ஆணாக பிறந்து 12 வயதில் பெண்மையை உணர்ந்த 'ரியானா' - அரவணைத்த குடும்பம்
திருச்சி மாவட்டம் மன்னார்புரம் பகுதியைச் சேர்ந்த திருநங்கை ரியானா, தனது 12 வயதில் பெண்மையை உணரத் தொடங்கி பல்வேறு சவால்களை எதிர்கொண்டார்.
ஆரம்பத்தில் குடும்பத்தினரும் சமூகமும் தயங்கினாலும், வீட்டிற்கு மருமகளாக வந்த அண்ணி காயத்ரி அவரைப் புரிந்து கொண்டு நாத்தனாராக ஏற்றுக்கொண்டார்.
காயத்ரியின் அத்தை மகள்தான் ரியானா. சிறுவயதில் ரீகனாகவே பார்த்துள்ள அவர், ரியானாவாக முதலில் அவரை பார்த்த அனுபவத்தை பகிர்ந்தார்.
"சிறுவயதில் அத்தை பையனாக அவரை பார்த்துள்ளேன். பின் பல ஆண்டுகளாக எங்களுக்குள் தொடர்பே இல்லாமல் போனது. பின் எனது திருமண நிச்சயத்தின் போது மீண்டும் அவரை நேரில் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாகதான் இருந்தது. பிறகு சரி முன்பு நமது அத்தை பையனாக இருந்தவர், இப்போது அத்தை பொண்ணாக இருக்கிறார் என நான் புரிந்துகொண்டேன்." என்றார்.
ரியானாவுடன் தனக்கு இருக்கும் பிணைப்பு குறித்தும் அவர் பேசினார். "நாங்கள் இருவரும் பல விஷயங்களைப் பற்றிப் பேசுவோம். எனக்காக அண்ணனிடமே அவர் சண்டை போட்டுள்ளார். மருமகளாக வந்த எனக்கு ஆதரவாக நின்ற அந்த தருணத்தில் நான் அவரை என் அம்மாவாக பார்த்தேன். அந்த தருணத்தை என்னால் மறக்கவே முடியாது" என ஆனந்த கண்ணீருடன் விவரிக்கிறார்.
காயத்ரி மட்டுமல்லாது காயத்ரியின் குடும்பத்தினரும் உறுதுணையாகவே நின்றுள்ளனர். ஒரு காலத்தில் அடையாளத்தைப் புரிந்துகொள்ள போராடிய ரியானா இன்று அதே அடையாளத்துடன் ஒரு குடும்பத்தின் அன்பையும், உறவுகளின் அரவணைப்பையும் பெற்றிருக்கிறார்.
தனக்கு குடும்ப அங்கீகாரம் கிடைக்க உதவிய தனது அண்ணி பற்றி ரியானா கூறுகையில் "திருமணமாகி எங்கள் வீட்டுக்கு வந்த பிறகு அண்ணி எனக்கு ஆதரவாக இருந்தார். என் அம்மா நடந்துகொள்வது வருத்தமளிப்பதாக நான் அவரிடம் கூறி அழுதுள்ளேன். எனது தனிப்பட்ட விஷயங்களை அனைத்தையும் அவரிடம் பகிர்ந்துகொண்டுள்ளேன். அவர் என் அம்மாவிடம் 'நீங்களே உங்கள் மகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால், மற்றவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்' என பேசிப் புரிய வைத்துள்ளார்" என்றார்.
தனது மருமகள் காயத்ரி வந்த பிறகே ரியானாவை முழுமனதாக தான் ஏற்றுக்கொண்டதாக இன்ஸியா மேரி கூறுகிறார். "பல ஆண்டுகளாக என்னால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. என் மகனின் திருமணத்தின் போதுதான், இது நம் மகள், நாம்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நான் மனதார புரிந்துகொண்டேன். எனது மருமகள் அதை எனக்கு புரியவைத்தார்." என்றார்.
இதுபற்றி காயத்ரியிடம் கேட்டபோது, "அவர் ஒரு திருநங்கை என்பதை தாண்டி, முதலில் அவர் எங்க வீட்டுப் பிள்ளை. நாங்களே அவரை ஏற்றுக்கொள்ளாவிட்டால், இந்த சமூகம் அவரை எப்படி ஏற்றுக்கொள்ளும்" என எளிமையாக சொல்லிவிட்டார்.
நடனக் கலைஞராக இருந்தபோது தாக்குதல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொண்டு நடனத்தை கைவிட்ட ரியானா, பின்னர் மாடலிங் துறையில் நுழைந்து மிஸ் கூவாகம் உள்ளிட்ட பல்வேறு பட்டங்களை வென்றார்.
தற்போது ஆதரவற்ற திருநங்கைகளின் கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளுக்கு உதவி செய்து வருகிறார். திருநர் சமூகம் முன்னேற குடும்பத்தின் அங்கீகாரமும் கல்வியும் அவசியம் என்று அவர் தெரிவிக்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



