காணொளி: லிபியா கடற்கரை அருகே ரஷ்ய கப்பல்கள் மீது யுக்ரேன் டிரோன் தாக்குதல்
யுக்ரேன் அதிபர் விலாடிமிர் ஜெலென்ஸ்கி, நவம்பர் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லிபியா கடற்கரைக்கு அருகே ரஷ்யக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் காட்டுவதாகக் கூறி, வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
யுக்ரேன் டிரோன்கள் மூலம் ரஷ்யப் போர்க்கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டதாகவும், ஆயுதங்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்றையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பெங்காசி துறைமுகத்தில் ஒரு கப்பல் தீப்பற்றி எரிவதை பிபிசி சரிபார்த்த காட்சிகள் காட்டுகின்றன. கடற்கரைக்கு அருகே தாக்குதலுக்கு உள்ளான வணிகக் கப்பலில் இருந்து காயமடைந்த சிலர் தங்களிடம் கொண்டுவரப்பட்டதாக உள்ளூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், அந்தக் கப்பல்தான் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகக் கூறும் கப்பலா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, இப்பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் எச்சரித்துள்ளது. எனினும், லிபியாவில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து நேரடியாகக் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



