையில், அந்த விளக்குகள் அகற்றப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

பாஜக வேட்பாளர் பிரியங்கா ஷர்மா இதுபற்றி பிபிசி செய்தியிடம் தொலைபேசியில் பேசுகையில், "இந்த விளக்குகளை நான் பொருத்தவும் இல்லை, அகற்றச் சொல்லவும் இல்லை. என்னுடன் பிரசாரம் செய்த பாஜக ஆதரவாளர்கள் கொடுத்த விளக்குகள். கிராம மக்கள் தாங்களாகவே இவற்றைப் பொருத்திக் கொண்டனர். தற்போடு மின்வாரியம் விளக்குகளைக் கழற்றி வருவதாக எனக்குத் தகவல் கிடைத்தது." என்றார்.

ஆனால் பெயர் வெளியிட விரும்பாத உள்ளூர்வாசி ஒருவர், "தேர்தல் பிரசாரத்தின் போது பிரியங்கா ஷர்மா சார்பில் இந்த விளக்குகளைப் பொருத்தியதாகவும், தோல்வியடைந்த சில மணி நேரங்களிலேயே மின்வாரிய வாகனம் வந்து விளக்குகளைக் கழற்றி எடுத்துச் சென்றதாகவும் கூறினார். மேலும் "நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்தோம், ஆனால் அவர்கள் எங்கள் பேச்சைக் கேட்கவே இல்லை" என்றார்.

பிரியங்கா ஷர்மாவின் கணவர் அலோக் ஷர்மா ஆசிரியராக உள்ளார். அதோடு நிவாய் தொகுதி பாஜக எம்எல்ஏ ராம் சஹாய் வர்மாவிடம் உதவியாளராகவும் பணிபுரிகிறார். இது குறித்து பிபிசி, எம்.எல்.ஏ. ராம் சஹாய் வர்மாவிடம் கேட்டபோது அவர், "இந்த விளக்குகளுக்கான மின் கட்டணத்தை யார் கட்டுவார்கள் என்று கேட்டு மின்வாரிய தரப்பில் இருந்து எனக்குப் போன் வந்தது. யாருமே இதற்கு இணைப்பு வாங்கவில்லை. அதற்கு வேட்பாளர்களிடம் பேசுமாறு சொன்னேன், ஆனால் வேட்பாளர்கள் மறுத்துவிட்டனர். வேட்பாளர்கள் மறுத்துவிட்டதாகச் அவர்கள் என்னிடம் சொன்னதால், விளக்குகளை அகற்றுமாறு கூறினேன்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு