காணொளி: அமெரிக்கா-இரான் ஒப்பந்தத்தை சீர்குலைக்க வாய்ப்புள்ள 3 விஷயங்கள்

காணொளிக் குறிப்பு, அமெரிக்கா-இரான் ஒப்பந்தத்திற்கு அச்சுறுத்தலான 3 காரணிகள்
காணொளி: அமெரிக்கா-இரான் ஒப்பந்தத்தை சீர்குலைக்க வாய்ப்புள்ள 3 விஷயங்கள்
பிரசுரிக்கப்பட்டது

பல வாரகாலமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அமெரிக்காவும் இரானும் ஓர் ஆரம்பகட்ட ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.

ஆனால் அதற்குள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான கடுமையான சவால்களை நோக்கிக் கவனம் திரும்பத் தொடங்கியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த முதல்கட்ட ஒப்பந்தம் "இறுதியானது அல்ல" என்று எச்சரித்ததுடன், இது தோல்வியடைந்தால் அமெரிக்கா "மீண்டும் தாக்குதல் நடத்தத் தொடங்கலாம்" என்றும் கூறியுள்ளார்.

டிரம்ப் நிர்வாகத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள ஒப்புக்கொண்ட இரானின் நாடாளுமன்ற சபாநாயகரும் முக்கிய பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப், அமெரிக்கா மீதான தனது அவநம்பிக்கை நீடிப்பதாக அரசு ஊடகத்திடம் தெரிவித்தார்.

இந்த நிலையில், அமைதி முயற்சியை பாதிக்கக்கூடிய மூன்று முக்கிய அச்சுறுத்தல்கள் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அவை என்ன என்பது குறித்து இந்த காணொளியில் பார்க்கலாம்.

இரு தரப்பினரும் லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் ராணுவ நடவடிக்கைகளை நிரந்தரமாக நிறுத்த ஒப்புக்கொண்டதாக, இந்த ஒப்பந்தத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒப்பந்த வரைவும், லெபனானின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் உறுதி செய்கிறது.

எனினும் இஸ்ரேல் லெபனான் மீதான தனது தாக்குதல்களைத் தொடர்ந்தது .

புதன்கிழமை அன்று, இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் நபதியா அல்-ஃபவ்கா பகுதி மற்றும் அதன் அருகிலுள்ள க்ஃபார் டெப்னிட் எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியதாக லெபனானின் அரசுக்குச் சொந்தமான தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்தது.

மேலும், லெபனான் போர்நிறுத்தக் கட்டமைப்புக்குள் கொண்டு வரப்பட்டாலும், லெபனான் எல்லையிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறுவது இந்த ஒப்பந்தத்தின் ஒரு நிபந்தனை அல்ல என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், லெபனானில் போர் முடிவுக்கு வருவது, அமைதி ஒப்பந்தத்தின் பிரிக்க முடியாத பகுதியாக இருக்க வேண்டும் என்று இரான் வலியுறுத்துகிறது.

இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொலாவும் இதே கருத்தை எதிரொலிக்கிறது.

பிரிட்டனின் சிந்தனைக் குழுவான ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட்டின் அரசியல் விஞ்ஞானி முனைவர் ஹெச்.ஏ. ஹெல்லியர் கூறுகையில், அமைதி முயற்சிகளில் இஸ்ரேல் "முக்கிய தடையாக " இருந்து வருகிறது என்கிறார்.

இரான் நேரடி மோதலுக்குள் இழுக்கப்பட்டால், "அணுசக்தி கோப்பு குறித்த கணிசமான பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்பே" இந்த செயல்முறை முறிந்துவிடக்கூடும் என்று ஹெல்லியர் கூறுகிறார்.

மற்றொரு சிக்கலான விஷயம் இரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஆகும். இரானின் அணுசக்தித் திட்டம் முழுமையாக அமைதியான நோக்கத்திற்கானது என்றும், அணு ஆயுதங்களை உருவாக்கப் போவதில்லை என்றும் அந்த நாடு தொடர்ந்து கூறி வருகிறது.

இந்த ஒப்பந்தத்திலும் அதையே மீண்டும் வலியுறுத்தி உள்ளது. ஆனால், ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எவ்வாறு கையாள்வது என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

இது இறுதி ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய விவாதமாக இருக்கும். தற்போதைய திட்டப்படி, சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ், அந்த யுரேனியத்தின் செறிவூட்டல் அளவை குறைப்பது ஒரு சாத்தியமான தீர்வாகக் கருதப்படுகிறது.

60 நாட்கள் பேச்சுவார்த்தை காலத்தில், இரு தரப்பினரும் தற்போதைய நிலையை மாற்றாமல் வைத்திருக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

அதாவது, இரான் தனது அணுசக்தி நடவடிக்கைகளை விரிவுபடுத்தாது. அமெரிக்காவும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்காது.

இரான் மீண்டும் ஆயுதத் தரத்திலான யுரேனியத்தைச் செறிவூட்டுகிறது என்று அதிபர் கருதினால், அவர் "மீண்டும் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்க வாய்ப்புள்ளது" என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்தின் முன்னாள் துணைத் தலைமை அதிகாரியான தரின் செல்னிக், பிபிசி ரேடியோ 4 இன் டுடே நிகழ்ச்சியில் தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தத்தின் மற்றொரு முக்கிய அம்சம், ஹோர்மூஸ் நீரிணையை திறப்பது. ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து தற்போது இரான் மீதான தனது கடற்படை முற்றுகையை அமெரிக்கா விலக்கிக்கொண்டது.

"பாரசீக வளைகுடாவிலிருந்து ஓமன் கடல் வரை மற்றும் அதற்கு நேர்மாறாகவும்" முதல்கட்ட 60 நாட்களுக்கு இந்த நீரிணை கட்டணமில்லாமல் இருக்கும் என்று ஒப்பந்தம் குறிப்பிடுகிறது.

இந்த நீர்வழிப்பாதையின் எதிர்கால நிர்வாகம் மற்றும் கடல்சார் சேவைகள் குறித்து சர்வதேச சட்டத்துக்கு இணங்க, ஓமன் மற்றும் பிற வளைகுடா நாடுகளுடன் இரான் பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் அது குறிப்பிடுகிறது.

இது எதிர்காலத்தில் சுங்க கட்டணங்கள் நடைமுறைக்கு வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும்.

இந்த நீரிணையை நிர்வகிப்பதில் தங்களுக்குப் பெரிய பங்கு வேண்டும் என்பதை இரான் ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும், வளைகுடா நாடுகள் கட்டண அடிப்படையிலான எந்த அமைப்பையும் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர்.

கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு பல வாரங்கள் முதல் பல மாதங்கள் வரை ஆகக்கூடும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

"தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டால், ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்ல துணிச்சலான கேப்டன்கள் மட்டுமே முன்வருவர்" என்று நெருக்கடி மேலாண்மை நிறுவனமான ஈஓஎஸ் ரிஸ்க் குரூப்பைச் சேர்ந்த மார்ட்டின் கெல்லி பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தார்.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இந்த ஒப்பந்தம் இன்னும் "ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமாக மட்டுமே உள்ளது. அது பேச்சுவார்த்தைக்கான ஒரு கட்டமைப்பு, இறுதியான தீர்மானம் அல்ல" என்று ஹெல்லியர் எச்சரிக்கிறார்.

மேலும், "கடினமான வேலை இன்னும் தொடங்கவே இல்லை" என்றும் அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு