குஜராத்: இந்த கிணற்று நீர் திடீரென தானாகவே அசைவது ஏன்? வைரல் வீடியோவின் உண்மைத்தன்மை

பட மூலாதாரம், Rajesh ambaliya
குஜராத்தின் மோர்பி மாவட்டத்தின் வீர்பர்டா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் தண்ணீர் 'தானாகவே அசைந்து கொண்டிருப்பதாக' அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்தக் கிணற்றின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஏதோ ஒரு காரணத்தால் கிணற்று நீர் தானாகவே அசைந்து கொண்டிருப்பது போன்று காட்சியளித்தது.
கிணற்று நீர் சிறிது நேரம் அமைதியடைந்து, சில மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்து அசைவதாகக் கூறப்படுகிறது.
அங்கு என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய நேரில் சென்ற பிபிசி நிருபர் ராஜேஷ் அம்பாலியா உள்ளூர் மக்களிடம் பேசினார்.
கிணற்று நீர் அசையும் காணொளி வைரலானதை அடுத்து, ஏராளமான பொதுமக்கள் அதைப் பார்க்கத் திரண்டனர். ஆட்சியர் உள்பட துறை சார்ந்த அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
'மதிய வேளையில் அசையும் நீர், பின்னர் அமைதியாகிறது'
விவசாய நிலத்தின் உரிமையாளர் பிராஞ்ஜீவன் சடாரியா ஊடகங்களிடம் பேசுகையில், "நான் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) மற்றும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 3) இங்கு இருந்தேன். அப்போதும் நீர் அசைந்து கொண்டே இருந்தது" என்றார்.
மதிய வேளையில் கிணற்று நீர் கொந்தளிப்பாகி, பின்னர் அமைதியடைவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
செவ்வாய்க்கிழமை நாள் முழுவதும் கிணற்று நீர் அமைதியாக இருந்ததாகவும், பின்னர் ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் மீண்டும் நீர் அசையத் தொடங்கியதாகவும் ராஜேஷ் அம்பாலியா கூறுகிறார்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் கிணற்றைப் பார்வையிட்டு, இதற்கான காரணத்தைக் கண்டறிய முயன்றனர்.
இதற்கிடையில், மக்களிடையே பல்வேறு வதந்திகளும் பரவி வருகின்றன. சிலர் இதை 'நிலநடுக்கத்துடன் தொடர்புடைய சம்பவம்' என்றும் சித்தரிக்கத் தொடங்கியுள்ளனர்.
ஆச்சரியத்திற்குரிய விஷயம் என்னவென்றால், இந்தக் கிணற்றுக்கு அருகில் உள்ள இரண்டு, மூன்று கிணறுகளில் நீர் எவ்வித அசைவுமின்றி அமைதியாகவே உள்ளது.
முதற்கட்ட ஆய்வில், கிணற்றின் உட்பகுதியில் இருக்கும் காற்று காரணமாகவே இது நிகழ்ந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
கிணற்று நீர் அசைவது ஏன்?

பட மூலாதாரம், Rajesh ambaliya
மோர்பியைச் சேர்ந்த புவியியலாளர் ஜெகதீஷ் வதேர், சம்பவ இடத்தை ஆய்வு செய்த பிறகு ஊடகங்களிடம் கூறுகையில், "நீரின் அசைவு குறித்து காந்திநகரில் உள்ள நிலநடுக்க ஆராய்ச்சி நிறுவனத்துடன் கலந்தாலோசித்தோம். இங்கு நிலநடுக்கம் சார்ந்த நடவடிக்கைகள் எதுவும் பதிவாகவில்லை." என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "மேல் பகுதிகளில் கனமழை பெய்யும்போது நிலத்தடி நீர் அதிகரிப்பதே நீர் அசைவிற்கான முதன்மை காரணம். நிலத்தடி நீர் அதிகரிக்கும் போது, பாறை இடுக்குகளில் இருந்து காற்று வெளியேறுவதாலும் இது நடக்கிறது. வேறு எந்தப் பிரச்னையும் கண்டறியப்படவில்லை." என்றும் தெரிவித்தார்.
அதைச் சுற்றியுள்ள மற்ற கிணறுகளில் இவ்வாறு எதுவும் நிகழாமல் இந்த ஒரு கிணற்றில் மட்டும் இது ஏன் நடக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "சுற்றிலும் பிற கிணறுகள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால், பாறைகளில் இருந்து காற்று வெளியேறும் கிணறுகளில் இதுபோன்ற நிகழ்வுகள் இயல்பானவைதான்" என்றார்.

பட மூலாதாரம், Rajesh ambaliya
சம்பவ இடத்தை ஆய்வு செய்த மோர்பி மாவட்ட ஆட்சியர் ஸ்வப்னில் கரே கூறுகையில், "புவியியலாளர்கள் குழுவும் இங்கு வந்து ஆய்வு செய்துள்ளது. மழையின் காரணமாகக் காற்றில் ஏற்படும் அழுத்த மாறுபாடே நீரில் அசைவை ஏற்படுத்துகிறது என்பதே முதற்கட்டத் தகவலாகும். சிலர் இதில் நிலநடுக்கப் பின்னணி இருக்குமோ எனச் சந்தேகித்தனர், ஆனால் அதுபோன்ற எதுவும் கவனத்திற்கு வரவில்லை" என்று தெரிவித்தார்.
பொதுமக்கள் எந்தவிதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்றும், அதை பரப்ப வேண்டாம் என்றும் மோர்பி மாவட்ட ஆட்சியர் ஊடகங்கள் வாயிலாகக் கேட்டுக்கொண்டார்.
"இதுகுறித்து நிலத்தடி நீர் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வரும் நாட்களில் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து, இதன் உண்மைப் பின்னணி என்னவென்பதை தெரிவிப்பார்கள்" என்றும் அவர் கூறினார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































